வியாழன், நவம்பர் 21, 2013

ரெஜினா ...





"ஏண்டா ..இப்படி தறுதலையா வளருரே!  சொல்பேச்சு எதாச்சும் கேட்கிறியா?  எங்க போனாலும் எதாச்சும் வம்பு இழுத்துட்டு  வந்துடுறே. உன்னைய என்ன பண்றேன் பாரு.  நாலு நாள் பட்டினி போட்டா தான் நீ  எல்லாம் அடங்குவே"

 ஜீவா அம்மாவின் குரல் அந்த தெருவெங்கும் .கேட்டது.

"ஏனக்கா ..ஏன் அவன போட்டு இப்படி கரிச்சு  கொட்டுறீங்க" என்று கேட்டுகொண்டே பக்கத்துக்கு வீட்டிலிருந்து ரெஜினாவோட  அம்மா வந்தாங்க.

"எப்போ பார்த்தாலும் அவனை திட்டுறதே  உங்களுக்கு வேலையா போச்சு.."

"பின்ன என்னக்கா..காலேஜ் கட் அடிசிட்டு இவன் படம் பார்க்க போயிருக்கான். பக்கத்துக்கு வீட்டு சேகர் மாமா இவன தியேட்டர்-ல பாத்திருக்காங்க.. இவனெல்லாம் எங்க படிச்சு பாஸ் பண்ண போறான்.  எனக்கு இவனை நினைச்சு தான் ஒரே கவலையா இருக்குக்கா"

"அட  வயசு பசங்கன்னா கொஞ்சம் அப்பிடி அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வாங்க..அதுக்காக வயசுக்கு வந்த புள்ளையபோட்டு இப்படியா ஏசுவீங்க"

" இன்னைக்கு இவனுக்கு இந்த  வீட்டில சாப்பாடு கிடையாது...போ எங்காச்சும் போய் சாப்புடு"

அம்மாவின் குரல் கண்டிப்பாகவும் அதே நேரம் கண்கள் ஈரமாகவும் இருந்தது. ஜீவா தலைய தலைய தொங்கபோட்டுகிட்டே மெளனமாக உட்காந்திருந்தான்

"டேய் ..ஜீவா நீ மொதல்ல எழும்பு"

ரெஜினாவோட அம்மா அவன்  கையபுடிச்சி நேரா  அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாங்க.

 இது வழக்கமா நடக்கிறது தான். வீட்டில எதாச்சும் பிரச்சினைனா ஜீவாவிற்கு அடைக்கலம் ரெஜினா வீடுதான். ரெஜினாவின் வீட்டில் தான் அன்னைக்கு முழுதும் பொழுது கழியும். ரெஜினாவின் அம்மாவை மாமி என்றும், அவளுடைய அப்பாவை மாமா என்றும் தான் கூப்பிடுவான்.  இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர்கள் அந்த வீட்டிருக்கு குடிவந்ததிலிருந்து இவனும் அப்படியே கூப்பிட்டு பழகிட்டான். அவர்களும் அதை ஒன்றும்  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அனால் இந்த ஊருக்காரங்க தான்  ரெஜினாவை ஜீவாவிற்கு கட்டிகுடுகிறதுக்காக இந்த பொம்பளை அவனை கைக்குள்ள போட்டு வச்சிருக்குன்னு ரகசியம் பேசிகிட்டாங்க. இது சிலநேரம் ஜீவாவோட அம்மா  காதுக்கு போனாலும் அவங்க இதை  பற்றி அலட்டிகிறதில்லை.

"என்ன தொரை..இன்னைக்கு வீட்டில  செம பரேடு போலிருக்கு?"

ரெஜினா வீட்டு வாசலில் கையால முட்டு குடுத்துகிட்டு நின்றுகொண்டிருந்தாள்.

"போடி கூறுகெட்டவளே!... ஏண்டி அவனே ஏச்சு வாங்கிட்டு வந்திருக்கான்...நீ வேற..தள்ளு...வழிய மறிச்சுக்கிட்டு.."

"ரெஜினா..மொதல்ல நீ அவனுக்கு சாப்பாடு போடு.... "  என்று சொல்லிக்கிட்டு ரெஜினாவோட அம்மா வீடு பின்பக்கம் போயிட்டாங்க.

"சரிம்மா"... சொல்லிகிட்டே ரெஜினா ஜீவா பார்த்து பளிப்பு காட்டிகிட்டே கிச்சன் பக்கம் போனாள்.

ரெஜினா.! அந்த தெருவின் ஒரு அழகு தேவதை. ரொம்ப கலர்னு ஒன்னும் சொல்ல முடியாது இருந்தாலும் பார்த்த உடனே வசீகரிக்கும் முகம். கண்கள் சில நேரம் கவிதை பேசும். அவள் பேசும்போது காதில் ஊஞ்சலாடும் கம்மல்கள் அவள் காதோடு ரகசியம் பேசும். சிரிப்பில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும்..சின்னதாக கன்னத்தில் குழி விழும். அந்த தெருவில் பலபேரின் தூக்கம் கெடுத்த ஒரு கியூட் டெடி பியர்! குடும்ப சூழ்நிலை காரணமாக பனிரெண்டாம் வகுப்புக்குமேல் படிக்கல. வீட்டில் ஒரு தையல் மெசின் வைத்துகொண்டு எதோ அவளுக்கு தெரிஞ்ச மாதிரி தைத்துக்கொண்டிருக்கிறாள். அவளின் வீட்டுக்குள் போக வர முழு சுதந்திரம் உள்ள ஒரே ஆண்மகன் ஜீவா மட்டும் தான். வேற யாரையாச்சும் அந்த பக்கம் பார்த்தா..அவளோட அம்மாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு யாரா இருந்தாலும் அந்த தெருவை காலி பண்ணிட்டு வேற வீடு பார்த்து போயிடுவாங்க.

ஜீவாவுடன் அவள் பழகுவதில் எந்த கண்டிசனும் கிடையாது. சிலநேரம் அடிச்சுக்குவாங்க, சிலநேரம் ஒருத்தருக்கு ஒருத்தர் சிரிச்சு ஜாலியா பேசிக்கிட்டு இருப்பாங்க. ரெஜினா என்ன டிரஸ் என்ன கலர் டிரஸ் போட்டா  அழகா இருக்கும், என்ன நெயில் பாலிஸ் போட்டா நல்லாருக்கும்னு இவனும் அவளுக்கு ஐடியா சொல்வான், அவளும் இதுமாதிரி என்ன கலர் டிரஸ் போடணும், தலைய இப்படி வாராதே அந்த மாதிரி சீவு-னு எல்லாம் ஐடியா குடுப்பாள். ஜீவாவை பார்க்காமல் ரெஜினாவும் இருக்க மாட்டாள். ரெஜினாவிடம் பேசாமல் இவனும் இருக்க மாட்டான். "போடி நான் உன் கட்டில்ல இன்னைக்கு கொஞ்சம் நேரம் படுக்கிறேன்"னு அவளுடைய பதிலுக்கு காத்திருக்காமல் இவனே போய் படுத்துகொள்வான்.ரெஜினாவின் சில ரகசியங்கள் எல்லாம் ஜீவாவிற்கும், இவனின் சில ரகசியங்கள் எல்லாம் அவளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியங்கள்.

ரெஜினா - ஜீவா பழக்கத்தில் காதலும் இல்லை காமமும் இல்லை...

சாப்பாடு எடுத்து டேபிள் மேல் வைத்துவிட்டு...அவன் முன்னால் செயர் போட்டு நாடியில் கைவைத்து ஜீவா சாப்பிடுவதை பார்த்துகொண்டிருந்தாள். அவன் சாப்பாட்டு தட்டில் இருந்து ஒரு கத்தரிக்காயை எடுத்து கடித்துக்கொண்டே..

"டேய்...ஜீவா...என்ன படம் பார்த்தே?"

"--------------"

"டேய்...கேட்கிறேன் இல்ல...பதில் சொல்லேன்"

"இங்க்லீஷ் படம் டி"

"அப்படின்னா A படமா?"

"உஷ் ...சத்தம் போடதே...அம்மா இருக்காங்க. ஆக்சன் மூவி டி...அப்படின்னா தெரியுமா? சண்டை படம்."

ஹ்ம்ம் ரொம்ப பீத்திகாதே உனக்கு தான் எல்லாம் தெரியும்னு....ஆக்சன் மூவி-னா சண்டை படம்-னு எனக்கும் தெரியும்.


ஜீவா அவளையே கொஞ்சம் நேரம் பார்த்தான்..

"ஆமா...சுரேஷ் உனக்கு லவ் லெட்டெர் குடுத்தானே...என்ன பதிலே சொல்லலியாம் நீ. அவன் என்கிட்டே...கெஞ்சுராண்டி..ஒரு பதில சொல்லலாலம்ல..."

"ப்ச்....போ ...ஜீவா ...எனக்கு விருப்பமில்லடா..அவனும் ஜாடை மாடையா என்னமோ சொல்றான். எனக்கு பார்க்க பாவமா இருக்கு. அதுக்காக லவ் எல்லாம் பண்ண முடியாது ஜீவா.."

"ஹ்ம்ம்...ஒவ்வொரு ஆளா உன்னை ப்ரொபோஸ் பண்றாங்க...நீ தான் ரொம்ப அடம் புடிக்கிறேடி.."

"பேசாம சாப்பிடுடா....நீ ஏன் யாரையும் லவ் பண்ண மாட்டேன்கிற? "

"என்னடி இப்படி சொல்றே..என்னோட கதை தான் உனக்கு தெரியுமே.." சரி சரி...சாப்பிட்டுட்டேன்...தட்டு எடுத்து வை..

"ஹ்ம்ம்...வெளிய எங்காச்சும் போறியாடா?"

"இல்லடி..ஏற்கனவே வீட்டில ஏச்சு வாங்கியாச்சு. இனி ஊரு சுத்த போனா அவளோதான். அம்மா ஒரேடியா வீட்டை விட்டு தொரத்திடுவாங்க".

ரெஜினா...எல்லாம் எடுத்து வச்சிட்டு ஏதோ தையல் வேலை தொடங்க..அவ பக்கத்துலையே உட்காந்து இவன் அரட்டை அடிச்சிகிட்டு சிரிச்சு பேசிகிட்டு இருந்தான்.

இன்னொருநாள்...

ஜீவா வெளிய எங்கையோ போயிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான்... ரெஜினா வீட்டை கடக்கும்போது கவனித்தான். அவள் என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தாள்.

"ஹே...ரெஜினா...என்னடி இது...கையில குச்சியும் தலை எல்லாம் கலைஞ்சு..."

"ஒண்ணுமில்லடா..வீட்டில அங்கங்க சிலந்தி வலை பிடிச்சிருக்கு..அம்மா சத்தம்போடாங்க. அது தான் வலை அடிச்சுகிட்டு இருக்கேன்"

"அதுக்காக இப்படியாடி..லூசு மாதிரி...யாரையாச்சும் கூப்பிட்டிருக்கலாம் இல்ல"...சொல்லிக்கொண்டே அவ தலையில, தோள்மேல, முகத்துல இருந்த தூசி தட்டி விட்டுகொண்டிருந்தான்.

"டேய்....பரவால்ல..விடுடா..குளிக்க தான் போறேன்..எல்லா இடத்துலையும் தட்டிட்டேன். இந்த பேன் தான் எட்ட மாட்டங்குது ஜீவா. எதாச்சும் எடுத்துபோட்டு ஏறலாம்னு பார்த்தா...ஒன்னும் வசதியா இல்லடா.."

"ஹே....லூசு அதுக்கென்ன...நான் உன்னை தூக்குறேன்..நீ வலை அடி"

"அட ச்சி போ...விளையாடாதே..."

"இல்லடி நிஜமாத்தான் சொல்றேன்"...சொல்லிக்கொண்டே...அவளின் பிருஷ்டங்களின் கீழே கைய குடுத்து..அவளை அப்படியே தூக்கினான்..

"ஏய்..ஏய்...ஜீவா சொன்னா கேளு...விடு டா...விடு டா..விழுந்துடுவேண்டா... சொன்னா கேளு ஜீவா..விளையாடாதே.."

"ஒன்னும் விழமாட்டே ...நான் ஒழுங்கா தான் புடிச்சிருக்கேன்...நீ மொதல்ல வலை அடி..."

"விடமாட்டே இல்ல..?"

"விடமாட்டேன்...ஹ்ம்ம் அடி டி..எரும எரும...கொஞ்சம் கூட கைய மேல தூக்கு...குச்சிய நீட்டமா புடிடி.."

திடீர் என்று என்ன நினைத்தாளோ ..

"ஜீவா...டேய்....விடுடா என்னை ...இறக்கி விடுடா..."

"ஹேய் ...என்னாச்சுடி ரெஜினா?"

"இறக்கிவிடுன்னு சொல்றேன்ல".....முகத்தில் கோபம் காட்டினாள்.

ஜீவா தன்னோட பிடியை தளர்த்தினான்....ரெஜினா கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடம்போடு வ....ழு ...க்கி ..னா..ள் !

"போதும் வலை அடிச்சது போதும்...நான் குளிக்க போறேன்"னு படபடப்போடு ஓடி போனாள்.

காலம் தன் இறக்கையை விரித்து பறந்து கொண்டிருந்தது... அப்போதுதான்...யாருமே எதிர்பார்க்காத..அந்த நாள் வந்தது..

என்ன மாமி சொல்றீங்க...ரெஜினாவுக்கு கல்யாணமா?

ஆமா ஜீவா....ரெஜினா அப்பாக்கு தூரத்து சொந்தமாம். பையன் ஏதோ வெளிநாட்டுல வேலை பார்கிறானாம். பையன் பெயரு கூட எட்வின். கைநிறைய சம்பளம்..கல்யாணம் முடிஞ்சு மூணு மாசத்துல அவள வெளிநாடு கூட்டிட்டு போறேன்னு சொன்னானாம். ரெஜினா அப்பாவும் வாக்கு குடுத்துட்டு வந்திருக்காரு. சீக்கிரம் கல்யாணம் வச்சுக்கனுமாம். பையனுக்கு லீவு முடிஞ்சு போறதுக்குள்ள கலியாணம் முடிக்கணுமாம்.

மாமி சொல்ல சொல்ல....ஜீவாவுக்கு....மனசுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத சோகம் வந்து திரை போடுவதை உணர்ந்தான். கேட்டது பாதி கேட்காதது பாதியாக...

"ரெஜினா எங்க மாமி?"

"அவ அங்க ரூமுக்குள்ள தான் இருக்கா ....கல்யாண செய்தி கேட்டு முகத்துல ஒரு சந்தோசமே இல்ல...பொய் பாரு ஜீவா."

"ரெஜினா ....ரெஜினா"...கூப்பிட்டுகொண்டே ஜீவா அவளின் ரூமுக்குள் பிரவேசித்தான்...

என்ன ஜீவா என்பதுபோல அவள் அவனை பார்த்தாள்.

ரெஜினா உனக்கு கல்யாணமாமே..? அம்மா சொன்னாங்க..

"-------------------"

சொல்லுடி எதாச்சும்....உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?

"-------------------"

"ப்ளீஸ்...பேசுடி ரெஜினா...உனக்கு கலியாணம் பண்ண சம்மதம் தானே?"

அவளின் முகத்தை மெதுவாங்க...நிமிர்த்து பார்த்தான்...கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது..

"ரெஜினா....என்னமா...ஏண்டி கண்ணு கலங்கிருக்கு? வரன் பிடிக்கலியா உனக்கு? என்ன இருந்தாலும் என்கிட்டே சொல்லுவே இல்ல...சொல்லுமா ரெஜினா.." ஜீவா அழாத குறையாக அவளிடம் கெஞ்சினான்..

"ஒண்ணுமில்லடா ....எனக்கு சம்மதம்தான்" என்று சொல்லிக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு விடு விடுவென ரூமை விட்டு வெளியேறினாள்.

ஜீவாவின் மனதுக்குள் என்னவோ அனல் அடித்தது போலிருந்தது...

சீக்கிரமே..அவளின் நிச்சயதார்த்தம் முடிந்தது...கல்யாண நாளும் நெருங்கி வந்தது. இப்போதெல்லாம் ஜீவாவும் ரெஜினாவும் சிரிப்பது குறைவு. பேசுவது குறைவு. பேசினாலும் சம்பிரதாயமாக எதோ பேசினார்கள். இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. இருந்தாலும் ரெஜினாவின் கல்யாணம் என்று ஜீவாவும் எல்லா வேலையும் இழுத்துபோட்டு செய்துகொண்டிருந்தான். பத்திரிகை அடிப்பதிலிருந்து, பந்தல் போடுவதுவரை எல்லாத்துக்கும் அவள் குடும்பத்தாருடன் முடிந்தவரை ஓடியாடி வேலை செய்தான். இடை இடையே ரெஜினாவை சிரிக்கவைக்க முயன்று தோற்றான். இவனும் சிரிக்க முயன்றது தோற்றான்.

நாளை ரெஜினாவின் கல்யாணம்..

வீடெங்கும் கல்யாணகளை. எல்லார் முகத்திலும் சந்தோசம். ஜீவாவும் ஓடியாடி எல்லாம் பார்த்துகொண்டிருந்தான். ரெஜினாவின் ரூமை கடக்கும்போதெல்லாம் அவளின் முகத்தை பார்க்க தவறவில்லை. அவளும் அவளின் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சிரித்து பேசி சந்தோசமாக இருப்பதை பார்த்து பூரித்துபோனான். அவளும் இவன் கடந்து போகும்போதெல்லாம் ஜீவாவின் கண்களை சந்திக்க தவறவில்லை. சிநேகமாக இரண்டுபேரும் சிரித்துகொண்டார்கள்.

கண்டிப்பாக ரெஜினா அழகு தான்...இது கல்யாண சந்தோசத்துல வந்த அழகா இல்லை ஏற்கனவே அவகிட்ட இருந்த அழகா...குழம்பினான் ஜீவா....ஹ்ம்ம் எதுவாக இருந்தாலும் ரெஜினா அழகுதான்...மனதுக்குள் நினைத்துகொண்டான்.

"ஜீவா...மழை லேசாக தூறல் போடுது. ரெஜினாவோட பெரியப்பா குடும்பம் திருச்சில இருந்து வராங்களாம். இன்னும் பத்து நிமிசத்துல நம்ம பஸ்டாண்ட் வந்துருவாங்களாம். நீ இரண்டு குடை எடுத்துகிட்டு போய் அவங்கள கொஞ்சம் பத்திரமா கூட்டிகிட்டு வந்துடுறியா?" ரெஜினா அம்மாவின் குரலுக்கு "சரி மாமி என்று சொல்லிக்கொண்டு சிட்டாக பறந்தான் ஜீவா"..

வந்த சொந்தங்களில்..பாதிபேர் தூங்க...கொஞ்சம் பேர் தூங்கலாமா வேண்டாமா என யோசித்துகொண்டிருக்க...கொஞ்சம் பேர் தூங்கவே மாட்டோம்-னு அடம் பிடித்து அரட்டை அடித்துகொண்டிருந்தார்கள்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி....

ஸ்பீக்கரில் பாட்டு வழிந்து அந்த மழை தூறலுடன் கரைந்துகொண்டிருந்தது.

யாரோ ஜீவாவின் கையை பிடித்து இழுக்க...திரும்பி பார்த்தான். ஒரு சின்ன பொண்ணு அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள்.

"என்னம்மா செல்லம்?"

"ரெஜினா அக்கா உங்களை கூப்பிடாங்க..."

ஜீவா திரும்பி பார்த்தான்...ரெஜினா ஜன்னல் வழியே பார்த்துகொண்டிருந்தாள். ஜீவாவிடம்  மாடிக்கு வா என்று சைகை மொழியில் காட்டினாள்.

ஜீவா பதிலுக்கு எதுக்கு என்று சைகையில் கேட்டான்...

அவள் முகத்தை கொஞ்சம் கோபமாக வைத்துகொண்டு...வா என்று மீண்டும் சைகை காட்டினாள்.

இவனும் சரி வரேன் என்று பதிலுக்கு சைகை காட்டினான்.

எதுக்கு வர சொல்றா...என்று குழப்பத்துடன் மாடிக்கு சென்று காத்திருந்தான் ஜீவா.

மழை கொஞ்சமாக தூறல் போட்டுகொண்டு இருந்தது. கொஞ்சம் நேரத்தில் ரெஜினா மாடிக்கு வந்தாள்.

"ஹே ..ரெஜினா என்னை எதுக்கு இந்த நேரத்தில இங்க வரசொன்னடி?"

ஸ்ஸ்ஸ் ...ஒன்றும் பேசாதே என்று உதட்டின் குறுக்கே விரலை வைத்து காட்டினாள்..அவன் முன்னால் வந்து நின்றாள்.

ஜீவா ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான். அங்கிருந்த டியூப் லைட்டின் வெளிச்சத்தில் ரெஜினாவின் கண்களை பார்த்தான்.

"ஜீவா ...நான் பேசுறத மட்டும் கேட்டால் போதும்...நீ ஒன்றும் பேசாதே."

"--------------------"

"நாளைக்கு எனக்கு கலியாணம் ஜீவா. இதனை நாள் என் கூட நீ இருந்தே..என்னுடைய சந்தோசம், துக்கம், நல்லது, கெட்டது, ரகசியம், பரசியம் எல்லாமே உன்கிட்ட நான் சொல்லிருக்கேன். உன்னை ஒருநாள் பார்க்கலைனாகூட எனக்கு அந்த நாள் விடிந்ததாகவே தோணாது ஜீவா. என்னை நீ அவளவு அன்பா பார்த்துகிட்டே. உன்னுடைய ஒரு பார்வையில கூட நீ என்னை தப்பாக பார்த்ததில்லை. நான் உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிடமும் என்னை நீ சந்தோசமா வச்சுகிட்டே ஜீவா. நான் உன்னை சந்தோசமா வச்சிருந்தேனா-னு எனக்கு தெரியாதுடா. ஆனாலும் ரெஜினாக்கு ஒண்ணுன்னா நீ கலங்கிடுவே. எத்தனயோ ஆம்புளைங்க இருக்கிற இந்த தெருவில எனக்கு ஜீவா வரான்-னு தெரிஞ்சாலே மனசுக்குள்ள ஒரு சந்தோசம் அதுவா வந்துடும். நீ பேசுற பேச்சு, நீ பண்ற குறும்புத்தனம் எல்லாமே ரசிச்சேன் ஜீவா. வீட்டில அம்மா அப்பா இல்லைனாலும் நீ பக்கதுல இருந்தா  நான் ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன் ஜீவா. இது எல்லாம் சேர்ந்து எப்பவோ நீ என் மனசுக்குள்ள வந்துட்ட ஜீவா.

ஆமா ஜீவா நான் உன்னை காதலிச்சேன். நாளைக்கு கல்யாணம் இன்னைக்கு இவன்கிட்ட இப்போ சொன்னா  ஒன்னும் செய்ய மாட்டான்-னு நான் இப்போ இதை சொல்லல ஜீவா. இப்போ கூட என்னோட காதலை நான் சொல்லலேன்னா நான் அழுதே செத்துருவேண்டா. ஊர்ல யார் யார் எல்லாமோ என்னை லவ் பண்றாங்கன்னு வந்து சொன்னே. நீ என்னை லவ் பண்றேன்னு ஒருவார்த்தை என்னைக்காவது உன்கிட்ட இருந்து வரும்னு எதிர் பார்த்தேன் ஜீவா. யாருக்கெல்லாமோ என்னை லவ் பண்ண தோணிச்சு. உனக்கு ஏன் தோணலடா? நான் உன்னை லவ் பண்றத  சொல்லிருக்கலாம். ஆனா ஜீவா அதை சொல்லி நீ என் காதலை மறுத்துட்டா? உன்கூட சந்தோசமா இருக்கிற நாள்கள் எனக்கு கிடைக்காம போயிடுமோன்னு தான் சொல்ல வந்த வார்த்தையும் எனக்குள்ளே போட்டு புதைச்சுகிட்டேன். என் காதலை நான் சொல்லாம இருந்தது தப்புன்னா என்னை மன்னிசிடு ஜீவா..

ரெஜினாவின் கண்கள் கலங்கியது...அவள் மனதுக்குள் இருந்த காதல் அவள் வார்த்தைகளில் சொல்ல நினைத்து வார்த்தைகள் தடுமாறியது.

அப்படியே ஜீவாவை...கண்ணீருடன் கட்டி அணைத்துகொண்டாள்.

ஜீவா ...ஐ லவ் யு டா...என்னை மன்னிசிருடா செல்லம்.

ஜீவாவை விட்டு விலகினாள்...விருட்டென்று திரும்பி கண்ணீரை துடைத்தபடியே...விடுவிடு என திரும்பி பார்க்காமல் நடக்க தொடங்கினாள்.

ஜீவா என்னமோ சொல்ல வாயெடுத்தான்..

"மனதில் நின்ற காதலியே...மனைவியாக வரும்போது...
சோகம் கூட சுகமாகும்...வாழ்க்கை இன்ப வனமாகும்.."

கீழே வீட்டிலிருந்து கேட்ட பாடல்..நாளைக்கு அவளுக்கு கல்யாணம் என்பதை உணர்த்தியது.

பிறந்து....ஐந்தே நிமிடம் ஆனா காதல் ஒன்று அங்கே மழையோடு மழையாக கரைந்து செத்துகொண்டிருந்தது. கூடவே ஜீவாவும்!


குறிப்பு: இந்த காதலில் வேறு ஒரு திருப்புமுனையும் நீங்கள் நினைத்தால் செய்யலாம். அது எப்படி என்று உங்கள் கற்பனைகளை வார்த்தைகளில் வண்ணக்கோலமிட்டு அனுப்ப வேண்டிய முகவரி jeeva_ rtp@yahoo.es என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். அனால் ஒரே ஒரு நிபந்தனை, "கண்டிப்பாக ஜீவாவும் ரெஜினாவும் காதல் செய்யவே கூடாது"


இப்படிக்கு
நான்...ரசிகன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக