தலைப்பை பார்த்ததும் "எடா கோபி ..ஈ பாலக்காட்டு மாதவன ஒரு தமிழ் பெண்குட்டி பரிசோதிச்சோ.." அப்படின்னு பாக்யராஜ் சார் மூக்கால பேசுற அந்த 7 நாட்கள் படம் உங்க நினைவுல வந்தாலோ..புளிப்பு மாங்காய் கடிச்ச பொண்ணுக மாதிரி சீ...சீ இதெல்லாம் எனக்கு புடிக்காதுப்பா-னு மூஞ்ச கொரங்கு மாதிரி வச்சுகிட்டாலோ, இப்பவே சொல்றேன் ஹலோ..இது உங்க ஏரியா இல்ல. உடனே விண்டோ க்ளோஸ் பண்ணிக்கிட்டு பச்ச தண்ணிய பல்லுல படாம குடிச்சுகிட்டு ஓடிபோய் கவுந்து படுத்துகோங்க!
மேலும்..
வயசுக்கு வராதவங்க (சதிஷ் வகையறா), இதயம் பலகீனமானவங்க, புள்ளதாச்சி பொண்ணுக நான் மேலே சொல்லிருக்கிற மாதிரி செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம். இவளவு சொன்ன பிறகும் கண்டிப்பா இத படிப்பேன்னு அடம் புடிகிரவங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன், படித்தபின் ஏற்படும் "பின்" விளைவுகளுக்கு "சங்கம்" எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. ஏன்னா...இது மெய்யாலுமே பெண்களின் "அந்த 3 நாட்கள்" பத்திய பதிவு.
இனி...அந்த 3 நாட்கள்!
சின்ன வயதில் நிறைய சந்தேகம் வரும் எனக்கு. விளக்கில் ஏன் விளகெண்ணையை ஊற்றாமல் நல்லெண்ணையை ஊற்றுகிறார்கள், ஆரஞ்சுப் பழக் கொட்டையை முழுங்கி விட்டால் வயற்றிலிருந்து செடி வளருமா, பசுஞ்சாணியில் மின்னல் இறங்கினால் தங்கமாக மாறுமாமே எப்படி என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். இவற்றில் தலையாயதாக இந்தது 'மாதவிடாய்' என்றால் என்ன என்பது தான். எங்க ஏரியால நிறைய பொண்ணுக இருந்ததால இந்த பெண்கள் சமாச்சாரம் நிறையவே அடிபடும். ஆனால் பரிபாஷையில் குசுகுசுவென்று பேசிக்கொள்ளப்படும் இந்த விஷயத்தை டீகோட் செய்வதற்கு நிறைய பிரயத்தனப் படவேண்டியிருக்கும். வீட்டுக்கு விலக்கு, தீட்டு என்று தமிழிலும், அவுட் ஆஃப் டோர், ப்ரீயட்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்திலும் சொல்லப்படும் அந்த மூன்று நாட்கள் எங்க ஏரியாவில் "தூரம்" என்று வழங்கப்பட்டு வந்தது.
ஒருவாட்டி.. ட்யூப் லைட்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுது? சாதா ப்ல்புக்கும் ட்யூப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம்"ன்னு எங்க தெரு டீச்சரிடம் கேட்க அவர்கள் அவர்களுக்கும் விடைதெரியாது என்பதை "வெரி குட் இப்படித் தான் தெரியலைன்னா பெரியவங்களிடம் கேள்வி கேட்டு புரிஞ்சிக்கனும்"ன்னு முதுகில் தட்டிக் சொல்லிக் கொடுத்த தெம்பில், நாலு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அப்பாவிடம் பொதுவில் "தூரம்ன்னா என்னாப்பா...எப்படி ஆவாங்க?"ன்னு எல்லார் முன்னாடியும் நம்ப சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் பையன் ஐன்ஸ்டீன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கிறானே என்று ரொம்ப பெருமைப் பட்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்ன்னு பார்த்தா கோபம் வந்து நான் என்னம்மோ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கின மாதிரி முதுகில் ரொம்ப பலமாக தட்டிக் கொடுத்து காதைத் திருகிவிட்டார்.
பக்கத்துக்கு வீட்டு அக்காக்களிடம் கேட்டால் நைன்டி சிக்ஸ் டிவைட்டட் பை சிக்ஸ் என்னவென்று எதிர் கேள்வி கேட்டு இம்போசிஷன் எழுதச் சொல்லி கையை ஒடித்துவிடுவார்கள் என்பதால் மெதுவாக அம்மாவிடம் போய் கேட்டேன். எங்கம்மா நான் என்னம்மோ வயசுக்கு மீறின கேள்விகளை கேட்ட மாதிரி பதறிப் போய்விட்டார்கள். "யாருடா உனக்கு இந்தமாதிரி கேக்க சொல்லிக் குடுத்தாங்க?"ன்னு கேட்க..நான் ரொம்ப பெருமையா ட்யூப் லைட் மேட்டர சொல்லி...சரி போ நீ சொல்லாட்டா நான் அந்த டீச்சர் கிட்டயே போய் கேட்டுக்கிறேன்னு சொல்ல, ஈன்ற பொழுதில் பெரிதுவத்த என் தாய்..." அடப்பாவி இதையெல்லாம் எல்லார்கிட்டயும் கேட்காதடான்னு சொல்லி "அது வந்து கடவுள் ஒரு கல்லை மிதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கார், அந்த கல்லு பாத்ரூமில இருக்கும். அதை தெரியாமல் மிதித்துவிட்டால் அது தான் தூரம் அப்புறம் மூன்று நாட்களுக்கு யாரையும் தொடக்கூடாது வீட்டில் தனியாக இருக்கவேண்டும் என்று தேவன் (சாமி) கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் இது தேவரகசியம்.. இதப் பத்தி யாருகிட்ட்யும் கேட்க்கவோ சொல்லவோ கூடாது ரகசியமா வெச்சிக்கோன்னு" என்று பதமாக சொல்ல. எனக்கு மேலும் கேள்விகள். அதெப்படி நம்ம வீட்டு பாத்ரூமில தான் கல்லே இல்லீயே அப்புறும் எப்படின்னு எதிர் கேள்வி கேட்க, எங்கம்மா பருப்பு கடையும் மத்தை திருப்பி பிடித்து தேவரகசியத்தின் பொறுமையின் எல்லை இதுதான்னு ரெண்டு காட்டு காட்ட...அப்புறம் தேவரகசிய சந்தேகங்களை கொஞ்ச நாள் ஒத்திப்போட்டுவிட்டேன்.
ஆனால் ஒருநாள் அவசரமாய் டாய்லெட்டுக்கு கடமையாற்ற சென்று கொண்டிருந்த போது ஓட்டிலிருந்த விழுந்திருந்த கல்லை மிதித்து விட்டேன். "ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட, எங்கம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையிலடித்துக் கொண்டு பெருமைப்பட, எங்கப்பா நான் என்னம்மோ நமீதா கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார். சின்ன வயதில் எனக்கு கொஞ்சம் தன்னடக்கம் (ஹி..ஹி..ஹி) ஜாஸ்த்தி. வீட்டில் தேள் வந்தாலோ, இல்லை புது சட்டை போட்டாலோ சின்னத்தம்பி பைத்தியம் மாதிரி "எனக்கு கலியாணம் எனக்கு கலியாணம்"ன்னு தெருவில் சந்தோஷமாக அறைகூவல் விடுவேன். அன்றைக்கும், நான் தூரமான மேட்டரை தெருவெல்லாம் அறைகூவல் விட, எங்கப்பாவுக்கு தேரடி சுடலைமாடசாமி உடம்பிலேறிவிட்டது. வீட்டு வாசலை நான் எட்டுவதற்குள் எங்கிருந்தோ வந்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டு, இந்த அறிவு ஜீவியை எப்படி சமாளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் கவலையோடு பார்க்க, இவனை யாருக்காச்சும் வித்துரலாமானு யோசிக்க.. (நம்மளை எல்லாம் எவன் வாங்குவான்) மீண்டும் சாம தான பேத தண்ட முறைகள் (அதாவது பருப்பு கடையும் மத்து, விளக்குமாறு, அப்பாவின் பெல்ட்) என் உடம்பில் பரீட்சிக்கப்பட்டன.
அதை எல்லாம் எச்சி தொட்டு அழிச்சிட்டு நல்ல புள்ளையா புக் எடுத்து அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார்னு படிக்க ஆரம்பிச்சேன். அப்போ கூட சும்மா இருக்காம "அம்மா..இந்த அசோகா மரங்களை எல்லாம் அசோகரா நட்டாருன்னு" அடுத்த கொஸ்டின் கேட்டேன். என் அன்பு அம்மா தலையில அடிச்சிட்டு கிச்சன் பக்கம் ஓடிட்டாங்க.
அந்த தரம் 'தண்ட' முறை (அப்பாவின் பெல்ட்) மட்டும் கொஞ்சம் பலமாக பிரயோகிக்கப் பட்டதில் உண்மையாகவே அந்த தேவ ரகசியம் பற்றி அப்புறம் ஆர்வக் கோளாறு கொஞ்ச நாள் அடங்கியிருந்தது. கூட இருந்த நண்பர்களிடம் இது பற்றி விவாதித்தும் எங்கள் அறிவுஜீவித்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த மேட்டர் இருந்தது. அப்புறம் டீ.வி வந்த காலத்தில் கேர்ஃப்ரீகாரர்கள் புண்யத்தில் கேர்ஃபிரீக்கும் தேவரகசியத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். இருந்தாலும் அந்த விளம்பரத்தில் வரும் அம்மாக்களெல்லாம் ப்ரில் இங்க் ஏன் யூஸ் பண்ணுகிறார்கள்? எங்க வீட்டிலாவது ப்ரில் இங்க் வாங்குவார்கள், ஆனா இந்த சோனமுத்தா வீட்டில் இங்க் வாங்கமாட்டார்களே.. இவங்களுக்கெல்லாம் பாத்ரூமில் ப்ரில் இங்க் எப்படி கிடைக்கிறது என்று பலவிதமான சந்தேகங்கள். அப்புறம் இந்த மாதிரி விளம்பரங்களில் பரதநாட்டியம், டேன்ஸ், ஊஞ்சலில் ஆடுவது, ரோட்டில் ஆடுவது என்று குழப்பி எடுத்துவிட்டார்கள். இந்த 'விஸ்பர்'காரர்கள் மட்டும் ஒரு பாப் வெட்டிக் கொண்ட பீட்டர் ஆண்டியைப் போடுவார்கள். அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும். இருந்தாலும் ரகசியம் புலப்படவில்லை. அதிலும் பெண்களின் சுதந்திரத்தை வேறு லிங்க் செய்ய ஆரம்பித்தவுடன் கொஞ்ச நஞ்ச புரிதலும் போயே போச்சு.
அப்புறம் பின்னாளில் இந்த ரகசியம் எப்படியோ தெரிந்தது(எப்படி தெரிந்து கொண்டேன் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன் நியாபகத்துக்கு வரமாட்டேங்கிறது). இந்த லட்சணத்தில் தான் நண்பன் ஒருத்தன் சொல்லிக் கொடுத்த மாதிரி ஆணும் பெண்ணும் கைய கோர்த்துக் கொண்டு கசக்கினால் குழந்தை பிறந்துவிடுமென்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த டவுட்டையெல்லாம் யாரிடமும் கேட்கவில்லை.
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக