கோயமுத்தூர் காலையிலே பாலித்தீனில் சுற்றப்பட்டு பிரிட்ஜில் வைத்த காய்கறி போல் லேசாக வியர்த்து இருந்தது.
"ஹாப்பி பர்த்டே டு யு ஜீவா ..."
குரல்கள் கோரஸாக ஒலிக்க ஜீவா நேற்று நடந்த சம்பவத்தின் நினைவுகள் துளியுமில்லாமல் சந்தோசமாக கேக் வெட்டிக்கொண்டிருந்தான்.
பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஹால் பூராவும் நிறைந்திருந்தார்கள். கைகளில் கூல்ட்ரின்க்ஸ் பாட்டில்கள். ஜீவாவின் அப்பாவும் அம்மாவும் வாசலில் நின்று வருகிறவர்களை கும்பிட்டு உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஜீவாவின் நண்பர்கள் அவனது தோளை இடித்தனர். "என்ன சார் ....உன்னோட வருங்கால மாமனாரும் வருங்கால மனைவியும் இன்னும் பங்ஷனுக்கு வரல போல..."
"அரைமணி நேரத்துல வந்துடறதா ஹோட்டல்ல இருந்து கொஞ்சம் முன்னாடிதான் போன் பண்ணிருந்தாங்க."
"பொண்ணு பேரென்ன மாளவிகாவா?"
"ம் ..ம்"
"நேர்ல பாத்திருக்கியா?"
"இல்ல...போட்டோல தான்"
"எப்படியிருக்கா?"
"அமர்க்களமான இருக்கா"...ஜீவா மெலிதாய் புன்னகைத்தான்.
"மாப்பிளைக்களை முகத்தில இப்பவே வந்துட்டே"
"ஆமா..நேத்தைக்கு நைட் சென்னையிலிருந்து மிட்நைட் பிளைட் புடிச்சா கோயமுத்தூர் வந்தே?"
ஆமா ..
"என்ன நண்பா....சென்னைல டைட் என்கேஜ்மென்டோ?" கேட்டுக்கொண்டே ஃபிரண்ட் ஒருவன் குறும்பாய் கண்ணாடிக்க - அப்போதுதான் ஜீவாவுக்கு சட்டென்று ரெஜினாவின் முகம் நியாபகம் வந்தது. போலீஸ் இந்த நேரம் கேஸை எந்த கோணத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருப்பார்கள்?
அவள் என்னுடைய அறையில் இருந்துதான் கீழே விழுந்திருக்கிறாள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியுமா?
"நான் எந்த எவிடன்சும் விட்டுவிட்டு வரலியே?"
"ஜீவா....என்னடா யோசனை" - அவன் அப்பா ஜீவாவின் தோளில் தட்டினார்.
ஜீவா சுதாரிப்புக்கு வந்தான். - "ஒ ...ஒண்ணுமில்லப்பா."
"என்னாச்சு மை டியர் சன் ...ஆர் யு ஆல்ரைட்?"
"எஸ் ....எஸ் ....ஐயம் ஆல்ரைட் பா."
சொல்லிக்கொண்டிருக்கும்போதே ....வாசலில் உயர்தர கார் ஓன்று வந்து நிற்பதும் அதிலிருந்து கிருஷ்ணாவும் மளவிகாவும் இறங்கி ...ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையோடு ஹாப்பி பர்த்டே சொல்லிக்கொண்டே ஜீவை கட்டி பிடித்தார் கிருஷ்ணா என்கிற வருங்கால மாமனார்.
சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பின் ஜீவாவின் வருங்கால மாமனார் ஒரு சிறிய சதுர பெட்டியை அவனிடம் நீட்டினார். "மாப்பிளைக்கு இந்த வருங்கால மாமனாரோட பிறந்தநாள் பரிசு. ஒரு டயமண்ட் வாட்ச். ஓபன் பண்ணி பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க மாப்பிளை".
ஜீவா அந்த பெட்டியை ஓபன் செய்தான். விலையுயர்ந்த டைமண்ட் வாட்ச் பெட்டிக்குள் டாலடித்தது. "தேங்க்ஸ் மாமா. இட்ஸ் சோ நைஸ்."
"இது என்ன மாப்பிளை பிரமாதம். இதை விட விலையுயர்ந்த என் பொண்ணையே உங்களுக்கு தர போறேன்." கடைவாயில் தங்கப்பல் தெரிய சிரித்தார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் சத்யா கூடவே சப்-இன்ஸ்பெக்டர் மதன், லோக்கல் ஏரியா இன்ஸ்பெக்டர் சகிதம் வாசலில் நின்றிருந்த ஒருவனிடம் "இங்க ஜீவா என்கிறது?"
"ஹி ஐஸ் தெயர்...தி பர்த்டே பாய்" - கைகளில் இருந்த கூல்ட்ரிங்கஸ் கோப்பை தளும்பாமல் காமித்தார்.
"தேங்க்ஸ்"....ஜீவாவை நோக்கி நடந்தார்கள்.
பேசிக்கொண்டே எதேச்சையாக வாசலை பார்த்த ஜீவா துணுக்குற்றான். உடம்பில் ஒரு வெப்பம் பரவி குப்பென்று முகம் வியர்த்து சூடு பரவியது.
சத்யா ஜீவாவின் மிக அருகில் நெருக்கமாக வந்து குரலை தாழ்த்திக்கொண்டு ..."மிஸ்டர் ஜீவா"
"எ ..எஸ் ஐயாம்"
"எங்க கூட கொஞ்சம் வாரீங்களா?"
"எ ...என்ன விஷயம்?"
"அதை அப்புறம் சொல்றோம். மொதல்ல கொஞ்சம் எங்க கூட வெளிய வாங்க"
என்ன நடக்கிறதென்று புரியாமலே...எல்லாரும் பார்த்துக்கொண்டு நிற்கும்போதே ஜீவாவின் அப்பா பக்கத்தில் வந்தார்.
"என்ன மேடம் என்ன ப்ராப்ளம்?"
"நீங்க?"
"ஐயாம் ஜீவா'ஸ் பாதர். எதுனாலும் நீங்க எங்கிட்ட சொல்லாலாம்."
ஜீவா கர்சீப்பால் முகத்தில் முளைத்த வியர்வை துளிகளை ஒற்றிக்கொண்டே முகம் வெளிறியபடி நின்றுகொண்டிருந்தான்.
"சென்னைல ஒரு பொண்ணு டெத் சம்பந்தமா உங்க பையனை என்கொய்ரி பண்ண வந்திருக்கோம்"
ஜீவாவின் அப்பா முகம் மாறினார்.
"மேடம் என்னையும் என் பையனையும் யார்னு நினைச்சீங்க ?" - குரலை சற்று உயர்த்தினார்.
சத்யா நிதானமாக ஜீவா பக்கம் திரும்பி ..."லிசன் மிஸ்டர் ஜீவா, இங்க தேவையில்லாத ஒரு சீன் கிரியேட் பண்ணவேண்டாம்னு நினைக்கிறோம். வி டூ ஹாவ் ப்ராப்பர் அரெஸ்ட் வாரண்ட். உங்களை எந்த கேள்வியும் கேட்காம வண்டியில தூக்கி போட்டுக்கிட்டு போக எங்களுக்கு தெரியும். ப்ளீஸ் கோவாப்பரேட் வித் அஸ்"
"ஒ ...ஓகே ...மேடம் நான் உங்ககூட வரேன். லேட் அஸ் கோ"
என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் வந்திருந்தவர்களின் பேச்சுக்குரலும் சலசலப்பும் அணைந்து போயிற்று.
போலீஸ் ஸ்டேஷனில் சத்யா டேபிளின் ஒருமுனையில் காலை தரைக்கு ஊன்று கொடுத்தவாறே உட்காந்திருக்க ஜீவா இன்ஸ்பெக்டர் முன்னால் செயரில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். ஜீவாவிற்கு நா உலர்ந்து தொண்டையில் எரிச்சல் போல் உணர்ந்தான்.
"ஹ்ம் ...சொல்லுங்க ஜீவா. அந்த பொண்ணு யாரு?"
"எ ...எந்த பொண்ணு மேடம்?"
"சென்னைல நீங்க தங்கியிருந்த ஹோட்டல்ல ஆறாவது மாடியில இருந்து விழுந்து செத்தாளே அந்த பொண்ணு? அவ யார்னு நீங்க தான் சொல்லணும்."
"மே ...மேடம்..."
"நீங்க ரூமை 10 நிமிசத்துல வெக்கேட் பண்ணி போயிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா?"
"எ ...என்ன மேடம் சொல்றீங்க? எனக்கு எதுமே புரியல."
சத்யா... சட்டென்று மேஜையிலிருந்து எழும்பி தன்னோட பாண்ட் பாக்கெட்டில் கர்சீப்பில் பத்திரமாக மடித்து வைத்திருந்த ஒருஜோடி கொலுசுகளை மேஜை மீது வைத்தாள்.
"இது செத்துப்போன பொண்ணோட காலில் மாட்டியிருந்த கொலுசுகள்."
சத்யா அந்த கொலுசுகளை கையில் எடுத்து அதன் குண்டு மணி விளிம்புகளை ஜீவாவின் கண்களுக்கு அருகாமையில் காட்டினாள்.
"நல்ல பாருங்க...அந்த குண்டு மணி விளிம்புகளில் தீற்றல் தீற்றலா ஒரு கலர் ஒட்டியிருக்கு. அது என்ன நிறம்னு சொல்றீங்களா மிஸ்டர் ஜீவா?"
குரலில் லேசாக கடுமை தெறித்தது.
"ப...பச்சை கலர் மேடம்."
"வெரிகுட்."
சத்யா இப்போது டேபிளின் மேலிருந்த தன்னுடைய மொபைலை அன்லாக் செய்து உயிர்ப்பித்தாள். பரபரவென்று அதன் ஸ்க்ரீனை தேய்த்து ஒரு போட்டோவை எடுத்து ஜீவாவிடம் காட்டினாள்.
"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ஹோட்டல் தானே?"
"எ ...எஸ் மேடம்."
"இதுல நீங்க ஸ்டே பண்ணியிருந்தது ஆறாவது மாடி. "
ஜீவா கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கினான்
"அந்த மாடி சிட் - அவுட் குட்டை சுவருக்கு என்ன கலர் பெயிண்ட் பூசிருக்காங்க?" போட்டோவை ஸூம் செய்து காட்டினாள்.
"ப ....பச்சை."
"அதுக்கு மேல இருக்கிற ஏழாவது மாடிக்கு?"
"ம...மஞ்சள் "
"கீழ இருக்கிற ஐந்தாவது மாடிக்கு?"
"வ..வயலட் "
"சோ...அந்த ஹோட்டல்ல பச்சை கலர் பெயிண்ட் பூசின ஒரே சிட் - அவுட் நீங்க ஸ்டே பண்ணியிருந்த அதே ஆறாவது மாடி சுவருக்கு மட்டும் தான்."
ஜீவா கண்களில் கலவரம் லேசாக பரவ ஆரம்பித்தது.
சத்யா இப்போது வேறு ஒரு போட்டோவை ஓபன் செய்து ஸூம் செய்து காட்டினாள்.
"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ரூம் சிட் - அவுட்டில் உள்ள பச்சை கலர் குட்டை சுவர். அந்த போட்டோல பாருங்க சுவரோட மேற்பரப்புல கீறல் கீறலா விழுந்திருக்கு அந்த கீறல் கோடுகளில் பெயிண்ட் கூட காணாம போயிருக்கும். அது எப்படின்னு உங்களுக்கு புரியுதா?" சத்யாவே தொடர்ந்தாள் - "அந்த பெண் இந்த மாடியிலிருந்து விழுந்திருக்கா...அவ கால்ல இருந்த கொலுசோட குண்டு மணி விளிம்புகள் சுவரோட பெயிண்ட் பரப்பை தேய்ச்சுகிட்டே விழுந்திருக்கு. அந்த பச்சை கலர் பெயிண்ட் தான் அவ கொலுசு குண்டு மண்டியில ஒட்டியிருந்த பச்சை கலர் பெயிண்ட். அந்த ரூம் சிட் - அவுட்டுக்கு வேற எப்படியும் நுழைய முடியாது. அப்படி நுழையணும்னா உங்க ரூம் வழியா இருக்கும் ஒரே கதவுதான் மார்க்கம். சோ .... இனி நீங்க தான் சொல்லணும் இந்த பச்சையாய் ஒரு கொலை எபிஸோடை எப்பிடி முடிக்கணும்னு. உங்களுக்கே தெரியும் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட செகண்ட் கிரேட் விசாரணை எப்பிடி இருக்கும்னு."
சத்யா ஜீவாவிற்கு பின்னால் வந்து இரண்டு கைகளாலும் ஜீவாவின் தோள்களை அமுக்கினாள்.
ஜீவா....டேபிளின் மேல் கண்ணாடி கிளாசில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு தொடர்ந்தான்...
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக