ஞாயிறு, நவம்பர் 06, 2016

ஜக்கம்மா சொல்லிட்டா !





"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!"

நடு இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு சாமகோடாங்கியின் குரல் துல்லியமாகவும் அதே நேரம் தூரமாகவும் கேட்டது. எங்கோ ஒரு நாய் கோடாங்கியின் சப்தத்தில் எரிச்சலாகி ஓங்கி பெருங்குரலில் குரைத்துக்கொண்டிருந்து. இப்போது கோடாங்கியின் சப்தம் இன்னும் கொஞ்சம் நெருங்கி கேட்டது.

"நல்லகாலம் பொறக்குது! ....நல்லகாலம் பொறக்குது!! கைவிட்டதெல்லாம் கைக்கு வரப்போகுது. வாய்விட்டதெல்லாம் பகை மறந்து போக போகுது. நல்லகாலம் பொறக்குது!...நல்லகாலம் பொறக்குது!"

சாமகோடாங்கியின் குரலில் ஜீவாவிற்கு முழிப்பு வந்தது. எப்போதும் இரவில் டிவியில் பாட்டு  பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவது அவன் வழக்கம். எழுந்து வீட்டின் உள்பக்கம் பார்த்தான். வேறு யாருக்கும் குடுகுடுப்பைக்காரனின் சத்தம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்பாவின் குறட்டை சத்தம் மட்டும் சீராக கேட்டுக்கொண்டே இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி 2:30 என்று காட்டியது. பக்கத்திலிருந்த சொம்பிலிருந்து ஒருவாய் தண்ணீரை குடித்துக்கொண்டே வெளிப்பக்க கதவின்  அருகே வந்து நின்றான்.

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா....அந்த ஜக்கம்மாதான் மலைப்போல வர்றதை பனிபோல மாத்தணும்."

ஜீவாவுக்கு தூக்கிவாரி போட்டது. காரணம் சாமகோடாங்கி ஜீவாவின் வீட்டின் முன்னாள் நின்றுகொண்டு குறி சொல்லிக்கொண்டு இருந்தான். சொன்னதையே இன்னும் இரண்டுவாட்டி கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு சாமக்கோடங்கி அடுத்தவீட்டை நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!" சமகோடாங்கியின் குரலும் உடுக்கை சப்தமும் வீட்டுக்கு வீடு தாவி சன்னமாக உடைந்துபோய்க்கொண்டிருந்தது.

ஜீவாவிற்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்தது போலிருந்தது. "என்ன இந்த கோடாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி வந்து மட்டும் இப்படி சொல்லிட்டு போறான்?"சாமக்கோடாங்கி குறி சொல்றதெல்லாம் நிஜமா நடக்குமா? - உடம்பு லேசாக நடுங்க தொடங்கியது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தான். மனதிற்குள் ஹோ......என்ற இரைச்சலுடன் ஏதோ உழலுவதை போல உணர்ந்தான். அப்பிடியே கோடாங்கி சொன்னமாதிரி ஏதும் கெட்டது நடந்தா அது எந்த மாதிரி கெட்டது? மனதிற்குள் தேவையில்லாத நினைவுகள் எல்லாம் சுழன்று சூறாவளியாய் அடித்தது. "ச்..சே ...சே ...அப்படி எதுவும் நடக்காது". தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எதற்குமே விடை தெரியாமல்....எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப்போனான்.

அம்மாவும் தங்கச்சியும் நின்று வேலைசெய்யும் அடுப்படியில் தலைக்கு மேல் இருக்கும் பரணில் அந்த இரவு நேரத்திலும் பூனைகள் இரண்டு விளையாடிக்கொண்டிருந்தது. பூனைகளின் விளையாட்டினால் என்றோ ஒருநாள் வேண்டாம் என்று தூக்கி போட்ட இரும்பினால் ஆன தேங்காய் உரிப்பான் ஒன்று தன்னுடைய கூர்மையான தலையை நீட்டி ஒரு இன்ச் முன்னால் நகர்ந்தது.

"டேய் ....ஜீவா எழுந்திருடா. மணி 8 ஆகுது இன்னுமாடா தூங்குறே? வேலைக்கு போகல?"

அம்மாவின் குரல் கேட்டு லேசாக கண்முழித்து பார்த்தான். போர்வையை உதறிவிட்டு எழுந்தான். வழக்கம் போல ஆபிஸ் போக ரெடி ஆனான். நேற்று இரவு நடந்ததை சுத்தமாக மறந்துவிட்டிருந்தான். வாசலில் வந்து சிட் -அவுட்டில் உட்காந்து அன்றைய தினசரி நாளிதழை அவசரம் அவசரமாக புரட்டும்பொழுது பக்கத்துக்கு வீட்டு சந்திரா அக்கா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஆமா...நேத்தைக்கு சாமக்கோடாங்கி வந்தான்க்கா.."

"எப்போ?"

"டைம் சரியா தெரியல. எனக்கு லேசா முழிப்பு வந்துது. ஆனா வெளிய வந்து பார்க்கலக்கா."

ஜீவாவிற்கு நேற்று இரவு நடந்ததெல்லாம் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு துகள்களை போல பரபரவென்று மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. நாளிதழை மடித்து வைத்துவிட்டு வீட்டுக்குள் போய் ஒருதடவை கண்களை சுழல விட்டான். அடுப்படியில் அம்மா பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் காய்கறி நறுக்கிவிட்டு கத்தி அடுப்படியில் வழக்கம் போல் இருந்தது. ஜீவா அதை எடுத்து கத்தி ஸ்டான்ட் -இல் வைத்தான். அம்மா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

"அட....என்னடா இது...புள்ளைக்கு திடீர்னு பொறுப்பு வந்திருக்கு"

ஜீவா...ஒன்றும் பேசாமல் லேசாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து ஹால் பக்கம் வந்தான். ரூமிற்குள் தங்கை ஏதோ செய்வது போல் தெரிந்தது, அயன் பாக்ஸை கையில் எடுத்து துணி அயன் பண்ண போவது தெரிந்தது.

"ஏய்....இரு! இரு!!" - கொஞ்சம் சத்தமாக சொல்லிக்கொண்டே அவளிடம் ஓடினான்.

"ஏய்ய்.....என்ன பண்ண போறே?"

"ஹ்ம் ....பார்த்தா தெரியல? துணி அயன் பண்ண போறேன்."

"இரு... இரு...எங்க உன் கைய காட்டு. பாரு குளிச்சுட்டு தலை துவட்டி கையில ஈரம் இன்னும் இருக்கு. இத வச்சுக்கிட்டு அயன் பாக்ஸை தொடலாமா? மொதல்ல கைய நல்லா துடைச்சுக்கோ. ஈரமான கை வச்சுக்கிட்டு கரண்ட்ல வேலை செய்யலாமா?"

"ஏய் என்னாச்சு உனக்கு இன்னைக்கு? டெய்லி நான் இப்பிடி தானே அயன் பண்ணிட்டு போறேன்."

"விதண்டாவாதம் பண்ணாதே. போ... போய் சொன்ன மாதிரி கைய தொடைச்சுக்கிட்டு வா."

அவள் முணுமுணுத்துக்கொண்டே போனாள்.

அம்மாவும் தங்கச்சியும் அவனை குறுகுறுவென்று பார்த்தார்கள். என்னாச்சு இவனுக்கு இன்னைக்கு.

"டேய் ...என்னடா ஆச்சு? காலையிலே ஒருமாதிரி நடந்துக்கிறே??"

"ஒண்ணுமில்லமா...இங்க பாருங்க எது பண்ணாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!"

இரண்டுபேரும் அவனை எதோ வேற்றுகிரகவாசியை பார்க்கிற மாதிரி பார்த்தார்கள்.

ஜீவா அதைப்பற்றி எல்லாம் கவலை படவில்லை. கோடாங்கி சொன்னதே அவன் மனதுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது.

"சாமக்கோடாங்கி ஏன் அப்படி சொன்னான்? அவன் சொன்ன கெட்டகாலம் என்னவா இருக்கும்? "

ஆபிஸில் ஜீவாவிற்கு வேலையே ஓடவில்லை. மனதிற்குள் ஒருவிதமான பயப்புயல் உருவாகிக்கொண்டே இருந்தது 

சாமகோடாங்கி சொன்னது என்னவா இருக்கும்?

"டேய் ...மச்சி..."

"என்னடா .."

"மச்சி ...இந்த சாமக்கோடங்கி சொல்றதெல்லாம் பலிக்குமாடா ?"

"ஹா....ஹா .....ஹா"

"என்னடா புதுசா ஏதும் வேலைக்கு சேர போறியா?"

"அட ....சொல்லுடான்னா."

"எனக்கு தெரிஞ்சவரைக்கும் அது பலிக்க சான்சே இல்ல. இருந்தாலும் நம்ம வீட்டில உள்ள பெருசுங்க இன்னும் அது ஏதோ தேவதூதனின் மெசேஜ் னு நினைச்சு பலிக்கும்னு தான் நம்புறாங்க."

"பலிக்குமா பலிக்காதான்னு கேட்டா ஒண்ணு பலிக்கும் சொல்லு இல்லாட்டி பலிக்காதுன்னு சொல்லு. நீ வேற சும்மா கன்பியூஷ் பண்ணாதே."

"என்னதான்டா உன் பிரச்னை? காலையில இருந்து ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறே?"

"ஒண்ணுமில்லடா"

ஒண்ணுமில்லை என்று சொல்லிவிட்டாலும் ஜீவா காதுகளில் சாமக்கோடாங்கி சொன்னது திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

பொறுக்க முடியாதவனாக....போன் எடுத்து வீட்டு நம்பருக்கு சுழற்றினான். கொஞ்சம் நேரம் ரிங் போய்ட்டு பின்பு ஜீவாவின் அம்மா போன் எடுத்தார்கள்.

"அம்மா .."

"என்னம்மா எங்க போயிட்டே? போன் எடுக்க இவளோ நேரமா?"

"டேய்.....போன் வந்த உடனே வழக்கம்போல வந்து எடுத்தேன். இன்னைக்கு என்ன ஏதோ போன் எடுக்க நேரம் ஆனா மாதிரி கோபப்படுறே?"

"சரி சரி....ஒண்ணுமில்ல. என்ன பண்றீங்க?"

"வீட்டு பின்னாடி துணி காயப்போட்டு நின்னேன்டா. ஒருநாளும் இல்லாம இன்னைக்கு என்ன போன்? ஏதும் விஷயம் இருந்தாத்தானே நீ போன் பண்ணுவே?"

"ஒ ...ஒண்ணுமில்ல. சும்மா பேசணும்னு தோணிச்சு. தங்கச்சி காலேஜ் போயிட்டாளா?"

"ஹ்ம்ம் ...போயிட்டா"

"சரிம்மா ...நான் போன் கட் பண்றேன்."

கொஞ்சம் நேரம் ஏதோ வேலை பார்த்தோம் என்று, சுரத்தே இல்லாமல் ஏதேதோ பண்ணினான்.

மறுபடியும் போனை எடுத்து சுழற்றினான் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு. அப்பாவின் பெயரை சொல்லி "கொஞ்சம் பேச முடியுமா?"

"இருங்க...கூப்பிடுறேன்"

அப்பா லைனில் வந்தார்.

"யாரு?"

"அப்பா நான் தான் ஜீவா."

"என்னடா திடீர்னு போனெல்லாம்?"

"ஒண்ணுமில்லப்பா....சாப்டீங்களா?"

இல்லப்பா ..ஒரு கார் சர்வீஸுக்கு வந்துது. அத முடிசிட்டு சாப்பிடணும்.

"என்னப்பா டெய்லி மத்தியான சாப்பாட்டை 3 மணிக்கும் 4 மணிக்கும் சாப்பிடுறீங்க. இல்லாட்டி வெறும் டீ குடிசிட்டு சாப்பாட்டை வீட்டுக்கு திரும்பி கொண்டுவந்துடுறீங்க."

"நம்ம வேலை அப்படிப்பா."

"சரி சரி சீக்கிரம் முடிசிட்டு சாப்பிடுங்க. - போனை கட் பண்ணினான்."

"யாருக்கும் எந்த பிராபிளமும் இல்ல. நாம தான் தேவை இல்லாம டென்ஷன் ஆகுறோமோ?"

வீட்டில் மறுபடியும் பூனைகள் பரண்மேல் விளையாட  தொடங்கின. தேங்காய் உரிப்பான் கொஞ்சம் கூட முன்னால் நகர்ந்து வந்தது.

தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதீத ஜாக்கிரதை புலர்த்திக்கொண்டிருந்தான். அடிக்கடி நினைவில் வரும் சாமக்கோடங்கியின் குறிச்சொல் சில நேரம் மனதில் கூட்ஸ் வண்டிபோல் வந்துகொண்டே இருந்தது. சிலநேரம் கிணற்றில் போட்ட கல்லைப்போல் சலனமற்று கிடந்தது. ஆனாலும் தினம் தினம் ஜீவாவின் மனதில் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது.


"அம்மா...ஆட்டோல போகிறப்போ நல்ல புடிச்சுக்கோங்க."

"நான் என்ன சின்ன புள்ளையாடா? திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு."

"டி .....காலேஜ் போறப்போ ரோடு கிராஸ் செய்றப்போ பார்த்து கிராஸ் செய்."

"ஹ்ம்ம்....உன் இம்சை அளவில்லாம போகுது டா."

"அப்பா ...ஒர்க் பண்ற இடத்துல சேப்டி எல்லாம் ஒழுங்கா பார்த்துக்கோங்க. வண்டிக்கு அடியில நின்னு ஒர்க் பண்றப்போ மறக்காம ஹெல்மெட் போடுங்க."

"நான் என்ன இன்டர்நேஷனல் கம்பெனிலையா வேலை பார்க்கிறேன். அப்பா சிரித்தார்"

ஒருநாள் அம்மா வீடு கொல்லைப்பக்கம் மீன் கழுவிக்கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் அம்மாவின் பக்கத்தில் விழுந்து அம்மாவை முகத்தினருகே விருட்டெண்டு பறந்து சென்றது.

ஜீவா அதை பார்த்து பதறிவிட்டான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டைக்கு போய்விட்டான்.

"மரத்துல தேங்காய் பழுத்திருந்தா ஆள் விட்டு பறிங்க. அடுத்தவங்க தலையில விழுறவரை வெயிட் பண்ணுவீங்களா?  இனி ஒருவாட்டி தேங்காயோ மட்டையோ எங்க வீட்டுப்பக்கம் விழுந்துது நடக்கிறதே வேற!!!!"

அம்மா தான் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்தாள்.

"டேய் ....தென்னை சதிக்காது டா. இந்த உலகத்துல தேங்காய் விழுந்து எத்தனைபேரு செத்திருக்காங்க சொல்லு?"

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா."

ஜீவாவிற்கு மண்டைக்குள் அந்த உடுக்கை சத்தம் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. "போம்மா ....நீ போய்  கிச்சன்ல வேலைய பாரு. தங்கச்சி எங்க? உனக்கு ஹெல்ப் பண்ணாம என்ன பண்றா அவ..." சீறினான் ஜீவா 

"டேய் அவ அடுப்படியில தாண்டா நிக்கிறா. அவளை பார்த்துக்க சொல்லிட்டு தான் நான் மீன் கழுவ போனேன்."

பூனைகள் பரணின் மேல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. தேங்காய் உரிப்பான் முன்னைவிட இன்னும் நீளமாக தன்னுடைய கூரிய நாக்கினை தலைக்குமேல் நீட்டிக்கொண்டிருந்தது.

நாட்கள் ஓடிவிட்டது. ஜீவாவிற்கு சாமகோடங்கியின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மனதை விட்டு மறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் வீட்டில் எதாவது அசாதாரணமாக ஏதும் நடந்தாலோ, வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் திரும்பிவர கொஞ்சம் தாமதம் ஆனாலோ சாமக்கோடங்கி மனதிற்குள் உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடுவான்.

"மிஸ்டர் ஜீவா...உங்களுக்கு ஒரு கால்." -   ரிஷப்சனிஸ்ட்டின்  குரலை தொடர்ந்து இன்டெர்காமை எடுத்து வெளியிலிருந்து  வரும் அழைப்பை  தொடர்புகொண்டான்.

அம்மா தான் பதட்டத்துடன் பேசினாள்.

"ஜீவா ..அப்பாவிற்கு திடீர்னு உடம்புக்கு முடியலடா."

ஜீவாவிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது..

"என்னம்மா....என்ன ஆச்சு?"

"தெரியலடா ..அம்மாவின் குரல் உடைய தொடங்கியது. வேலை செய்யுற இடத்துல திடீர்னு 2-3 தடவ வாந்தி எடுத்தாராம். அப்புறம் கீழ விழுந்துட்டாராம். கூட வேலை பார்க்கிறவங்கதான் பக்கத்தில இருக்கிற CSI ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்கங்களாம். விஷயம் கேள்விப்பட்டதும் ஆட்டோ புடிச்சி நான் ஹாஸ்பிடல் வந்துட்டேன். டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்கடா."

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. "சாமக்கோடங்கியின் சத்தம் மெலிதாக கேட்க ஆரம்பித்ததுபோல் இருந்தது ஜீவாவிற்கு. 

"சே.....அழாதம்மா. ஒன்னும் ஆகாது."

"எனக்கென்னமோ பயமா இருக்குடா."

"ஐயோ ...அம்மா பயப்படாதே. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. சாப்பிடாம வேலை பார்த்திருப்பாரு. அதனால தான் இப்படி ஆகியிருக்கும்."

"நான் இதோ பெர்மிஷன் போட்டுட்டு ஹொஸ்பிடலுக்கு வர்ரேன்மா".

"ஜீவா....நான் வீட்டில போட்டது போட்டபடி வந்துட்டேன். நீ வீட்டுக்கு போய் அப்பாவுக்கு ஒரு ட்ரெஸ்ஸும் எடுத்துட்டு ஒரு பிளாஸ்கும் எடுத்துட்டு வா. காஸ் எல்லாம் ஆப் பண்ணேனான்னு கூட தெரியல. "

"சரி நீ பதட்டப்படாதே. நான் வீட்டுக்கு போய்ட்டு பக்கத்துக்கு வீட்டில தங்கச்சி வந்தா விஷயத்தை சொல்ல சொல்லிட்டு நீ கேட்டதை எடுத்துட்டு வாரேன்."

போனை கட் செய்துவிட்டு ஆபீசில் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. மனதிற்குள் ஆயிரம் தடவை சொல்லிக்கொண்டாலும், சாமக்கோடங்கி சொன்னதும் அவ்வப்போது வந்து மனதில் பயம் காட்டியது.

வீட்டை அடைந்து கதவை திறந்து அடுப்படி பக்கம் ஓடினான். அடுப்படியில் தேங்காய் உரிப்பான் தலை குப்புற விழுந்து கிடந்தது. அதன் கூரிய நாக்கு குத்தியதில் தரை ஓடுகள் நான்கைந்து உடைந்து சிதறி கிடந்தன. 

இப்போது அதை பார்க்க டயம் இல்லை. "அப்பாவுக்கு என்னாச்சோ !"

கிச்சனில் பரபரவென்று எல்லாவற்றையும் சரி பார்த்தான், அம்மா எடுத்துவர சொன்னவற்றை எடுத்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டான். வீட்டைப்பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு தங்கை வந்தவுடன் விபரத்தை சொல்ல சொன்னான். ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.

அப்பா பெட்டில் ஒருக்களித்து படுத்திருக்க கலங்கிய கண்களுடன் அம்மா தாடையில் கையை வைத்துக்கொண்டு அப்பாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் அருகில் சென்று தோளைதொட்டான்.

"அம்மா...டாக்டர் என்ன சொன்னாங்க?"

"எனக்கொன்னும் புரியலடா. என்னமோ குடல்ல ஓட்டை விழுந்திருக்காம் ஆபரேஷன் பண்ணனும் சொல்றாங்க."

இருங்க...நான் போய் டாக்டர் கிட்ட விபரத்தை கேட்டுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே டாக்டர் இருக்கும் அறையை நோக்கி ஓடினான். விபரத்தை கேட்டுக்கொண்டு அம்மாவிடம் வந்தான்.

"டாக்டர் என்னடா சொல்றாரு?"

"அப்பா டயத்துக்கு சாப்பிடாதது தான் பிரச்சினை. சும்மா டீ குடிச்சே சமாளிச்சா இப்படித்தான். அல்சர் வந்து குடல்ல புண் ஆகி ஓட்டை விழுந்திருக்காம். ரெண்டு இடத்துல. அதனால குடல்ல உள்ள கழிவெல்லாம் ப்ளட்ல மிக்ஸ் ஆகுதாம். நாளைக்கு ஈவினிங் ஆபரேஷன் பண்ணியாகணுமாம்."

"ஆபரேஷன் பண்ணா சரி ஆகிடுமா?"

"ஹ்ம்....சரி ஆகிடும்மா. டாக்டர் பயப்படவேண்டாம்னு சொல்லிட்டாரு."

கட்டிலின் ஒரு ஓரத்தில் உட்காந்து அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்கள் மூடிக்கொண்டு அப்பா இன்னும் ஒருக்களித்து படுத்திருந்தார். அப்பாவின் கையை அம்மா தன் கையிலெடுத்து லேசாக தடவிக்கொண்டிருந்தாள். ஒரு கையில் ட்ரிப் ஏறிக்கொண்டிருந்தது.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம்.....

"ச்சே ...என்ன இது இந்த நேரத்தில அதை போய் நினைச்சுகிட்டு" ஜீவா டக்கென்று சிந்தனையை கலைத்துவிட்டு..

"அம்மா  .....தங்கச்சி வீட்டில தனியா இருப்பா. காலேஜ் முடிஞ்சு வந்திருப்பா. நைட் கூட யாராச்சும் இருக்கணும்."

"நீ போ ஜீவா. நான் பார்த்துகிறேன் இங்க."

"இல்லம்மா ...நீங்க தனியா..."

"அதுதான் பக்கத்து பெட்ல எல்லாம் நிறையபேர் இருக்காங்களே."

"உங்களுக்கும் அப்பாவுக்கும் நைட் சாப்பாடு?"

"அதெல்லாம் வேண்டாம்டா. உங்கப்பா குணமாகி எழும்புனாலே போதும். நாளைக்கு ஆபரேஷன் இருக்கிறதால அப்பாவுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவேண்டாம் வெறும் நீராகாரம் மட்டும் குடுத்தா போதும்னு டாக்டர் சொல்லிருக்காங்க."

"அம்மா...கவலை படாதீங்க. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காருல்ல."

"ஹ்ம்ம்.."

"நீங்களும் பட்டினி கிடந்தது ஏதும் ஆகிற போகுது. நான் பொய் ஹோட்டல்ல ஏதும் சாப்பிட வாங்கி குடுத்துட்டு போறேன் என்று சொல்லிக்கொண்டே ஜீவா கிளம்பினான்."

"அம்மாவுக்கு இரவுக்கு இட்லி வாங்கி குடுத்துவிட்டு...அப்பாவை ஒருகணம் பார்த்தான்.கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது."

"அம்மா பார்த்துக்கோங்க ...நான் போய்ட்டு காலையில வந்துடுறேன்" என்று கிளம்பினான்.

வீட்டில் தங்கை அழுது அழுது கண்கள் வீங்கிப்போய் உட்காந்திருந்தாள். எங்கே அவளை பார்த்தால் தானும் அழுதுவிடுவோம் என்று அவளை தவிர்த்துவிட்டு கிச்சன் பக்கம் போய் பார்த்தான். உடைந்த தரை ஓடுகள் எல்லாம் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு தேங்காய் உரிப்பான் ஒரு மூலையில் பத்திரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தங்கை தான் சுத்தம் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது.

தங்கையிடம் வந்து நிலைமையை எடுத்து சொல்லி அவளை சமாதானம் பண்ணினான்.

இரவு....நீண்டு கொண்டே போனது...எப்போதுடா விடியும் என்று தோன்றியது.

காலையில் தங்கை செய்து குடுத்த காலை உணவும், அம்மாவுக்கு தேவையான பேஸ்ட் பிரஸ் எலாம் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போக ரெடி ஆனான் ....போன் அடித்தது...

போனை எடுத்தான்.....

அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டே 

"ஜீவாவாவா......அப்பா நம்மை எல்லாம் விட்டு போயிட்டாருடாஆஆஆ....."

ஜீவாவிற்கு ஒரு கணம்.....எதுமே புரியவில்லை.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. 

உடுக்கை சத்தம் மட்டும் சம்மட்டி அடியாக தலைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கையிலிருந்த கூடை கீழே தடாலென கீழே விழுந்து சாப்பாட்டை சிதறடித்துவிட்டு பாத்திரம் உருண்டோடியது. கண்களில் மொத்த கண்ணீரும் அன்றே பாய்ந்துவிடும் நோக்கில் பீறிட்டுக்கொண்டு வந்தது.

சத்தம் கேட்டு...ஓடி வந்த தங்கை ஜீவா நிற்கும் நிலையை பார்த்து டக்கென்று போனை பிடுங்கி காதில் வைத்து....ஓ என்று அலற ஆரம்பித்தாள்.

ஆயிற்று...3 வருடங்கள். அப்பா என்னும் ஆணிவேர் அறுந்து காலங்கள் ஓடிவிட்டது. இப்போதெல்லாம் ஜீவாவிற்கு சாமக்கோடங்கியின் குறிசொல்லும் உடுக்கை சத்தமும் மனதிற்குள் கேட்பதே இல்லை.


இரவு 2.00 மணி.

நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது" ....எங்கோ கனவில் கேட்பது போல் இருந்தது ஜீவாவிற்கு. டக்கென்று முழித்து பார்த்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது....."

சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த குரல் கேட்டது. . கண் விழித்தபிறகும் கேட்கிறது. இது காணவில்லை.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது"

குரல் அருகாமையில் கேட்டது.

ஜீவா அனிச்சையாக சோபாவில் கழற்றிப்போட்ட சட்டையின் பையை துளாவினான். எவ்வளவு என்று தெரியாது கொஞ்சம் கரன்சி நோட்டுகள். கையை இறுக்கமாக மூடியபடியே வெளிக்கதவை திறந்தான். ஸ்விட்சை தட்டி விளக்கை உயிர்ப்பித்தான். சாமக்கோடங்கி ஜீவாவின் வீட்டை நோக்கி நகர்ந்து வந்து உடுக்கை அடிக்க கையை தூக்கியதும்.

"ஷ்... ஷ்... ஷ்... ஷ்" என்று உதட்டின் குறுக்கே விரலை வைத்து சைகையால் அவனை மௌனமாக்கினான். கையில் இருந்த கரன்சி நோட்டுகளை அவனிடம் நீட்டினான். சாமக்கோடங்கியும் எதுவும் பேசாமல் அமைதியாக அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது......ஜக்கம்மா சொல்றா நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது."

விளக்கை அணைத்துவிட்டு கதவை மூடிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். 

அடுத்த நொடி வாழ்க்கையில் நல்லதா கெட்டதா என்பது தேவை இல்லை!. இந்த நொடி...இது தான் வாழ்க்கை.  இந்த நொடி என்ன நடக்கிறதோ அதை இருக்கைகள் நீட்டி ஏற்றுக்கொள்வதே போதும். 

போர்வையை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

ஆமா ....இன்னைக்கு சாமக்கோடங்கி சொல்லவந்தது நல்ல காலம் பொறக்குதுன்னா? கெட்டகாலம் பொறக்குதுன்னா?

ஜீவாவின் சாமக்கோடங்கி மீண்டும் உடுக்கை அடிக்க ஆயத்தமானான்.


இப்படிக்கு
ர.சி.க.ன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக