சனி, டிசம்பர் 24, 2016

ஆசை...






Behold her, single in the field,
Yon solitary Highland Lass! 
Reaping and singing by herself;
Stop here, or gently pass!



வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் "The Solitary Reaper" கவிதை வரிகள் அந்தோணி வாத்தியாரின் கணீர் குரலில் அந்த பனிரெண்டாம் வகுப்பு "B" பிரிவு வகுப்பறையிலிருந்து சத்தமாக கேட்டது.

மூன்றாவது பெஞ்சின் வரிசையில் இருந்த ஜீவாவிற்கு அது ஒன்றும் காதில் ஏறுவதாக இல்லை இப்போது.

பசி....பசிக்குது....மெதுவாக வாட்சை திருப்பி பார்த்தான் இன்னும் முழுசாக இருபது நிமிடங்கள் இருக்கின்றன லன்ச் பெல் அடிப்பதற்கு. அப்படியே சட்டை பாக்கட்டின் மேல் கைவைத்து காலையில அம்மா தந்த இருபது ரூபாய் பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்தான். 

"ஹ்ம்...இருக்கிறது."

அம்மா எதோ உறவினர் வீட்டிற்கு போகிற காரணத்தால் மத்திய சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட கிடைத்த இருபது ரூபாய். காலையில் அவசரம் அவசரமாக பழைய சோறும் ஊறுகாயும் வாரி போட்டுகொண்டு வந்தது. அது எப்போதோ செரிமானம் ஆகிவிட்டிருந்தது. வயிற்றிக்குள் வெறும் ஆட்டுரல் சுற்றுவது போலிருந்தது. 


"இந்த இருபது ரூபாயை வைத்து இன்னைக்கு என்ன சாப்பிடலாம்?" ஜீவா அடுத்த கட்ட சிந்தனைக்கு தாவினான்.


"பிரியாணி சாப்பிடவேண்டுமென்றால் இருபது ஐந்து ரூபாய் வேணும்."

"கௌரிசங்கர் ஹோட்டலில் வெஜிடபிள் சாப்பாட்டிற்கு முழுதாக இந்த இருபது ரூபாயை மொய் வைக்கவேண்டும். எக்ஸ்ட்ரா சாதம் கேட்டால் அதற்க்கு தனி காசு கேட்பான்."

"ஹ்ம்ம்....பேசாமல் காமாட்சி மெஸ்ஸில் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட வேண்டியதுதான். பதினைந்து ரூபாய் தான். மீதி இருக்கும் ஐந்து ரூபாய்க்கு எதாவது சாக்லேட் வாங்கி சாப்பிடலாம்."

ஒருவழியாக யோசித்து இந்த பிளானை மனதில் ஒட்டிக்கொண்டான்.


ஜீவாவின் சிந்தனையை கலைக்கும் விதமாக லன்ச் பெல் அடித்தது. அந்தோணி வாத்தியார் வகுப்பறையின் கதவை தாண்டியிருக்க மாட்டார். அதற்குள் ஜீவா சிட்டாக பறந்தான் காமாட்சி மெஸ் நோக்கி.

ஓட்டமும் நடையுமாக ரோட்டில் நடந்துகொண்டிருந்த ஜீவாவை அந்த குரல் இழுத்து நிறுத்தியது.

"தம்பீ ...."

ஜீவா ஒருகணம் சுற்றும் முற்றும் பார்த்தான். நம்மளை இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அடியெடுத்து வைத்தவனை மீண்டும் அந்த குரல் நிறுத்தியது.

"தம்பீ... உன்னைத்தான் "

குரல் வந்த திசை நோக்கினான்.

பாதி அழுக்கும் பாதி வெள்ளையாக சட்டையும் ...காவி வேட்டியுமாக அவன்...(இல்லை இல்லை அவர்) அங்கு உக்காந்திருந்தார். நெத்தியில் பட்டையும் கழுத்தில் நீளமாக ருத்ராட்ச மாலையுமாக, கொஞ்சம் கலைந்த முடி..நிறைய தாடியுமாக பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரு சாமியார் மாதிரி.

"இங்க வாங்க தம்பீ"

ஜீவா ஒருகணம் அவரிடம் போகலாமா வேண்டாமா என்று யோசித்து..அவரிடமே போனான்.

அப்போதுதான் அதை கவனித்தான்.

அவர் முன்னாள் நிறைய பலவிதமான சாமி படங்கள் ஒட்டிய அட்டை ஓன்று வைத்திருந்தார். சரஸ்வதி, முருகன், பிள்ளையார், காளி, அல்லா, இயேசு இத்யாதி இத்யாதி. அந்த அட்டையின் மேல் கொஞ்சம் சோழிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு சின்ன ஆமை குஞ்சுகள் படுத்திருப்பதை போல் இருந்தது.

ஜீவாவிற்கு மனதிற்குள் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

"புள்ளை பிடிக்கிறவனாக இருப்பானோ?" அம்மா அடிக்கடி புள்ளை பிடிக்கிறவங்கள் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கிறாள். 

"ஒருவேளை பில்லி சூனியம் வைக்கிறவனாக இருப்பானோ?" ச்சே ... தெரியாம வந்துவிட்டோமோ?

"தம்பீ ....என்ன படிக்கிறீங்க?" 

ஆங்.....என்ன கேட்டிங்க? ஜீவாவின் திகில் சிந்தனை கொஞ்சம் அறுந்தது.

"தம்பீ ...என்ன படிக்கிறீங்கன்னு கேட்டேன்" குரல் கொஞ்சம் கனிவாகத்தான் இருந்தது.

"பன்னெண்டாம் வகுப்பு"

"தம்பிய பார்த்தா நல்ல படிக்கிற புள்ள மாதிரிதான் இருக்கு."

"யாரு நானா?" (மூணாவது  பெஞ்சில கழிசடைங்க கூட உட்கார வச்சிருக்காங்க...நான் நல்ல படிக்கிற பையனா?)

"ஆமா தம்பி...முகத்தை பார்த்தாலே தெரியுதே."

"சரிதான்"...(இவரு என்னதான் சொல்ல வராரு இப்ப?)

"அநேகமா ...தம்பிக்கு  இப்ப நேரம் நல்லாருக்கு. "

"ஆங்...."(பசி கொல்லுது....நேரம் நல்லாருக்காம்). "சரி சாமி ஸ்கூலுக்கு நேரமாகும் நான் கிளம்புறேன்" சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஜீவா நகர முயன்றபோது....

அந்த பொடியன் ஓடி வந்தான். எப்படியும் வயது ஒரு பத்து பனிரெண்டுக்குள்  தான் இருக்கும். வந்தவன் சாமியாரிடம் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினான். சாமியார் அதை வாங்கி தான் பக்கத்தில் இருந்த சிறிய தகர பெட்டிக்குள் வைத்துக்கொண்டே அவனை பார்த்தார்.

"சரி எத்தனை?" என்று அவனிடம் கேட்டார்.

"நாலு"  - பையன் சொன்னான் 

"ஹ்ம்ம் ...சரி குலுக்கி போடு"

பையன் அங்கிருந்த சோழிகளை கையில் அள்ளி இரண்டு கைகளால் நன்றாக குலுக்கி எதோ ஒரு சாமியை கண்மூடி வேண்டிக்கொண்டு சோழிகளை உருட்டினான். அட்டை படங்களின் மேல் சோழிகள் உருண்டு ஓடி நிலைகுத்தி நின்றன.

சாமியார் அதில் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார். 

"நாலு!"

சாமியார் மறுபடியும் அந்த தகர டப்பாவை திறந்து இருபது ரூபாயை அவனிடம் நீட்டினார். பொடியன் அதை வாங்கிக்கொண்டு விர்ர்ர்...என்று பைக் ஸ்டார்ட் செய்வதுபோல் சத்தம் எழுப்பியவாறே அங்கிருந்து மின்னலென மறைந்தான்.

ஜீவாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் தலை தூக்கியது.

சாமியார் லேசாக ஜீவாவை நோக்கி புன்னகைத்தார்.

"என்ன தம்பி....என்ன பார்க்கிறீங்க?"

"ஒண்ணுமில்ல....அவனுக்கு நீங்க ஏன் இருபது ருபாய் குடுத்தீங்க?" ஜீவா என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டுவிட்டான்.

சாமியார் இப்போது காலை மடக்கி நன்றாக உட்காந்து கொண்டார்.

"அதாவது தம்பி...இதுல பார்த்தீங்களா...பத்து சோழிகள் இருக்கு. இந்த பத்து சோழிகளை இந்த அட்டையில  உங்களுக்கு மனசுக்கு புடிச்ச சாமியை வேண்டிக்கிட்டு உருட்டனும். உருட்டுறதுக்கு முன்னால நீங்க ஒரு நம்பர் சொல்லணும். நீங்க சோழிய போட்டதும் நீங்க ஏற்கனவே சொன்ன நம்பர் சோழிங்க மல்லாக்க விழுந்தா நீங்க எவ்வளவு பணம் காட்டுறீங்களோ, அதுக்கு டபுள் மடங்கு பணம் நான் உங்களுக்கு தருவேன். அதாவது ஐந்து ருபாய் வைத்தால் பத்து ருபாய், பத்து ருபாய் வைத்தால் இருபது ருபாய். இப்போது வந்துவிட்டு போனானே அந்த பையனுக்கு இன்றைக்கு சுக்கிர திசை. என்னிடமிருந்து இதுவரை இருபத்துஐந்து ரூபாய் ஜெயித்துவிட்டான்."

ஜீவா கொஞ்சம் ஆர்வமானான்.

சாமியார் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே அதே பையன் மீண்டும் வந்தான். இந்தமுறை ஐந்து ரூபாயை நீட்டினான்.

"ஏழு" என்று சொல்லிக்கொண்டே கடகடவென சோழிகளை எடுத்து உருட்டினான். சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார்.

"ஏழு!!"

பையனின் கையில் பத்து ரூபாயை திணித்தவாறே...

"டேய் ...பையா ....உனக்கு ஏது இவ்வளவு பணம்?"

"எங்க அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்"...சொல்லிக்கொண்டே மறுபடியும் ஓடிவிட்டான்.

"தம்பீ ....இந்தாங்க....நீங்களும் ஒருவாட்டி சோழிய உருட்டிப்பாருங்க" சாமியார் சோழிகளை அள்ளி ஜீவாவிடம் நீட்டினார் 

"ஐயோ...நான் இல்லீங்க..."

"அட ...சும்மா உருட்டுங்க தம்பி. நீங்க காசு பணம் எல்லாம் தரவேண்டாம். உங்களுக்கு யோகம் எப்படியிருக்குனு பார்க்கலாம்."

ஜீவாவிற்கு ஒருதடவை யோகம் இருக்கிறதா என்று பார்க்க ஆசை தோன்றியது.

சோழிகளை கையில் வாங்கி...அட்டையில் இருந்த படங்களை கண்ணை மூடி ஒருவாட்டி கும்பிட்டுவிட்டு. 

"ஆறு" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். 

சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை கவனமாக எண்ண ஆரம்பித்தார்.

"சபாஷ் ...ஆறு!" சாமியார் கொஞ்சம் சத்தமாக சொன்னார்.

ஜீவாவிற்கு தன் கண்களையே ஒருவாட்டி நம்ப முடியவில்லை. 

"பார்த்திங்களா தம்பீ ...நான்தான் அப்போவே சொன்னேன்ல. தம்பிக்கு இப்ப நேரம் நல்லாருக்குனு."

ஜீவாவிற்கு மனதினுள் உற்சாகம் பிறந்தது. மனது பரபரவென கணக்கு போட ஆரம்பித்தது.

"ஒருவேளை நான் விளையாடி ஒரு இருபது ருபாய் ஜெயித்தால், மொத்தம் நாற்பது ரூபாய் கையில் வரும். காமாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, மத்தியானம் ஒரு படமும் பார்க்கலாம். ஜீவாவின் மனக்கண் முன்னாள்...காலையில பார்த்த "அடல்ட்ஸ்  ஒன்லி" போஸ்டர் மின்னி மறைந்தது. அந்த படம் நாளைக்கு தியேட்டரிலிருந்து தூக்கிருவான். அதற்குள் பார்க்க ஒரு சான்ஸ்!!."

"இருந்தாலும் ஏதாவது தப்பாகி சோழிகள் நாம நினைச்ச மாதிரி விழலைனா?" எல்லாமே பாழாகிடும். அதனால முதலில் சிறிய அமவுண்ட் வச்சி பார்க்கலாம் என்று கணித மேதை ராமானுஜர் தோற்று விடும் அளவிற்கு பக்காவாக கணக்கு போட்டு, சோழிகளை கையில் எடுத்தான் மறுபடியும்.

"சாமி...நான் ஐந்து ருபாய் காட்டுறேன்" சொல்லிக்கொண்டே இருபது ருபாய் தாளை சாமியாரிடம் நீட்டினான். அவரும் அதை வாங்கி தகர பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மீதி பதினைந்து ரூபாயை அவனிடம் கொடுத்தார்.

ஜீவா கண்ணை மூடி சாமியை வேண்டிக்கொண்டு ...சோழிகளை குலுக்கி உருட்டிவிட்டுக்கொண்டே...

"எட்டு"

சோழிகள் அட்டையின் மேல் உருண்டோடின. 

சாமியார் என்ன ஆரம்பித்தார்.

"எட்டு" தீர்க்கமாக சொன்னார்.

ஜீவாவிற்கு மனது குதியாட்டம் போட ஆரம்பித்தது. சாமியார் பத்து ரூபாயை அவனிடம் நீட்டினார்.

"தம்பிக்கும் இன்னைக்கும் சுக்கிர திசை தான் போல" சாமியார் கலகலவென சிரித்தார்.

பாக்கெட்டில் இப்போது இருபது ஐந்து ருபாய் இருக்கிறது" ஜீவா சாமியார் சொன்னதை காதில் வாங்கியும் வாங்காமலும் கணக்கில் குறியாயிருந்தான்.

அதற்குள் மீண்டும் அந்த பொடியன் வந்து ஒருதடவை விளையாடி....இருபது ருபாய் கட்டி முழுசாக நாற்பது ரூபாய் ஜெயித்து விட்டு போய்விட்டான்.

"ஒரு பொடியன் நம்மளை விட அதிகமா ஜெயிக்கிறான்...நம்ம நேரமும் நல்லாத்தான் இருக்கு. நம்மால ஜெயிக்க முடியாதா என்ன?" ஜீவாவிற்கு ஆசை என்னும் போதை தலைக்கேறியது.

"சாப்பிடணும், அப்புறம் படத்துக்கு போகணும். லேட் ஆனா படம் போட்டிருவான். பலான சீன் ஏதும் இருந்தா மிஸ் ஆகிரும். இப்போது சிறிய அமௌண்ட் வச்சி விளையாட நேரமில்லை. மொத்தமா ஒருவாட்டி ஜெயித்துவிட்டு போயிற வேண்டியது தான்."

"சாமி...இருபது ருபாய் கட்டுறேன்"  - ஜீவா ஒரு முடிவுடன் இருந்தான்.

"சரி..தம்பீ. கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க" இருபது ரூபாயை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.

ஜீவா சோழிகளை கையில் அள்ளி...."பெரிய நம்பர் சொல்லி ஒருவேளை விழாமல் போய்விட சான்ஸ் உண்டு. அதனால சின்ன நம்பர் சொன்னா பத்து சோழிகளில் எப்படியும் அந்த நம்பர் விழும்" என்று நினைத்துக்கொண்டே

"ஐந்து" என்று கொஞ்சம் பதட்டத்துடன் சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். சோழிகள் உருண்டு சிலது கொஞ்சம் ஆட்டம் காட்டிவிட்டு ஒரு நிலைக்கு வந்தன.

சாமியார் சோழிகளை எண்ணினார்.

ஓன்று..
.
.
.
இரண்டு...
.
.
.
.

மூன்று.
.
.
.
.
.

நான்கு.

நான்கு.....நான்கு..!!!!!!

ஜீவா பரபரக்கும் கண்களுடன் ஐந்தாவது சோழியை தேடினான். இல்லை...எங்கேயுமே இல்லை!

நான்கு தான்!

"நான்கு"......சத்தமாக சொன்னார் சாமியார்!

ஜீவாவிற்கு ஒருகணம் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருந்தது.

"ஐயோ....இருபது ருபாய் போச்சே"...தலைக்குள் எதோ சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

வாழ்க்கையில் ஒருதடவை நினைத்து பார்க்காத ஏமாற்றம் வந்தால்....மூளை அடுத்த செயலை உடனே செய்து அந்த ஏமாற்றத்தை தடுத்து நிறுத்த பார்க்கும். அந்த நேரத்தில் நிதானமில்லாமல் எடுக்கும் முடிவுகள் மீண்டும் தப்பாகும் என்பது நியதி.

ஜீவாவும் அந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.

விட்டதை பிடிக்க வேண்டும்...சாப்பிடவாவது காசு வேண்டும் என்று நிதானமில்லாமல் அந்த முடிவை எடுத்தான்.

"சாமி...ஐந்து ரூபாய் கட்டுறேன்."

"உங்க விருப்பம் தம்பீ....இந்த தடவை கண்டிப்பா நீ கும்புடற சாமி கைவிடாது"

ஜீவா அவசரம் அவசரமாக பாக்கெட்டில் மீதமிருந்த ஐந்து ரூபாயை அவர் கையில் திணித்துவிட்டு சோழிகளை கையிலெடுத்தான்.

பாரபட்சம் பார்க்காமல் எல்லா சாமியும் கும்பிட்டுவிட்டு...

"ஒன்று" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை அட்டையின் மேல் உருட்டினான். 

சோழிகள் சரசரவென உருண்டோடின..

ஜீவாவின் கண்கள்...அகல விரிந்து இதுவா...அதுவா...எந்த சோழி மல்லாக்க விழப்போகிறது என்று தவிப்பாய் தேடினான்.

சோழிகள் உருண்டு....உருண்டு....

கடைசியில்...எல்லாமே ஆமை குஞ்சுகள் போல் கவுந்து படுத்துக்கொண்டன.

ஜீவாவிற்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. பத்து சோழிகளில் ஓன்று கூடவா மல்லாக்க விழவில்லை. கண்களில் லேசாக கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிற மாதிரி இருந்தது.

சாமியாரை பார்த்தான்...அவரும் கன்னத்தில் கைவைத்து அவனை பரிதாபமாக பார்த்தார்..(இல்லை இல்லை ஏளனமாக பார்த்தார்)

"தம்பீ ...உங்களுக்கு இப்போது நேரம் சரி இல்லை போல... சரி தம்பி வேற காசு இருந்தா எடுத்து வாங்க..." சாமியார் சோலியை முடித்துவிட்டு அவனை விரட்டுவது போன்ற தொனியில் பேசினார்.

அவர் (இனி என்ன அவர் ....அதான் ஆட்டைய போட்டானே) அவன் ... அவன்..துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிடைத்தவரை லாபம் என்று அட்டையை மடித்து அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். 

மனசு மாறி காசை திரும்ப கொடுத்துவிடுவான் என்கிற ஒரு சிறிய நப்பாசையுடன் ..ஜீவா கடைசியாக ஒருதடவை அவனை பரிதாபமாக பார்த்தான்.

"போங்க தம்பி ....போங்க....ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல"

ஜீவா அங்கிருந்து கண்கள் பசி மயக்கத்தில் சொருக நகர்ந்தான். அவனும் எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு வேறுபக்கமாக நடையை கட்டினான்.

பசி...பசிக்குது....மோதலில் சாப்பிட எதாவது வழி கண்டு பிடிக்கணும். ஆங்...கொஞ்சம் தூரத்தில்தான் அவன் மாமாவின் செருப்பு கடை ஓன்று இருக்கிறது. மாமா என்றால் தூரத்து சொந்தம் தான். ஆனாலும் அம்மா சிலநேரம் கையில் காசு இல்லாமலிருந்தால் "ஜீவா...மாமா கடையில் போய்  மத்தியானம் லஞ்சுக்கு இருபது ரூபாய் வாங்கிக்கோ" என்று சொல்வதுண்டு. அப்போதெல்லாம் ஜீவாவும் அவரிடம் சென்று அம்மா சொன்னாங்க என்று காசு வாங்கியிருக்கிறான். அனால் அம்மா சொல்லாமல் ஒருநாளும் அவரிடம் காசு வாங்கியதில்லை. இருபது ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வாங்கியதுமில்லை. அந்த நம்பிக்கையில் ஜீவா எப்போதாவது காசு கேட்டு போனால் அவன் மாமாவும் இல்லை என்று சொல்லாமல் காசு குடுப்பது வழக்கம். இன்று தான் முதன்முறையாக அம்மா சொல்லாமல் காசு வாங்கலாம் என்று தீர்மானித்து மாமா கடையை நோக்கி வேகமாக நடந்தான்.

கடையில் வேலைபார்க்கும் ஆள்கள்  சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். 

இவனை பார்த்ததும் ஒருவன். "தம்பி ...என்ன இந்த பக்கம்?"

"ஒண்ணுமிலீங்க....மாமாவை பார்க்கணும்"

"ஓ ...மாமாவா? அவரு கொஞ்சம் முன்னாடி தானே கடைக்கு புதுசா சரக்கு எடுக்கணும்னு எதோ பார்ட்டியை பார்க்க போனாரு. எப்போ வருவார்னு கூட தெரியாதே. ஆனா எப்பிடியும் சாயங்காலம் ஆகிரும் தம்பி."

அவர் சொல்லி முடிக்க ஜீவாவிற்கு கடைசியாக இருந்த ஒரு வாய்ப்பும் நழுவி போகிறது நன்றாக புரிந்தது.

"சரிண்ணே....நான் கிளம்புறேன்"

"என்ன தம்பி? ஏதாச்சும் சொல்லனுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே"...சொல்லிக்கொண்டே ஜீவா அங்கிருந்து அகன்றான்.

"இனி ஒரு வழியுமில்லை.....பேசாமல் ஸ்கூலுக்கு போயிர வேண்டியது தான்...கிளாஸ் ஆரம்பிசிருக்கும்" நினைத்தவாறே ஓட்டமும் நடையுமாக ஸ்கூலை நோக்கி போனான்.

வரும் வழியில்....அந்த காட்சியை பார்த்தான். அந்த பிராடு சாமியாரும்...அடிக்கடி வந்து போன பொடியனும் ஜோடியாக பேசி சிரித்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள். அப்படின்னா அந்த பொடியானும் இவன் ஆளா? ஐயோ கடவுளே...என்னைய நல்ல வச்சு செஞ்சிருக்காங்க. நாசமா போறவங்களா...!

கால்கள் லேசாக தளர ஆரம்பித்தது போலிருந்தது. நாக்கு வேறு வறண்டு வறண்டு போனது. பசி தன் ஆக்டோபஸ் கரங்களால் குடலை பிடித்து பிழிந்து கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்கூலை அடைந்து...தன்னுடைய வகுப்பை நெருங்கும்போதே பத்மா டீச்சர் பாடம் நடத்தும் சத்தம் கேட்டது.

கண்கள் இருட்டாக...நாக்கு வறண்டு நடை தளர்ந்து....வகுப்பின் வாயிலில் வந்து நின்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ ....மேம்" என்று சொல்ல வாயெடுத்தான்....வார்த்தை சிதறடித்து. 

எதோ சத்தம் கேட்டு பத்மா டீச்சர் திரும்பி பார்த்தார்கள். "ஏன்டா லேட்?"

"சா ...சாப்பிட வீ..வீட்டுக்கு போனேன் அதான் லே ...லேட்" வார்த்தைகள் பயத்திலும் பசியிலும் தந்தியடித்தன.

"ஹ்ம்ம்..போ...உள்ளபோய் உட்காரு"

ஜீவா பொய்  தன்னுடைய பெஞ்சில்  பொய் தொப்பென்று உட்காந்தான்.

"ஸ்டுடென்ட்ஸ்....லெட்ஸ் கன்டினியூ......பத்மா டீச்சர் பாடத்தை தொடர்ந்தார்கள் 

புத்தர் தன்னுடைய போதனைகளில் என்ன சொன்னார்?" ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்"   -  என்ன சொன்னார்?

ஸ்டுடென்ட்ஸ் கோரஸாக சத்தமிட்டார்கள் "ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்".

ஜீவா...மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

"புத்தர் ....கரெக்ட்டா தான்...சொல்லிருக்காரு!"



பின்குறிப்பு: இதுவரை அவர்கள் அந்த சோழியை உருட்டி எப்படி ஏமாத்தினார்கள் என்று ஜீவாவிற்கு புரியவில்லை. ஜீவா இன்றும் அதை யோசித்து விடை காண முயன்று கொண்டிருக்கிறான். 


இப்படிக்கு
"கொலை பசியுடன்" ரசிகன் 

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

ஆதலால்.....காதல் செய்யாதீர்!





விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் அந்த தனியார் ஹாஸ்பிடல் நிசப்தமாக இருந்தது. ஆனாலும் ஐசியு வார்டு மட்டும் பரபரப்பில் டாக்டரும் நர்ஸ்களும் ஷூ கால்கள் தேய அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியே ஜீவாவின் அம்மாவும் தங்கையும் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி ரெஜினாவும் படபடக்கும் இதயத்துடன் அமர்ந்திருந்தாள்.

ஐசியு என்று எழுதப்பட்ட பெரிய கதவை திறந்துகொண்டு டாக்டர் கங்காதரன் சோர்வாக வெளியே வந்தார். கூடவே வந்த நர்ஸிடம் எதோ கேட்டுவிட்டு, நேராக ஜீவாவின் அம்மாவிடம் வந்தார். லேசாக தொண்டையை சொருமிக்கொண்டு..

"வி ஆர் சோ சாரி மேடம் ...வி ட்ரைட் அவர் பெஸ்ட்..... பட்...."

"என்னாச்சு டாக்டர்? சொல்லுங்க" - ஜீவாவின் அம்மா அழுகை கலந்த குரலுடன் டாக்டரின் கையை பற்றிக்கொண்டார்.

"மனச தேத்திக்குங்க....உங்க மகனை எங்களால காப்பாத்த முடியல."

"ஜீவா..ஆ ஆ ஆ ...."

ஜீவாவின் அம்மாவின் அழுகை குரல் ஹாஸ்பிடல் முதல் தளம் முழுதும் எதிரொலித்தது.

ரெஜினா நடந்தது யூகித்துக்கொண்டு தலையில் கைவைத்து லேசாக விம்மியபடியே தரையில் அமர்ந்தாள்.


****************


ஜீவா வாட்சை திருப்பி பார்த்தான். மணி 8:45 என்று காட்டியது.

எப்படியும் போய் தான் ஆகணும். நம்முடைய தேவைக்கு நேரம் காலம் எல்லாம் பார்த்தால்  சரி ஆகாது. அனால் இரவு நேர டிரைவிங் தான் கொஞ்சம் கஷ்டம். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய கைப்பேசியை உயிர்ப்பித்து ரெஜினாவின் நம்பரை  அழுத்தினான். மறுமுனையில் ரிங் போனது.

"ஹேய் ஜீவா என்ன இந்த நேரத்தில்?"

"ஒண்ணுமில்ல ரெஜினா, நீ ஃப்ரீயா இருக்கியா? உன்னை கொஞ்சம் பார்க்கணும்."

"என்னாச்சு ஜீவா? எனி ப்ராப்ளம்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல டியர், உன்னை பார்க்க வரலாமா?"

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ..."ம்ம்" என்றாள்.

"தாங்க்ஸ் ...இதோ கிளம்பி ட்வண்டி மினிட்ஸ்ல வரேன்."

ஜீவா டிரஸ் மாத்திக்கொண்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

ஜீவாவும் ரெஜினாவும் காதலிக்க தொடங்கி முழுசாக 8 மாதமும்  12 நாட்கள் ஆகிறது. முதலில் இருவரும் சாட்டில் தான் சந்தித்துக்கொண்டார்கள். ஹாய்-ல் தொடங்கி படிப்படியாக நேரம் காலம் தெரியாமல் சாட்டில் பேச ஆரம்பித்து பின்பு இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொண்டு நேரடியாக சந்தித்து காதலை சொல்லி இப்போது இரண்டு வருடத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற கண்டிஷனில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரது வீட்டிலும் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. ஆனாலும் ரெஜினாவுக்கும் ஜீவாவிற்கும் அடிக்கடி நடக்கும் ஊடல்களுக்கு காரணமும் இந்த சாட் தான். ரெஜினாவிற்கு சாட் தான் கதி. அவளுடைய கைப்பேசி எப்போதும் மெஸேஜ்களால் அலறிக்கொண்டும் IMO, வாட்ஸப் கால்களால் கதறிக்கொண்டும் இருக்கும். ஜீவா எப்போதாவது போன் பேசினாலும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு "ஜீவா அப்புறம் பேசுறேன் எனக்கொரு பிரண்ட்டோட கால் வருது" என்று இணைப்பை துண்டித்து விடுவாள். ஜீவாவிற்கு இது எரிச்சலாக இருந்தாலும் அவளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட கூடாது என்கிற விதிப்படி ஜீவா அமைதி காத்தான். சில நேரம் பொறுக்க முடியாமல் அவளை நேரடியாக சந்திக்கும் போது கேட்டுவிட்டான்.

"ஹேய் ....என்னடி நீ கால் பண்ண அட்டண்ட் பண்ணவும் மாட்டேங்கிறே அப்படியே அட்டென்ட் பண்ணினாலும் பிரண்ட் கால் வருது சொல்லிவிட்டு கட்  பண்ணிடுறே. நீ இன்னும் சாட் பைத்தியமாவே ஏன் இருக்கே? உனக்கு நம்ம லவ் முக்கியமில்லையா?"

ஜீவா கொஞ்சம் கடுமையான குரலில் கேட்டான்.

"லிசன் ஜீவா ...எனக்கு நம்ம லவ் எவ்வளவு முக்கியமோ அது மாதிரி என்னோட சாட் ப்ரண்ட்ஸ் ஆல்ஸோ முக்கியம். நான் ஜஸ்ட் டைம் பாஸுக்கு தானே அவங்க கூட பேசுறேன்? நீ என்னை சந்தேகப்படுறியா ஜீவா?"

"சந்தேகமெல்லாம் இல்லடி ...பட் நீ கொஞ்சம் சாட் பண்றத கம்மி பண்ணு ப்ளீஸ்."

"ஜீவா நாமளே சாட்ல தானே மீட் பண்ணோம். அதை நீ மறந்துட்டியா?"

"எஸ் ...ஒத்துக்கிறேன் நாம சாட்ல தான் மீட் பண்ணோம். நாமக்குளே ஒரு தேடல் இருந்துது. எனக்கான தேடலில் நீயும் உனக்கான தேடலில் நானும் ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்ணிக்கிட்டோம். நீ தான் என் வாழ்க்கைன்னு முடிவான பிறகு நான் இப்போல்லாம் சாட் பக்கம் போறதே இல்லை. எனக்கு தான் நீ கிடைத்துவிட்டாயே. இனி சாட் எதுக்குன்னு தூக்கி போட்டுட்டேன்ல."

"என்னால உன்ன மாதிரி எல்லாம் இருக்க முடியாது ஜீவா. எனக்கு எப்போது சாட் போதும்னு தோணுதோ அப்போ நானும் உன்னை மாதிரி எல்லாத்தையும் விட்ருவேன். ப்ளீஸ் இப்போதைக்கு என்னை என் வழியில் விடு ஜீவா."

"சரி ரெஜினா...நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாவது நீ சாட் விடுவியா?"

"ஹ்ம்ம்...பார்க்கலாம் பார்க்கலாம்."

ஜீவா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பமாட்டான். இதற்க்கு மேல் பேசினால் கையிலிருக்கும் போன் தரைக்கு சிதறு தேங்காய் ஆகிவிடும் என்று நன்றாகவே தெரியும் அவனுக்கு. இப்படி தான் ஏற்கனவே ஒருதடவை இதே விஷயத்திற்க்காக போனை எறிந்து உடைத்துவிட்டு நான்கு நாள் பிடித்து பிடித்தவளை போலிருந்தாள். அப்புறம் ஜீவா புது போன் ஓன்று வாங்கி குடுத்து உன் ப்ரண்ட்ஸ் கூட "எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசு செல்லம்" என்று கிரீன் சிக்னல் குடுத்த பின்புதான் அவள் முகத்தில் சிரிப்பே வந்தது.

கார் ரெஜினாவின் காம்பவுண்ட் கேட்டை நெருங்கும்போதே ரெஜினா வீட்டின் முன்வாசலில் நிற்பது தெரிந்தது. ஜீவா காரை பார்க் செய்துவிட்டு இறங்கி ரெஜினாவிடம் வந்தான்.

"டியர் ....ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீவா. என்ன திடீர்னு பார்க்கணும் சொன்னே?"

"சரி உள்ள போய் உட்காந்து பேசலாமா?"

"ஹ்ம்ம்"

வீட்டின் உள்ளே காலியாக இருந்த சோபாவில் இரண்டு பேரும் அமர்ந்துகொண்டாள்.

"அப்பா, அம்மா தம்பி யாரையும் காணோம்?"

"சாப்பிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போயிட்டாங்க"

ரெஜினாவின் மொபைலில் மெசேஜ்கள் அடிக்கடி வந்து ஒளிர்ந்து கொண்டிருந்தன.

"என்ன மேடம் ரொம்ப பிசியோ? மொபைலை பார்த்தபடியே கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல....வழக்கம்போல பிரண்ட்ஸ் தான். சரி ...நீ வந்த விஷயம் என்ன?"

"பெருசா ஒண்ணுமில்ல ரெஜினா. நான் ஒரு நியூ பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு பிரெண்ட் கிட்ட அவசரமா பணம் கேட்டிருந்தேன். ஜஸ்ட் த்ரீ லாக்ஸ் தான். அவன் இன்னைக்கு தான் கொஞ்சம் முன்னால போன் பண்ணி அவசரமா மும்பைக்கு நைட் பிளைட்ல போகிறேன். முடிஞ்சா இன்னைக்கு நைட் வந்து பணம் வாங்கிக்கோ. மும்பை போயிட்டு ரிட்டர்ன் வர எப்பிடியும் டூ வீக்ஸ் ஆகும்னு சொல்றான்."

"ஹ்ம்ம் ....சோ?" ரெஜினா தாடைக்கு கையை முட்டுக்கொடுத்துக்கொண்டு ஜீவா சொல்வதையும் மொபைலில் அடிக்கடி மெசேஜ் வருவதையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.

"சோ....நான் இன்னைக்கு நைட்டே போயி பணத்தை வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்."

"எந்த ஊரு உன் பிரென்ட்?"

"திருவனந்தபுரம்.."

"யூ ..மீன் ...கேரளா?"

"எஸ்"

"உனக்கென்ன பைத்தியமா? நைட் இங்க இருந்து அங்க வரை கார் டிரைவ் பண்ணி போக? பேசாம அவன்கிட்ட பேங்க்ல ட்ரான்ஸ்பர்  பண்ண சொல்லிர வேண்டியது தானே?"

"நோ ....அது முடியாது ரெஜினா? இட்ஸ் பிளாக் மணி. டாக்ஸ் இஸ்ஸுஸ் வரும்னு தான் கேஸ்ஸா தரேன்னு சொல்றான்."

"பட் ...ஜீவா ...அம்பாசமுத்திரம் டு திருவனந்தபுரம் எப்படியும் சிக்ஸ் ஹவர்ஸ்க்கு மேல ஆகுமே. போறதுக்கு சீஸ் அவர்ஸ் வர்றதுக்கு சிக்ஸ் ஹவர்ஸ்னு பாத்தாலும் நீ வீடு வந்து சேர நாளை காத்தால ஆயிடுமே.?"

"அதுக்கு தான் ரெஜினா உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க வந்திருக்கேன்?"

ரெஜினா புருவத்தை உயர்த்தி "என்ன?" என்பது போல் பார்த்தாள்.

"இங்க பாரு எனக்கு நைட் டிரைவிங் அவ்வளவா பழக்கமில்லைனு உனக்கே தெரியும்?"

"பட் ....நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நான் நைட் ட்ரைவ் பண்றப்போ அப்போ அப்போ கொஞ்சம் போன்ல பேசிகிட்டு இருந்தா நானும் முழிச்சிருந்து ட்ரைவ் பண்ணி போய் சேர்ந்திடுவேன். பணம் கையில கிடைச்ச பிறகு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வேணும்னா நாளைக்கு காத்தால அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணா பொறுமையா வீடு வந்து சேர்ந்துருவேன். இத நான் போன்ல சொல்லிருக்கலாம். ஆனா அதுக்குள்ள உனக்கு பிரண்ட்ஸ் கால்ஸ் வரும் மெசேஜ் வரும். நீயும் பொறுமையா கேட்கமாட்டே. அதனால தான் உன்னை நேர்ல பார்த்து உன்கிட்ட விபரத்தை சொல்லலாம்னு அவசரமா உன்னை பார்க்கணும் சொன்னேன்."

ஜீவா இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் ரெஜினாவின் போன் மெசேஜ் மற்றும் IMO கால்ஸ்களால் நிரம்பி வழிந்தது.

ரெஜினாவின் பார்வையிலும் இவன் எப்போதுடா சொல்லி முடிப்பான் என்று இருந்தது.

"ஒன் செகண்ட் ஜீவா"...என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்து கடகட என்று யாருக்கோ மெசேஜ் டைப் பண்ணினாள்.

ஜீவா பொறுமையாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

மெசேஜ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள். "ஓகே ஜீவா ...நான் உனக்கு போன் பண்றேன். ஆனா நான் தூங்கணுமே?"

ஜீவா கொஞ்சம் நெருக்கமாக அவள் பக்கம் வந்தான். அவன் இரு கன்னத்தையும் கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டு "என் செல்லக்குட்டி.....நீ எப்பிடியும் உன் பிரெண்ட்ஸ் எல்லாரையும் தூங்க வச்சிட்டு நைட் ரெண்டு மணிக்குத்தான் படுக்க போவேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு அதே ஜாப் தான்....பட் கொஞ்சம் ஆப்போசிட் ஜாப். என்னை தூங்காம வச்சுக்கிறது என் ரெஜினாவோட பொறுப்பு. சரியா? நீ சரியாய் ரெண்டு மணிக்கெல்லாம் வழக்கம்போல தூங்க போலாம்."

ரெஜினா லேசாக புன்னகைத்தாள்.

"நீ இருக்கியே ஜீவா...பேசி பேசியே கவுத்துருவே டா."

ஜீவா சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

"சரி மா ....நான் கிளம்புறேன். இப்போ கிளம்புனா தடவை சரியா இருக்கும். நானே உனக்கு போன் பண்றேன். அப்போ நீ பேசினால் போதும்."

"ஹ்ம்ம் சரி ஜீவா. பார்த்து பத்திரமா போயிட்டு வா.."

"மிஸ் யூ செல்லம்"...இரண்டு விரல்களை உதட்டில் பதித்து முத்தத்தை அவளை நோக்கி காற்றில் பறக்க விட்டுக்கொண்டே காரை நோக்கி போனான்.

கார் சீரான வேகத்தில் ரோட்டில் வழுக்கிக்கொண்டு சென்றிருந்தது. ஜீவா பாட்டு கேட்டவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

பணம் மட்டும் கிடைத்துவிட்டால் எப்பிடியும் பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணிரலாம். ரெஜினாவையும் ஆபீஸ் விஷயங்கள் பார்த்துக்க சொல்லலாம். அவளும் வீட்டில் சும்மா இருப்பதால் தான் எப்போதும் சாட், பிரண்ட்ஸ் என்று நேரம் போக்கிக்கொண்டு இருக்கிறாள். 

இப்படி பலவிதமாக யோசித்தவாறே மணியை பார்த்தான். மணி 11: 45 என்று காட்டியது. ஜீவாவிற்கு லேசாக தூக்கம் கண்ணை சுழற்றுவது போலிருந்தது. உடனே போனை எடுத்தான் ரெஜினாவுக்கு டயல் செய்தான். ரெஜினா லைனில் வந்தால்.

"ஹாய்...ஸ்வீட்டி ...என்னடி பண்ணிட்டு இருக்கே?"

"ஒண்ணுமில்ல டா"

"ஏய் ...ஏய் ...என்கிட்ட மறைக்காதே. சாட் தானே?"

"ஹ்ம்ம்..."

"இது என்ன உன்னோட நைட் பிரண்ட்ஸ் குரூப்பா?"

"ஆமா ஜீவா....நைட் கொஞ்சம் ரெகுலர் பிரண்ட்ஸ் சாட்ல வருவாங்க. அவங்க கூட பேசிகிட்டு இருக்கேன்."

"எனி நியூ பிரெண்ட்ஸ்?"

"ஆமா ஜீவா. ராகேஷ்ன்னு ஒருத்தன் நம்பர் கொடுன்னு உயிரை வாங்குறான்."

"எப்படியும் நீ நம்பர் கொடுக்க தான் போறே...அதுக்கு  ஏண்டி இவளவு பிகு பண்ணிக்கிறே."

"போ....ஜீவா. அது எப்பிடி உடனே நம்பர் கொடுக்க முடியும். நான் அவன் ஆள் எப்பிடி, பிரெண்ட்லியா பழகுவானா இல்ல ஜொள்ளு கேஸா தெரிஞ்சுக்காம நான் நம்பர் கொடுக்கிறதில்ல."

"அடேங்கப்பா... ஆமா ஆமா ...உங்கிட்ட ஆரம்பத்துல நம்பர் வாங்க நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டேன்னு எனக்கு இப்ப ஞாபகம் வருது."

"ஏய் ....இரு ஒரு கால் வருது."

"சரி சரி....சீக்கிரம் பேசி முடி. தூக்கம் வந்துது. அது தான் உடனே உனக்கு போன் பண்ணேன்."

இணைப்பை துண்டித்தாள்.

"ஏன் இவள் இப்பிடி ரொம்ப சாட் அடிக்ட்டா இருக்கிறாள். இவளை கலியாணத்துக்கு முன்னமே இதுல இருந்து விடுவிக்கணும். என்ன பண்ணலாம்?"....ஜீவா யோசித்தான்.

மறுபடியும் தூக்கம் வருவது போலிருந்தது.

கண்களால் ரோட்டின் இரண்டு பக்கமும் துழாவி ஒரு இரவு டீ கடை முன்பு காரை நிறுத்தினான் கடையின் போர்டை பார்த்தான். இடம் : மீனாட்சிபுரம் என்று போட்டிருந்தது. 

"அண்ணே ...ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுண்ணே". சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான், லேசாக மழை தூறல் விழுகிற மாதிரி இருந்தது. கையை கடைக்கு வெளியே நீட்டி ஒருதடவை செக் பண்ணினான்.

தூவானம் தூறல் போட ஆரம்பித்திருந்தது.

"அண்ணே இங்கிருந்து திருவனந்தபுரம் எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?"

"ஒரு 85 கிலோமீட்டர் இருக்கும் தம்பி"

கடிகாரத்தை திருப்பி பார்த்தான். மணி 12: 20 என்று காட்டியது. 

டீயை வாயில் வைத்து உறிஞ்சியவாறே....எப்படியும் இன்னும் ஒரு டூ  ஹவர்ஸ்ல பொய் சேர்ந்திடலாம் என்று மனதினுள் கணக்கு போட்டான்.

டீக்கு காசு கொடுத்துவிட்டு, லேசான தூறலில் நனைந்துகொண்டே காரில் ஏறி கிளப்பினான். காரின் கண்ணாடியில் நீர்த்திவலைகள் கோர்த்து பார்வையை மறைத்தது. வைப்பர் ஆன் செய்து நீர்த்திவலைகளை வழிக்க செய்தான். மனது வெறுமையாக இருந்தது. மனது வெறுமையாக இருந்தாலே மூளை தூங்க ஆரம்பித்துவிடும். ஜீவாவிற்கு கண்கள் லேசாக சொருகிக்கொண்டு வந்தது. தலையை ஒருவாட்டி சிலுப்பிக்கொண்டு தூக்கத்தை விரட்டிவிட முயன்று தோற்றான். போனை கையில் எடுத்து ரெஜினாவிற்கு கால் செய்தான்.

"ஹேய்....என்னடா ...எந்த லொகேஷன் இப்போ?"

"எதோ மீனாட்சிபுரம்னு போர்டு பார்த்தேன். இன்னும் 85 கிலோமீட்டர் போகணுமாம். டீ கடையில சொன்னாங்க."

"ஹ்ம்ம் பார்த்து டிரைவ் பண்ணுடா...."

"ஹ்ம்ம்... ...ஏதாவது பேசு டி."

"சும்மா பேச சொன்ன...என்னடா பேச ஜீவா?"

"ஏன் உன் பிரண்ட்ஸ் கிட்ட மட்டும் நாள் பூரா கதை விடறே. என்கிட்ட பேச ஒண்ணுமே இல்லையா?"

"ஜீவா ...மறுபடியும் மறுபடியும் ஏன் என்னோட பிரைவசி சப்ஜெக்ட் பத்தியே பேசுறே. நீ இப்பிடி பேசுறத இருந்தா நான் போனை வச்சிடுறேன்."

"ஏய் ...ப்ளீஸ் ...ப்ளீஸ் வச்சிராதே டி."

"ஹ்ம்ம்"

"சரி....நான் ஒரு விடுகதை சொல்லவா? அதுக்கு நீ பதில் சொல்லுவியா?"

"சரி...சொல்லு...ட்ரை பண்றேன். ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் ஹோல்ட் பண்ணேன். ஒரு மெஸேஜுக்கு ரிப்ளை மட்டும் போட்டுக்கிறேன்."

"ஹ்ம்ம்...ஓகே டி." ஜீவாவிற்கு சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.

"ஓகே...ஜீவா இப்போ விடுகதை சொல்லு"...  ரெஜினா மீண்டும் லைனில் வந்தாள்.

"சரி ...நல்லா கேட்டுக்கோ...ஆயிரம் உப்புமா பொடிக்கு அரை மூடி தேங்காய். அது என்ன?"

"ஹ்ம்ம்...ஒரு பைவ் மினிட்ஸ் டயம் குடுக்கிறியா? யோசிச்சு சொல்றேன்."

"ஏய் ..யாரை ஏமாத்த பார்க்கிறே. உனக்கு பதில் தெரியாது. உன் பிரண்ட்ஸ் குரூப் கிட்ட போய் கேட்க போறே. அதானே?"

சிரித்தாள்..."கண்டுபிடிச்சிட்டியா? உனக்கு பதில் தானே வேணும் இதோ வரேன்..."

இணைப்பை துண்டித்தாள்..

ஜீவா அடிக்கடி போனை பார்த்துக்கொண்டே யோசித்தபடி காரின் ஆக்சிலேட்டரை மிதித்துக்கொண்டிருந்தான். வெளியில் மழை அடித்து பெய்ய ஆரம்பித்திருந்தது.

கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, பொறுமையிழந்தவனாக IMO வில் அவளை அழைக்க முயலும்போது போன் தவறி கீழே விழுந்தது. ஒரு கையால் டிரைவ் செய்துவிட்டே ரோட்டில் ஒரு கண்ணுமாக லேசாக உடலை வளைத்து போனை எடுக்க முயன்றான்.

டமால்.....கிரீஈஈஈஈஈச் 

எதிரில் வந்த லாரியின் பக்கவாட்டில் ஜீவாவின் கார் இடித்து ஏறக்குறைய அப்பளம் போல் லாரியின் அடியில் இழுத்து ....

ஜீவா ...என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. 

எங்கோ டெலிபோனின் ரிங் ஒலித்தது.....ஜீவா தலையை தூக்கி தேட முயன்று தோற்றான். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க ஆரம்பித்தான். பின்னந்தலையில் சிறு கீறலாய் புறப்பட்ட இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து மழை தண்ணீரில் கரைய ஆரம்பித்தது.

***************

ஆயிற்று.....சாட்டில் தொடங்கிய ஜீவா ரெஜினாவின் காதல் அதே சாட்டினாலே முடிந்தது. ரெஜினாவும் காதலித்த காரணத்திற்காக அழுது தீர்த்துவிட்டாள். 

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பி வருவாரோ???

ரெஜினா போனை தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு டீபாயில் தலையை சாய்த்துக்கொண்டு கீழே உட்காந்திருந்தாள். மொபைலில் "ஹலோ" என்று மெசேஜ் வந்து மொபைலின் திரையை உயிர்ப்பித்தத்தது. ரெஜினா மெதுவாக எடுத்து பார்த்தாள். ராகேஷ் தான் மெசேஜ் பண்ணிருந்தான்.

"ஹலோ" ....ரிப்ளை தட்டினாள்.

"ஆர் யூ பிரீ டு டாக் டியர்?"  - ராகேஷ் சம்பிரதாயத்துடன் தொடங்கினான்..

"எஸ்..ஐயாம் ..பிரீ " - ரெஜினாவும் சம்பிரதாயத்துடன் தொடங்கினாள்..

பக்கத்தில் மேஜை மேலிருந்த சின்னதாக பிரேம் போட்ட போட்டோவில் ஜீவா ரெஜினாவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.


இப்படிக்கு 
ஜீவா 

வியாழன், டிசம்பர் 08, 2016

மீண்டும் அதே பாடல்...(Keep Trying)


எதேச்சையாக கேட்டு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல்.

ஒரு பாடல்....


எதேச்சையாக கேட்டு மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல்.

செவ்வாய், நவம்பர் 29, 2016

Love the Way ♥‿♥




Its rainy here....





After long I wished to write about my true love with whom I madly in love with. I think they are the only one who tend to make me feel happy in any situation possible....I wish to see it more often.

My first and special Love.......RAINS !!!!

When there is rain...I feel the love and start recollecting her memories. Love the way what i did...what she wants.


Love the way write poems for me.....
Love the way you send me those pics of intimacy..
Love the way you type love notes for me...
Love the way you call me different names..
Love the way you whisper your thoughts..
Love the way you playfully make me smile...
Love the way you show care to me..
Love your crazy ways of making love..
And the most beautiful...
I just Love the way you make my heart beat.. ♡

From Miles away...and Yes I am Charmed by YOU !!! 






With Love
Rasigan

திங்கள், நவம்பர் 28, 2016

Setup to Fail





அப்ரசண்டிகளா......இப்பவே சொல்லிடுறேன். செட்டப்ன்னா நீங்க நினைக்கிற "அந்த" செட்டப் கிடையாது. இது வேற..

சரி விஷயத்துக்கு வருவோம்.

ஆபிஸில் பாலிடிக்ஸ் என்பது சர்வ சாதாரணம். அதுவும் மிடில் மேனேஜ்மெண்ட்டில் இது தான் ஐநூறு ஆயிர ரூபாய் மாதிரி - ஜீவாதாரமே. ஒரு பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவர் இந்த பாலிடிக்ஸ் காரணமாக கைமாற்றும் சூழல் வந்தால் செத்தான் சிவனாண்டி. என்ன தான் எழவு ஹாண்ட் ஓவர் ப்ரொசீஜர்சை கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு சரி பார்த்து வாங்கியிருந்தாலும் குடுக்கறவன் ஒள்ளிச்சு வைச்சிருப்பான் பாருங்க ஒரு கன்னிவெடி. திரில்லிங்கான ஒரு கேம். எல்லாம் சரின்னு திருப்திப்பட்டு "நானும் அடிக்கிறேண்டா சிக்ஸர்"- னு பேட்டை சுழட்டுறப்போ கரெக்ட்டா படக்கூடாத இடத்துல பால் படுமே அது மாதிரி ஒரு கண்ணிவெடி உள்ளுக்குள்ள வச்சிருப்பாங்க.

நீங்கள் எப்பேற்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும் இதையெல்லாம் ஜுஜுபி என்றாக்கிவிடும் மேலே சொன்னதை விட த்ரில்லிங்கான விளையாட்டு ஒன்று இருக்கிறது. பொண்டாட்டியை மூனு நாள் ஊருக்கு அனுப்பிவிட்டு வீட்டை சமாளித்துப் பாருங்கள்...அதுதான் கேம்.  இதுக்கு ஒரு எம்.பி.ஏ எவனாவது ஆரம்பிக்கக் கூடாதான்னு மனசு ஏங்கும்.

செல்லக்குட்டி மூணு நாள் அவ நண்பிகளுடன் ஹாலிடே. போகிறதுக்கு முன்பாக ஏகப்பட்ட ஹான்டோவர் ப்ரொசீஜர்கள்.

ஒரு வாரமாய் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளும் படி (ஹாண்ட் ஓவர்) ஒரே நச்சரிப்பு. (பொலிடிக்கல் கரெக்ட்னஸ்). அது வாங்கி ஸ்டாக் பண்ணவா இது வாங்கி ஸ்டாக் பண்ணவா... சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு போகவா ... 

நோ நோ நோ எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். வீ ஆர் க்ரோன் அப்ஸ் அண்ட் வீ நோ டு ஹாண்டில் சிச்சுவேஷன்ஸ்..கெத்தா சொல்லியாச்சு. இனி இம்ப்ளிமென்ட் பண்ணவேண்டியது தான் பாக்கி.

குக்கர் இங்க இருக்கு, அது அங்க இருக்கு... இது எங்க இருக்குன்னு தெளிவா ஹாண்ட் ஓவர் வாங்கிக் கொண்டு அடுத்த நாள் அரிசி வைக்கப் போனால் குக்கர் வெயிட்டைக் காணோம். புஸ்ஸு புஸ்ஸுன்னு காத்து தான். ஜேம்ஸ் வாட் இப்படித் தான் ஸ்டீம் இஞ்சினைக் கண்டுபிடிச்சாரா  தெரியவில்லை. போனை போட்டு ஹி ஹி என்று அசடு வழிந்து "அந்த குக்கர் வெயிட்" என்று சொன்னதும்,  "தெரியும் உங்க லட்சணம்...” என்ற கெக்கலிப்பில் ஆரம்பித்து அங்க பாரு இங்க பாருன்னு கடைசியில் ஒரு ட்ராவில் இருந்தது. என்ன ஒரு வில்லத்தனம். பரமசிவன் என்னிக்காவது பாம்பை கழட்டி வைச்சிருக்காரா...குக்கர் வெயிட் பாத்திரம் தேய்த்து (உணர்த்திய கையோடு) மூடியிலேயே இருக்க வேணாமா?... 

பாத்திரம் தேய்ப்பதெல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல அசால்ட்டா செய்வேன் என்றாலும் கரெட்டாய் ஒரு ஷிப்ட் பாத்திரத்துக்கு அப்புறம் டிஸ்பென்சரில் லிக்விட் சோப் காலி. ரீபில் மெகா பாட்டிலை காணோம். மறுபடியும் போன்...ஹி ஹி என்ற அசடு வழிதல். "சை ... ”இதுக்குத் தான் என்ன வேணும் என்ன வேணும்ன்னு ஒரு வாரமா கேட்டேன்” - ஈஸ்வரா இந்த indispensable factor". செல்லக்குட்டி தலையில் அடித்துக்கொண்டது எனக்கு துல்லியமாக போனில் கேட்டது.

டீ போடறதுக்கு என்னிடம் கண்ணன் தேவனே வந்து டியூஷன் எடுத்துக்கணும். அதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்ற சவுடாலெல்லாம் கரெக்ட்டா தான் போச்சு. ஏலக்காய் இஞ்சியை இடிக்க குட்டி மசாலா இடிக்கும் உரலைத் தேடினால் உரல் இருக்கு இடிக்கும் கம்பியைக் காணோம். இனி இதற்க்கு போன் போட்டால் செல்லக்குட்டி ப்ரோக்ராம் கேன்சல் செய்துவிட்டு வீட்டுக்கு நேராகவே வந்து உரலில் இடிக்கும் கம்பியால் என்னை இடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால்....இந்த வாரம் ...க்ரீன் டீ வாரம்...!

ச்சை... போதும் நிறுத்திக்கிறலாம் என்று தற்சமயம் சரவணபவன் அண்ணாச்சியும், பிட்ஸா ஹட் பாயும் சேர்ந்து நம்ம வீட்டு சிச்சுவேஷன்ஸை ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: இதெல்லாம் எங்களுடன் வேலை பார்க்கும் சிவராம ஐயரின் அரட்டை குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட இன்பர்மேஷன்.

இப்படிக்கு
ரசிகன் 

திங்கள், நவம்பர் 07, 2016

பச்சையாய் ஒரு கொலை (Part 3)





கோயமுத்தூர் காலையிலே பாலித்தீனில் சுற்றப்பட்டு பிரிட்ஜில் வைத்த காய்கறி போல் லேசாக வியர்த்து இருந்தது.

"ஹாப்பி பர்த்டே டு யு ஜீவா ..."

குரல்கள் கோரஸாக ஒலிக்க ஜீவா நேற்று நடந்த சம்பவத்தின் நினைவுகள் துளியுமில்லாமல் சந்தோசமாக கேக் வெட்டிக்கொண்டிருந்தான்.

பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஹால் பூராவும் நிறைந்திருந்தார்கள். கைகளில் கூல்ட்ரின்க்ஸ் பாட்டில்கள். ஜீவாவின் அப்பாவும் அம்மாவும் வாசலில் நின்று வருகிறவர்களை கும்பிட்டு உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஜீவாவின் நண்பர்கள் அவனது தோளை இடித்தனர். "என்ன சார் ....உன்னோட வருங்கால மாமனாரும் வருங்கால மனைவியும் இன்னும் பங்ஷனுக்கு வரல போல..."

"அரைமணி நேரத்துல வந்துடறதா ஹோட்டல்ல இருந்து கொஞ்சம் முன்னாடிதான் போன் பண்ணிருந்தாங்க."

"பொண்ணு பேரென்ன மாளவிகாவா?"

"ம் ..ம்"

"நேர்ல பாத்திருக்கியா?"

"இல்ல...போட்டோல தான்"

"எப்படியிருக்கா?"

"அமர்க்களமான இருக்கா"...ஜீவா மெலிதாய் புன்னகைத்தான்.

"மாப்பிளைக்களை முகத்தில இப்பவே வந்துட்டே"

"ஆமா..நேத்தைக்கு நைட் சென்னையிலிருந்து மிட்நைட் பிளைட் புடிச்சா கோயமுத்தூர் வந்தே?"

ஆமா ..

"என்ன நண்பா....சென்னைல டைட் என்கேஜ்மென்டோ?" கேட்டுக்கொண்டே ஃபிரண்ட் ஒருவன் குறும்பாய் கண்ணாடிக்க - அப்போதுதான் ஜீவாவுக்கு சட்டென்று ரெஜினாவின் முகம் நியாபகம் வந்தது. போலீஸ் இந்த நேரம் கேஸை எந்த கோணத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருப்பார்கள்?

அவள் என்னுடைய அறையில் இருந்துதான் கீழே விழுந்திருக்கிறாள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியுமா?

"நான் எந்த எவிடன்சும்  விட்டுவிட்டு வரலியே?"

"ஜீவா....என்னடா யோசனை" - அவன் அப்பா ஜீவாவின் தோளில் தட்டினார்.

ஜீவா சுதாரிப்புக்கு வந்தான். - "ஒ ...ஒண்ணுமில்லப்பா."

"என்னாச்சு மை டியர் சன் ...ஆர் யு ஆல்ரைட்?"

"எஸ் ....எஸ் ....ஐயம் ஆல்ரைட் பா."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே ....வாசலில் உயர்தர கார் ஓன்று வந்து நிற்பதும் அதிலிருந்து கிருஷ்ணாவும் மளவிகாவும் இறங்கி ...ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையோடு ஹாப்பி பர்த்டே சொல்லிக்கொண்டே ஜீவை கட்டி பிடித்தார் கிருஷ்ணா என்கிற வருங்கால மாமனார்.

சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பின் ஜீவாவின் வருங்கால மாமனார் ஒரு சிறிய சதுர பெட்டியை அவனிடம் நீட்டினார். "மாப்பிளைக்கு இந்த வருங்கால மாமனாரோட பிறந்தநாள் பரிசு. ஒரு டயமண்ட் வாட்ச். ஓபன் பண்ணி பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க மாப்பிளை". 

ஜீவா அந்த பெட்டியை ஓபன் செய்தான். விலையுயர்ந்த டைமண்ட் வாட்ச் பெட்டிக்குள் டாலடித்தது. "தேங்க்ஸ் மாமா. இட்ஸ் சோ நைஸ்."

"இது என்ன மாப்பிளை பிரமாதம். இதை விட விலையுயர்ந்த என் பொண்ணையே உங்களுக்கு தர போறேன்." கடைவாயில் தங்கப்பல் தெரிய சிரித்தார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் அந்த போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இன்ஸ்பெக்டர் சத்யா கூடவே சப்-இன்ஸ்பெக்டர் மதன், லோக்கல் ஏரியா இன்ஸ்பெக்டர் சகிதம் வாசலில் நின்றிருந்த ஒருவனிடம் "இங்க ஜீவா என்கிறது?"

"ஹி ஐஸ் தெயர்...தி பர்த்டே பாய்" - கைகளில் இருந்த கூல்ட்ரிங்கஸ் கோப்பை தளும்பாமல் காமித்தார்.

"தேங்க்ஸ்"....ஜீவாவை நோக்கி நடந்தார்கள்.

பேசிக்கொண்டே எதேச்சையாக வாசலை பார்த்த ஜீவா துணுக்குற்றான். உடம்பில் ஒரு வெப்பம் பரவி குப்பென்று முகம் வியர்த்து சூடு பரவியது.

சத்யா ஜீவாவின் மிக அருகில் நெருக்கமாக வந்து குரலை தாழ்த்திக்கொண்டு ..."மிஸ்டர் ஜீவா"

"எ ..எஸ் ஐயாம்"

"எங்க கூட கொஞ்சம் வாரீங்களா?"

"எ ...என்ன விஷயம்?"

"அதை அப்புறம் சொல்றோம். மொதல்ல கொஞ்சம் எங்க கூட வெளிய வாங்க"

என்ன நடக்கிறதென்று புரியாமலே...எல்லாரும் பார்த்துக்கொண்டு நிற்கும்போதே ஜீவாவின் அப்பா பக்கத்தில் வந்தார்.

"என்ன மேடம் என்ன ப்ராப்ளம்?"

"நீங்க?"

"ஐயாம் ஜீவா'ஸ் பாதர். எதுனாலும் நீங்க எங்கிட்ட சொல்லாலாம்."

ஜீவா கர்சீப்பால் முகத்தில் முளைத்த வியர்வை துளிகளை ஒற்றிக்கொண்டே முகம் வெளிறியபடி நின்றுகொண்டிருந்தான்.

"சென்னைல ஒரு பொண்ணு டெத் சம்பந்தமா உங்க பையனை என்கொய்ரி பண்ண வந்திருக்கோம்"

ஜீவாவின் அப்பா முகம் மாறினார்.

"மேடம் என்னையும் என் பையனையும் யார்னு நினைச்சீங்க ?" - குரலை சற்று உயர்த்தினார்.

சத்யா நிதானமாக ஜீவா பக்கம் திரும்பி ..."லிசன் மிஸ்டர் ஜீவா, இங்க தேவையில்லாத ஒரு சீன் கிரியேட் பண்ணவேண்டாம்னு நினைக்கிறோம். வி டூ ஹாவ் ப்ராப்பர் அரெஸ்ட் வாரண்ட். உங்களை எந்த கேள்வியும் கேட்காம வண்டியில தூக்கி போட்டுக்கிட்டு போக எங்களுக்கு தெரியும். ப்ளீஸ் கோவாப்பரேட் வித் அஸ்"

"ஒ ...ஓகே ...மேடம் நான் உங்ககூட வரேன். லேட் அஸ் கோ"

என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லோரும் வந்திருந்தவர்களின் பேச்சுக்குரலும் சலசலப்பும் அணைந்து போயிற்று.

போலீஸ் ஸ்டேஷனில் சத்யா டேபிளின் ஒருமுனையில் காலை தரைக்கு ஊன்று கொடுத்தவாறே உட்காந்திருக்க ஜீவா இன்ஸ்பெக்டர் முன்னால் செயரில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். ஜீவாவிற்கு நா உலர்ந்து தொண்டையில் எரிச்சல் போல் உணர்ந்தான்.

"ஹ்ம் ...சொல்லுங்க ஜீவா. அந்த பொண்ணு யாரு?"

"எ ...எந்த பொண்ணு மேடம்?"

"சென்னைல நீங்க தங்கியிருந்த ஹோட்டல்ல ஆறாவது மாடியில இருந்து விழுந்து செத்தாளே அந்த பொண்ணு? அவ யார்னு நீங்க தான் சொல்லணும்."

"மே ...மேடம்..."

"நீங்க ரூமை 10 நிமிசத்துல வெக்கேட் பண்ணி போயிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சீங்களா?"

"எ ...என்ன மேடம் சொல்றீங்க? எனக்கு எதுமே புரியல."

சத்யா... சட்டென்று மேஜையிலிருந்து எழும்பி தன்னோட பாண்ட் பாக்கெட்டில் கர்சீப்பில் பத்திரமாக மடித்து வைத்திருந்த ஒருஜோடி கொலுசுகளை மேஜை மீது வைத்தாள்.

"இது செத்துப்போன பொண்ணோட காலில் மாட்டியிருந்த கொலுசுகள்."

சத்யா அந்த கொலுசுகளை கையில் எடுத்து அதன் குண்டு மணி விளிம்புகளை ஜீவாவின் கண்களுக்கு அருகாமையில் காட்டினாள். 

"நல்ல பாருங்க...அந்த குண்டு மணி விளிம்புகளில் தீற்றல் தீற்றலா ஒரு கலர் ஒட்டியிருக்கு. அது என்ன நிறம்னு சொல்றீங்களா மிஸ்டர் ஜீவா?"

குரலில் லேசாக கடுமை தெறித்தது.

"ப...பச்சை கலர் மேடம்."

"வெரிகுட்."

சத்யா இப்போது டேபிளின் மேலிருந்த தன்னுடைய மொபைலை அன்லாக் செய்து உயிர்ப்பித்தாள். பரபரவென்று அதன் ஸ்க்ரீனை தேய்த்து ஒரு போட்டோவை எடுத்து  ஜீவாவிடம் காட்டினாள்.

"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ஹோட்டல் தானே?"

"எ ...எஸ் மேடம்."

"இதுல நீங்க ஸ்டே பண்ணியிருந்தது ஆறாவது மாடி. "

ஜீவா கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கினான் 

"அந்த மாடி சிட் - அவுட் குட்டை சுவருக்கு என்ன கலர் பெயிண்ட் பூசிருக்காங்க?" போட்டோவை ஸூம் செய்து காட்டினாள்.

"ப ....பச்சை."

"அதுக்கு மேல இருக்கிற ஏழாவது மாடிக்கு?"

"ம...மஞ்சள் "

"கீழ இருக்கிற ஐந்தாவது மாடிக்கு?"

"வ..வயலட் "

"சோ...அந்த ஹோட்டல்ல பச்சை கலர் பெயிண்ட் பூசின ஒரே சிட் - அவுட் நீங்க ஸ்டே பண்ணியிருந்த அதே ஆறாவது மாடி சுவருக்கு மட்டும் தான்."

ஜீவா கண்களில் கலவரம் லேசாக பரவ ஆரம்பித்தது.

சத்யா இப்போது வேறு ஒரு போட்டோவை ஓபன் செய்து ஸூம் செய்து காட்டினாள்.

"இது நீங்க ஸ்டே பண்ணியிருந்த ரூம் சிட் - அவுட்டில் உள்ள பச்சை கலர் குட்டை சுவர். அந்த போட்டோல பாருங்க சுவரோட மேற்பரப்புல கீறல் கீறலா விழுந்திருக்கு அந்த கீறல் கோடுகளில் பெயிண்ட் கூட காணாம போயிருக்கும். அது எப்படின்னு உங்களுக்கு புரியுதா?" சத்யாவே தொடர்ந்தாள் - "அந்த பெண் இந்த மாடியிலிருந்து விழுந்திருக்கா...அவ கால்ல இருந்த கொலுசோட குண்டு மணி விளிம்புகள் சுவரோட பெயிண்ட் பரப்பை தேய்ச்சுகிட்டே விழுந்திருக்கு. அந்த பச்சை கலர் பெயிண்ட் தான் அவ கொலுசு குண்டு மண்டியில ஒட்டியிருந்த பச்சை கலர் பெயிண்ட். அந்த ரூம் சிட் - அவுட்டுக்கு வேற எப்படியும் நுழைய முடியாது. அப்படி நுழையணும்னா உங்க ரூம் வழியா இருக்கும் ஒரே கதவுதான் மார்க்கம்.   சோ .... இனி நீங்க தான் சொல்லணும் இந்த பச்சையாய் ஒரு  கொலை எபிஸோடை எப்பிடி முடிக்கணும்னு. உங்களுக்கே தெரியும் போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட செகண்ட் கிரேட் விசாரணை எப்பிடி இருக்கும்னு."

சத்யா ஜீவாவிற்கு பின்னால் வந்து இரண்டு கைகளாலும் ஜீவாவின் தோள்களை அமுக்கினாள்.

ஜீவா....டேபிளின் மேல் கண்ணாடி கிளாசில் இருந்த தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு தொடர்ந்தான்...

"அவள் பெயர் ரெஜினா.."

முற்றும்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

ஜக்கம்மா சொல்லிட்டா !





"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!"

நடு இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு சாமகோடாங்கியின் குரல் துல்லியமாகவும் அதே நேரம் தூரமாகவும் கேட்டது. எங்கோ ஒரு நாய் கோடாங்கியின் சப்தத்தில் எரிச்சலாகி ஓங்கி பெருங்குரலில் குரைத்துக்கொண்டிருந்து. இப்போது கோடாங்கியின் சப்தம் இன்னும் கொஞ்சம் நெருங்கி கேட்டது.

"நல்லகாலம் பொறக்குது! ....நல்லகாலம் பொறக்குது!! கைவிட்டதெல்லாம் கைக்கு வரப்போகுது. வாய்விட்டதெல்லாம் பகை மறந்து போக போகுது. நல்லகாலம் பொறக்குது!...நல்லகாலம் பொறக்குது!"

சாமகோடாங்கியின் குரலில் ஜீவாவிற்கு முழிப்பு வந்தது. எப்போதும் இரவில் டிவியில் பாட்டு  பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவது அவன் வழக்கம். எழுந்து வீட்டின் உள்பக்கம் பார்த்தான். வேறு யாருக்கும் குடுகுடுப்பைக்காரனின் சத்தம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்பாவின் குறட்டை சத்தம் மட்டும் சீராக கேட்டுக்கொண்டே இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி 2:30 என்று காட்டியது. பக்கத்திலிருந்த சொம்பிலிருந்து ஒருவாய் தண்ணீரை குடித்துக்கொண்டே வெளிப்பக்க கதவின்  அருகே வந்து நின்றான்.

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா....அந்த ஜக்கம்மாதான் மலைப்போல வர்றதை பனிபோல மாத்தணும்."

ஜீவாவுக்கு தூக்கிவாரி போட்டது. காரணம் சாமகோடாங்கி ஜீவாவின் வீட்டின் முன்னாள் நின்றுகொண்டு குறி சொல்லிக்கொண்டு இருந்தான். சொன்னதையே இன்னும் இரண்டுவாட்டி கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு சாமக்கோடங்கி அடுத்தவீட்டை நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. இந்த வீட்டில சீக்கிரமே ஒரு நல்லகாரியம் நடக்கபோகுது. ஜக்கம்மா சொல்லிட்டா!.....ஜக்கம்மா சொல்லிட்டா!!" சமகோடாங்கியின் குரலும் உடுக்கை சப்தமும் வீட்டுக்கு வீடு தாவி சன்னமாக உடைந்துபோய்க்கொண்டிருந்தது.

ஜீவாவிற்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்தது போலிருந்தது. "என்ன இந்த கோடாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி வந்து மட்டும் இப்படி சொல்லிட்டு போறான்?"சாமக்கோடாங்கி குறி சொல்றதெல்லாம் நிஜமா நடக்குமா? - உடம்பு லேசாக நடுங்க தொடங்கியது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தான். மனதிற்குள் ஹோ......என்ற இரைச்சலுடன் ஏதோ உழலுவதை போல உணர்ந்தான். அப்பிடியே கோடாங்கி சொன்னமாதிரி ஏதும் கெட்டது நடந்தா அது எந்த மாதிரி கெட்டது? மனதிற்குள் தேவையில்லாத நினைவுகள் எல்லாம் சுழன்று சூறாவளியாய் அடித்தது. "ச்..சே ...சே ...அப்படி எதுவும் நடக்காது". தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். எதற்குமே விடை தெரியாமல்....எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப்போனான்.

அம்மாவும் தங்கச்சியும் நின்று வேலைசெய்யும் அடுப்படியில் தலைக்கு மேல் இருக்கும் பரணில் அந்த இரவு நேரத்திலும் பூனைகள் இரண்டு விளையாடிக்கொண்டிருந்தது. பூனைகளின் விளையாட்டினால் என்றோ ஒருநாள் வேண்டாம் என்று தூக்கி போட்ட இரும்பினால் ஆன தேங்காய் உரிப்பான் ஒன்று தன்னுடைய கூர்மையான தலையை நீட்டி ஒரு இன்ச் முன்னால் நகர்ந்தது.

"டேய் ....ஜீவா எழுந்திருடா. மணி 8 ஆகுது இன்னுமாடா தூங்குறே? வேலைக்கு போகல?"

அம்மாவின் குரல் கேட்டு லேசாக கண்முழித்து பார்த்தான். போர்வையை உதறிவிட்டு எழுந்தான். வழக்கம் போல ஆபிஸ் போக ரெடி ஆனான். நேற்று இரவு நடந்ததை சுத்தமாக மறந்துவிட்டிருந்தான். வாசலில் வந்து சிட் -அவுட்டில் உட்காந்து அன்றைய தினசரி நாளிதழை அவசரம் அவசரமாக புரட்டும்பொழுது பக்கத்துக்கு வீட்டு சந்திரா அக்கா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"ஆமா...நேத்தைக்கு சாமக்கோடாங்கி வந்தான்க்கா.."

"எப்போ?"

"டைம் சரியா தெரியல. எனக்கு லேசா முழிப்பு வந்துது. ஆனா வெளிய வந்து பார்க்கலக்கா."

ஜீவாவிற்கு நேற்று இரவு நடந்ததெல்லாம் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும் இரும்பு துகள்களை போல பரபரவென்று மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. நாளிதழை மடித்து வைத்துவிட்டு வீட்டுக்குள் போய் ஒருதடவை கண்களை சுழல விட்டான். அடுப்படியில் அம்மா பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் காய்கறி நறுக்கிவிட்டு கத்தி அடுப்படியில் வழக்கம் போல் இருந்தது. ஜீவா அதை எடுத்து கத்தி ஸ்டான்ட் -இல் வைத்தான். அம்மா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

"அட....என்னடா இது...புள்ளைக்கு திடீர்னு பொறுப்பு வந்திருக்கு"

ஜீவா...ஒன்றும் பேசாமல் லேசாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து ஹால் பக்கம் வந்தான். ரூமிற்குள் தங்கை ஏதோ செய்வது போல் தெரிந்தது, அயன் பாக்ஸை கையில் எடுத்து துணி அயன் பண்ண போவது தெரிந்தது.

"ஏய்....இரு! இரு!!" - கொஞ்சம் சத்தமாக சொல்லிக்கொண்டே அவளிடம் ஓடினான்.

"ஏய்ய்.....என்ன பண்ண போறே?"

"ஹ்ம் ....பார்த்தா தெரியல? துணி அயன் பண்ண போறேன்."

"இரு... இரு...எங்க உன் கைய காட்டு. பாரு குளிச்சுட்டு தலை துவட்டி கையில ஈரம் இன்னும் இருக்கு. இத வச்சுக்கிட்டு அயன் பாக்ஸை தொடலாமா? மொதல்ல கைய நல்லா துடைச்சுக்கோ. ஈரமான கை வச்சுக்கிட்டு கரண்ட்ல வேலை செய்யலாமா?"

"ஏய் என்னாச்சு உனக்கு இன்னைக்கு? டெய்லி நான் இப்பிடி தானே அயன் பண்ணிட்டு போறேன்."

"விதண்டாவாதம் பண்ணாதே. போ... போய் சொன்ன மாதிரி கைய தொடைச்சுக்கிட்டு வா."

அவள் முணுமுணுத்துக்கொண்டே போனாள்.

அம்மாவும் தங்கச்சியும் அவனை குறுகுறுவென்று பார்த்தார்கள். என்னாச்சு இவனுக்கு இன்னைக்கு.

"டேய் ...என்னடா ஆச்சு? காலையிலே ஒருமாதிரி நடந்துக்கிறே??"

"ஒண்ணுமில்லமா...இங்க பாருங்க எது பண்ணாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!"

இரண்டுபேரும் அவனை எதோ வேற்றுகிரகவாசியை பார்க்கிற மாதிரி பார்த்தார்கள்.

ஜீவா அதைப்பற்றி எல்லாம் கவலை படவில்லை. கோடாங்கி சொன்னதே அவன் மனதுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது.

"சாமக்கோடாங்கி ஏன் அப்படி சொன்னான்? அவன் சொன்ன கெட்டகாலம் என்னவா இருக்கும்? "

ஆபிஸில் ஜீவாவிற்கு வேலையே ஓடவில்லை. மனதிற்குள் ஒருவிதமான பயப்புயல் உருவாகிக்கொண்டே இருந்தது 

சாமகோடாங்கி சொன்னது என்னவா இருக்கும்?

"டேய் ...மச்சி..."

"என்னடா .."

"மச்சி ...இந்த சாமக்கோடங்கி சொல்றதெல்லாம் பலிக்குமாடா ?"

"ஹா....ஹா .....ஹா"

"என்னடா புதுசா ஏதும் வேலைக்கு சேர போறியா?"

"அட ....சொல்லுடான்னா."

"எனக்கு தெரிஞ்சவரைக்கும் அது பலிக்க சான்சே இல்ல. இருந்தாலும் நம்ம வீட்டில உள்ள பெருசுங்க இன்னும் அது ஏதோ தேவதூதனின் மெசேஜ் னு நினைச்சு பலிக்கும்னு தான் நம்புறாங்க."

"பலிக்குமா பலிக்காதான்னு கேட்டா ஒண்ணு பலிக்கும் சொல்லு இல்லாட்டி பலிக்காதுன்னு சொல்லு. நீ வேற சும்மா கன்பியூஷ் பண்ணாதே."

"என்னதான்டா உன் பிரச்னை? காலையில இருந்து ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறே?"

"ஒண்ணுமில்லடா"

ஒண்ணுமில்லை என்று சொல்லிவிட்டாலும் ஜீவா காதுகளில் சாமக்கோடாங்கி சொன்னது திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

பொறுக்க முடியாதவனாக....போன் எடுத்து வீட்டு நம்பருக்கு சுழற்றினான். கொஞ்சம் நேரம் ரிங் போய்ட்டு பின்பு ஜீவாவின் அம்மா போன் எடுத்தார்கள்.

"அம்மா .."

"என்னம்மா எங்க போயிட்டே? போன் எடுக்க இவளோ நேரமா?"

"டேய்.....போன் வந்த உடனே வழக்கம்போல வந்து எடுத்தேன். இன்னைக்கு என்ன ஏதோ போன் எடுக்க நேரம் ஆனா மாதிரி கோபப்படுறே?"

"சரி சரி....ஒண்ணுமில்ல. என்ன பண்றீங்க?"

"வீட்டு பின்னாடி துணி காயப்போட்டு நின்னேன்டா. ஒருநாளும் இல்லாம இன்னைக்கு என்ன போன்? ஏதும் விஷயம் இருந்தாத்தானே நீ போன் பண்ணுவே?"

"ஒ ...ஒண்ணுமில்ல. சும்மா பேசணும்னு தோணிச்சு. தங்கச்சி காலேஜ் போயிட்டாளா?"

"ஹ்ம்ம் ...போயிட்டா"

"சரிம்மா ...நான் போன் கட் பண்றேன்."

கொஞ்சம் நேரம் ஏதோ வேலை பார்த்தோம் என்று, சுரத்தே இல்லாமல் ஏதேதோ பண்ணினான்.

மறுபடியும் போனை எடுத்து சுழற்றினான் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு. அப்பாவின் பெயரை சொல்லி "கொஞ்சம் பேச முடியுமா?"

"இருங்க...கூப்பிடுறேன்"

அப்பா லைனில் வந்தார்.

"யாரு?"

"அப்பா நான் தான் ஜீவா."

"என்னடா திடீர்னு போனெல்லாம்?"

"ஒண்ணுமில்லப்பா....சாப்டீங்களா?"

இல்லப்பா ..ஒரு கார் சர்வீஸுக்கு வந்துது. அத முடிசிட்டு சாப்பிடணும்.

"என்னப்பா டெய்லி மத்தியான சாப்பாட்டை 3 மணிக்கும் 4 மணிக்கும் சாப்பிடுறீங்க. இல்லாட்டி வெறும் டீ குடிசிட்டு சாப்பாட்டை வீட்டுக்கு திரும்பி கொண்டுவந்துடுறீங்க."

"நம்ம வேலை அப்படிப்பா."

"சரி சரி சீக்கிரம் முடிசிட்டு சாப்பிடுங்க. - போனை கட் பண்ணினான்."

"யாருக்கும் எந்த பிராபிளமும் இல்ல. நாம தான் தேவை இல்லாம டென்ஷன் ஆகுறோமோ?"

வீட்டில் மறுபடியும் பூனைகள் பரண்மேல் விளையாட  தொடங்கின. தேங்காய் உரிப்பான் கொஞ்சம் கூட முன்னால் நகர்ந்து வந்தது.

தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அதீத ஜாக்கிரதை புலர்த்திக்கொண்டிருந்தான். அடிக்கடி நினைவில் வரும் சாமக்கோடங்கியின் குறிச்சொல் சில நேரம் மனதில் கூட்ஸ் வண்டிபோல் வந்துகொண்டே இருந்தது. சிலநேரம் கிணற்றில் போட்ட கல்லைப்போல் சலனமற்று கிடந்தது. ஆனாலும் தினம் தினம் ஜீவாவின் மனதில் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது.


"அம்மா...ஆட்டோல போகிறப்போ நல்ல புடிச்சுக்கோங்க."

"நான் என்ன சின்ன புள்ளையாடா? திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு."

"டி .....காலேஜ் போறப்போ ரோடு கிராஸ் செய்றப்போ பார்த்து கிராஸ் செய்."

"ஹ்ம்ம்....உன் இம்சை அளவில்லாம போகுது டா."

"அப்பா ...ஒர்க் பண்ற இடத்துல சேப்டி எல்லாம் ஒழுங்கா பார்த்துக்கோங்க. வண்டிக்கு அடியில நின்னு ஒர்க் பண்றப்போ மறக்காம ஹெல்மெட் போடுங்க."

"நான் என்ன இன்டர்நேஷனல் கம்பெனிலையா வேலை பார்க்கிறேன். அப்பா சிரித்தார்"

ஒருநாள் அம்மா வீடு கொல்லைப்பக்கம் மீன் கழுவிக்கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டு தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் அம்மாவின் பக்கத்தில் விழுந்து அம்மாவை முகத்தினருகே விருட்டெண்டு பறந்து சென்றது.

ஜீவா அதை பார்த்து பதறிவிட்டான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டைக்கு போய்விட்டான்.

"மரத்துல தேங்காய் பழுத்திருந்தா ஆள் விட்டு பறிங்க. அடுத்தவங்க தலையில விழுறவரை வெயிட் பண்ணுவீங்களா?  இனி ஒருவாட்டி தேங்காயோ மட்டையோ எங்க வீட்டுப்பக்கம் விழுந்துது நடக்கிறதே வேற!!!!"

அம்மா தான் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்தாள்.

"டேய் ....தென்னை சதிக்காது டா. இந்த உலகத்துல தேங்காய் விழுந்து எத்தனைபேரு செத்திருக்காங்க சொல்லு?"

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா."

ஜீவாவிற்கு மண்டைக்குள் அந்த உடுக்கை சத்தம் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. "போம்மா ....நீ போய்  கிச்சன்ல வேலைய பாரு. தங்கச்சி எங்க? உனக்கு ஹெல்ப் பண்ணாம என்ன பண்றா அவ..." சீறினான் ஜீவா 

"டேய் அவ அடுப்படியில தாண்டா நிக்கிறா. அவளை பார்த்துக்க சொல்லிட்டு தான் நான் மீன் கழுவ போனேன்."

பூனைகள் பரணின் மேல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தன. தேங்காய் உரிப்பான் முன்னைவிட இன்னும் நீளமாக தன்னுடைய கூரிய நாக்கினை தலைக்குமேல் நீட்டிக்கொண்டிருந்தது.

நாட்கள் ஓடிவிட்டது. ஜீவாவிற்கு சாமகோடங்கியின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மனதை விட்டு மறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் வீட்டில் எதாவது அசாதாரணமாக ஏதும் நடந்தாலோ, வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் திரும்பிவர கொஞ்சம் தாமதம் ஆனாலோ சாமக்கோடங்கி மனதிற்குள் உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடுவான்.

"மிஸ்டர் ஜீவா...உங்களுக்கு ஒரு கால்." -   ரிஷப்சனிஸ்ட்டின்  குரலை தொடர்ந்து இன்டெர்காமை எடுத்து வெளியிலிருந்து  வரும் அழைப்பை  தொடர்புகொண்டான்.

அம்மா தான் பதட்டத்துடன் பேசினாள்.

"ஜீவா ..அப்பாவிற்கு திடீர்னு உடம்புக்கு முடியலடா."

ஜீவாவிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது..

"என்னம்மா....என்ன ஆச்சு?"

"தெரியலடா ..அம்மாவின் குரல் உடைய தொடங்கியது. வேலை செய்யுற இடத்துல திடீர்னு 2-3 தடவ வாந்தி எடுத்தாராம். அப்புறம் கீழ விழுந்துட்டாராம். கூட வேலை பார்க்கிறவங்கதான் பக்கத்தில இருக்கிற CSI ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்கங்களாம். விஷயம் கேள்விப்பட்டதும் ஆட்டோ புடிச்சி நான் ஹாஸ்பிடல் வந்துட்டேன். டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்கடா."

"கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. "சாமக்கோடங்கியின் சத்தம் மெலிதாக கேட்க ஆரம்பித்ததுபோல் இருந்தது ஜீவாவிற்கு. 

"சே.....அழாதம்மா. ஒன்னும் ஆகாது."

"எனக்கென்னமோ பயமா இருக்குடா."

"ஐயோ ...அம்மா பயப்படாதே. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. சாப்பிடாம வேலை பார்த்திருப்பாரு. அதனால தான் இப்படி ஆகியிருக்கும்."

"நான் இதோ பெர்மிஷன் போட்டுட்டு ஹொஸ்பிடலுக்கு வர்ரேன்மா".

"ஜீவா....நான் வீட்டில போட்டது போட்டபடி வந்துட்டேன். நீ வீட்டுக்கு போய் அப்பாவுக்கு ஒரு ட்ரெஸ்ஸும் எடுத்துட்டு ஒரு பிளாஸ்கும் எடுத்துட்டு வா. காஸ் எல்லாம் ஆப் பண்ணேனான்னு கூட தெரியல. "

"சரி நீ பதட்டப்படாதே. நான் வீட்டுக்கு போய்ட்டு பக்கத்துக்கு வீட்டில தங்கச்சி வந்தா விஷயத்தை சொல்ல சொல்லிட்டு நீ கேட்டதை எடுத்துட்டு வாரேன்."

போனை கட் செய்துவிட்டு ஆபீசில் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. மனதிற்குள் ஆயிரம் தடவை சொல்லிக்கொண்டாலும், சாமக்கோடங்கி சொன்னதும் அவ்வப்போது வந்து மனதில் பயம் காட்டியது.

வீட்டை அடைந்து கதவை திறந்து அடுப்படி பக்கம் ஓடினான். அடுப்படியில் தேங்காய் உரிப்பான் தலை குப்புற விழுந்து கிடந்தது. அதன் கூரிய நாக்கு குத்தியதில் தரை ஓடுகள் நான்கைந்து உடைந்து சிதறி கிடந்தன. 

இப்போது அதை பார்க்க டயம் இல்லை. "அப்பாவுக்கு என்னாச்சோ !"

கிச்சனில் பரபரவென்று எல்லாவற்றையும் சரி பார்த்தான், அம்மா எடுத்துவர சொன்னவற்றை எடுத்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டான். வீட்டைப்பூட்டி பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு தங்கை வந்தவுடன் விபரத்தை சொல்ல சொன்னான். ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்.

அப்பா பெட்டில் ஒருக்களித்து படுத்திருக்க கலங்கிய கண்களுடன் அம்மா தாடையில் கையை வைத்துக்கொண்டு அப்பாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவின் அருகில் சென்று தோளைதொட்டான்.

"அம்மா...டாக்டர் என்ன சொன்னாங்க?"

"எனக்கொன்னும் புரியலடா. என்னமோ குடல்ல ஓட்டை விழுந்திருக்காம் ஆபரேஷன் பண்ணனும் சொல்றாங்க."

இருங்க...நான் போய் டாக்டர் கிட்ட விபரத்தை கேட்டுட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டே டாக்டர் இருக்கும் அறையை நோக்கி ஓடினான். விபரத்தை கேட்டுக்கொண்டு அம்மாவிடம் வந்தான்.

"டாக்டர் என்னடா சொல்றாரு?"

"அப்பா டயத்துக்கு சாப்பிடாதது தான் பிரச்சினை. சும்மா டீ குடிச்சே சமாளிச்சா இப்படித்தான். அல்சர் வந்து குடல்ல புண் ஆகி ஓட்டை விழுந்திருக்காம். ரெண்டு இடத்துல. அதனால குடல்ல உள்ள கழிவெல்லாம் ப்ளட்ல மிக்ஸ் ஆகுதாம். நாளைக்கு ஈவினிங் ஆபரேஷன் பண்ணியாகணுமாம்."

"ஆபரேஷன் பண்ணா சரி ஆகிடுமா?"

"ஹ்ம்....சரி ஆகிடும்மா. டாக்டர் பயப்படவேண்டாம்னு சொல்லிட்டாரு."

கட்டிலின் ஒரு ஓரத்தில் உட்காந்து அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்கள் மூடிக்கொண்டு அப்பா இன்னும் ஒருக்களித்து படுத்திருந்தார். அப்பாவின் கையை அம்மா தன் கையிலெடுத்து லேசாக தடவிக்கொண்டிருந்தாள். ஒரு கையில் ட்ரிப் ஏறிக்கொண்டிருந்தது.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம்.....

"ச்சே ...என்ன இது இந்த நேரத்தில அதை போய் நினைச்சுகிட்டு" ஜீவா டக்கென்று சிந்தனையை கலைத்துவிட்டு..

"அம்மா  .....தங்கச்சி வீட்டில தனியா இருப்பா. காலேஜ் முடிஞ்சு வந்திருப்பா. நைட் கூட யாராச்சும் இருக்கணும்."

"நீ போ ஜீவா. நான் பார்த்துகிறேன் இங்க."

"இல்லம்மா ...நீங்க தனியா..."

"அதுதான் பக்கத்து பெட்ல எல்லாம் நிறையபேர் இருக்காங்களே."

"உங்களுக்கும் அப்பாவுக்கும் நைட் சாப்பாடு?"

"அதெல்லாம் வேண்டாம்டா. உங்கப்பா குணமாகி எழும்புனாலே போதும். நாளைக்கு ஆபரேஷன் இருக்கிறதால அப்பாவுக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவேண்டாம் வெறும் நீராகாரம் மட்டும் குடுத்தா போதும்னு டாக்டர் சொல்லிருக்காங்க."

"அம்மா...கவலை படாதீங்க. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காருல்ல."

"ஹ்ம்ம்.."

"நீங்களும் பட்டினி கிடந்தது ஏதும் ஆகிற போகுது. நான் பொய் ஹோட்டல்ல ஏதும் சாப்பிட வாங்கி குடுத்துட்டு போறேன் என்று சொல்லிக்கொண்டே ஜீவா கிளம்பினான்."

"அம்மாவுக்கு இரவுக்கு இட்லி வாங்கி குடுத்துவிட்டு...அப்பாவை ஒருகணம் பார்த்தான்.கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது."

"அம்மா பார்த்துக்கோங்க ...நான் போய்ட்டு காலையில வந்துடுறேன்" என்று கிளம்பினான்.

வீட்டில் தங்கை அழுது அழுது கண்கள் வீங்கிப்போய் உட்காந்திருந்தாள். எங்கே அவளை பார்த்தால் தானும் அழுதுவிடுவோம் என்று அவளை தவிர்த்துவிட்டு கிச்சன் பக்கம் போய் பார்த்தான். உடைந்த தரை ஓடுகள் எல்லாம் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு தேங்காய் உரிப்பான் ஒரு மூலையில் பத்திரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. தங்கை தான் சுத்தம் செய்திருக்கவேண்டும் என்று புரிந்தது.

தங்கையிடம் வந்து நிலைமையை எடுத்து சொல்லி அவளை சமாதானம் பண்ணினான்.

இரவு....நீண்டு கொண்டே போனது...எப்போதுடா விடியும் என்று தோன்றியது.

காலையில் தங்கை செய்து குடுத்த காலை உணவும், அம்மாவுக்கு தேவையான பேஸ்ட் பிரஸ் எலாம் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு ஹாஸ்பிடல் போக ரெடி ஆனான் ....போன் அடித்தது...

போனை எடுத்தான்.....

அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டே 

"ஜீவாவாவா......அப்பா நம்மை எல்லாம் விட்டு போயிட்டாருடாஆஆஆ....."

ஜீவாவிற்கு ஒரு கணம்.....எதுமே புரியவில்லை.

கெட்டகாலம் பொறக்குது கெட்டகாலம் பொறக்குது...இந்த வீட்டுக்கொரு கெட்டகாலம் வர போகுது. ஜக்கம்மா சொல்லிட்டா. 

உடுக்கை சத்தம் மட்டும் சம்மட்டி அடியாக தலைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.

கையிலிருந்த கூடை கீழே தடாலென கீழே விழுந்து சாப்பாட்டை சிதறடித்துவிட்டு பாத்திரம் உருண்டோடியது. கண்களில் மொத்த கண்ணீரும் அன்றே பாய்ந்துவிடும் நோக்கில் பீறிட்டுக்கொண்டு வந்தது.

சத்தம் கேட்டு...ஓடி வந்த தங்கை ஜீவா நிற்கும் நிலையை பார்த்து டக்கென்று போனை பிடுங்கி காதில் வைத்து....ஓ என்று அலற ஆரம்பித்தாள்.

ஆயிற்று...3 வருடங்கள். அப்பா என்னும் ஆணிவேர் அறுந்து காலங்கள் ஓடிவிட்டது. இப்போதெல்லாம் ஜீவாவிற்கு சாமக்கோடங்கியின் குறிசொல்லும் உடுக்கை சத்தமும் மனதிற்குள் கேட்பதே இல்லை.


இரவு 2.00 மணி.

நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது" ....எங்கோ கனவில் கேட்பது போல் இருந்தது ஜீவாவிற்கு. டக்கென்று முழித்து பார்த்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது....."

சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த குரல் கேட்டது. . கண் விழித்தபிறகும் கேட்கிறது. இது காணவில்லை.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது. ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது"

குரல் அருகாமையில் கேட்டது.

ஜீவா அனிச்சையாக சோபாவில் கழற்றிப்போட்ட சட்டையின் பையை துளாவினான். எவ்வளவு என்று தெரியாது கொஞ்சம் கரன்சி நோட்டுகள். கையை இறுக்கமாக மூடியபடியே வெளிக்கதவை திறந்தான். ஸ்விட்சை தட்டி விளக்கை உயிர்ப்பித்தான். சாமக்கோடங்கி ஜீவாவின் வீட்டை நோக்கி நகர்ந்து வந்து உடுக்கை அடிக்க கையை தூக்கியதும்.

"ஷ்... ஷ்... ஷ்... ஷ்" என்று உதட்டின் குறுக்கே விரலை வைத்து சைகையால் அவனை மௌனமாக்கினான். கையில் இருந்த கரன்சி நோட்டுகளை அவனிடம் நீட்டினான். சாமக்கோடங்கியும் எதுவும் பேசாமல் அமைதியாக அதை வாங்கிக்கொண்டு அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.

"நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது......ஜக்கம்மா சொல்றா நல்லகாலம் பொறக்குது....நல்லகாலம் பொறக்குது."

விளக்கை அணைத்துவிட்டு கதவை மூடிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். 

அடுத்த நொடி வாழ்க்கையில் நல்லதா கெட்டதா என்பது தேவை இல்லை!. இந்த நொடி...இது தான் வாழ்க்கை.  இந்த நொடி என்ன நடக்கிறதோ அதை இருக்கைகள் நீட்டி ஏற்றுக்கொள்வதே போதும். 

போர்வையை போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

ஆமா ....இன்னைக்கு சாமக்கோடங்கி சொல்லவந்தது நல்ல காலம் பொறக்குதுன்னா? கெட்டகாலம் பொறக்குதுன்னா?

ஜீவாவின் சாமக்கோடங்கி மீண்டும் உடுக்கை அடிக்க ஆயத்தமானான்.


இப்படிக்கு
ர.சி.க.ன்