விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் அந்த தனியார் ஹாஸ்பிடல் நிசப்தமாக இருந்தது. ஆனாலும் ஐசியு வார்டு மட்டும் பரபரப்பில் டாக்டரும் நர்ஸ்களும் ஷூ கால்கள் தேய அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியே ஜீவாவின் அம்மாவும் தங்கையும் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி ரெஜினாவும் படபடக்கும் இதயத்துடன் அமர்ந்திருந்தாள்.
ஐசியு என்று எழுதப்பட்ட பெரிய கதவை திறந்துகொண்டு டாக்டர் கங்காதரன் சோர்வாக வெளியே வந்தார். கூடவே வந்த நர்ஸிடம் எதோ கேட்டுவிட்டு, நேராக ஜீவாவின் அம்மாவிடம் வந்தார். லேசாக தொண்டையை சொருமிக்கொண்டு..
"வி ஆர் சோ சாரி மேடம் ...வி ட்ரைட் அவர் பெஸ்ட்..... பட்...."
"என்னாச்சு டாக்டர்? சொல்லுங்க" - ஜீவாவின் அம்மா அழுகை கலந்த குரலுடன் டாக்டரின் கையை பற்றிக்கொண்டார்.
"மனச தேத்திக்குங்க....உங்க மகனை எங்களால காப்பாத்த முடியல."
ஜீவாவின் அம்மாவின் அழுகை குரல் ஹாஸ்பிடல் முதல் தளம் முழுதும் எதிரொலித்தது.
ரெஜினா நடந்தது யூகித்துக்கொண்டு தலையில் கைவைத்து லேசாக விம்மியபடியே தரையில் அமர்ந்தாள்.
****************
எப்படியும் போய் தான் ஆகணும். நம்முடைய தேவைக்கு நேரம் காலம் எல்லாம் பார்த்தால் சரி ஆகாது. அனால் இரவு நேர டிரைவிங் தான் கொஞ்சம் கஷ்டம். என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய கைப்பேசியை உயிர்ப்பித்து ரெஜினாவின் நம்பரை அழுத்தினான். மறுமுனையில் ரிங் போனது.
"ஹேய் ஜீவா என்ன இந்த நேரத்தில்?"
"ஒண்ணுமில்ல ரெஜினா, நீ ஃப்ரீயா இருக்கியா? உன்னை கொஞ்சம் பார்க்கணும்."
"என்னாச்சு ஜீவா? எனி ப்ராப்ளம்?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல டியர், உன்னை பார்க்க வரலாமா?"
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ..."ம்ம்" என்றாள்.
"தாங்க்ஸ் ...இதோ கிளம்பி ட்வண்டி மினிட்ஸ்ல வரேன்."
ஜீவா டிரஸ் மாத்திக்கொண்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
ஜீவாவும் ரெஜினாவும் காதலிக்க தொடங்கி முழுசாக 8 மாதமும் 12 நாட்கள் ஆகிறது. முதலில் இருவரும் சாட்டில் தான் சந்தித்துக்கொண்டார்கள். ஹாய்-ல் தொடங்கி படிப்படியாக நேரம் காலம் தெரியாமல் சாட்டில் பேச ஆரம்பித்து பின்பு இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்துகொண்டு நேரடியாக சந்தித்து காதலை சொல்லி இப்போது இரண்டு வருடத்தில் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிற கண்டிஷனில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரது வீட்டிலும் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. ஆனாலும் ரெஜினாவுக்கும் ஜீவாவிற்கும் அடிக்கடி நடக்கும் ஊடல்களுக்கு காரணமும் இந்த சாட் தான். ரெஜினாவிற்கு சாட் தான் கதி. அவளுடைய கைப்பேசி எப்போதும் மெஸேஜ்களால் அலறிக்கொண்டும் IMO, வாட்ஸப் கால்களால் கதறிக்கொண்டும் இருக்கும். ஜீவா எப்போதாவது போன் பேசினாலும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு "ஜீவா அப்புறம் பேசுறேன் எனக்கொரு பிரண்ட்டோட கால் வருது" என்று இணைப்பை துண்டித்து விடுவாள். ஜீவாவிற்கு இது எரிச்சலாக இருந்தாலும் அவளுடைய சுதந்திரத்தில் நாம் தலையிட கூடாது என்கிற விதிப்படி ஜீவா அமைதி காத்தான். சில நேரம் பொறுக்க முடியாமல் அவளை நேரடியாக சந்திக்கும் போது கேட்டுவிட்டான்.
"ஹேய் ....என்னடி நீ கால் பண்ண அட்டண்ட் பண்ணவும் மாட்டேங்கிறே அப்படியே அட்டென்ட் பண்ணினாலும் பிரண்ட் கால் வருது சொல்லிவிட்டு கட் பண்ணிடுறே. நீ இன்னும் சாட் பைத்தியமாவே ஏன் இருக்கே? உனக்கு நம்ம லவ் முக்கியமில்லையா?"
ஜீவா கொஞ்சம் கடுமையான குரலில் கேட்டான்.
"லிசன் ஜீவா ...எனக்கு நம்ம லவ் எவ்வளவு முக்கியமோ அது மாதிரி என்னோட சாட் ப்ரண்ட்ஸ் ஆல்ஸோ முக்கியம். நான் ஜஸ்ட் டைம் பாஸுக்கு தானே அவங்க கூட பேசுறேன்? நீ என்னை சந்தேகப்படுறியா ஜீவா?"
"சந்தேகமெல்லாம் இல்லடி ...பட் நீ கொஞ்சம் சாட் பண்றத கம்மி பண்ணு ப்ளீஸ்."
"ஜீவா நாமளே சாட்ல தானே மீட் பண்ணோம். அதை நீ மறந்துட்டியா?"
"எஸ் ...ஒத்துக்கிறேன் நாம சாட்ல தான் மீட் பண்ணோம். நாமக்குளே ஒரு தேடல் இருந்துது. எனக்கான தேடலில் நீயும் உனக்கான தேடலில் நானும் ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்ணிக்கிட்டோம். நீ தான் என் வாழ்க்கைன்னு முடிவான பிறகு நான் இப்போல்லாம் சாட் பக்கம் போறதே இல்லை. எனக்கு தான் நீ கிடைத்துவிட்டாயே. இனி சாட் எதுக்குன்னு தூக்கி போட்டுட்டேன்ல."
"என்னால உன்ன மாதிரி எல்லாம் இருக்க முடியாது ஜீவா. எனக்கு எப்போது சாட் போதும்னு தோணுதோ அப்போ நானும் உன்னை மாதிரி எல்லாத்தையும் விட்ருவேன். ப்ளீஸ் இப்போதைக்கு என்னை என் வழியில் விடு ஜீவா."
"சரி ரெஜினா...நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாவது நீ சாட் விடுவியா?"
"ஹ்ம்ம்...பார்க்கலாம் பார்க்கலாம்."
ஜீவா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பமாட்டான். இதற்க்கு மேல் பேசினால் கையிலிருக்கும் போன் தரைக்கு சிதறு தேங்காய் ஆகிவிடும் என்று நன்றாகவே தெரியும் அவனுக்கு. இப்படி தான் ஏற்கனவே ஒருதடவை இதே விஷயத்திற்க்காக போனை எறிந்து உடைத்துவிட்டு நான்கு நாள் பிடித்து பிடித்தவளை போலிருந்தாள். அப்புறம் ஜீவா புது போன் ஓன்று வாங்கி குடுத்து உன் ப்ரண்ட்ஸ் கூட "எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசு செல்லம்" என்று கிரீன் சிக்னல் குடுத்த பின்புதான் அவள் முகத்தில் சிரிப்பே வந்தது.
கார் ரெஜினாவின் காம்பவுண்ட் கேட்டை நெருங்கும்போதே ரெஜினா வீட்டின் முன்வாசலில் நிற்பது தெரிந்தது. ஜீவா காரை பார்க் செய்துவிட்டு இறங்கி ரெஜினாவிடம் வந்தான்.
"டியர் ....ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீவா. என்ன திடீர்னு பார்க்கணும் சொன்னே?"
"சரி உள்ள போய் உட்காந்து பேசலாமா?"
"ஹ்ம்ம்"
வீட்டின் உள்ளே காலியாக இருந்த சோபாவில் இரண்டு பேரும் அமர்ந்துகொண்டாள்.
"அப்பா, அம்மா தம்பி யாரையும் காணோம்?"
"சாப்பிட்டு அவங்க அவங்க ரூம்க்கு போயிட்டாங்க"
ரெஜினாவின் மொபைலில் மெசேஜ்கள் அடிக்கடி வந்து ஒளிர்ந்து கொண்டிருந்தன.
"என்ன மேடம் ரொம்ப பிசியோ? மொபைலை பார்த்தபடியே கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்ல....வழக்கம்போல பிரண்ட்ஸ் தான். சரி ...நீ வந்த விஷயம் என்ன?"
"பெருசா ஒண்ணுமில்ல ரெஜினா. நான் ஒரு நியூ பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு பிரெண்ட் கிட்ட அவசரமா பணம் கேட்டிருந்தேன். ஜஸ்ட் த்ரீ லாக்ஸ் தான். அவன் இன்னைக்கு தான் கொஞ்சம் முன்னால போன் பண்ணி அவசரமா மும்பைக்கு நைட் பிளைட்ல போகிறேன். முடிஞ்சா இன்னைக்கு நைட் வந்து பணம் வாங்கிக்கோ. மும்பை போயிட்டு ரிட்டர்ன் வர எப்பிடியும் டூ வீக்ஸ் ஆகும்னு சொல்றான்."
"ஹ்ம்ம் ....சோ?" ரெஜினா தாடைக்கு கையை முட்டுக்கொடுத்துக்கொண்டு ஜீவா சொல்வதையும் மொபைலில் அடிக்கடி மெசேஜ் வருவதையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.
"சோ....நான் இன்னைக்கு நைட்டே போயி பணத்தை வாங்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்."
"திருவனந்தபுரம்.."
"யூ ..மீன் ...கேரளா?"
"எஸ்"
"உனக்கென்ன பைத்தியமா? நைட் இங்க இருந்து அங்க வரை கார் டிரைவ் பண்ணி போக? பேசாம அவன்கிட்ட பேங்க்ல ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லிர வேண்டியது தானே?"
"நோ ....அது முடியாது ரெஜினா? இட்ஸ் பிளாக் மணி. டாக்ஸ் இஸ்ஸுஸ் வரும்னு தான் கேஸ்ஸா தரேன்னு சொல்றான்."
"பட் ...ஜீவா ...அம்பாசமுத்திரம் டு திருவனந்தபுரம் எப்படியும் சிக்ஸ் ஹவர்ஸ்க்கு மேல ஆகுமே. போறதுக்கு சீஸ் அவர்ஸ் வர்றதுக்கு சிக்ஸ் ஹவர்ஸ்னு பாத்தாலும் நீ வீடு வந்து சேர நாளை காத்தால ஆயிடுமே.?"
"அதுக்கு தான் ரெஜினா உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க வந்திருக்கேன்?"
ரெஜினா புருவத்தை உயர்த்தி "என்ன?" என்பது போல் பார்த்தாள்.
"இங்க பாரு எனக்கு நைட் டிரைவிங் அவ்வளவா பழக்கமில்லைனு உனக்கே தெரியும்?"
"பட் ....நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நான் நைட் ட்ரைவ் பண்றப்போ அப்போ அப்போ கொஞ்சம் போன்ல பேசிகிட்டு இருந்தா நானும் முழிச்சிருந்து ட்ரைவ் பண்ணி போய் சேர்ந்திடுவேன். பணம் கையில கிடைச்ச பிறகு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வேணும்னா நாளைக்கு காத்தால அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணா பொறுமையா வீடு வந்து சேர்ந்துருவேன். இத நான் போன்ல சொல்லிருக்கலாம். ஆனா அதுக்குள்ள உனக்கு பிரண்ட்ஸ் கால்ஸ் வரும் மெசேஜ் வரும். நீயும் பொறுமையா கேட்கமாட்டே. அதனால தான் உன்னை நேர்ல பார்த்து உன்கிட்ட விபரத்தை சொல்லலாம்னு அவசரமா உன்னை பார்க்கணும் சொன்னேன்."
ஜீவா இவ்வளவும் சொல்லி முடிப்பதற்குள் ரெஜினாவின் போன் மெசேஜ் மற்றும் IMO கால்ஸ்களால் நிரம்பி வழிந்தது.
ரெஜினாவின் பார்வையிலும் இவன் எப்போதுடா சொல்லி முடிப்பான் என்று இருந்தது.
"ஒன் செகண்ட் ஜீவா"...என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்து கடகட என்று யாருக்கோ மெசேஜ் டைப் பண்ணினாள்.
ஜீவா பொறுமையாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மெசேஜ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தாள். "ஓகே ஜீவா ...நான் உனக்கு போன் பண்றேன். ஆனா நான் தூங்கணுமே?"
ஜீவா கொஞ்சம் நெருக்கமாக அவள் பக்கம் வந்தான். அவன் இரு கன்னத்தையும் கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டு "என் செல்லக்குட்டி.....நீ எப்பிடியும் உன் பிரெண்ட்ஸ் எல்லாரையும் தூங்க வச்சிட்டு நைட் ரெண்டு மணிக்குத்தான் படுக்க போவேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு அதே ஜாப் தான்....பட் கொஞ்சம் ஆப்போசிட் ஜாப். என்னை தூங்காம வச்சுக்கிறது என் ரெஜினாவோட பொறுப்பு. சரியா? நீ சரியாய் ரெண்டு மணிக்கெல்லாம் வழக்கம்போல தூங்க போலாம்."
ரெஜினா லேசாக புன்னகைத்தாள்.
"நீ இருக்கியே ஜீவா...பேசி பேசியே கவுத்துருவே டா."
ஜீவா சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
"சரி மா ....நான் கிளம்புறேன். இப்போ கிளம்புனா தடவை சரியா இருக்கும். நானே உனக்கு போன் பண்றேன். அப்போ நீ பேசினால் போதும்."
"ஹ்ம்ம் சரி ஜீவா. பார்த்து பத்திரமா போயிட்டு வா.."
"மிஸ் யூ செல்லம்"...இரண்டு விரல்களை உதட்டில் பதித்து முத்தத்தை அவளை நோக்கி காற்றில் பறக்க விட்டுக்கொண்டே காரை நோக்கி போனான்.
கார் சீரான வேகத்தில் ரோட்டில் வழுக்கிக்கொண்டு சென்றிருந்தது. ஜீவா பாட்டு கேட்டவாறே காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.
பணம் மட்டும் கிடைத்துவிட்டால் எப்பிடியும் பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணிரலாம். ரெஜினாவையும் ஆபீஸ் விஷயங்கள் பார்த்துக்க சொல்லலாம். அவளும் வீட்டில் சும்மா இருப்பதால் தான் எப்போதும் சாட், பிரண்ட்ஸ் என்று நேரம் போக்கிக்கொண்டு இருக்கிறாள்.
இப்படி பலவிதமாக யோசித்தவாறே மணியை பார்த்தான். மணி 11: 45 என்று காட்டியது. ஜீவாவிற்கு லேசாக தூக்கம் கண்ணை சுழற்றுவது போலிருந்தது. உடனே போனை எடுத்தான் ரெஜினாவுக்கு டயல் செய்தான். ரெஜினா லைனில் வந்தால்.
"ஹாய்...ஸ்வீட்டி ...என்னடி பண்ணிட்டு இருக்கே?"
"ஒண்ணுமில்ல டா"
"ஏய் ...ஏய் ...என்கிட்ட மறைக்காதே. சாட் தானே?"
"ஹ்ம்ம்..."
"இது என்ன உன்னோட நைட் பிரண்ட்ஸ் குரூப்பா?"
"ஆமா ஜீவா....நைட் கொஞ்சம் ரெகுலர் பிரண்ட்ஸ் சாட்ல வருவாங்க. அவங்க கூட பேசிகிட்டு இருக்கேன்."
"எனி நியூ பிரெண்ட்ஸ்?"
"ஆமா ஜீவா. ராகேஷ்ன்னு ஒருத்தன் நம்பர் கொடுன்னு உயிரை வாங்குறான்."
"எப்படியும் நீ நம்பர் கொடுக்க தான் போறே...அதுக்கு ஏண்டி இவளவு பிகு பண்ணிக்கிறே."
"போ....ஜீவா. அது எப்பிடி உடனே நம்பர் கொடுக்க முடியும். நான் அவன் ஆள் எப்பிடி, பிரெண்ட்லியா பழகுவானா இல்ல ஜொள்ளு கேஸா தெரிஞ்சுக்காம நான் நம்பர் கொடுக்கிறதில்ல."
"அடேங்கப்பா... ஆமா ஆமா ...உங்கிட்ட ஆரம்பத்துல நம்பர் வாங்க நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டேன்னு எனக்கு இப்ப ஞாபகம் வருது."
"ஏய் ....இரு ஒரு கால் வருது."
"சரி சரி....சீக்கிரம் பேசி முடி. தூக்கம் வந்துது. அது தான் உடனே உனக்கு போன் பண்ணேன்."
இணைப்பை துண்டித்தாள்.
"ஏன் இவள் இப்பிடி ரொம்ப சாட் அடிக்ட்டா இருக்கிறாள். இவளை கலியாணத்துக்கு முன்னமே இதுல இருந்து விடுவிக்கணும். என்ன பண்ணலாம்?"....ஜீவா யோசித்தான்.
மறுபடியும் தூக்கம் வருவது போலிருந்தது.
கண்களால் ரோட்டின் இரண்டு பக்கமும் துழாவி ஒரு இரவு டீ கடை முன்பு காரை நிறுத்தினான் கடையின் போர்டை பார்த்தான். இடம் : மீனாட்சிபுரம் என்று போட்டிருந்தது.
"அண்ணே ...ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுண்ணே". சொல்லிக்கொண்டே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான், லேசாக மழை தூறல் விழுகிற மாதிரி இருந்தது. கையை கடைக்கு வெளியே நீட்டி ஒருதடவை செக் பண்ணினான்.
தூவானம் தூறல் போட ஆரம்பித்திருந்தது.
"அண்ணே இங்கிருந்து திருவனந்தபுரம் எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?"
"ஒரு 85 கிலோமீட்டர் இருக்கும் தம்பி"
கடிகாரத்தை திருப்பி பார்த்தான். மணி 12: 20 என்று காட்டியது.
டீயை வாயில் வைத்து உறிஞ்சியவாறே....எப்படியும் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்ல பொய் சேர்ந்திடலாம் என்று மனதினுள் கணக்கு போட்டான்.
டீக்கு காசு கொடுத்துவிட்டு, லேசான தூறலில் நனைந்துகொண்டே காரில் ஏறி கிளப்பினான். காரின் கண்ணாடியில் நீர்த்திவலைகள் கோர்த்து பார்வையை மறைத்தது. வைப்பர் ஆன் செய்து நீர்த்திவலைகளை வழிக்க செய்தான். மனது வெறுமையாக இருந்தது. மனது வெறுமையாக இருந்தாலே மூளை தூங்க ஆரம்பித்துவிடும். ஜீவாவிற்கு கண்கள் லேசாக சொருகிக்கொண்டு வந்தது. தலையை ஒருவாட்டி சிலுப்பிக்கொண்டு தூக்கத்தை விரட்டிவிட முயன்று தோற்றான். போனை கையில் எடுத்து ரெஜினாவிற்கு கால் செய்தான்.
"ஹேய்....என்னடா ...எந்த லொகேஷன் இப்போ?"
"எதோ மீனாட்சிபுரம்னு போர்டு பார்த்தேன். இன்னும் 85 கிலோமீட்டர் போகணுமாம். டீ கடையில சொன்னாங்க."
"ஹ்ம்ம் பார்த்து டிரைவ் பண்ணுடா...."
"ஹ்ம்ம்... ...ஏதாவது பேசு டி."
"சும்மா பேச சொன்ன...என்னடா பேச ஜீவா?"
"ஏன் உன் பிரண்ட்ஸ் கிட்ட மட்டும் நாள் பூரா கதை விடறே. என்கிட்ட பேச ஒண்ணுமே இல்லையா?"
"ஜீவா ...மறுபடியும் மறுபடியும் ஏன் என்னோட பிரைவசி சப்ஜெக்ட் பத்தியே பேசுறே. நீ இப்பிடி பேசுறத இருந்தா நான் போனை வச்சிடுறேன்."
"ஏய் ...ப்ளீஸ் ...ப்ளீஸ் வச்சிராதே டி."
"ஹ்ம்ம்"
"சரி....நான் ஒரு விடுகதை சொல்லவா? அதுக்கு நீ பதில் சொல்லுவியா?"
"சரி...சொல்லு...ட்ரை பண்றேன். ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் ஹோல்ட் பண்ணேன். ஒரு மெஸேஜுக்கு ரிப்ளை மட்டும் போட்டுக்கிறேன்."
"ஹ்ம்ம்...ஓகே டி." ஜீவாவிற்கு சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.
"ஓகே...ஜீவா இப்போ விடுகதை சொல்லு"... ரெஜினா மீண்டும் லைனில் வந்தாள்.
"சரி ...நல்லா கேட்டுக்கோ...ஆயிரம் உப்புமா பொடிக்கு அரை மூடி தேங்காய். அது என்ன?"
"ஹ்ம்ம்...ஒரு பைவ் மினிட்ஸ் டயம் குடுக்கிறியா? யோசிச்சு சொல்றேன்."
"ஏய் ..யாரை ஏமாத்த பார்க்கிறே. உனக்கு பதில் தெரியாது. உன் பிரண்ட்ஸ் குரூப் கிட்ட போய் கேட்க போறே. அதானே?"
சிரித்தாள்..."கண்டுபிடிச்சிட்டியா? உனக்கு பதில் தானே வேணும் இதோ வரேன்..."
இணைப்பை துண்டித்தாள்..
டமால்.....கிரீஈஈஈஈஈச்
ஜீவா அடிக்கடி போனை பார்த்துக்கொண்டே யோசித்தபடி காரின் ஆக்சிலேட்டரை மிதித்துக்கொண்டிருந்தான். வெளியில் மழை அடித்து பெய்ய ஆரம்பித்திருந்தது.
கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்துவிட்டு, பொறுமையிழந்தவனாக IMO வில் அவளை அழைக்க முயலும்போது போன் தவறி கீழே விழுந்தது. ஒரு கையால் டிரைவ் செய்துவிட்டே ரோட்டில் ஒரு கண்ணுமாக லேசாக உடலை வளைத்து போனை எடுக்க முயன்றான்.
டமால்.....கிரீஈஈஈஈஈச்
எதிரில் வந்த லாரியின் பக்கவாட்டில் ஜீவாவின் கார் இடித்து ஏறக்குறைய அப்பளம் போல் லாரியின் அடியில் இழுத்து ....
ஜீவா ...என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.
எங்கோ டெலிபோனின் ரிங் ஒலித்தது.....ஜீவா தலையை தூக்கி தேட முயன்று தோற்றான். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க ஆரம்பித்தான். பின்னந்தலையில் சிறு கீறலாய் புறப்பட்ட இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து மழை தண்ணீரில் கரைய ஆரம்பித்தது.
***************
ஆயிற்று.....சாட்டில் தொடங்கிய ஜீவா ரெஜினாவின் காதல் அதே சாட்டினாலே முடிந்தது. ரெஜினாவும் காதலித்த காரணத்திற்காக அழுது தீர்த்துவிட்டாள்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பி வருவாரோ???
ரெஜினா போனை தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு டீபாயில் தலையை சாய்த்துக்கொண்டு கீழே உட்காந்திருந்தாள். மொபைலில் "ஹலோ" என்று மெசேஜ் வந்து மொபைலின் திரையை உயிர்ப்பித்தத்தது. ரெஜினா மெதுவாக எடுத்து பார்த்தாள். ராகேஷ் தான் மெசேஜ் பண்ணிருந்தான்.
"ஹலோ" ....ரிப்ளை தட்டினாள்.
"ஆர் யூ பிரீ டு டாக் டியர்?" - ராகேஷ் சம்பிரதாயத்துடன் தொடங்கினான்..
"எஸ்..ஐயாம் ..பிரீ " - ரெஜினாவும் சம்பிரதாயத்துடன் தொடங்கினாள்..
பக்கத்தில் மேஜை மேலிருந்த சின்னதாக பிரேம் போட்ட போட்டோவில் ஜீவா ரெஜினாவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
இப்படிக்கு
ஜீவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக