சனி, டிசம்பர் 24, 2016

ஆசை...






Behold her, single in the field,
Yon solitary Highland Lass! 
Reaping and singing by herself;
Stop here, or gently pass!



வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்தின் "The Solitary Reaper" கவிதை வரிகள் அந்தோணி வாத்தியாரின் கணீர் குரலில் அந்த பனிரெண்டாம் வகுப்பு "B" பிரிவு வகுப்பறையிலிருந்து சத்தமாக கேட்டது.

மூன்றாவது பெஞ்சின் வரிசையில் இருந்த ஜீவாவிற்கு அது ஒன்றும் காதில் ஏறுவதாக இல்லை இப்போது.

பசி....பசிக்குது....மெதுவாக வாட்சை திருப்பி பார்த்தான் இன்னும் முழுசாக இருபது நிமிடங்கள் இருக்கின்றன லன்ச் பெல் அடிப்பதற்கு. அப்படியே சட்டை பாக்கட்டின் மேல் கைவைத்து காலையில அம்மா தந்த இருபது ரூபாய் பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்தான். 

"ஹ்ம்...இருக்கிறது."

அம்மா எதோ உறவினர் வீட்டிற்கு போகிற காரணத்தால் மத்திய சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட கிடைத்த இருபது ரூபாய். காலையில் அவசரம் அவசரமாக பழைய சோறும் ஊறுகாயும் வாரி போட்டுகொண்டு வந்தது. அது எப்போதோ செரிமானம் ஆகிவிட்டிருந்தது. வயிற்றிக்குள் வெறும் ஆட்டுரல் சுற்றுவது போலிருந்தது. 


"இந்த இருபது ரூபாயை வைத்து இன்னைக்கு என்ன சாப்பிடலாம்?" ஜீவா அடுத்த கட்ட சிந்தனைக்கு தாவினான்.


"பிரியாணி சாப்பிடவேண்டுமென்றால் இருபது ஐந்து ரூபாய் வேணும்."

"கௌரிசங்கர் ஹோட்டலில் வெஜிடபிள் சாப்பாட்டிற்கு முழுதாக இந்த இருபது ரூபாயை மொய் வைக்கவேண்டும். எக்ஸ்ட்ரா சாதம் கேட்டால் அதற்க்கு தனி காசு கேட்பான்."

"ஹ்ம்ம்....பேசாமல் காமாட்சி மெஸ்ஸில் ஒரு புல் மீல்ஸ் சாப்பிட வேண்டியதுதான். பதினைந்து ரூபாய் தான். மீதி இருக்கும் ஐந்து ரூபாய்க்கு எதாவது சாக்லேட் வாங்கி சாப்பிடலாம்."

ஒருவழியாக யோசித்து இந்த பிளானை மனதில் ஒட்டிக்கொண்டான்.


ஜீவாவின் சிந்தனையை கலைக்கும் விதமாக லன்ச் பெல் அடித்தது. அந்தோணி வாத்தியார் வகுப்பறையின் கதவை தாண்டியிருக்க மாட்டார். அதற்குள் ஜீவா சிட்டாக பறந்தான் காமாட்சி மெஸ் நோக்கி.

ஓட்டமும் நடையுமாக ரோட்டில் நடந்துகொண்டிருந்த ஜீவாவை அந்த குரல் இழுத்து நிறுத்தியது.

"தம்பீ ...."

ஜீவா ஒருகணம் சுற்றும் முற்றும் பார்த்தான். நம்மளை இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அடியெடுத்து வைத்தவனை மீண்டும் அந்த குரல் நிறுத்தியது.

"தம்பீ... உன்னைத்தான் "

குரல் வந்த திசை நோக்கினான்.

பாதி அழுக்கும் பாதி வெள்ளையாக சட்டையும் ...காவி வேட்டியுமாக அவன்...(இல்லை இல்லை அவர்) அங்கு உக்காந்திருந்தார். நெத்தியில் பட்டையும் கழுத்தில் நீளமாக ருத்ராட்ச மாலையுமாக, கொஞ்சம் கலைந்த முடி..நிறைய தாடியுமாக பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரு சாமியார் மாதிரி.

"இங்க வாங்க தம்பீ"

ஜீவா ஒருகணம் அவரிடம் போகலாமா வேண்டாமா என்று யோசித்து..அவரிடமே போனான்.

அப்போதுதான் அதை கவனித்தான்.

அவர் முன்னாள் நிறைய பலவிதமான சாமி படங்கள் ஒட்டிய அட்டை ஓன்று வைத்திருந்தார். சரஸ்வதி, முருகன், பிள்ளையார், காளி, அல்லா, இயேசு இத்யாதி இத்யாதி. அந்த அட்டையின் மேல் கொஞ்சம் சோழிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு சின்ன ஆமை குஞ்சுகள் படுத்திருப்பதை போல் இருந்தது.

ஜீவாவிற்கு மனதிற்குள் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

"புள்ளை பிடிக்கிறவனாக இருப்பானோ?" அம்மா அடிக்கடி புள்ளை பிடிக்கிறவங்கள் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கிறாள். 

"ஒருவேளை பில்லி சூனியம் வைக்கிறவனாக இருப்பானோ?" ச்சே ... தெரியாம வந்துவிட்டோமோ?

"தம்பீ ....என்ன படிக்கிறீங்க?" 

ஆங்.....என்ன கேட்டிங்க? ஜீவாவின் திகில் சிந்தனை கொஞ்சம் அறுந்தது.

"தம்பீ ...என்ன படிக்கிறீங்கன்னு கேட்டேன்" குரல் கொஞ்சம் கனிவாகத்தான் இருந்தது.

"பன்னெண்டாம் வகுப்பு"

"தம்பிய பார்த்தா நல்ல படிக்கிற புள்ள மாதிரிதான் இருக்கு."

"யாரு நானா?" (மூணாவது  பெஞ்சில கழிசடைங்க கூட உட்கார வச்சிருக்காங்க...நான் நல்ல படிக்கிற பையனா?)

"ஆமா தம்பி...முகத்தை பார்த்தாலே தெரியுதே."

"சரிதான்"...(இவரு என்னதான் சொல்ல வராரு இப்ப?)

"அநேகமா ...தம்பிக்கு  இப்ப நேரம் நல்லாருக்கு. "

"ஆங்...."(பசி கொல்லுது....நேரம் நல்லாருக்காம்). "சரி சாமி ஸ்கூலுக்கு நேரமாகும் நான் கிளம்புறேன்" சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஜீவா நகர முயன்றபோது....

அந்த பொடியன் ஓடி வந்தான். எப்படியும் வயது ஒரு பத்து பனிரெண்டுக்குள்  தான் இருக்கும். வந்தவன் சாமியாரிடம் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினான். சாமியார் அதை வாங்கி தான் பக்கத்தில் இருந்த சிறிய தகர பெட்டிக்குள் வைத்துக்கொண்டே அவனை பார்த்தார்.

"சரி எத்தனை?" என்று அவனிடம் கேட்டார்.

"நாலு"  - பையன் சொன்னான் 

"ஹ்ம்ம் ...சரி குலுக்கி போடு"

பையன் அங்கிருந்த சோழிகளை கையில் அள்ளி இரண்டு கைகளால் நன்றாக குலுக்கி எதோ ஒரு சாமியை கண்மூடி வேண்டிக்கொண்டு சோழிகளை உருட்டினான். அட்டை படங்களின் மேல் சோழிகள் உருண்டு ஓடி நிலைகுத்தி நின்றன.

சாமியார் அதில் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார். 

"நாலு!"

சாமியார் மறுபடியும் அந்த தகர டப்பாவை திறந்து இருபது ரூபாயை அவனிடம் நீட்டினார். பொடியன் அதை வாங்கிக்கொண்டு விர்ர்ர்...என்று பைக் ஸ்டார்ட் செய்வதுபோல் சத்தம் எழுப்பியவாறே அங்கிருந்து மின்னலென மறைந்தான்.

ஜீவாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் தலை தூக்கியது.

சாமியார் லேசாக ஜீவாவை நோக்கி புன்னகைத்தார்.

"என்ன தம்பி....என்ன பார்க்கிறீங்க?"

"ஒண்ணுமில்ல....அவனுக்கு நீங்க ஏன் இருபது ருபாய் குடுத்தீங்க?" ஜீவா என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டுவிட்டான்.

சாமியார் இப்போது காலை மடக்கி நன்றாக உட்காந்து கொண்டார்.

"அதாவது தம்பி...இதுல பார்த்தீங்களா...பத்து சோழிகள் இருக்கு. இந்த பத்து சோழிகளை இந்த அட்டையில  உங்களுக்கு மனசுக்கு புடிச்ச சாமியை வேண்டிக்கிட்டு உருட்டனும். உருட்டுறதுக்கு முன்னால நீங்க ஒரு நம்பர் சொல்லணும். நீங்க சோழிய போட்டதும் நீங்க ஏற்கனவே சொன்ன நம்பர் சோழிங்க மல்லாக்க விழுந்தா நீங்க எவ்வளவு பணம் காட்டுறீங்களோ, அதுக்கு டபுள் மடங்கு பணம் நான் உங்களுக்கு தருவேன். அதாவது ஐந்து ருபாய் வைத்தால் பத்து ருபாய், பத்து ருபாய் வைத்தால் இருபது ருபாய். இப்போது வந்துவிட்டு போனானே அந்த பையனுக்கு இன்றைக்கு சுக்கிர திசை. என்னிடமிருந்து இதுவரை இருபத்துஐந்து ரூபாய் ஜெயித்துவிட்டான்."

ஜீவா கொஞ்சம் ஆர்வமானான்.

சாமியார் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே அதே பையன் மீண்டும் வந்தான். இந்தமுறை ஐந்து ரூபாயை நீட்டினான்.

"ஏழு" என்று சொல்லிக்கொண்டே கடகடவென சோழிகளை எடுத்து உருட்டினான். சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை எண்ணினார்.

"ஏழு!!"

பையனின் கையில் பத்து ரூபாயை திணித்தவாறே...

"டேய் ...பையா ....உனக்கு ஏது இவ்வளவு பணம்?"

"எங்க அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்"...சொல்லிக்கொண்டே மறுபடியும் ஓடிவிட்டான்.

"தம்பீ ....இந்தாங்க....நீங்களும் ஒருவாட்டி சோழிய உருட்டிப்பாருங்க" சாமியார் சோழிகளை அள்ளி ஜீவாவிடம் நீட்டினார் 

"ஐயோ...நான் இல்லீங்க..."

"அட ...சும்மா உருட்டுங்க தம்பி. நீங்க காசு பணம் எல்லாம் தரவேண்டாம். உங்களுக்கு யோகம் எப்படியிருக்குனு பார்க்கலாம்."

ஜீவாவிற்கு ஒருதடவை யோகம் இருக்கிறதா என்று பார்க்க ஆசை தோன்றியது.

சோழிகளை கையில் வாங்கி...அட்டையில் இருந்த படங்களை கண்ணை மூடி ஒருவாட்டி கும்பிட்டுவிட்டு. 

"ஆறு" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். 

சாமியார் மல்லாக்க விழுந்த சோழிகளை கவனமாக எண்ண ஆரம்பித்தார்.

"சபாஷ் ...ஆறு!" சாமியார் கொஞ்சம் சத்தமாக சொன்னார்.

ஜீவாவிற்கு தன் கண்களையே ஒருவாட்டி நம்ப முடியவில்லை. 

"பார்த்திங்களா தம்பீ ...நான்தான் அப்போவே சொன்னேன்ல. தம்பிக்கு இப்ப நேரம் நல்லாருக்குனு."

ஜீவாவிற்கு மனதினுள் உற்சாகம் பிறந்தது. மனது பரபரவென கணக்கு போட ஆரம்பித்தது.

"ஒருவேளை நான் விளையாடி ஒரு இருபது ருபாய் ஜெயித்தால், மொத்தம் நாற்பது ரூபாய் கையில் வரும். காமாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, மத்தியானம் ஒரு படமும் பார்க்கலாம். ஜீவாவின் மனக்கண் முன்னாள்...காலையில பார்த்த "அடல்ட்ஸ்  ஒன்லி" போஸ்டர் மின்னி மறைந்தது. அந்த படம் நாளைக்கு தியேட்டரிலிருந்து தூக்கிருவான். அதற்குள் பார்க்க ஒரு சான்ஸ்!!."

"இருந்தாலும் ஏதாவது தப்பாகி சோழிகள் நாம நினைச்ச மாதிரி விழலைனா?" எல்லாமே பாழாகிடும். அதனால முதலில் சிறிய அமவுண்ட் வச்சி பார்க்கலாம் என்று கணித மேதை ராமானுஜர் தோற்று விடும் அளவிற்கு பக்காவாக கணக்கு போட்டு, சோழிகளை கையில் எடுத்தான் மறுபடியும்.

"சாமி...நான் ஐந்து ருபாய் காட்டுறேன்" சொல்லிக்கொண்டே இருபது ருபாய் தாளை சாமியாரிடம் நீட்டினான். அவரும் அதை வாங்கி தகர பெட்டியில் பத்திரப்படுத்திவிட்டு மீதி பதினைந்து ரூபாயை அவனிடம் கொடுத்தார்.

ஜீவா கண்ணை மூடி சாமியை வேண்டிக்கொண்டு ...சோழிகளை குலுக்கி உருட்டிவிட்டுக்கொண்டே...

"எட்டு"

சோழிகள் அட்டையின் மேல் உருண்டோடின. 

சாமியார் என்ன ஆரம்பித்தார்.

"எட்டு" தீர்க்கமாக சொன்னார்.

ஜீவாவிற்கு மனது குதியாட்டம் போட ஆரம்பித்தது. சாமியார் பத்து ரூபாயை அவனிடம் நீட்டினார்.

"தம்பிக்கும் இன்னைக்கும் சுக்கிர திசை தான் போல" சாமியார் கலகலவென சிரித்தார்.

பாக்கெட்டில் இப்போது இருபது ஐந்து ருபாய் இருக்கிறது" ஜீவா சாமியார் சொன்னதை காதில் வாங்கியும் வாங்காமலும் கணக்கில் குறியாயிருந்தான்.

அதற்குள் மீண்டும் அந்த பொடியன் வந்து ஒருதடவை விளையாடி....இருபது ருபாய் கட்டி முழுசாக நாற்பது ரூபாய் ஜெயித்து விட்டு போய்விட்டான்.

"ஒரு பொடியன் நம்மளை விட அதிகமா ஜெயிக்கிறான்...நம்ம நேரமும் நல்லாத்தான் இருக்கு. நம்மால ஜெயிக்க முடியாதா என்ன?" ஜீவாவிற்கு ஆசை என்னும் போதை தலைக்கேறியது.

"சாப்பிடணும், அப்புறம் படத்துக்கு போகணும். லேட் ஆனா படம் போட்டிருவான். பலான சீன் ஏதும் இருந்தா மிஸ் ஆகிரும். இப்போது சிறிய அமௌண்ட் வச்சி விளையாட நேரமில்லை. மொத்தமா ஒருவாட்டி ஜெயித்துவிட்டு போயிற வேண்டியது தான்."

"சாமி...இருபது ருபாய் கட்டுறேன்"  - ஜீவா ஒரு முடிவுடன் இருந்தான்.

"சரி..தம்பீ. கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க" இருபது ரூபாயை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.

ஜீவா சோழிகளை கையில் அள்ளி...."பெரிய நம்பர் சொல்லி ஒருவேளை விழாமல் போய்விட சான்ஸ் உண்டு. அதனால சின்ன நம்பர் சொன்னா பத்து சோழிகளில் எப்படியும் அந்த நம்பர் விழும்" என்று நினைத்துக்கொண்டே

"ஐந்து" என்று கொஞ்சம் பதட்டத்துடன் சொல்லிக்கொண்டே சோழிகளை உருட்டினான். சோழிகள் உருண்டு சிலது கொஞ்சம் ஆட்டம் காட்டிவிட்டு ஒரு நிலைக்கு வந்தன.

சாமியார் சோழிகளை எண்ணினார்.

ஓன்று..
.
.
.
இரண்டு...
.
.
.
.

மூன்று.
.
.
.
.
.

நான்கு.

நான்கு.....நான்கு..!!!!!!

ஜீவா பரபரக்கும் கண்களுடன் ஐந்தாவது சோழியை தேடினான். இல்லை...எங்கேயுமே இல்லை!

நான்கு தான்!

"நான்கு"......சத்தமாக சொன்னார் சாமியார்!

ஜீவாவிற்கு ஒருகணம் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலிருந்தது.

"ஐயோ....இருபது ருபாய் போச்சே"...தலைக்குள் எதோ சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

வாழ்க்கையில் ஒருதடவை நினைத்து பார்க்காத ஏமாற்றம் வந்தால்....மூளை அடுத்த செயலை உடனே செய்து அந்த ஏமாற்றத்தை தடுத்து நிறுத்த பார்க்கும். அந்த நேரத்தில் நிதானமில்லாமல் எடுக்கும் முடிவுகள் மீண்டும் தப்பாகும் என்பது நியதி.

ஜீவாவும் அந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.

விட்டதை பிடிக்க வேண்டும்...சாப்பிடவாவது காசு வேண்டும் என்று நிதானமில்லாமல் அந்த முடிவை எடுத்தான்.

"சாமி...ஐந்து ரூபாய் கட்டுறேன்."

"உங்க விருப்பம் தம்பீ....இந்த தடவை கண்டிப்பா நீ கும்புடற சாமி கைவிடாது"

ஜீவா அவசரம் அவசரமாக பாக்கெட்டில் மீதமிருந்த ஐந்து ரூபாயை அவர் கையில் திணித்துவிட்டு சோழிகளை கையிலெடுத்தான்.

பாரபட்சம் பார்க்காமல் எல்லா சாமியும் கும்பிட்டுவிட்டு...

"ஒன்று" என்று சொல்லிக்கொண்டே சோழிகளை அட்டையின் மேல் உருட்டினான். 

சோழிகள் சரசரவென உருண்டோடின..

ஜீவாவின் கண்கள்...அகல விரிந்து இதுவா...அதுவா...எந்த சோழி மல்லாக்க விழப்போகிறது என்று தவிப்பாய் தேடினான்.

சோழிகள் உருண்டு....உருண்டு....

கடைசியில்...எல்லாமே ஆமை குஞ்சுகள் போல் கவுந்து படுத்துக்கொண்டன.

ஜீவாவிற்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. பத்து சோழிகளில் ஓன்று கூடவா மல்லாக்க விழவில்லை. கண்களில் லேசாக கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிற மாதிரி இருந்தது.

சாமியாரை பார்த்தான்...அவரும் கன்னத்தில் கைவைத்து அவனை பரிதாபமாக பார்த்தார்..(இல்லை இல்லை ஏளனமாக பார்த்தார்)

"தம்பீ ...உங்களுக்கு இப்போது நேரம் சரி இல்லை போல... சரி தம்பி வேற காசு இருந்தா எடுத்து வாங்க..." சாமியார் சோலியை முடித்துவிட்டு அவனை விரட்டுவது போன்ற தொனியில் பேசினார்.

அவர் (இனி என்ன அவர் ....அதான் ஆட்டைய போட்டானே) அவன் ... அவன்..துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிடைத்தவரை லாபம் என்று அட்டையை மடித்து அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். 

மனசு மாறி காசை திரும்ப கொடுத்துவிடுவான் என்கிற ஒரு சிறிய நப்பாசையுடன் ..ஜீவா கடைசியாக ஒருதடவை அவனை பரிதாபமாக பார்த்தான்.

"போங்க தம்பி ....போங்க....ஸ்கூலுக்கு நேரமாச்சில்ல"

ஜீவா அங்கிருந்து கண்கள் பசி மயக்கத்தில் சொருக நகர்ந்தான். அவனும் எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு வேறுபக்கமாக நடையை கட்டினான்.

பசி...பசிக்குது....மோதலில் சாப்பிட எதாவது வழி கண்டு பிடிக்கணும். ஆங்...கொஞ்சம் தூரத்தில்தான் அவன் மாமாவின் செருப்பு கடை ஓன்று இருக்கிறது. மாமா என்றால் தூரத்து சொந்தம் தான். ஆனாலும் அம்மா சிலநேரம் கையில் காசு இல்லாமலிருந்தால் "ஜீவா...மாமா கடையில் போய்  மத்தியானம் லஞ்சுக்கு இருபது ரூபாய் வாங்கிக்கோ" என்று சொல்வதுண்டு. அப்போதெல்லாம் ஜீவாவும் அவரிடம் சென்று அம்மா சொன்னாங்க என்று காசு வாங்கியிருக்கிறான். அனால் அம்மா சொல்லாமல் ஒருநாளும் அவரிடம் காசு வாங்கியதில்லை. இருபது ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட வாங்கியதுமில்லை. அந்த நம்பிக்கையில் ஜீவா எப்போதாவது காசு கேட்டு போனால் அவன் மாமாவும் இல்லை என்று சொல்லாமல் காசு குடுப்பது வழக்கம். இன்று தான் முதன்முறையாக அம்மா சொல்லாமல் காசு வாங்கலாம் என்று தீர்மானித்து மாமா கடையை நோக்கி வேகமாக நடந்தான்.

கடையில் வேலைபார்க்கும் ஆள்கள்  சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். 

இவனை பார்த்ததும் ஒருவன். "தம்பி ...என்ன இந்த பக்கம்?"

"ஒண்ணுமிலீங்க....மாமாவை பார்க்கணும்"

"ஓ ...மாமாவா? அவரு கொஞ்சம் முன்னாடி தானே கடைக்கு புதுசா சரக்கு எடுக்கணும்னு எதோ பார்ட்டியை பார்க்க போனாரு. எப்போ வருவார்னு கூட தெரியாதே. ஆனா எப்பிடியும் சாயங்காலம் ஆகிரும் தம்பி."

அவர் சொல்லி முடிக்க ஜீவாவிற்கு கடைசியாக இருந்த ஒரு வாய்ப்பும் நழுவி போகிறது நன்றாக புரிந்தது.

"சரிண்ணே....நான் கிளம்புறேன்"

"என்ன தம்பி? ஏதாச்சும் சொல்லனுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே"...சொல்லிக்கொண்டே ஜீவா அங்கிருந்து அகன்றான்.

"இனி ஒரு வழியுமில்லை.....பேசாமல் ஸ்கூலுக்கு போயிர வேண்டியது தான்...கிளாஸ் ஆரம்பிசிருக்கும்" நினைத்தவாறே ஓட்டமும் நடையுமாக ஸ்கூலை நோக்கி போனான்.

வரும் வழியில்....அந்த காட்சியை பார்த்தான். அந்த பிராடு சாமியாரும்...அடிக்கடி வந்து போன பொடியனும் ஜோடியாக பேசி சிரித்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள். அப்படின்னா அந்த பொடியானும் இவன் ஆளா? ஐயோ கடவுளே...என்னைய நல்ல வச்சு செஞ்சிருக்காங்க. நாசமா போறவங்களா...!

கால்கள் லேசாக தளர ஆரம்பித்தது போலிருந்தது. நாக்கு வேறு வறண்டு வறண்டு போனது. பசி தன் ஆக்டோபஸ் கரங்களால் குடலை பிடித்து பிழிந்து கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்கூலை அடைந்து...தன்னுடைய வகுப்பை நெருங்கும்போதே பத்மா டீச்சர் பாடம் நடத்தும் சத்தம் கேட்டது.

கண்கள் இருட்டாக...நாக்கு வறண்டு நடை தளர்ந்து....வகுப்பின் வாயிலில் வந்து நின்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ ....மேம்" என்று சொல்ல வாயெடுத்தான்....வார்த்தை சிதறடித்து. 

எதோ சத்தம் கேட்டு பத்மா டீச்சர் திரும்பி பார்த்தார்கள். "ஏன்டா லேட்?"

"சா ...சாப்பிட வீ..வீட்டுக்கு போனேன் அதான் லே ...லேட்" வார்த்தைகள் பயத்திலும் பசியிலும் தந்தியடித்தன.

"ஹ்ம்ம்..போ...உள்ளபோய் உட்காரு"

ஜீவா பொய்  தன்னுடைய பெஞ்சில்  பொய் தொப்பென்று உட்காந்தான்.

"ஸ்டுடென்ட்ஸ்....லெட்ஸ் கன்டினியூ......பத்மா டீச்சர் பாடத்தை தொடர்ந்தார்கள் 

புத்தர் தன்னுடைய போதனைகளில் என்ன சொன்னார்?" ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்"   -  என்ன சொன்னார்?

ஸ்டுடென்ட்ஸ் கோரஸாக சத்தமிட்டார்கள் "ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்".

ஜீவா...மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

"புத்தர் ....கரெக்ட்டா தான்...சொல்லிருக்காரு!"



பின்குறிப்பு: இதுவரை அவர்கள் அந்த சோழியை உருட்டி எப்படி ஏமாத்தினார்கள் என்று ஜீவாவிற்கு புரியவில்லை. ஜீவா இன்றும் அதை யோசித்து விடை காண முயன்று கொண்டிருக்கிறான். 


இப்படிக்கு
"கொலை பசியுடன்" ரசிகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக