ரெஜினாவுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை....புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் அவளைவிட்டு எங்கையோ தூரமாக சென்றுகொண்டிருந்தது. மனதில் கேள்விகள் அலையாய் அடித்துக்கொண்டிருந்தது. நான் செய்தது சரிதானா? அவன் வாழ்க்கையில் நான் வந்தது சரிதானா? காதல் என்பது கடவுள்தானே? காதலை வேண்டாம் என்று சொல்வது கடவுளை வேண்டாம் என்று சொல்வது போலாகுமா? சிந்தனைகளினுடே மனமும் பின்னோக்கி போய்க்கொண்டிருந்தது. கண்களை வலுக்கட்டாயமாக மூடினாலும்...மனது எங்கையோ போய்க்கொண்டிருந்தது.
வாழ்க்கையில் இந்த காதல் என்பதை எல்லாரும் புரிஞ்சுக்கிறாங்க. ஆனா அதை சரியாக புரிஞ்சுக்கவில்லை என்பதுதான் உண்மை. நானும் அதுமாதிரிதான். பள்ளி கல்லூரி நாட்களில் சுட்டித்தனமாக சந்தோசமாகத்தான் இருந்தேன். இல்லை இல்லை...அப்படி இருக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டேன். என்னதான் அழகா இருந்தாலும் காதல் என்பது புரியாமலே இருந்ததால அந்த அழகு என்பது இரண்டாம் பட்சமாகவே என்னை தள்ளியது. எல்லோரும் ஒரு பாய் ப்ரெண்ட் உடன் சுத்தும்போதும் தனிமை மட்டுமே என்னை கொண்டாடிகொண்டிருந்தது. காரணம்.. காதலை பற்றி சரியாக புரிதல் இல்லாமல் நந்தவனத்தில் ஒரு ரோஜாவாக என்னால் இருக்க முடியவில்லை.
ஆனாலும் அவன் என்னை கொண்டாடினான். உலக அழகியே வந்தாலும் ரெஜினா தான் என்று எனக்காக காத்திருப்பான். ஹ்ம்ம் ..என்னோட ஜான்! எனக்கு காதல் பிடிக்கும் என்றாலும் அவன் காதலை என்னால் தீவிரமாக உணர முடியவில்லை. அனால் ஜான் என்னை நிறைய லவ் பண்ணான். உயிருக்கு உயிராக என்னை காதலித்தான். அவனை வாழ்கையில் இரண்டாவது முறையாக பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. கல்லூரியின் கடைசி வருடத்தில் எங்கிருந்து வந்தான் என்றே தெரியவில்லை. ஒரு மழை நாளின் மாலை பொழுதில் சற்றே பக்கத்தில் உரசுகிறமாதிரி பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வந்தான். மனதிற்குள்...யார் இவன் என்று நினைக்கும்முன்னே..
ஹாய்...நீ....ரெஜினாதானே?
............ ஆமா....நீங்க?
ஹேய் ரெஜினா ....நிஜமா என்ன தெரியல?
எங்கையோ பார்த்த மாதிரி ..இருக்கு.ஆனா..
கம் ஆன் யா........நான் தான் ஜான்....!! உன் கூட பத்தாம் கிளாஸ் வரை படிச்சேனே....! ஞாபகம் இல்லையா?
ரெஜினாவின் கண்களில் இப்போது சந்தோசம் தெரிந்தது...ஆனாலும் மனதிற்கும் எதோ இனம் புரியாத கலவரம்..
"சாரி...உங்கள எனக்கு தெரியாது"...ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தாள்.
வீட்டிற்கு வந்து கண்ணாடி முன் தலைதுவட்டும்போது..இதழோரம் சின்னதாக புன்னைகை ..பூத்தது. படுக்கையில் தொப்பென விழுந்தேன்..காதல் இது என்று புரியாத காலத்தில் எனக்கு காதலை சொன்னவன். எப்படி திடீர்னு வந்தான்? பத்தாம் வகுப்பு படிக்கிறப்போ டியூஷன் கிளாசில் வைத்து "ரெஜினா உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன்..ஆனா கடவுள் மேல சத்தியமா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுனு" சத்தியம் வாங்கிகொண்டு "உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன் ரெஜினா"னு என்கிட்ட முதன்முதலாக காதலை சொல்லி கொஞ்சம் வெட்கப்பட வைத்தவன். அப்போது எனக்கு சிரிப்புதான் வந்தது என்றாலும் முதன்முதலாக காதல் என்ற பூ பூக்க வைத்தவன். அவன் சொன்னதற்கு என்ன பதில் சொல்றது என்று தெரியாமல் என்னை திணறடித்தவன். இருந்தாலும் பள்ளி நாட்கள் முடியும்வரை மனதினுள் எதோ ஒரு இனம்புரியாத சந்தோசத்தை குடுத்தவன். படிப்பு முடிந்து அவன் வேறு கல்லூரிக்கு சென்றுவிட்டான். பார்த்து பல வருடங்கள் ஆனாலும் முதல் காதல் மனதின் ஓரத்தில் எங்கேயோ மின்மினி பூச்சி போல ஒளிந்துகொண்டுதான் இருந்தது. இனி பார்க்கவே மாட்டோம் என்று நினைத்தவன் மீண்டும் வந்து புன்னகை பூக்கவைக்கிறான்.
ஞாயிற்றுகிழமை சர்ச்க்கு போகும்போது மீண்டும் அவனை பார்க்க மாட்டோமா என்று மனம் ஏங்கியது. தூரத்தில் சர்ச்க்கு பக்கத்தில் அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் பார்வையில் ஒரு தேடல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. என்னை பார்த்ததும் நண்பர்களை பிரிந்தது என்னிடம் வந்து..
"ரெஜினா ...ஸ்தோத்திரம்"
"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" இது நான்.
"ரெஜினா....உனக்கு என்னை மறக்க முடியாது. என்னை உனக்கு தெரியாது என்று ஏன் சொல்கிறாய் என்று தான் புரியவில்லை".."கடவுள் மேல் சத்தியமாக...உன்னை இப்போதும் நான் மனதார காதலிக்கிறேன் ரெஜினா.."
மனதிற்குள் மீண்டும் வானவில் வர்ண கோலம் போட்டது..."நானும் உன்னை காதலிக்கிறேன்...நீ அன்று சொன்ன காதல் எனக்குள் பத்திரமாக இருக்கிறது என்று சொல்லத்தான் மனசு துடித்தது". ஆனாலும் எதோ என்று என்னை தடுத்துக்கொண்டே இருந்தது. பதில் ஏதும் சொல்லாமலே சர்ச்சுக்குள் சென்று விட்டேன்.
"நீரே எனது வழி...நீரே எனது வாழ்வு'
கோரஸ் பாடும்போதும் கண்கள் என்னை அறியாமல் அவனை தேடியது. ஆனாலும் வெட்கம் ஒரு பக்கமும், இனம் புரியாத ஒரு குழப்பம் ஒரு பக்கமுமாக அவன் பார்வையை தவிர்த்துக்கொண்டு தவித்துகொண்டிருந்தேன். சர்ச் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும்..அவன் நினைப்பை தவிர்க்க முடியவில்லை. இந்த தனிமை இரவில் நான் மட்டும் தூங்க முடியாமல் புரண்டுகொண்டிருக்கிறேன். நான் அவன்கிட்ட பேசியிருக்க கூடாது. என் மனது இப்படி அலைபாய விட்டிருக்க கூடாது. வாழ்க்கையின் வலிகளை தாங்கி இனி கடவுள் தான் எல்லாமே என்று "கன்னியாஸ்திரியாக" போக நினைகிறவள் நான். என் வாழ்க்கை என்பது கடவுளுக்காக அற்பணிக்கப்பட்டது. இதை எல்லாம் மனசுக்குள் போட்டு குழப்புவதே பாவம் என்று கண்களை மூடுகிறேன். இதோ மீண்டும் ஜானின் முகம்...!
ஒரு மெழுகுவர்த்தி ஏத்திவைத்து....கடவுளின் முன்பாக முழம்தாளிட்டு கண்ணீர் மல்க கை கூப்பி நிக்கிறேன்.
"அன்பான என் கடவுளே...ஜான் என்னை காதலிக்கிறான்..என்னையே நேசிக்கிறான்...சுவாசிக்கிறான். அனால் என்னால் அவன்கிட்ட எதுவுமே சொல்ல முடியவில்லை. ஒரு சாதாரண கடவுள் பிள்ளையாக என் ஆசைகளுக்கும் அணை போட தெரியவில்லை. அவன் காதலை நான் ஏற்க்காதபோது..அவன் மனது எவ்வளவு வலிச்சிருக்கும் என்று புரியுது கடவுளே. அடுத்தவங்களை காய படுத்துறது கூட ஒரு பாவம். என்னுடைய இந்த பாவத்தை மன்னிதருள்வீராக. நாளைக்கு நான் எடுக்க போகும் முடிவுக்கு என் ஆண்டவரே என்னுடன் துணை நிற்பீராக!...நான் எப்போதும் கடவுள் பிள்ளையாக உமக்கு ஊழியம் செய்பவளாக என்னை ஆசீர்வதித்தருளும்...ஆமென்!"
அடுத்த நாள் எப்படியும் ஜான் சர்ச் பக்கத்தில் நிற்பான் என்று நினைத்து போனது வீண் போகவில்லை. மழை லேசாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. காருக்குள் அவன் உட்காந்து இருந்ததை பார்த்து நேராக அவனிடம் சென்றேன். என்னை பார்த்ததும் காரின் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு சிநேகமாக புன்னகைத்தான். இப்போதும் அவன் புன்னகையில் என் காதல் கட்டுக்களை அவிழ்த்து வெளிவந்துவிடுமோ என்று அவன கண்களை பார்ப்பதை தவிர்த்தேன்.
"ஹேய்...ரெஜினா மழையில நனையாதே...காருக்கு உள்ள வா.." பரிவுடன் சொன்னான்.
"தேங்க்ஸ்" என்று சொல்லிக்கொண்டு காருக்குள் நுழைந்ததும் அவன் காருக்கு வெளிய நின்றுகொண்டான்.
"ஜான்....நீ ஏன் வெளியில நிற்க்கிறே? உள்ள வா ஜான்..."
"இல்ல ரெஜினா பரவால்ல....நான் இங்க நின்னுகிறேன்..."
"ஜான் ...உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வா..."
ஜான் ஆச்சரியமாக நம்ப முடியாமல் என்னை பார்த்தான்...
"ஹேய்...நிஜமாவா? உனக்கு என்னை தெரியுமா?"
"ஜான் ப்ளீஸ்....உள்ள வான்னு சொல்றேன்ல...என் பக்கத்துல வந்து உட்காரு"
ஜான் என்ன நடக்கிறது என்று ஆச்சர்யம் கலந்த முகத்துடன் ரெஜினா பக்கத்தில் வந்து உட்காந்தான். இருவருமே மழையில் கொஞ்சம் நனைந்திருந்தார்கள். சில நிமிடங்கள் மௌனமாகவே கழிந்தது.
"ஜான் ..உன் கைய கொஞ்சம் புடிச்சுக்கலாமா"
ஜான் இன்னும் ஆச்சர்யத்துடன் "ஹ்ம்ம் ரெஜினா"
ரெஜினா மெதுவாக அவன் வலது கையையை தன் விரல்களுடன் கோர்த்துகொண்டாள்.
"இங்க பாரு ஜான்....என் கண்களை பாரு.....நான் உன்னை தெரியாதுன்னு சொல்ல வேண்டிய ஒரு நிலமையில இருந்தேன் அன்னைக்கு...இப்போதும் அப்படி தான் ஜான். ஆனா எனக்கு தெரியும் என் ஜான் என்னை எவளவு லவ் பண்றான் என்று. நீ முதன்முதலாக சொன்ன ஐ லவ் யு..இன்னும் எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை குடுத்துக்கிட்டுத்தான் இருக்கு ஜான். ஆனால் ஜான் என்னால எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. காலம் என்னை ரொம்பவே மாதிடிச்சு ஜான்...நான் கடவுளின் பிள்ளையாக அவருக்கு ஊழியம் செய்பவளாக மட்டுமே இருக்க நினைக்கிறேன். சரி இப்போ கேட்கிறேன்..கடவுள் மேல சத்தியமாக சொல்லு...நான் என்ன சொன்னாலும் செய்வியா ஜான்?"
என்ன என்பது போல ரெஜினாவை ஏறெடுத்து பார்த்தான் ஜான்
"சொல்லு ஜான் கடவுள் மேல் சத்தியமாக ...நான் சொல்வதை செய்வியா?
"சொல்லு என்ன பண்ணனும்? சந்தோசமாக பண்றேன் ரெஜினா..."
"என்னை மறந்துடு ஜான்"!!!!
ஒரு கணம் கூட யோசிக்காமல் அவனிடமிருந்து அந்த பதில் வந்தது..
"சரி....ரெஜினா...மறந்துடுறேன்...!!"
ரெஜினாவுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் அதே நேரம் கொஞ்சம் ஏமாற்றமுமாக இருந்தது.
"ஜான் ...!!"
"கேட்கிறது என்னோட ரெஜினா...அதுவும் கடவுள் மேல சத்தியம் பண்ண சொல்லி கேட்கிற..எனக்கு கடவுளும் காதலும் ஒன்னு தான் ரெஜினா..."
"தேங்கியு...ஜீசஸ்....தேங்கியு ஜான்...இப்போ தான் என் மனசு லேசான மாதிரி இருக்கு....என்னை மன்னித்துவிடு ஜான்" என்று சொல்லிக்கொண்டு காரிலிருந்து இறங்கி சென்றுவிட்டாள்!
ஜான் காரிலிருந்து இறங்கி....அவள் கொஞ்சம் கொஞ்சமாக நிழல்போல் அவன் வாழ்க்கையிலிருந்து அவள் கரைவதை பார்த்துகொண்டிருந்தான்...
ரெஜினா...நான் சத்தியம் பண்ணதும் உன்னை மறக்கிறேன் என்று சொன்னதும் கடவுள் மேல உள்ள பயத்திலோ, அன்பிலோ இல்லை..ரெஜினா மேல இருக்கிற காதலில பண்ணது... உன்மேல இருக்கிற பாசத்தில பண்ணது..உனக்காக நான் விட்டுக்குடுக்கலேன்னா...என் காதல் போலிஆகிடும். நான் உன்னை நேசிக்கிறது பொய்யாகிடும். உன் சந்தோசத்தை மட்டுமே நான் எதிர் பார்க்கிறேன் ரெஜினா. நீ கடவுள் பிள்ளையாக மாறலாம். அவருக்கு ஊழியம் செய்பவளாக இந்த உலகம் உன்னை மாற்றலாம். உனக்கு கூட என் காதல் புரியாமல் போகலாம். அனால் என் ரெஜினாவின் நினைவுகள் அழகானது. ரெஜினாவின் காதல் இந்த ஜான் மனசுல எப்போதோ விதையாக விழுந்தது. நீ என் காதலை வேண்டாம் என்று சொல்லிவிடலாம். அனால் கடவுளின் பிள்ளையை காதலித்துக்கொண்டு தான் இருப்பேன்.
மழை.....அடைமழையாக பிறவி எடுத்தது....ஜானின் கண்ணீர் துளிகளை கழுவிகொண்டிருந்தது.
இப்படிக்கு
ரெ.ஜி.னா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக