திங்கள், டிசம்பர் 15, 2014

லிங்கா (2014)





ஒரு தரமான மசாலா எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினியையே உதாரணமாக வைத்துக்கொண்டு யோசித்தால், சமீபகாலத்தில் படையப்பாவைச் சொல்லலாம். அதற்கு முன்னர் பாட்ஷாவும் முத்துவும். இன்னும் பின்னால் போய் யோசித்தால் அண்ணாமலை, மன்னன், தளபதி, மாப்பிள்ளை, குரு சிஷ்யன், வேலைக்காரன், மிஸ்டர் பாரத், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நல்லவனுக்கு நல்லவன், தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நெற்றிக்கண், முரட்டுக்காளை என்று ஒரு பட்டியல் போடமுடியும். முரட்டுக்காளைக்கு முன்னரும் ரஜினிக்குத் தில்லுமுல்லு போன்ற நல்ல மசாலாக்கள் இருக்கின்றன என்றாலும், எண்பதுகள் துவங்கியதிலிருந்தே பட்டியல் போடலாம். இவற்றைப்போல் ‘தரமான’ என்ற அடைமொழியைச் சேர்க்காமல், ’ரஜினி படம்’ என்று யோசித்தால் கோச்சடையான், சிவாஜி, சந்திரமுகி, அருணாச்சலம், வீரா, உழைப்பாளி, தர்மதுரை, பணக்காரன், ராஜாதி ராஜா, சிவா, கொடி பறக்குது, மனிதன், மாவீரன், விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், கை கொடுக்கும் கை, நான் மகான் அல்ல, தங்கமகன், தாய்வீடு, அடுத்த வாரிசு, பாயும் புலி, புதுக்கவிதை, ரங்கா, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ராணுவவீரன், கழுகு, தீ ஆகியவைகளை அதே காலகட்டத்தில் சொல்லலாம். இந்த இரண்டு வகைகளிலும் இல்லாமல், மோசமான ரஜினி படம் என்றால் எந்திரன், குசேலன், பாபா, வள்ளி, எஜமான், பாண்டியன், நாட்டுக்கு ஒரு நல்லவன், அதிசய பிறவி, ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், கர்ஜனை என்று இன்னொரு பட்டியலும் போடலாம் (இவற்றில் ஸ்ரீராகவேந்திரர், நான் அடிமை இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், ரஜினி நடித்த ஹிந்திப்படங்கள் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. அவை வேறு வகை என்பதால்).

இதுதான் ரஜினி படங்களைப் பற்றிய என் பட்டியல்கள். இவற்றில் லிங்கா, அவசியம் மோசமான ரஜினி படம் என்ற வகையிலேயே சேரும். என்ன காரணம் என்பது படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிதிலேயே தெரிந்திருக்கும். ரஜினியின் படங்களில் ரஜினி மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் மேலே இருக்கும் மோசமான ரஜினி படங்களின் பட்டியலில் தெரியும் விஷயம். அதுவேதான் லிங்காவிலும் நடந்திருக்கிறது. ரஜினியைக் குறுக்கும் நெடுக்கும் நடக்கவைத்து, முத்து, படையப்பா ஆகிய கே.எஸ். ரவிகுமார் படங்களில் வரும் ‘தியாகி’ ரஜினி எபிஸோட்களை அப்படியே எடுத்து இதிலும் வைத்து, புதிதாக எதையும் சேர்க்காமல் படம் பார்க்க வரும் ரசிகர்கள் இதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்து எடுக்கப்பட்ட படம்தான் லிங்கா. அதுதான் படத்தின் பிரச்னை. படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு ரஜினி படத்தில் இருந்து சோர்ந்த முகத்துடன் வெளியேறியதை நான் கடைசியாகப் பார்த்தது குசேலனிலும் பாபாவிலுமே. அது அப்படியே இங்கும் நடந்தேறியது.

முதலில், இப்போதைய தமிழ்ப்படங்கள் இந்த ரஜினி ஃபார்முலாவில் இருந்து விலகி வேறு இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இன்னும் கே.எஸ். ரவிகுமாரும் ரஜினியும் உணரவே ஆரம்பிக்கவில்லை என்பது லிங்காவின் பல காட்சிகளில் தெரிகிறது. முத்து மற்றும் படையப்பாவில் இதன் காட்சிகளை ஏற்கெனவே பார்த்தாயிற்றே? மறுபடியும் ஏன் இப்போது அவற்றையே பார்க்கவேண்டும்? ரஜினியின் முகம் திரையில் தெரிந்ததுமே ‘தலைவா!!’ என்று அலறும் ரசிகன் கூட உள்ளூற இதை உணர்ந்திருப்பான். ஆனால் வெளியே, ‘லிங்கா செம்ம படம்’ என்று சொல்லக்கூடிய தர்மசங்கடமான நிர்ப்பந்தத்தை அவனுக்கு ரவிகுமாரும் ரஜினியும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, ரஜினியின் ஓப்பனிங் பாடல் மட்டுமே படத்தின் ஆரம்ப நிமிடங்களைக் காப்பாற்றிவிடும் என்று ரவிகுமார் நினைத்தது இப்போதைய தமிழ்ப்படங்களைப் பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது என்பதை நிரூபிக்கிறது. படையப்பாவின் ஓப்பனிங் எப்படி இருந்தது? அந்த ஓப்பனிங் இப்போது லிங்காவில் வந்தால்கூட இப்போதைய படங்களின் வேகத்துக்குப் போதவே போதாது. இது அந்தக் காலகட்டம் அல்ல. ரஜினியாக இருந்தாலும் அமிதாப்பாக இருந்தாலும்- ஏன் – எம்.ஜி.ஆராகவே இருந்தாலும்கூட, படத்தின் துவக்கத்திலேயே கதை துவங்கிவிடும் காலம் இது. இப்போதெல்லாம் ஓப்பனிங் சாங், அதன்பின்னர் கதாநாயகன் நான்கு காமெடியன்களுடன் சுற்றுவது, கதாநாயகி நாயகன் பின்னால் சுற்றுவது போன்ற காட்சிகள் காலாவதி ஆகிவிட்டன. கடைசியாக இப்படிப்பட்ட காட்சிகளை ‘பாபா’வில்தான் பார்த்தேன். அந்தக் காலகட்டத்திலும் அவை காலாவதி ஆன காட்சிகளே. எண்பதுகளில் வெளிவந்த படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கலாம். இத்துடன் சேர்ந்து, நகைக்கடையில் ரஜினி & கோ அரங்கேற்றும் கொள்ளை எப்படி இருக்கிறது? துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாத இப்படிப்பட்ட காட்சிகளை எப்படி ரஜினிக்கு வைக்க ரவிகுமாரால் முடிந்தது? மனசாட்சியே இல்லாமல் யோசித்தால் மட்டுமே இந்தக் காட்சிகளை 2014ன் இறுதியில் ஒரு தமிழ்ப்படத்தில் வைக்கமுடியும். ’கதை விவாதம்’ என்று தோராயமாக பத்து பேர் அடங்கிய பட்டியல் (ரமேஷ் கன்னா உட்பட) படம் முடிந்ததும் ஓடுகிறது. பத்து பேர் அடங்கிய இந்தக் குழுவால் இவ்வளவுதான் கதையை உருவாக்க முடிந்ததா?

இதன்பின்னர் நாயகியின் ஊருக்கு ரஜினி செல்வது, அங்கே ஃப்ளாஷ்பேக் துவங்குவது, படத்தின் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்கும் ஃப்ளாஷ்பேக் போன்றவையெல்லாம் ‘கத்தி’ படத்திலேயே பார்த்தாகிவிட்டது. உண்மையைச் சொன்னால், எனக்குக் கத்தி பிடித்திருந்தது. அதன் முதல் 40 நிமிடங்கள் திரையரங்கில் அமரவே முடியாமல் லிங்காவைப்போல்தான் இருந்தன. ஆனால் உணர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக், அது முடிந்ததும் வரும் வேகமான காட்சிகள் ஆகியவையால் கத்தி அலுக்காமல் சென்றது. லிங்காவில் ஃப்ளாஷ்பேக்கில் இருந்து ரஜினி நம்பவே முடியாமல் மலையில் இருந்து பலூனில் பாயும் க்ளைமேக்ஸ் வரை படத்தில் ஒன்றவே முடியாமல் எத்தனை மெதுவாகச் சென்றது என்பதும் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். மூன்று மணி நேரம் ஓடும் லிங்காவில் நல்ல காட்சிகள் என்று எதுவுமே இல்லை. ரஜினிக்காகப் பார்க்கலாம் என்று தோன்றியது ஃப்ளாஷ்பேக்கிலும் ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே. ஃப்ளாஷ்பேக் முடிந்ததுமே வரும் அத்தனையும் மிக மோசமான காட்சிகள். மலையில் இருந்து பலூனில் குதிப்பதெல்லாம் இக்காலத்தில் யார் செய்தாலும் சிரிப்புதான் வரும். மிக விரைவில் இந்தக் காட்சி இணையத்தில் நகைச்சுவை செய்யப்பட பல வாய்ப்புகள் உண்டு. ரஜினியைப் பற்றிய துணுக்குகளுக்கெல்லாம் இந்த வீடியோதான் சிகரம் வைத்ததைப் போல் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட பாலகிருஷ்ணா ரயிலை ஒரே ஒரு விரலசைப்பால் திருப்பி அனுப்புவதைப் போன்ற காட்சி இது. குருவியில் விஜய் குதித்ததுகூட இதன் பக்கத்தில் வரமுடியாது.

ரஜினியின் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, ரஜினி வந்தால் மட்டும் போதும் என்ற கருத்தில் எடுக்கப்படிருக்கும் லிங்காதான் இதுவரை ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே இப்படி மூன்று மணி நேரத்தில் பெருமளவு அலுப்பாகவே நகர்ந்த படம். இதற்குச் சரியான இணை என்றால் நாட்டுக்கு ஒரு நல்லவன் படம்தான். அந்தப் படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்த ரஜினி படம். ஒரு நிமிடம் கூட உங்களால் அப்படத்தைப் பார்க்கமுடியாது. இத்தனைக்கும் ரஜினி பீக்கில் இருந்தபோது வந்த படம் அது.

லிங்காவின் பிற பாத்திரங்கள், நடிப்பு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் அலுப்பையே கொடுத்தன. ரஹ்மானின் மிக மோசமான படம் இது. கூடவே விஜயகுமார், ராதாரவி, ஆர். சுந்தர்ராஜன் போன்ற ரஜினியின் சம வயதுடையவர்கள் ரஜினியைச் சூழ்ந்துகொண்டு எதுவோ முதியோர் பள்ளிக்கூடம் போன்ற உணர்வையும் அளித்தனர். விஜயகுமாருக்கு சரியான விக் வேறு கொடுக்கப்படவில்லை.

லிங்காவின் அடுத்த பிரச்னை – அடிக்கடி படத்தில் வரும் அரசியல் வசனங்கள். இனியும் மக்களை இப்படிப்பட்ட வசனங்களால் ஏமாற்ற முடியாது என்றே தோன்றியது. இன்னும் எத்தனைகாலம்தான் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிப் பிற கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்? இவற்றையெல்லாம் ரஜினி தொடர்ந்து அனுமதிப்பதன்மூலம், அவருக்குமே இந்த வசனங்களில் ஆசை உண்டு என்றே முடிவுசெய்யவேண்டியிருக்கிறது. அதிலும் அனுஷ்கா பேசும் ‘உன் கை, காலு, தலை, இதயம், லிவர், கிட்னி, காது, மூக்கு பூரா மூளைய்யா..நீ எங்கயோ…பார்லிமெண்ட் வரை போகப்போற பாரேன்’ வசனம் கேட்டதும் எரிச்சலே மேலிட்டது.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், படம் பார்க்க வந்தது பெரும்பாலும் முப்பது வயதைத் தாண்டியவர்கள். பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் ரசிகர்களாக இருந்து, இப்போதும் ஒரு நல்ல ரஜினி படம் வராதா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள். ரஜினிக்கு அப்போதைய fan base இன்னும் அப்படியே இருக்கிறது. அவர்கள் இடைவேளையிலும் படம் முடிவிலும் மனம் வெறுத்துப் பேசியதை என்னால் கேட்க முடிந்தது. அவர்களின் பார்வையில் இன்னும் ரஜினியால் ஒரு பாட்ஷாவையோ படையப்பாவையோ முத்துவையோ கொடுக்க முடியும். அவர்களின் இந்த நம்பிக்கை – அவர்களின் ஆதர்சமான ரஜினி என்ற ஹீரோவின் திரைவாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டும் இன்னும் நம்பிக்கையாகவே அவர்கள் பேசியதுதான் ஆச்சரியம். வேறு எந்த ஹீரோவுக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கையுடைய ரசிகர்கள் தமிழில் இல்லை.

என் கருத்தில், இனிமேல் இப்படி ஒரு படம் ரஜினியை வைத்து வந்தால், ரஜினி இதுவரை சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் உடைந்து சிதறுவதை அவர் காண நேரிடலாம். இப்படத்தின் மூலமே அவர்களில் பலர் மனம் வெறுத்துவிட்டனர். ரஜினியின் திரைவாழ்க்கைக்குக் கே.எஸ். ரவிகுமார் செய்த மிகப்பெரிய இன்சல்ட் லிங்காதான். இப்படிப்பட்ட கதையைக் கேட்டு சம்மதிக்க எப்படி ரஜினியால் முடிந்தது என்பதும் ஆச்சரியம். எத்தனைதான் மேக்கப் செய்தாலும் ரஜினியின் முதுமை மிகவும் வெளிப்படையாக இப்படத்தில் தெரிகிறது. அவரால் நடனம் ஆட முடியவில்லை. வேகமான ரஜினி மூவ்மெண்ட்கள் எதுவும் பழையபடி இல்லை. அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியில்லைதானே? அறுபத்தைந்து வயது நிரம்பிய ரஜினியால் எப்படி இருபது வருடங்கள் முன்னர் அவர் செய்ததையெல்லாம் திரும்பி அதே வேகத்தில் செய்ய இயலும்?

ரஜினி இனி திரைப்படங்களில் நடிக்கையில், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தாலே அவசியம் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். அமிதாப் ஹிந்தியில் ரஜினியை விடவும் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். ரஜினியின் பல படங்கள், அமிதாப்பின் ரீமேக்குகளே. அப்படிப்பட்ட அமிதாப் தனது 65வது வயதில் என்ன செய்தார் என்று பார்த்தால், சீனி கம் படத்தில் அவரது திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படம் ஒன்றைக் கொடுத்தார். அதே சமயத்தில்தான் நிஷப்த் வெளியானது. சர்க்கார் வெளியானதும் அப்போதுதான். பண்ட்டி ஔர் பப்லி படத்தில் கலக்கலான போலீஸ்காரராக அமிதாப் நடித்தது அப்போதுதான். ப்ளாக் படத்தில் ராணி முகர்ஜியுடன் சேர்ந்து அட்டகாசமாக நடித்தது அச்சமயத்தில்தான். The Last Lear படம் அப்போதுதான் வந்தது. இந்தப் படம் அமிதாப்பின் சிறந்த படங்களில் ஒன்று என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். இத்தனை படங்களில் இத்தனை வித்தியாசமான பாத்திரங்களில் அமிதாப் நடித்தது அவரது அறுபதுகளில்தான். கடைசியாகத் தனது பழைய ஹீரோ கெட்டப்பில் அமிதாப் நடித்தது ’சூர்யவன்ஷம்’ படத்தில். வெளிவந்த ஆண்டு 1999. அது அவரது ஐம்பத்தேழாவது வயது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எண்பதுகளின் இந்திய சூப்பர்ஸ்டாரான அமிதாப்பின் கடைசி ஹிட் படம் 1990ல் வெளிவந்த அக்னீபத் தான். அதன்பின்னர் 1999 வரை அவருக்கு ஹிட்கள் இல்லை. 1990ல் இருந்து 1999 வரை அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எடுபடவே இல்லை. 1991ன் ஹம் படமும் 1998ன் படே மியா ச்சோட்டே மியா படமும் ஓரளவே ஓடின. உண்மையைப் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டே ‘மொஹப்பதேய்ன்’ படம் ஷா ருக் கானுடன் இணைந்து நடித்தார். மொஹப்பதேய்னில் இருந்து அமிதாப் திரும்பியே பார்க்கவில்லை. இப்போதும் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதுதான் படையப்பா முடிந்ததுமே ரஜினிக்கும் நடந்திருக்கவேண்டும். அப்படி மட்டும் நடந்திருந்தால் தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் இன்றைய தேதியில் மாறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அப்படி நடக்காமல் போனதால் இன்று லிங்கா வெளிவந்து, ரஜினியின் திரைவாழ்க்கையின் அபத்தமான படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இப்போதாவது ரஜினி உண்மையை உணர்ந்து, துணிச்சலாக ஒரு நல்ல திரைக்கதையைத் தேடியெடுத்துத் தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை வெளிப்படையாக நடித்தால் அவசியம் மக்கள் அவரை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உலகம் முழுக்க உள்ள நடிகர்களில் எல்லாருக்குமே அதுதான் நடந்திருக்கிறது. ஒன்று – திரைவாழ்க்கையின் உச்சத்தில் தனது நடிப்பை நிறுத்திக்கொண்டனர். அல்லது அபத்தமான, வயதுக்கு மீறீய பாத்திரங்களில் நடித்துத் தங்களது மரியாதையைட் தாங்களே கெடுத்துக்கொண்டு, பின்னர் உண்மையைப் புரிந்து வயதுக்கு ஏற்ற பாத்திரங்களை நடித்தனர். ஜாக் நிகல்ஸனில் இருந்து க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஷான் கான்னரி இன்னொரு உதாரணம். மைக்கேல் டக்ளஸ், கெவின் காஸ்ட்னர், தமிழில் சிவாஜி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் என்.டி.ஆர் ஆகியோரும் உதாரணங்கள்.

இனி ரஜினிதான் முடிவுசெய்யவேண்டும். ரேஸில் பங்கேற்காமலேயே நம்பர் ஒன் என்ற அவரது இடம் இப்போது இல்லை. அந்த இடத்தில் (என்னதான் நடுநிலையாக யோசித்தாலும்) தமிழில் விஜய்தான் இருக்கிறார். விரைவில் நல்ல படங்கள் நடித்தால் தொடர்ந்து அவர் அங்கே இருக்கமுடியும் என்பது என் கணிப்பு. எனக்கு ஒரு நடிகராக விஜய்யைப் பிடிக்காது. ஆனால் காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை ஒருகாலத்தில் நடித்துவிட்டு இப்போதெல்லாம் அபத்தமான படங்களையே தொடர்ந்து நடிக்கும் அஜீத்தின் மர்மமும் புரியவில்லை. ரஜினியின் போட்டியாளராக ஒரு காலத்தில் இருந்த கமல்ஹாஸன் கடந்த சில வருடங்களாக இப்போது ரஜினி செய்துவரும் அபத்தத்தைச் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடுத்தர வயது ஹீரோவாகத்தான் கமல் நடித்து வருகிறார். ஓரளவு வயதுக்கு ஏற்ற பாத்திரங்கள்தான் செய்கிறார். ரஜினி செய்வதைப்போல் கடைசியாகக் கமல் செய்தது (இளைஞராக நடித்து இளம் ஹீரோயின்களுடன் ஆடியது) தெனாலியில்தான். (2000ல் வந்தது). அதன்பின்னர் ஆளவந்தான், பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு, விஸ்வரூபம், இப்போதைய உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படம் வரை வித்தியாசமான கதையம்சம் மற்றும் நடிப்பால் தனது படங்களை டிபிகல் மசாலாவாக இல்லாமல் கொஞ்சமேனும் வேறுபாடுகளை உள்ளே வைத்து, அவரது வயதுக்கு ஒத்த நாயகிகளுடனேயேதான் நடிக்கிறார். கமல் இந்த விஷயத்தை எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது (அஸினுடன் கமல் ஆடவில்லையா? ஆடவில்லை. கதாநாயகியாக அஸினை நடிக்கவைத்தாலும், ஜெயப்ரதாவுடன்தான் ஆடினார்).

எனவே, என் பள்ளி நாட்களில் நான் பார்த்து ரசித்த, தங்களது திரைவாழ்க்கையின் உச்சங்களை அச்சமயங்களில் அடைந்த ரஜினி & கமல் ஆகியவர்களில் ஒரு டிபிகல் தமிழ் சூப்பர்ஹீரோவாக ரஜினியின் திரைவாழ்க்கை அரைகுறையாக எடுக்கப்பட்ட லிங்காவுடன் முடிந்துவிட்டது என்பது என் கருத்து. இனி ரஜினி தனது இயல்பான வயதில் அந்த வயதுக்கேற்ற பாத்திரங்களைச் செய்தால் இன்னும் குறைந்த பட்சம் 15 வருடங்கள் தமிழில் சிறந்த நடிகராக வலம் வரமுடியும். மீறி மறுபடியும் லிங்கா போன்ற படங்களைக் கொடுத்தால், ஏற்கெனவே சிதற ஆரம்பித்துவிட்ட ரஜினியின் விசுவாசமான ரசிகர் கூட்டம் முற்றிலுமாக உடைந்து சிதறுவதை அவரே பார்க்க நேரிடும் என்று தோன்றுகிறது.

இப்படிக்கு 
ரசிகன் 

வெள்ளி, அக்டோபர் 03, 2014

முக்கிய அறிவிப்பு (Important Announcement)




எல்லோருக்கும் வணக்கம் !

இதுவரை என்னுடைய இந்த சில்லுனு ஒரு மழை வலைப்பூவை படித்து ஈமெயில் வழியாக பின்னூட்டம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!

இதுவரை எதோ விளையாட்டாக எழுதினாலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத சில்லுனு ஒரு மழை போன்ற சில சம்பவங்களும் இங்கே எழுதிவிட்டேன். யாருடைய மனமும் புண்படும் படியாக நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

இன்னும் சில நாட்களில் இந்த வலைப்பூ வேறொரு தளத்திருக்கு (Wordspress) மாற்றலாம் என்று நினைத்திருக்கேன். புதிய வலைப்பூ பெயரில் புதிய முகவரியுடன் நான் உங்களை மீண்டும் என்னுடைய நிஜ வாழ்க்கையின் சம்பவங்கள் வழியாக உங்களை மீண்டும் சந்திக்கிறேன். புதிய வலைப்பூவின் முகவரி உங்கள் அனைவருக்கும் தனித்தனி ஈமெயில் வழியாக அனுப்புகிறேன். எப்போதும் போல் உங்களின் ஆதரவை நாடும்....

உங்கள்
ரசிகன் 

புதன், செப்டம்பர் 24, 2014

ஏதோ எழுதணும்னு தோணுச்சு...





எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது.....ஏதோ தோணவில்லை..”ங்கொய்யால எங்கயா போயிட்ட” என்று நண்பர்ர்ர்ர்  ஒருவர் உரிமையாக கடிந்து கொண்டபோது கூட வராத அழுகை(அதாண்ணே..இந்த ஆனந்த கண்ணீருன்னு சொல்லுவாயிங்கல்ல..), இன்று “சில்லுனு ஒரு மழை” வெப்சைட்டை ஓபன் செய்தபோது, “ஹிட் கவுண்டரில்” 5 பேர் இன்று சைட்டுக்கு வந்ததாக காட்டியபோது வந்தது..

“ங்கொய்யால, என்னமா பீல் பண்ணுறாய்ங்கடா” ன்னு என்னை நானே சொல்லிகொண்டேன்..

வாரத்திற்கு ஏழுபதிவு, அப்புறம் வாரத்திற்கு மூன்று பதிவு, அப்புறம் மாசத்துக்கு மூணு, அப்புறம் மூணு மாசத்துக்கு ஒன்னு என்று ஆறு மாசத்துக்கு ஒன்றானது..எழுத ஒன்றுமேயில்லை என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்..”அம்புட்டு வேலையா” என்றால், ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. சோம்பேறித்தனம்தான்..

நமக்கு இருக்குற ஒரே “தெறமை”(ஹி..ஹி) எழுதுறதுதான் நினைச்சுக்கிட்டு இருந்த காலமெல்லாம் போய், இருக்குற ஒரே “தெறமை” தூங்குறதுதான்ன்னு ஆயிடுமோன்னு பயம் வந்தது..உடனே லேப்டாப்பை எடுத்துட்டேன்..

ஒவ்வொருநாளும், எழுதுவதற்கு என் கை கஞ்சா அடித்தது போல பலமுறை துடித்திருக்கிறது..முக்கியமாக,

“அது எங்கயோ தூத்துக்குடி பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ கிடக்கும்” கணக்காய், மலேசியன் விமானத்தைப் பற்றி அதிகாரிகள் சொல்லியபோது..

“அதுக்கு நாங்க என்னங்க செய்ய முடியும்..இடி, இடிச்சா அதுக்கு நாங்க பொறுப்பா” என்று பயங்கர “பொறுப்பாக” மவுலிவாக்கம் அபார்ட்மெண்ட் விஷயமாக தகவல் வந்தபோது

“அய்யயோ, தெரியாம சுட்டுட்டோம்யா, ஏவுகணைதான் வருதுன்னு தெரியுதுல்ல, கொஞ்சம் தள்ளி போயிருக்கலாம்ல” கணக்காய் விபத்தான மலேசியன் ஏர்லைன்ஸ் பற்றி அசால்டு தகவல் வரும்போதும்

“பெட்ரோல் விலையெல்லாம் ஏத்திட்டாய்ங்க பார்த்தீங்கல்ல” என்றபோது, ஒருத்தன் “இதுக்குதான் சார், மோடி சர்க்கார் வரணும்”கிறான்..#அடேய்# என்ற டிவிட் படித்தபோதும்

“37 சீட்டில் ஜெயித்து, “அம்மான்னா சும்மா இல்லடா” என்று தமிழகம் மிரட்டியபோதும்
“தமிழ்நாட்டில் இனி மின்வெட்டு இருக்காது” என்ற தினத்தந்தி செய்தியை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தபோதும்..

“அட..அட..அட..திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணின்னா சும்மாவா” என்ற சரத்குமாரின் விளம்பரத்தை, பிரட் ஜாம் சாப்பிட்டு கொண்டே டி.வியில் பார்த்தபோதும்

“ங்கொய்யால, ஜெர்மனி என்னமா விளையாடுறான் பாருய்யா..ஆமா, இந்தியா பிரேசில் கூட எத்தனை கோல் அடிச்சாய்ங்க” என்று கேட்டு எதிரில் இருப்பவரை கொலைவெறி ஆக்கியபோதும்

பெட்ரோல் போடமறந்து, வண்டியை தள்ளிகொண்டுவரும்போது, “சென்னை ஸ்கோர் தெரியுமா சார்..என்னா சார் விளையாடுறாய்ங்க” என்று அலுத்து கொண்டவரை கெட்ட், கெட்ட வார்த்தையில் திட்டியபோதும்,

மிருககாட்சியில் “யோவ்..என்னய விட்டுறுங்கய்யா” என்று மைண்ட்வாய்ஸோடு, இன்றோ நாளையோ என்று கதறி கொண்டிருக்கும் சிங்கத்தை பார்த்து, “ஏ..லையன்..வாட் வாட் எ அனிமல்” என்று பக்கத்தில் இருப்பவர் புளகாங்கிதம் அடைந்தபோதும்..

மிருககாட்சிபூங்காவில் மிருகங்களை விட அதிக எண்ணிக்கையில்,மூலைக்கு மூலை, தடவிக்கொண்டும், இச் கொடுத்துக்கொண்டும்(வயித்தெரிச்சல்..) இரண்டுகால் காதலர்களை பார்த்து, பொறாமை பட்டபோதும்.

“இதுவரைக்கும் என்னை யாரும் ஹக் பண்ணினது இல்லை தெரியுமா” என்று ஓ.எம்.ஆர் ஹாட்சிப்ஸ் ஹோட்டலில் பெருமையாக காதலனிடம்(அல்லது நண்பனிடம்) மெதுவாக பேசுவதாக எண்ணி ஊருக்கே பேசிக்காட்டி தமிழ்கலாச்சாரத்தை இன்னமும் கட்டி காத்து கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தபோதும்..

விஜய் டிவி அவார்டில் முதுகெலும்போடு இயக்குநர் ராம் பேசியதை கேட்டபோதும்,

வேலையில்லா பட்டதாரி படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, “ங்கொய்யால, அமலா பால் ஏண்டா இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணினா” என்று ஒரு வேலையில்லா பட்டதாரி பேசியதை கேட்டபோதும்..

“எப்ப பதிவு எழுதப்போறிங்க,,,” என்று அன்பாக வந்த நான்கு ஐந்து மெயில்களை பார்த்தபோதும்,

முடிவாக

“என் பிளாக் பாஸ்வேர்டு என்ன” என்று இரண்டு மூன்று நாள் தூங்காம மண்டைய குடைஞ்சு கடைசியில பாஸ்வோர்ட் ஞாபகம் வந்தபோது..., “இருக்குமா..இல்லாட்டி தூக்கியிருப்பாங்களா” என்று கைநடுக்கத்துடன், “ரசிகன் பிளாக்ஸ்பாட்.காம்” டைப் பண்ணியபோதும்

எழுத தோன்றியது...கடைசியாக எழுதியே விட்டேன்..


இப்படிக்கு
ரசிகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

மொபைல்



முன்பொரு காலத்தில் எங்கள் வீட்டில் ஊதுபத்தி தீர்ந்து போகும். கடைக்குப் போய் வாங்கி வரச் சொல்லி மாமா அனுப்புவார். நானும் கடைக்குப் போய் "கடைக்காரரே ஒரு நல்ல ஊது பத்தி குடுங்க" என்று கேட்பேன். அவரும் "எதுப்பா.." என்று கேட்பார். "அதோ எல்லாத்துக்கும் மேலே இருக்கே டாப் த்ரீ ஊதுபத்தி அத எடுங்க" என்பேன். அவரும் அதை எடுத்து கண்ணில் காட்டிவிட்டு "அம்பி இது பதிமூனு ரூவா, வாங்கிட்டு போனா உங்க மாமா சத்தம் போடுவார், இரு நந்தி டைமண்ட் தர்றேன் அதான் மாமா வாங்குவார், அவ்ளோ தான் சில்லறை தந்திருப்பார்" என்று அதைத் தருவார். வாங்கிப் போய் மாமாவிடம் குடுத்தால் "வெரி குட்" என்று சொல்லிக் கொளுத்துவார். கம்முன்னு நிதானமாக ஏத்தினதே தெரியாமல் அரை மணி நேரம் எரியும். எளிமையான உலகமாய் இருந்தது.

சமீபத்தில் மொபைல் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. ஃபோன் வந்தால் ரிங் அடிக்கவில்லை, அடித்தாலும் தகரத்தில் கீச்சுவது மாதிரி கேட்டது. எட்டை அமுக்கினால் நான்கை காட்டும்.நான்கை அமுக்கினால் நட்சத்திரத்தைக் காட்டும். தெரிந்தவரிடம் காட்டினேன்

புட்டுக்கிச்சு

..ஆங்?

புட்டுக்கிச்சு, ஹோ கயா, வேற ஃபோன் வாங்கிக்கோங்க (வயித்துல புளிய கரைக்கிறானே...நிஜமாவே போன் புட்டுகிச்சா??)

வேற ஃபோனா...எதுக்கு... இத ஓவராயில் பண்ண முடியாதா? 

பண்ணலாம் இந்த டெக்னாலஜி தெரிஞ்ச ஆள் லோக்கல்ல இருக்க மாட்டான், ஜப்பான்லேர்ந்து ஸ்பெஷலா கூட்டிட்டு வரணும் பரவாயில்லையா? பேசாமா புது ஃபோன் வாங்கிக்கோங்க சார்.

அது தான் ஆரம்பம்.

அப்பா ஆப்பிள் வாங்குப்பா..அதுல நிறைய கேம்ஸ் இருக்கும்பா..

ம்க்கும் உங்கப்பா காஷ்மீர் ஆப்பிளே விலை கூடன்னு வாங்கமாட்டேன்.... இதுல அமெரிக்க ஆப்பிளா அதெல்லாம் நாப்பதாயிரம் ஆகும். பேசாம இருடி...

எந்த மாதிரி பார்க்கறீங்க, டச்சா இல்ல பட்டன் வைச்சததா? (ஜிப் வைச்சது இருக்கா?)

பேசாமா ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கேன், டச் ஃபோன், சாம்சங்ல சல்லீஸா கிடைக்கும்.

சார் நல்ல கடையா பார்த்து வாங்குங்க.. ஏமாத்திருவாங்க. சாம்சங் லோகோல `ஏ`-க்கு நடுவுல கோடு இல்லாம இருக்கா பாருங்க. கோடு போட்டிருந்தா டுப்ளிகேட். சைனா மேக்

ப்ளூடுத், என்.எஃப்சி, எஸ் பீம், டீ.என்.எல்.எம் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிகோங்க  (டி.எல்.என் கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு போயிட்டார்ன்னு சொன்னாங்களே?)

ஏரோப்ளேன் மோட் இருந்தா சொஸ்தம். ப்ளைட்ல போனா ஆஃப் பண்ணவேண்டாம். ஃபோன திருப்பிக் காட்டிட்டா போதும். அவா ரைட் ரைட்ன்னு போயிடுவா. (முந்தைய ப்ளைட் ஜர்னி எப்போ என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன்....போன மாசம் தான் போனேன்...புல் மப்புல தூங்கிட்டேன்)

ரெண்டு கேமிரா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி மாதிரி யூஸ் பண்ணிக்கலாம் (பத்து ரூபாய்க்கு அவசரப்பட்டு கையகலக் கண்ணாடி வாங்கிட்டேனே வேஸ்டா!)

ட்யூயல் சிம் இருந்தா பெஸ்டு. ரெண்டு ஃபோன்லாம் சுமக்க வேண்டியது இல்லாம ஒரே போன்ல சமாளிக்கலாம் (இதுக்காகவே ரெண்டாவது சிம் வாங்கணும்)

எப்.எம் ரேடியோ இருக்கான்னு பாருங்க. ராத்திரியில் ராஜான்னு ஒரு ப்ரோக்ராம். சுண்டி இழுக்கறான். 

மெமரி எவ்வளவு அதிகமா இருகோ அவ்வளவு அதிகமா பாட்டு, படம் எல்லாம் போட்டு வைச்சுக்கலாம் ( நூத்தம்பது நம்பர் ஸ்டோர் பண்ண முடியுமோ? முடியுமா...இருநூறு? அப்போ நானூறு?) 

4G சப்போர்ட் பண்ணுமான்னு செக் பண்ணிக்கோ. (எல்லாத்துக்கும் என்ன பிரயோஜனம்ன்னு கேக்காத. லேட்டஸ்ட் டெக்னாலஜி, வாங்கிப் போடு, பின்னாடி உபயோகப்படும்)

ஆப்ஸ்லாம் அங்கயே லோட் பண்ணித் தரச் சொல்லு. ஸ்டார் கேல்க்ஸின்னு ஒன்னு இருக்கு. வான சாஸ்திரம். மொபைல வானத்தைப் பார்த்து காட்டினா போதும். வீனஸ் எங்க இருக்கு, ப்ளூட்டோ எங்க இருக்கு, சனி எங்க இருக்குன்னு அழகா காட்டும். (சனி அப்போ நாக்குல இல்லையா?)

எல்லாவற்றையும் நோட் பண்ணிக் கொண்டேன்.

"கடைக்காரரே ஒரு நல்ல மொபைல் ஃபோனா குடுங்க" என்று கேட்ட போது எல்லாத்துக்கும் மேலே இருக்கிற ஃபோனை எடுத்துத் தராமல் மேலும் கீழும் பார்த்தார். 

ப்ராண்டட்டா சைனாவா?

சாம்சங்

ஸ்மார்ட் போனா?

ஆமாம் ஆனா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம் ஓரளவுக்கு ஸ்மார்ட் போதும்

இதுல வைபை இருக்கா?

சார் ஸ்மார்ட் ஃபோன்னா வைபை இருக்கும் சார். ப்ளூடூத் இருக்கு, ப்ளூடூத்னா தெரியுமா? இன்னொரு ஃபோனோட பேர் பண்ணிக்கலாம் அப்படியே பாட்டு மத்த ஃபைல்ஸ்லாம்...

தெரியும் சார். நானும் படிச்சிருக்கேன். ப்ளூடூத் தெரியாதா. ப்ளூம்பர்க் தெரியுமா உங்களுக்கு? "SIM" கார்டுல சிம்க்கு எக்ஸ்பான்ஷன் சொல்லுங்க பார்போம். (யாருகிட்ட.....கடைக்காரன் அரண்டுட்டான்ல...)

சாரி சார். இதுல ஜி.பி.எஸ் கூட இருக்கு சார். இப்போ ஆபர்ல இருக்கு  - பத்தாயிரத்தி இருநூறு.

ஒரிஜினல் தானே சைனா மேக் இல்லையே? 

சார் ஒரிஜினல் தான் சார். ஆப்பிளே சைனால தான் சார் மெனுபாக்சர் பண்றாங்க

டப்பாவில் என்னவெல்லாம் போட்டிருக்குன்னு படித்தேன். ப்ளூடூத், எம்.பி.3, ஜி.பி.எஸ், எஃப்.எம்...ஏகப்பட்டது போட்டிருந்தது.

எல்லாம் கரெக்டாக வேலை செய்யுங்களா? டப்பால போட்ருவாங்க ஆனா சில சமயம் அதெல்லாம் இருக்கவே இருக்காது.

சார் இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார். டப்பால போட்டிருக்கிறது எதாவது ஒன்னு குறைஞ்சாலோ இல்ல அது வேலை செய்யலைனாலோ எடுத்துட்டு வாங்க, ரெடியா ரூபாய் வாபஸ் குடுக்கறோம்.

இன்னும் இரண்டு முறை உறுதிபடுத்திக் கொண்டேன். சலித்துக் கொண்டார். நீங்க சொன்னத அப்படியே எழுதித் தாங்க என்றேன். கோபப்பட்டார். மானேஜரைக் கூப்பிடச் சொன்னேன். இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார் க்யாரண்டில கவர் ஆகும் சார் என்று சலித்துக் கொண்டே எழுதிக் கொடுத்தார். டப்பால எழுதியிருக்கறது மட்டும் ஏதாவது இல்லை, அடுத்த நிமிஷம் இங்க இருப்பேன் என்று அழுத்திச் சொன்னேன்.

பில்லை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை எல்லா ஃபோனையும் நோட்டம் விட்டேன். 

அதோ எல்லாத்துக்கும் மேல இருக்கே அந்த ஃபோன எடுங்க.

சார் அது ஹெட்ஃபோன் சார் 

ம்ம்ம் சரி..ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க. 

சார் இது அல்ரெடி ஆஃபர் ப்ரைஸ் சார். போன வாரம் வாங்கியிருந்தீங்க இரண்டாயிரம் கூட குடுத்திருப்பீங்க. சாருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவர் குடுப்பா

வீட்டுக்கு வந்து கடை விரித்து டப்பாவை வைத்துக் கொண்டு ஒவ்வொண்ணாய் சரி பார்த்தேன். எல்லாம் இருந்தது. யாருகிட்ட...என்று காலரை உயர்த்தி சார்ஜில் போட்டேன்.

ராத்திரி எட்டு மணிக்கு நாராயணன் ஃபோன் பண்ணினார் . பெருமிதமாய் காதில் வைத்தால் நாராயணன் அவரோட வயல் கிணற்றுக்குள் இறங்கி அங்கேர்ந்து பேசுவது மாதிரி இருந்தது.

அவசர அவசரமாய் டப்பாவைப் பார்த்தால் தெளிவாக, சத்தமாக பேச்சு கேட்கும் என்று எங்கயுமே எழுதியிருக்கவில்லை!!!!!

ஜிகர்தண்டா (2014) – Analysis




நேற்று தான் ஜிகர்தண்டா பார்த்தேன் ...நல்ல மேக்கிங்குடன் கூடிய ஒரு நல்ல படம். 2014-ல் இது வரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முதல் மூன்று ரேங்கிற்குள் வரத் தகுதியுள்ளது. முதல் பாதி நல்ல க்ரிப்பிங்காய் நம்பகத்தன்மையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது எதார்த்தமல்ல, நிறைய இடங்களில் ஒன்றுக்குப் பத்தாய் மிகைப்படுத்தி சொல்லும் ட்ராமாட்டிக் மீடியா. ஆனால் அந்த மிகைப்படுத்துதலை சினிமா பார்க்கும் ரசிகன் உணராத படி, அவன் அறிவு முழித்துக் கொள்ளாதபடி கொண்டு சொல்வது மிக முக்கியம். அந்த வகையில் எனக்கு இன்றைக்கு கால் மேல் கால் போட்டு யோசிக்கும் போது இரண்டாவது பகுதியில் தெரியும் மிகைப்படுத்துதல் நேற்று படம் பார்க்கும் போது அவ்வளவு தெரியவில்லை.(அத்தாம் பெரிய ரவுடிகள் கூட்டமாய் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு குரங்காட்டம் ஆடுவதெல்லாம் கொஞ்சமாய் நெருடியது) 

ஆனால் இரண்டாம் பாதியில் கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டார்களோ என்று கண்டிப்பாய் தோன்றியது. படம் முடிந்துவிட்டது நல்ல எடுத்திருக்காங்க என்று நாம் மனதில் எண்ட் கார்ட் போட்ட பிறகும் படம் இருபது நிமிடத்திற்கு ஓடுகிறது. க்ரிஸ்ப்பாய் முடித்திருக்கலாம். சரி விடுங்க படத்தை பற்றி எல்லோரும் கதறக் கதறக் கருத்து சொல்லிவிட்டார்கள். தலையில் ஒற்றை ரோஜாவை சொருகிக் கொண்டு கமலோடு "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" ஆட்டம் ஆடிய அம்பிகா, பாயா கடை ஆயாவாக வருகிறார். காலத்தின் கோலம் சகிக்கவில்லை. லஷ்மி மேனனிடம் அவர் தான்  ஹீரோயின் என்ற சொல்லி படத்தில் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ பாவம். சங்கிலி முருகனுடைய அந்தப் பொட்டிக் கடை தாத்தா ரோலையாவது லஷ்மி மேனன் கேட்டு வாங்கி நடித்திருக்கலாம் கொஞ்சம் ஸ்கோப் இருந்திருக்கும். சித்தார்த்துக்கும் அவருக்கும் செட்டே ஆகவில்லை. சின்ன சின்ன குறைகள் மட்டுமே. புல் பேக்கேஜாய் பார்க்கும் போது ஒரு நல்ல மேக்கிங்குடன் கூடிய நல்ல படம். இயக்குநருக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி, கல்ட் ஃபிலிம் ட்ரெண்ட் செட்டர் என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. சமீபத்திய தமிழ் சினிமாவில் என்னளவில் அது ஆரண்ய காண்டமாகவே இன்று வரை இருக்கிறது. இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் எந்தத் தொய்வுமில்லாமல் நல்ல இண்ட்ரஸ்டிங்காய் ஓடும் படங்கள் தமிழில் அரிதாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்தப் படம் கானல் நீராய் வந்ததால் இந்தக் கொண்டாட்டமாய் இருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு வித்தை தெரிந்திருக்கிறது, அவரின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

On a different subject - தமிழ் சினிமா ரவுடி கலாச்சாரத்தை ஓவராக glorify செய்வது கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறது. கத்தியை எடுத்து அப்படியே ஒரு சொருவு சொருவுவது, போகிறவர் வருகிற பொதுஜனத்தை மண்டையில் போடுவது, பெட்ரோலை ஊத்திக் கொளுத்துவது, கக்கூஸில் கட்டையால் அடிப்பது  போன்ற எல்லா காட்சிகளிலும் நாம் தான் அந்த அடிவாங்குகிற பொதுஜனம் என்பதை மறந்து தியேட்டரில் கை தட்டிக் கொண்டிருக்கிறோம். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்த மாதிரி இந்த ரவுடிகளை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் திகட்டும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் படுகிறது. "இந்தியன்" படம்  எடுத்து பொதுமக்களோ அதிகாரிகளோ லஞ்ச லாவண்யத்தில் திருந்தவில்லை, ஆனால் இந்த ரவுடித்தனத்தை அஸ்வமேத யாகம் நடத்திய மாதிரி இப்படி ஒரேடியாய் ஹீரோத்தனமாய் காட்டினால், ரவுடி ஆகலாமா என்று நினைக்கும் அப்ரசண்டிகளெல்லாம் சினிமாவைப் பார்த்து விட்டு வெளிய வரும் போதே சம்பவம் நடத்தி க்ராஜுவேட் ஆகும் டீட்டெயில் வவுத்தக் கலக்குது.

மொத்தத்தில் ஜிகர்தண்டா எல்லா புத்திஜீவிகளும் கொண்டாடி கொண்டிருப்பதைப்போல தமிழ் சினிமாவின் புதுமொழி ஒன்றும் இல்லை.

சனி, ஆகஸ்ட் 02, 2014

மயில் ஸ்னேகங்கள் ( நண்பர்கள் தின ஸ்பெஷல்)




நான் சொல்ல வருவது ரயில் ஸ்னேங்களின் உல்டா. வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் செந்திலும் கவுண்டமணியுமாய், தளபதியும் மம்மூட்டியுமாய், அப்பாஸும் முஸ்தபாவுமாய், நாக்கு மேல் பல்லைப் போட்டு உரிமையோடு " ஏய் நீ என்ன பெரிய இவனாடா / இவளாடி..." என்று உரிமையோடு தோழனும் தோழியுமாய் ஒரே தட்டில் எச்சில் பரோட்டா தின்று, ஈரக் கையில் ஒட்டிய முடி மாதிரி உறவாடிய நட்பைப் பற்றி. அது தோழனாகவோ தோழியாகவோ இருந்திருக்கலாம். எப்பேற்பட்ட நட்பு என்றால், வேறு யாரவது நடுவில் வந்துவிட்டால் இந்த நட்பு நம்மை பின்னிப் பெடலெடுத்துவிடும். "போ..அங்கயே அப்படியே போய் சாவு..இங்க எதுக்கு வர்ற, நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு இப்பத் தான் தெரியுதாமா" என்று ஒரு வாரம் பேசாது.  அது ஒன்றும் பெரிய தவறில்லை என்று தெரிந்தாலும் மானம் வெட்கமேயில்லாமல் முதல் மரியாதை சிவாஜி மாதிரி நாமும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே போய் நாயாய் கெஞ்சும் நட்பு. "இன்னொரு தரம் மட்டும் இப்படி செஞ்ச, பார்க்கவே மாட்டேன் வெட்டியே போட்டுருவேன்..நிஜமா" என்று மிரட்டி மன்னிக்கும் நட்பு. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட இவர்களுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும். நாளும் கிழமையுமானால் முதல் ஃபோன் இவர்களிடமிருந்து வரவே வராது. அதுவும் பிறந்தநாள் என்றால் சுத்தமாய் மறந்துவிட்ட மாதிரி நடித்து நம்மை வெறுப்பேத்தும். நாமும் வெறுத்துப் போய் "தூ இவ்வளவு தானா நீ.." என்று வசனம் பேச எத்தனிக்கையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து புருவத்தை உயர்த்தி சட்டையைப் பிடித்து "என்ன சொல்ல வந்த நீ இப்ப..." என்று தளும்ப வைக்கும்.

எல்லாரும் கூட்டம் கூட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போது "இப்ப நானா அவங்களா" என்று வீ.சேகர் பட க்ளாமாக்ஸ் சீனெல்லாம் கொடுத்து, இப்பேற்பட்ட நட்பால் நமக்கு இவர்களைத் தவிர ஊரில் இருக்கிற ஒரு பயபுள்ளைகளைத் தெரிந்திருக்காது. ஆனாலும் மனது மட்டும் நிறைந்திருக்கும். நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது எவனாவது வைத்த கொள்ளிக் கண்ணினால் இஞ்சி மொரப்பாவில் சுக்கு போட்ட தகறாரில் பட்டென்று ஒரு நாள் நட்பு தெறித்துவிடும். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் சில சமயம் பல வருடங்கள் பார்க்காமலே பேசாமலே இருப்போம். ஆனால் காலம் இருக்கே காலம் திடிரென்று பேஸ்புக் ட்விட்டர் என்று எங்கேயாவது கோர்த்துவிட்டு விடும். மௌன ராகம் சீன் மாதிரி நிறைய பேசாமல் , மனதுக்குள் மட்டுமே நிறைய நினைப்போம். அவர்களுக்குத் தெரியாமல் நோட்டம் விடுவோம். பழைய பரோட்டா கடை மேட்டரிலிருந்து எல்லா விஷயங்களும் மயிலிறகால் தடவி விட்ட மாதிரி மனதில் ஓடும். எனக்கும் சில பல மயில் ஸ்னேங்கள் இருக்கின்றன. தற்போது கூட "எப்படி இருக்க" என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றதே - அது அவர்களுக்கே சொந்தமில்லாமல் என்னுடையதாய் எனக்கே எனக்காய் அப்படியே நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றது - திரும்ப பேசாமல் அப்படியே பத்திரமாய் !

அதனால் தான் எல்லாரும் சொல்கிறார்களே என்று நானும் சொல்கிறேன்.."ஹேப்பி பிரண்ட்ஷிப் டே!" துளி கூட விருப்பமில்லாமல்.

இப்படிக்கு
ரசிகன் 

புதன், ஜூலை 02, 2014

ஜீவ(ா) காருண்யம்




அலமேலுவுக்கு சொந்தமாக ஒரு தெருவே இருந்தது. அவளும் அவளுடைய குட்டியும் ஜம்பமாக லெப்ட் ரைட் லெப்ட் என்கிற தாள லாயத்தோடு இடுப்பை ஆட்டி ஆட்டி தெருவில் நடந்து செல்வது சுதந்திர தின அணிவகுப்பைப் போலவே இருக்கும். அல்லது வாடகை வசூலிக்க வந்த வீட்டுக்காரனைப் போல இருக்கும். இருவருமாக இரவுகளில் தெருவுக்கு காவலிருப்பார்கள். பகலில் நிழலான வீட்டு திண்ணைகளின் வாசல்களில் படுத்துறங்குவார்கள். எப்போதாவது குரைப்பார்கள்.

தெருவின் ஒவ்வொருவரையும் ஒரு கேபிள்டிவிக்காரனைப்போல தனித்தனியாக அங்க அடையாளங்களோடு அறிந்துவைத்திருந்தாள் அலமேலு. அவர்கள் புல்லட்டில் வந்தாலும் சைக்கிளில் வந்தாலும் தாங்கிதாங்கி ஒருபக்கமாக நடந்துவந்தாலும் மாறுவேடத்தில் மச்சம் மரு வைத்துக்கொண்டு வந்தாலும் கூட மிகச்சரியாக அடையாளம் கண்டுபிடித்து வாலாட்டி அன்பு பாராட்டுவதில் அவளை அடித்துக்கொள்ள இன்னொரு நாய் பக்கத்து தெருவிலிருந்துதான் பிறந்து வரவேண்டும். 

நண்பர்களை அழைத்துவந்தால் அவர்களையும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து தன்னுடைய எழுபத்திரெண்டு கிராம் சின்ன மூளையினோரம் சேமித்து வைத்துக்கொள்ளும். அடுத்த முறை அந்த நபர் தனியாக வந்தால் குலைக்காமல் அவர்களிடமும் சினேகம் பாராட்டும். 

தெருவிலிருந்து காலி பண்ணிவிட்டு சென்றவர்கள் இன்னொரு சமயம் அத்தெருவை கடக்க நேரிட்டாலும் அவர்களை நினைவுவைத்து வாலாட்டுவதில் கெட்டிக்காரி. இப்படியெல்லாம் நாய்கள் வாய்க்க நம் தெரு போன யுகத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தெருபிரஜைகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பெருமைப்பட்டுக்கொள்வார்கள். 

தன்னுடைய வாரிசு மணிக்கும் தெருவின் பிரஜைகளை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்திருந்தாள் அலமேலு. யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவள் பாடமெடுத்திருந்தாள். உதாரணத்திற்கு மூன்றாவது வீட்டு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வெளியே கிளம்பும்போது அவரை தொந்தரவு செய்யாமல் பொறுமையாக அவருக்கு அருகில் போய் நின்றுகொண்டு வாலை விடாமல் ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். அவரே ‘’அலமேலு கம்’’ என்று அழைப்பார். அதுவரை காத்திருக்க வேண்டும். தெருமுனை அண்ணாச்சி கடையில் டைகர் பிஸ்கட்டோ பார்லேஜியோ வாங்கிப்போடுவார். அவரிடம் அளவுக்கதிகமாக வாலாட்டினாலோ, அவர் மீது உடல் பட்டாலோ, ஆர்வக்கோளாறில் வவ் வவ் என்று சப்தமிட்டாலே போ என்று குச்சியை எடுத்து விரட்டிவிடுவார் கோவக்காரர். அதனாலேயே அவருக்கும் அலமேலுவுக்குமான அன்டர்ஸ்டேன்டிங் அவுட்ஸ்டேன்டிங்காக இருக்கும். 

வேறு நாய்கள் அந்த தெருவுக்குள் நுழைந்துவிட முடியாது. மீறி நுழைந்தால் அவ்வளவுதான் ஆத்திரத்துடன் வாயை அகலவிரித்து கோரைபற்களை காட்டிக்கொண்டு வெறித்தனமாக கத்தி விரட்டியடிப்பாள் அலமேலு. இப்போது குட்டி மகன் மணியும் இணைந்து க்கீ க்கீ என்று சண்டையிட ஆரம்பித்திருந்தான். இவர்களிருவருக்கும் அலமேலு,மணி என்று யார் பெயர் சூட்டியதென்பது தெருவில் யாருக்கும் தெரியாது. ஆனால் எப்படியோ அப்பெயர்களே நிலைத்துவிட்டது. கள்ளக்காதல் விவகாரங்களும் நாய்களின் பெயர்களும் எப்படியோ எளிதில் தெருமுழுக்க பரவிவிடுகிறது. 

சில வாரங்களுக்கு முன்புதான் அலமேலு ஐந்து குட்டிகளை ஈன்றாள். அக்குட்டிகளில் நான்கு கண்களில் ஏதோ நோய் தாக்கி இறந்துபோய்விட்டனர். 

மணி மட்டும்தான் தப்பிப்பிழைத்தான். ஒற்றைக்கண்ணில் சீழ்வடிய மணியோடு சுற்றிக்கொண்டிருந்தான். மணியை காப்பாற்றியது யுவாஞ்சலிதான். வீட்டில வைத்திருந்த கண்மருந்தினை எடுத்துக்கொண்டு வந்து குட்டிநாயின் கண்களில் விட்டு மணியை காப்பாற்றினாள். யுவாஞ்சலிக்கு கண்களில் பிரச்சனை இருந்தபோது டாக்டர் கொடுத்த மருந்து. 

தெருமத்தியில் இருந்த சிகப்பு கேட் போட்ட வீட்டில்தான் யுவாஞ்சலி வசிக்கிறாள். அலமேலுவின் ரகசிய சினேகிதி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். எப்போதிருந்து அவளும் அலமேலுவும் நண்பர்களானார்கள் என்பது அவளுக்கும் தெரியாது அலமேலுவுக்கும் தெரியாது. அலமேலு குட்டியாக இருக்கும்போதிருந்தே யுவாஞ்சலியை அறிந்திருந்தாள். போலவே யுவாஞ்சலி குட்டியாக இருக்கும்போதிருந்தே அலமேலுவை சினேகித்திருந்தாள்.

தினமும் மாலை ஆறு மணிக்குதான் இருவரும் சந்திப்பார்கள். வீட்டுக்கார தாத்தா கண்ணில் படாமல் நேரம் பார்த்து கேட்டருகே வந்து நின்று கொண்டு… ‘அல்லு.. அல்லு..’’ என்று எண்ணெயிடாத வாசற்க் கதவை திறக்கையில் வருகிற ஒலியைப்போல குரல்கொடுப்பாள். யுவாஞ்சலியின் குரல்கேட்டு இருவரும் துள்ளி துள்ளி ஓடி வந்து அவளருகே நின்று வாலை வாலை ஆட்டியபடி அவளுடைய கால்களை சுற்றிச்சுற்றி வருவார்கள். 

இங்கேயே வெயிட் பண்ணுங்க என்று ஆள்காட்டி விரலை நீட்டி கொஞ்சமாக குனிந்து கண்டிப்பாக சொல்லிவிட்டு… கயிற்றின் மேல் நடக்கும் சாகசக்காரனைப்போல ஒரு தேங்காய்த்தொட்டி நிறைய பாலினை சிந்தாமல் சிதறாமல் நடுங்கிக்கொண்டே எடுத்துவருவாள். அதை வீட்டிலிருந்து வெளியே கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மீண்டும் கேட்டுக்கு பக்கத்தில் வந்து நின்றுகொள்வாள். தேங்காய்தொட்டியை கீழே வைக்கும்வரை எக்கி எக்கி குதித்துக்கொண்டே இருக்கிற அலமேலு பாலை வைத்த அடுத்த நொடி கடகடவென நக்கி நக்கி குடிக்க ஆரம்பித்துவிடுவாள். 

மணி இன்னும் தாய்ப்பால்தான் குடிக்கிறான் என்பதால் அவன் அம்மாவின் வயிற்றோர மார்புக்காம்புகளைத்தான் வாஞ்சையோடு கவ்விக்கொண்டிருப்பான். தேங்காய்த்தொட்டிப்பால் தீர்ந்ததும் மீண்டும் கேட்டருகே வந்து இருவருமாக அவளை பார்த்து தலைதூக்கி வாலாட்டி அன்பை தெரிவிப்பார்கள். அலமேலுவை விடவும் மணியை யுவாஞ்சலிக்கு மிகவும் பிடிக்கும். 

பள்ளி முடிந்து வீடுவந்த பிறகு அப்பா ஆப்பிஸிலிருந்து  வரும்வரைக்கும் அவளுடைய போகோ சேனல் சோட்டாபீம் சுட்டிவிகடன், பார்பீ, கரடிபொம்மை எல்லாமே அலமேலுவும் மணியும்தான். தன்னுடைய  அப்பா ஜீவாவிற்கும் அலமேலுவையும் மணியையும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாள் யுவாஞ்சலி. 

யுவாஞ்சலியை ஜீவாவின் கைகளில் கொடுத்துவிட்டு அவள் அம்மா எப்போதோ வேறு தேசம் போய்விட்டாள். அதற்குபிறகு யுவாஞ்சலியின்  அப்பா தனியாகவேதான் பாப்பாவை வளர்த்தார். சொல்லப்போனால் வாசலில் வளரும் அருகம்புல்லைப்போல அவளாகவேதான் தானாக வளர்ந்துகொண்டிருந்தாள். ஏழு வயதிலேயே தனியாகவே வாழ பழகிக்கொண்டிருந்தாள். 

காலையில் எழுந்து பல்தேய்த்து, குளித்து, உடைமாற்றி, தலைசீவி பள்ளிக்கு தயாராகி ஜம்மென்று நிற்பாள்,. அவளுக்கு வேண்டிய உணவினை மட்டும் தயாரித்து பாதியை டிபன் பாக்ஸிலும் மீதியை ஃப்ரிட்ஜிலும் வைத்துவிட்டால் போதும். பள்ளி முடிந்து திரும்பிவந்து உணவை எடுத்து சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கு அப்பா வரும் வரை வீட்டுப்பாடம் செய்துவிட்டு காத்திருப்பாள். வந்ததும் அன்றைக்கு பள்ளியில் யார் யாரோடு வம்பு சண்டை, யார் யாருடைய பென்சிலை திருடியது, டீச்சர் சொன்ன பூனை கதை, பக்கத்துவீட்டு அங்கிளுக்கும் ஆன்ட்டிக்கும் நடந்த குங்பூ பைட் என எல்லா கதைகளையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடிப்பாள். எதையாவது மறந்துவிட்டால் மிட் நைட்டில் அப்பாவை எழுப்பியாவது சொல்லிவிடுவாள். இக்கதைகளில் பிரதானமாக மணியின் சாகசங்கள் இடம்பெறும். அவளுடைய கதைகளை கேட்டு அப்பா தூங்கிபோயிருப்பார். யுவாஞ்சலி சொல்லிக்கொண்டேயிருப்பாள். 

இரண்டு நாட்களாக அலமேலுவை காணவில்லை. மணி மட்டும்தான் தனியாக சுற்றிக்கொண்டிருந்தான். முதல்நாள் மாலை பால் வைக்க அலமேலுவை அழைத்தபோது மணிமட்டும்தான் வந்து நின்றான். ‘’எங்கடா உங்கம்மா’’ என்று அதட்டினாள் யுவாஞ்சலி. மணி ‘’கீகீ’’ என்றான். மணிக்குமட்டும் பால் வைத்தாள். மணி அதை குடிக்காமல் யுவாஞ்சலியின் கால்களையே சுற்றிச்சுற்றி வந்தான். யுவாஞ்சலிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துவிட்டாள். அடுத்த நாளும் அலமேலுவை காணோம். யுவாஞ்சலிக்கு பதட்டமாக இருந்தது. மணி தனியாகத்தான் சுற்றிக்கொண்டிருந்தான். 

‘’அப்பா இந்த அலமேலு இல்லப்பா அலமேலு.. அவள இரண்டுநாளா காணோம்ப்பா…’’ என்று சோகமாக சொன்னபோது யுவாஞ்சலியின் அப்பா அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெருவிலிருந்த கீதா, மீனு, ராகுல், ராஜு, ப்ரியா முதலான அவளுடைய சக தெரு நண்பர்களைப் போலவே அவரும் அந்த விஷயத்தில் அதிக ஆர்வமின்றி இருந்தார். அத்தெருவில் அலமேலு தொலைந்துபோனதற்காக யுவாஞ்சலி மட்டும்தான் வருத்தமாயிருந்தாள். 

‘’அப்பா அந்த மணி இல்லப்பா மணி, அவன் அலமேலுவ தேடிகிட்டு இங்கிட்டும் அங்கிட்டுமா இரண்டு நாளா திரிஞ்சிகிட்டிருக்கான்ப்பா… பாக்கவே பாவமா இருந்துச்சுப்பா.. நம்ம வீட்டு கேட்ருக்குல்லப்பா… கேட்டு.. அங்கதான் படுத்துகிட்டு க்கீ க்கீனு கத்திகிட்டிருந்துச்சுப்பா.. ஹவுஸ் ஓனர் தாத்தா இல்ல.. ஒரு சின்ன கல்லை எடுத்து அடிச்சாரா வலிச்சிருக்கும்போலப்பா பாவம்ம்மா கத்திகிட்டே ஓடிடிட்டான்.. நான்தான் போயி தேங்காதொட்டில பால் வச்சேனா.. கால்ல கல்லு பட்டுருந்துச்சா.. அதுல அந்த க்ரீம் இல்ல அது தேச்சேன். வலிச்சிருக்கும்போல, ஆனா பாலை குடிக்காம என் கால்கிட்டயே நின்னு கத்திகிட்டே இருந்தான்ப்பா’’ என்று வருத்தம் மிகுதியாகச் சொன்னாள். 

யுவாஞ்சலியின் பேச்சில் ஆர்வமின்றி வேறெதையோ யோசித்துக்கொண்டிருந்த ஜீவா  ‘’வீட்டுபாடம்லாம் முடிச்சியா’’ என்றார். அவள் வீட்டுப்பாடங்களை ஒருநாளும் முடிக்காமல் இருந்ததில்லை இன்றும் அப்படித்தான்.. அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி கோபமாக டிவியைப்போட்டு சோட்டாபீம் பார்க்க ஆரம்பித்தாள். 

அன்று இரவெல்லாம் யுவாஞ்சலி தூங்கவேயில்லை. மணியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் அவசரமாக ஓடிப்போய் ஜன்னல் வழியே மணியைத்தேடினாள். அவன் அங்கிமிங்குமாக தெருவில் மோப்பம் பிடித்தபடி சுற்றிக்கொண்டிருந்தான். அன்றைக்கு யுவாஞ்சலியால் விரைவாக பள்ளிக்கு கிளம்ப முடியவில்லை. 

பக்கத்து தெரு நாய்கள் பழைய பகையை மனதில் வைத்து மணியை கடித்துவைத்துவிட்டால் என்னாவது? அவனை யார் டாக்டரிடம் அழைத்துச்சென்று ஊசிகுத்துவது? அலமேலு இருந்தாலாவது குரைத்து மிரட்டி விரட்டுவாள். மணிக்கு இன்னும் சரியாக குரைக்கக்கூட தெரியாது என்ன பண்ணுவான் சின்னப்பையன்? அவனுக்கு ரோடு க்ராஸ் பண்ணக்கூட தெரியாது. சாப்பிடவும் தெரியாது. நாமும் பள்ளிக்குப்போய்விட்டால் யார்தான் மணியை காப்பாற்றுவது என நினைத்துக்கொண்டே பள்ளிக்கு சென்றாள். பள்ளியில் உட்கார்ந்துகொண்டும் இதைதான் யோசித்துக்கொண்டிருந்தாள். மதியம் சாப்பிட உட்கார்ந்த போதுகூட மணி காலைலருந்து என்ன சாப்பிட்டிருப்பான்? அவனுக்கு அம்மா பால்தவிர எதுவுமே பிடிக்காதே? என்று யோசித்துவிட்டு கொண்டுவந்த தக்காளிசாதத்தை அப்படியே வைத்துவிட்டாள். முட்டை மட்டும் சாப்பிட்டுக்கொண்டாள். அவளுக்கு அது ரொம்பவே பிடிக்கும்.

பாடங்களை கவனிக்கமுடியவில்லை. பென்சில் முனையை கடித்தபடி பள்ளி முடிவதற்காக காத்திருந்தாள். மாலை வீட்டுக்குப்போனதும் மணியை அழைத்துக்கொண்டு அலமேலுவை நாமே தேடிக்கண்டுபிடித்துவிட வேண்டியதுதான் என முடிவுசெய்தாள். அப்பா வர எட்டு மணியாகும் அதற்குள் அலமேலுவை கண்டுபிடித்து மணியிடம் சேர்த்துவிட்டு நல்ல பிள்ளையாக வீட்டில் வந்து இருந்துவிடலாம். அப்பா திட்டமாட்டார்.

தெருமுக்கு இஸ்திரிகடை தாண்டி, அவளுக்கு தெரிந்த அடுத்த தெரு கோவில்வரைக்கும் சென்றுவிட்டாள் எங்குமே அலமேலுவை காணவில்லை. அவள் முன்னே நடக்க பின்னாலேயே மணியும் விருக் விருக்கென தவ்விதவ்வி இடுப்பை ஆட்டிக்கொண்டு நடந்தான். இரண்டாவது தெரு தாண்டி குப்பைத்தொட்டிக்கு அருகே வந்துவிட்டாள். 

‘’மணி அலமேலுவ இங்கயும் காணோம்.. எங்கயோ ரொம்ப தூரம் உங்கம்மா போயிட்டா போல, வா நாம வீட்டுக்கே போவோம்’’ என்று அழைத்தாள்… மணி அந்த குப்பைத்தொட்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு வரமறுத்தான். ‘’மணிப்ளீஸ் வா…அப்பா வந்துடுவாரு’’ மீண்டும் அழைத்தாள். மணி திரும்புவதாயில்லை. குப்பைத்தொட்டியில் குதிக்க எத்தனித்தது. குப்பைத்தொட்டியை பார்த்து க்ர்ர்ரீய் க்ர்ரீய் என குரைத்தது. 

குப்பைத்தொட்டியை நெருங்கிச்சென்றாள் யுவாஞ்சலி. அங்கே நாற்றமடித்தது. எட்டிப்பார்க்கலாமா என்று தயக்கமாக இருந்தாலும். அவளுக்கும் உள்ளே இருப்பது சரியாக தெரியவில்லை. தன்னுடைய கைகளை குப்பைத்தொட்டியின் முனையில் பிடித்து குதிங்காலை எக்கி உள்ளே பார்த்தாள். உள்ளே ரத்தம் தோய்ந்த ஒரு நாய் செத்துக்கிடந்தது. பதறிப்போய் பயந்து உடனே இறங்கிவிட்டாள். அவளுக்கு மீண்டும் ஒருமுறை எட்டிப்பார்க்க பிடிக்கவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட தீர்மானித்தாள். 

‘’மணி இப்போ வரப்போறீயா இல்லையா’’ அதட்டலாக முறைத்தபடி அழைத்தாள். மணி நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து மீண்டும் ஒருமுறை குப்பைத்தொட்டியை பார்த்து குரைத்துவிட்டு அவளிடமே திரும்பியது. கீர்க் கீர்க்.. 

‘’பாப்பா தனியா இங்கே என்ன பண்ற.. உங்க அப்பா எங்க..’’ குரல்கேட்டு திரும்பி பார்த்தாள் பக்கத்துவீட்டு ஆன்ட்டி கையில் காய்கறியோடு. ‘’ஆன்ட்டி உள்ளே ஒரு நாயி கிடக்கு’’ என்று விரலால் சுட்டிக்காட்டினாள். எட்டிப்பார்த்த ஆன்ட்டி ‘’அடடா ஆக்ஸிடென்ட் ஆகிருக்கும்போல பாப்பா.. செத்துடுச்சு போல.. அலமேலுவாட்டம் இருக்கே.. சரி வா இருட்டிருச்சு.. நாம வீட்டுக்கு போவோம்’’ என்று அழைத்தாள். ‘’சாமிகிட்ட போயிடுச்சா ஆன்ட்டீ’’ என்றாள். ‘’அது அலமேலுதானா ஆன்ட்டீ’’ என்றாள் மீண்டும். ஆன்ட்டி அமைதியாயிருந்தாள். ‘’அலமேலுவேதானா ஆன்ட்டீ’’ என்றாள். சற்றே நீண்ட யோசனைக்கு பிறகு ‘’ஆமாம் பாப்பா அலமேலுதான்’’ என்பதைப்போல தலையாட்டினாள். ‘’இன்னொருக்கா பாருங்க ஆன்ட்டீ’’ என்றாள். மீண்டும் பார்த்துவிட்டு மீண்டும் தலையாட்டினாள். 

‘’அப்பா மணி இல்லப்பா மணி… அவனை நாமளே வளர்க்கலாம்ப்பா.. அதுக்கு யாருமே இல்லப்பா.. அவன் ரொம்ப நல்லவன்ப்பா, நல்லா டான்ஸ்லாம் ஆடுவான்ப்பா’’ என்றாள் யுவாஞ்சலி. அப்பா சட்டையை கழட்டி வைத்துவிட்டு டிஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டார். 

‘’அலமேலு இல்லப்பா அலமேலு அவ செத்து போய்ட்டாளாம், இனிமே மணி என்ன பண்ணுவான்ப்பா.. அவனை பாத்துக்க அப்பா கூட இல்லப்பா.. நாமளே பாத்துக்கலாம்ப்பா.. ப்ளீஸ்ப்பா ப்ளீஸ்ப்பா, அவன் உனக்கும் பிரண்ட் ஆகிடுவான்ப்பா’’ கெஞ்சினாள். 

‘’இல்ல பாப்பா அது சரியா வராது, கீழே ஹவுஸ் ஓனர் தாத்தா ஒத்துக்கமாட்டாரு முன்னமே சொல்லிதான் வீடுகுடுத்தாருப்பா.. புரிஞ்சிக்கோ பாப்பா, அத கொண்டாந்து எங்க கட்டிவைப்ப’’ என்றவன் ஜன்னல் வழியாக கீழ்நோக்கி வாசலை பார்த்தான். தெருவோர மின்விளக்கொளியில் கேட் அருகே அந்த குட்டி நாய் கீழே எதை எதையோ முகர்ந்துபடி அங்கிமிங்கும் சுற்றி ஓடி ஒரு பறக்கும் பூச்சியை தாவிப்பிடிக்க அதன் பின்னே ஓடியது. யுவாஞ்சலியின் முகம் இரவின் சூர்யகாந்தியை ஒத்திருந்தது. 

‘’பாப்பா எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.. நாம வேணா தினமும் அதுக்கு சாப்பாடு வைக்கலாம். பிஸ்கட் வாங்கிப்போடலாம், வீட்லலாம் வச்சு வளர்க்க முடியாதும்மா.. புரிஞ்சிக்க என் செல்லபிள்ளைல.. கோச்சிக்க கூடாது. அதுமில்லாம தெருநாய்லாம் வீட்ல வச்சு வளர்த்தா டிஸீஸ்லாம் வரும்டா கண்ணா’’ என்று கொஞ்சினார். 

இந்தா இதை சாப்டு என கையில் வைத்திருந்த இட்லியை பிட்டு ஊட்ட முயன்றார் அப்பா. யுவாஞ்சலி சாப்பிட மறுத்தாள். ‘’ப்ளீஸ்ப்பா மணி பாவம்ப்பா, அவனை நானே நல்லா ஷாம்பூ போட்டு குளிப்பாட்டிறேன். நாம டாக்டர்கிட்ட போய் ஊசிபோடுவோம் அவனுக்கு, நீ அவனுக்கு டாக் ஃபுட் வாங்கிட்டு வா.. அப்பா.. அதுக்கு யாருமே இல்லப்பா’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பா என்ன செய்வதென்று யோசித்தான். பேசாமல் அதட்டினால் என்னவென்று நினைத்தான். ஆனால் அவனுக்கு அதில் விருப்பமில்லை.

‘’ப்பா… ப்பா..’’ என்று அருகில் படுத்துக்கொண்டு அப்பாவை எழுப்பினாள். அப்பா காது கேட்காதது போல எவ்வளவு நேரம்தான் இருக்க முடியும். ‘’பாப்பா நீ ரொம்ப நல்ல பாப்பாவாச்சே ஏன் இன்னைக்கு இப்படி அடம்பிடிக்கறே’’ என்றார். ‘’மணி இல்லப்பா மணி அவன் ரொம்ப நல்லவன்ப்பா, அவன் கொஞ்சம் வளர்ந்தப்பறம் கூட வெளிய விட்ரலாம்ப்பா, இப்போ அவன் குட்டிபையனா இருக்கானா, அவனை யார்னா கடிச்சிட்டா, அவனுக்கு ரோட் க்ராஸ் பண்ணக்கூட தெரியாதுப்பா, நான்தான் அவனுக்கு அதுகூட சொல்லிக்குடுத்தேன்ப்பா, இரண்டு சைடும் பார்த்துட்டு க்ராஸ் பண்ணனும்னு ஆனா அவனுக்கு தெரிலப்பா.. அவனை நானே நல்லா பாத்துப்பேன்ப்பா அவனுக்கு எப்படி சாப்புடறது தூங்கறது ரோட் க்ராஸ்பண்றது சண்ட போடறதுனாலும் நானே சொல்லிக்குடுப்பேன்ப்பா ப்ளீஸ்ப்பா’’ அப்பாவின் மார்பில் சாய்ந்துகொண்டு கொஞ்சினாள். அப்பா தலைக்கு மேல் சுழலும் ஃபேனை பார்த்துக்கொண்டே யோசித்தார்.

‘’சரி ஒன்னு பண்ணுவோம் , நாளைக்கு சன்டேதான.. அதை கொண்டுபோய் ப்ளூக்ராஸ்ல விட்ருவோம்..’’ என்றான். ‘’ப்ளூ க்ராஸ்னா?’’ அப்பாவின் காதுகளை விரலால் தேய்த்துக்கொண்டே கேட்டாள். 

‘’ப்ளூ க்ராஸ்னா தெருவுல தனியா சுத்துற குட்டி நாய்களையெல்லாம் ஒன்னா சேர்த்து அதுக்கு நேரா நேரத்துக்கு சாப்பாடு போட்டு அன்பா பார்த்துக்கற இடம். அங்க இந்த குட்டிநாய் மாதிரி நூத்துக்கணக்குல இருக்கும். நாம எப்பயாச்சும் போய் பாக்கறதுனா பாத்துக்கலாம் , மனுஷங்களுக்கு அநாதை இல்லம் இருக்குல்ல அதுமாதிரி..’’ என்றார். யுவாஞ்சலி கொஞ்சநேரம் அமைதியாக இருந்தாள். பிறகு மீண்டும் அப்பாவின் மீது கால்களை போட்டுக்கொண்டு.

‘’ப்பா.. அநாதை இல்லம்னா என்னப்பா?’’ என்றாள். 

‘’அநாதை இல்லம்னா.. ம்ம்ம்ம்ம்… பாத்துக்க யாருமில்லாத அப்பா அம்மா இல்லாத குழந்தைங்க இருப்பாங்க இல்ல, அவங்கள பாத்துக்கற இடம்’’. யுவாஞ்சலி பதில் எதையும் பேசவில்லை. 

‘’நாம நாளைக்கு காலைல ப்ளூக்ராஸ் போறோம் நாய்குட்டிய விடறோம் சரியம்மா’’ என்று பாப்பாவின் தலையை வருடிக்கொண்டே அவளை தன் இடதுகையால் அணைத்துக்கொண்டே சொன்னார். ‘’ம்ம்’’ என்கிற அவளுடைய சன்னமான குரல் அவளுடைய அரைமனதுடனான சம்மதத்தை அறிவித்தது.

அன்றைக்கு ராத்திரி யுவாஞ்சலி மணியை ப்ளுக்ராஸில் விட்டபிறகு என்னாகும் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அவனை ப்ளுக்ராஸில் விட்டாலும் வாரம் ஒருமுறையாவது அவனைப்போய் பார்த்து பிஸ்கட் வாங்கித்தரவேண்டும், தான் வளர்ந்ததும் தனி வீடு வாங்கி அதில் மணியை வளர்க்க வேண்டும், அவனுக்கு டாம்அன்ஜெர்ரியில் வருவதுபோல குட்டி நாய்வீடு கட்டித்தரவேண்டும். நாளைக்கு அவனை நன்றாக குளிப்பாட்டி, காய்கறி வாங்கும் கூடையில் டர்க்கிடவலில் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும். போவதற்கு முன்பு நிறைய பால் கொடுக்க வேண்டும். வீட்டில் இருக்கிற பெரிய பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துவிடலாம். வாரம் ஒருமுறை அப்பாவை அழைத்துக்கொண்டு போய் அவனை பார்த்துவிட்டு வரவேண்டும். தொடர் நினைவுகளோடு தூங்கினாள். 

‘’சார் இதுல ஒரு கையெழுத்துப்போடுங்க… இதோ இங்கே’’ என்று ஒரு லெட்ஜர் புத்தகத்தை டேபிளில் வைத்து புரட்டிக் காட்டினார் அலுவலக பெண்மணி. ‘’எங்கே நாய்க்குட்டிய காட்டுங்க’’ என்றதும் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் காய்கறி கூடையில் வைத்திருந்த மணியை விரித்துக்காட்டினாள் யுவாஞ்சலி. மணி நிமிர்ந்து பார்த்து க்க்ரீங்க் என்றது. 

சுற்றிலும் நாய் வாசனை நிறைந்திருந்தது. எங்கும் நாய்களின் குரைப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. சிலர் பூனைக்குட்டிகளோடு வந்து காத்திருந்தனர். தூரத்தில் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. நாய்க்குட்டியை விட்டுப்பிரிய அவளுக்கு மனமே இல்லை. 

‘’அப்பா மணிய நாமளே வச்சிக்கலாம்ப்பா’’ கடைசியாக ஒருமுறை. அப்பா அவளை திரும்பிப்பார்த்துவிட்டு ‘’ஏங்க நாய்குட்டிய பத்திரமா பாத்துக்குவீங்கதானே’’ என்றார். 

‘’பாப்பா டோன்ட் வொர்ரி உன் குட்டிநாய் இங்கே ரொம்ப சேஃப்பா இருக்கும்.. நீ எப்ப வேணும்னாலும் வந்து பாத்துக்கலாம் ஓக்கேவா.. இங்கேதான் இதுக்கு நிறைய ஃப்ரன்ட்ஸ் இருப்பாங்க அதுக்கும் ஜாலியாருக்கும்’’ என்றாள் அலுவலக பெண்மணி. 

‘’ஆனா நான் இருக்கமாட்டேன்லே’’ என்ற முறைத்துக்கொண்டே கேட்டாள் யுவாஞ்சலி. 

யுவாஞ்சலியின் கேள்விக்கு அங்கிருந்த யாருக்கும் பதில்சொல்லத் தெரியவில்லை. பதில் சொல்ல முடியாத கேள்விகளை குழந்தைகள் கேட்கும் போது பேச்சை மாற்றுவதுதானே பெரியவர்கள் டெக்னிக். ‘’நீ எந்த ஸ்கூல் என்ன படிக்கற சமத்து பொண்ணா இருக்கீயே’’ என்றாள் அலுவலக பெண்மணி. யுவாஞ்சலி முகத்தை திருப்பிக்கொண்டாள். எதிரில் சுவற்றில் மணி ஜாடையில் ஒரு குட்டிநாயின் புகைப்படமிருந்தது. ச்சே அப்பாவோட மொபைல்ல மணியை போட்டோ கூட எடுக்கலையே.. என்று நினைத்துக்கொண்டாள். 

கடைசியா ஒருமுறை அப்பாவை நிமிர்ந்து பார்த்து ‘’ப்ளீஸ்ப்பா’’ என்றாள். அவர் கேட்காதது போலிருந்தார். ‘’அப்பா உன் மொபைல் குடேன்.. மணிய ஒரு போட்டோ எடுத்துக்குறேன்’’ என்றாள். அப்பா தன்னுடைய மொபைலை நீட்டினார். அவளே அதை திறந்து கேமராவை வெளியே எடுத்து கேமராவை ஆன் செய்துவிட்டு கூடையை கீழே வைத்து அதிலிருந்து மணியை இடுப்பை பிடித்து வெளியே தூக்கினாள். அதை அப்படியே கீழே வைத்துவிட்டு ‘’மணி இங்கப்பாரு’’ என்று சொல்லிக்கொண்டே கேமராவில் பார்க்க, கேமராவில் மணியை காணோம்… 

கீய் கீய் என கத்திக்கொண்டே துள்ளிகுதித்து அங்கிருந்து வேகமாக ஓடத்தொடங்கினான் மணி. நேராக ஓடி அலுவலகத்தை விட்டு வெளியே ஓடிவந்தான். மணி இவ்வளவு வேகமாக ஓடி பார்த்ததேயில்லை. நாலு கால் பாய்ச்சலில் அவன் வராண்டாவை கடந்துவிட்டான். 

பின்னாலேயே யுவாஞ்சலியும் அலுவலக ஆள் ஒருவரும் அப்பாவும் ஓடினர். ஒரு குட்டி எலியைப்போல கண்ணிமைக்கு நேரத்தில் மணி வாசலை தாண்டிவிட்டான் வெளியேறிவிட்டான் மணி. 

ப்ளூக்ராஸ் அலுவலகத்திற்கு வருகிற வழியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த கூண்டுகளில் ஒன்றின் அருகில் போய் நின்றவன் க்ய்யீக் க்ய்யீக் என குரைக்கத்தொடங்கினான். அந்த கூண்டுகளில் நூற்றுக்கணக்கான வெவ்வேறு வயதுடைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் போய் நின்றுகொண்டான். 

கூண்டுக்கு மறுபுறம் அலமேலு இருந்தாள். மணியை பார்த்ததும் அவளும் வ்வ்ராக்… வ்வ்ராக் என குரைத்து வாலை ஆட்டி அன்பை வெளிகாட்டினாள். கூண்டின் சந்துவழியாக நாக்கை நீட்டி தன்னுடைய குட்டியை நக்கிக்கொடுக்க அக்கூண்டின் சின்ன சந்துவழியே அலமேலுவின் இடுப்பில் பரவியிருந்த மார்புக்காம்புகளில் ஒன்றை கவ்வி பால்குடிக்கத்தொடங்கினான் மணி. 

நூறாண்டுகளாக பசியோடிருக்கிற ஒருவன் சாப்பிட ஆரம்பித்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு வேகத்தில் பாலை உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருந்ததான் மணி. மணியை விலக்க எத்தனித்த அலுவலக பணியாளை அப்பா தடுத்து நிறுத்தினார். அலமேலு தன் நாக்கை கூண்டுகளின் வழியே வெளியே நீட்டி மணியின் தலையை நக்க முற்பட்டது முடியவில்லை. இதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நின்றாள் யுவாஞ்சலி. ஜீவா மற்றும் ப்ளுக்ராஸ் அலுவலக பணியாள் என எல்லோரும் அதையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

‘’இப்போ ஹேப்பியா.. உன்னோட நாய்க்குட்டிக்கு அதோட அம்மா கிடைச்சிட்டாங்க’’ முகத்தில் புன்னகையோடு சொன்னார் அப்பா. 

பைக்கை பொறுமையா ஓட்டிக்கொண்டு வந்தார் அப்பா. பின்னால் அவரை கட்டிக்கொண்டிருந்த யுவாஞ்சலி எதுவும் பதில் பேசாமல் வந்தாள். ப்ளுக்ராஸில் மணியை ஒப்படைத்துவிட்டு அலமேலுவையும் பார்த்துவிட்டு கிளம்பியதிலிருந்து அமைதியாகவே இருந்தாள். 

‘’டோன்ட் வொர்ரி பாப்பா இரண்டுநாள்ல மணியையும் அலமேலுவையும் நாமளே கூட்டிட்டு வந்துடலாம்.. அப்புறம் மறுபடியும் அதுங்க நம்ம தெருவுல சந்தோஷமா இருப்பாங்க.. ஏன் இன்னும் உம்முனே இருக்கே.. ச்சியர் அப்’’ என்று யுவாஞ்சலியை தேற்றமுனைந்தான். ஆனால் அவளுடைய மௌனம் கலையவேயில்லை. கண்ணிமைக்காமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு முடிக்கும்போதுதான் பேசினாள். 

‘’ப்ப்பா.’’

‘’என்னம்மா’’

‘’நம்ம அம்மா கூட இதே மாதிரி எங்கயாச்சும் இருப்பாங்களாப்பா.. நாம போய் தேடலாமாப்பா’’ என்றாள். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சாப்பாட்டை பிசைந்துகொண்டே அமர்ந்திருந்தார் அப்பா. ‘’ஹோம் ஒர்க்லாம் பண்ணிட்டியா பாப்பா’’ என்றார். 

யுவாஞ்சலி  பதில் பேசாமல் தட்டை எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்கு போய் அதை கழுவி வைத்துவிட்டு டிவியை போட்டு சோட்டோபீம் பார்க்கத்தொடங்கினாள். 

கனவுகளுடன்
ஜீவா 

புதன், ஏப்ரல் 09, 2014

சத்தமில்லாமல் சில முத்தங்கள்..



அம்மா நூறு டெசிபலில் கத்தினாள்.

"ரெஜினா  ...ஃபோன் அடிக்குது பாரு..."

ரெஜினா எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும். இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான்.

'ஹலோ.."

"ரெஜினா இருக்காங்களா..?"

"நீங்க..?"

"நாங்க ஆர்டிஓ  ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரியுமா?..."

"ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...!

யார் இது...? ஹேய் ..ஹேய் ஜீவா..நீதான...!"

"ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு  ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்"

"அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...!சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்"

"சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!"

யாருடி அது ஃபோன்ல...?

ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...!

ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள்.

"ஹலோ யாரு.."

ஜீவா  உஷாரானான்.

 குரலை கொஞ்சம் மாத்தி "இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க. வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான்.

ராட்சசி...! மாட்டிவிட பார்க்கிறா..

சரியாக அரைமணியில் ரெஜினா பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த ஜீவா  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது...

ரெஜினா..வா ஏறு...!

ராஸ்கலே தான்.

"வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - ரெஜினா

"ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!"

அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே ஜீவாவோடு பின் சீட்டில் அமர்ந்தாள்.

"சரி இப்பக் குடு" - ஜீவா 

"அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?"

"சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!"

"ஜீவா ... உனக்கு விவஸ்தையே கிடையாது!"

சரி இறங்கினவுடனே குடு!

ஜீவா ...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க!

அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே!

"ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!"

"அப்போ இன்னைக்கு கிடையாதா?"

"இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்.. இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!"

சே..என்றிருந்தது ஜீவாவிற்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்!

"வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில்ரெஜினாவை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து ஜீவா ரெஜினா வீட்டுக்கு வந்தான்.

"வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா ரெஜினா ... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!"

"இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்களான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......."

ரெஜினா அப்பாவோட மீசையை பார்த்து, ஜீவா நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர ஜீவா இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை.

" ஹா ஹா புரியுது மாப்ள  ..நீங்க ரெஜினாகிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!"

மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

ஹாலில் யாருமில்லை. ரெஜினா அம்மா வர அம்பது  வினாடிகளாவது ஆகும். சடாரென ரெஜினாவை  இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல்  ரெஜினாவிற்க்கு  காது மூக்கு கண் உதடு எல்லாம் சிவக்க  முத்தங்கள் கொடுத்தான் ஜீவா. ரெஜினாவால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது.

ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா  காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு...

ரெஜினா....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா"

ரெண்டு ஸ்வீட் அவனே.....ஸாரி! அவரே தேவையான ஸ்வீட் எடுத்துக்கிட்டாரும்மா ...!

என்னடி உளர்ற...?

உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... ரெஜினா அப்பாதான்...

"ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"


பின்குறிப்பு: இதுக்கு மேல எப்பிடி கண்டினியூ பண்ணனும்னு தெரியல. நீங்களே குத்துமதிப்பா மானே தேனே பொன்மானே போட்டு உங்களுக்கு புடிச்சவங்க கூட இந்த கனவை கண்டினியூ பண்ணிக்கோங்க.


இப்படிக்கு
ரசிகன் 

செவ்வாய், ஏப்ரல் 08, 2014

பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா...! (மீள் பதிவு)



"ஓவரா சிகரெட் அடிக்காதீங்க தம்பி...மெடிடேசன் யோகால்லாம் பண்ணுங்க..இந்த பழக்கத்த அடியோட விட்டர்லாம்"

இப்படின்னு போன வாரம் அட்வைஸ் பண்ண பக்கத்துக்கு வீட்டு கேசவன் சார நேத்து புல் டைட்ல சிகெரெட்டோட  லிப்டுகிட்ட பார்த்துட்டு, என்ன சார் ஆபிஸ் பார்ட்டியான்னு கேட்டதுக்கு அவர் சிரிச்சுகிட்டே சொன்ன பதில்...."இல்ல தம்பி என் பொண்டாட்டி ஊருக்கு போயிருக்கா...!"

மேலே சொன்னது ஒரு சாம்பிள் தான்.

எல்லா ஆம்பளைங்களுக்குமே பொண்ணுங்கங்கற ஒரு விசயத்த தாண்டி ரசிச்சு அனுபவிக்கிறதுக்கு குட்டி குட்டியான (நீங்க நினைக்கிற குட்டி இல்லீங்கோ!) விஷயங்கள் நெறைய இருக்குங்க...யாருக்கும் தெரியாம திருட்டு தம்மு, பிட்டு படம், பைக்ல திருகிகிட்டு பறக்கறது , நைட் ஷோ சினிமா , பசங்களோட விடிய விடிய தண்ணியடிச்சுட்டு புல் டைட்ல கதைபேசிகிட்டே வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற படுத்து மட்டையாகறது...இப்டி நெறைய. நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாமே அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி அனுபவிச்சதா இருக்கும்...! கல்யாணத்துக்கு அப்பறம் எதுக்குன்னே தெரியாம பல விசயங்கள காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சுடறான்...!

அந்த ஐஸ்க்ரீம் வினாடிகள் கல்யாணத்துக்கு அப்பறம் எங்க போச்சு...? அது திரும்ப கெடைக்குமா.. ஏன்  கெடைக்காது பாஸ்..கண்டிப்பா கெடைக்கும்..தங்கச்சி கல்யாணம், தம்பிக்கு நிச்சயதார்த்தம், அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல, அப்பாவுக்கு ஹார்ட் சர்ஜரி இப்டி எதாச்சும் ஒரு ரீசனுக்காக டிக்கெட்லாம் போட்டுட்டு, ஊர்ல காலைல பஸ் ஸ்டாண்டுக்கு அவங்க தம்பிய கார் எடுத்துட்டு வர சொல்லிட்டு , அப்பாவுக்கு சென்ட்டு பாட்டில்லேர்ந்து உளுத்தம் பருப்பு வரைக்கும் அவங்க குடும்பத்துக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி அழகா பேக்கிங்க்லாம் முடிச்சிட்டு உங்ககிட்ட வந்து பவ்யமா கேப்பாங்க..."என்னங்க..ஊருக்கு போயிட்டு ஒரு பத்து நாள் இருந்துட்டு வரட்டுங்கலான்னு...!" அப்போ தேவை இல்லாம ஓவர் ஆக்ட் பண்ணி அடி வாங்காம அவங்கள அன்போட பஸ் ஏத்திவிட்டு வாங்க...!

பஸ் ஏத்திவிட்டுட்டு அப்டியே கண்ணை மூடி யோசிச்சு பாருங்க..கிராபிக்ஸ்ல உங்க கைல போட்ருந்த விலங்கை  உடைச்சு , அவங்க போற பஸ்ஸ ஓட்டிகிட்டு போற டிரைவர் உங்கள  ஜெயில்லேர்ந்து ரிலீஸ் பண்ற மாதிரியே இருக்கும்..அடுத்த பத்து நாளைக்கு நீங்க ஒரு சுதந்திர பறவை..இந்த மாதிரி வாய்ப்பு அடிக்கடி கெடைக்காதும் ஓய்..! ஒரு செகண்ட்  கூட மிஸ் பண்ணாம நீ அனுபவிக்கரதுலதான் இருக்கு உம்ம சமர்த்து...!

வாழ்க்கைய உங்களுக்கு புடிச்ச மாதிரி கொஞ்ச நாள் வாழுங்க...மனசுக்கு புடிச்சத செய்றவந்தான் ஓய் மனுஷன்...பிரெண்ட்ஸ வீட்டுக்கு கூப்ட்டு புல்லா தண்ணியடிச்சிட்டு. சிகரெட்ட ஊதி தள்ளிகிட்டு விடிய விடிய கதை பேசிட்டு விடியகாலைல நல்லா திக்கா ஒரு நாத்த வாந்தி எடுத்துட்டு அதுலயே குப்புற விழுந்து தூங்குவிங்க தெரியுமா....அதுல சாந்தி அடையும்யா ஒரு ஆம்பளையோட ஆத்மா... அதான் ஓய் ஜாலி..உனக்கு தண்ணியடிக்கற  பழக்கம் இல்லையா..அடிக்க கத்துகிட்டு வாந்தி எடு...வயறு வலிக்க வாந்திய எடுத்து அனுபவிச்சாதான்யா தெரியும் அந்த சொகம்..! இதத்தான்  திருவள்ளுவர் அப்பவே சொன்னாரு..


"வாந்தி எடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றோரெல்லாம்,"

" வயறு வீங்கி சாவார்" ன்னு...! 


எல்லா ஆம்பளைங்களும் இப்புடிதானா?...ஒருத்தன் கூட நல்ல புருஷன் இல்லையான்னு தாய்குலங்கள் பதர்றது எனக்கு புரியுது....ஒபாமாலேர்ந்து நம்ம எதிர்க்கட்சி தலைவர் வரைக்கும் இந்த உலகத்துல இருக்கற ஆம்பளைங்களும் எல்லாருமே இப்புடித்தான்..ஒரே ஒருத்தன தவிர..!

“எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ட்ரைன் ஏத்திவிட்டுட்டு, அந்த பிரிவு தாங்க முடியாம அந்த ட்ரைன் போன தண்டவாளத்த கட்டி புடிச்சு அழுவறானோ “,”எவன் ஒருத்தன் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பிட்டு டெய்லி நைட் எட்டு மணிக்கு கால் பண்ணி சாப்ட்டியாடா தங்கம்னு கன் மாதிரி கேட்டு பாசத்த கொட்றானோ”,(எட்ரைக்கு கால் பண்ணா வாய் கொளரும்..) “எவன் ஒருத்தன் பொண்டாட்டி பக்கத்துல இல்லாத ஒவ்வொரு நொடியும் வேதனைலையும் பிரிவுலயும் துடி துடிச்சு போய் எப்பவுமே பொண்டாட்டி நெனைப்பாவே இருக்கானோ...! அவன் மட்டும்தாங்க நல்ல புருஷன்..!” அப்டிபட்டவன் இந்த பூமிலேயே ஒரே ஒருத்தன்தான் இருக்கான்..!


அவன் வேற யாரும் இல்லைங்க...!


உங்கள் அன்பு தம்பி நான் தான். இதே ஜீவா தான்.


(டேய் டேய் டேய்...ராஸ்கல்ஸ்.இதுகெல்லாம் கைதட்டகூடாது ஆமாம்..)


மொத்தத்துல இந்த உலகத்துல ஜீவா மட்டும்தாங்க கட்டுப்பாடான , கட்டுசிட்டான பாசமுள்ள புருஷன்..அவன தவிர எல்லா ஆம்பளைங்களும் பொண்டாட்டி எப்படா ஊருக்கு போவா... பாட்டில எப்ப ஒப்பன் பண்ணுவோம்னு வெயிட் பண்ற நாதாரிங்கதான் .!


மெசேஜ்  டு ஆல் ஆம்பளைங்க ...


தம்பி அப்டி ஓரமா பாட்ஷா ரஜினிகாந்த் சார் மாதிரி ஸ்டூல் போட்டு உக்காந்துக்கறேன்...இப்டி ஒரு விசயத்த எழுதுன புண்ணியத்துக்கு நீ ஜானிவாக்கரும் கிங்ஸுமா நல்லா இருப்படா தம்பின்னு கண்ணீர் விட்டு பாராட்ட விரும்பற அன்பர்கள் அப்டியே கைல முத்தம் குடுத்துட்டு அப்பீட் ஆய்ட்டு அப்பாலிக்கா வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... பாராட்டும் நோக்கில் உணர்ச்சிவசப்பட்டு சாட்டில் வரும்போது கட்டிபுடிச்சி முத்தம் குடுக்கும் ஆர்வகோளாறு அன்பர்கள் ஏதும் அப்படி செய்யாமல் இருக்கவும் தங்கள் காலை பிடித்து அன்போடு கதறி கேட்டுகொள்ளபப்டுகிறீர்கள்...!

இவ்ளோ நேரம் நல்லா க்ரிப்பாதான பேசுனான் ..திடீர்னு ஏன்  இப்டி கவுந்தடிக்ரான்னு தோணுதா....?

”யோவ்.,இத சாட்ல இருந்து ஓடி போன என் பொண்டாட்டி படிச்சாலும் படிப்பாயா..!”

”தயவு செஞ்சு போயிருயா..! ”


இப்படிக்கு
உங்கள்  அன்பு தம்பி
ஜீவா 

மணிரத்னம் - பார்ட் 1




மணி ரத்னத்தைப் பற்றி எனக்கு முதலில் தெரிந்தது, ‘இதயகோயில்’ (இப்படித்தான் படத்தின் பெயர் இருந்தது) திரைப்படத்தின் இசைத்தட்டு வெளிவந்தபோதுதான் (1985).  அந்த இசைத்தட்டின் பின்னட்டையில், கறுப்பு வெள்ளையில், பெரிய போண்டாக்கண்ணாடி அணிந்த ஒரு நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இருந்தது அதற்குக் கீழே, ‘மணிரத்தினம்’ என்று எழுதியிருக்கும். அதன்பின்னர் ‘மௌனராகம்’ மற்றும்  ‘நாயகன்’ படங்களின் இசைத்தட்டு வெளிவந்தபோது அதே முகத்தை மறுபடியும் பின்னட்டைகளில் பார்த்தேன். அந்த இசைத்தட்டின் அட்டையில், கமலும் சரண்யாவும் பெரிய ஜட்கா வண்டியில் செல்லும் வண்ணமயமான புகைப்படம் இருக்கும்.

என்னுடைய சக நண்பன் ஒருவன் திடீர் என்று இந்த புத்தகத்தை கையில் கொண்டு கொடுத்தான். எனக்கு மணிரத்தினத்தை ரொம்ப பிடிக்கும் என்று  கிடையாது. அனால் ஒரு காலத்தில் சினிமா என்றால் அது மணிரத்தினம் சினிமா என்று மனதில் நினைத்ததுண்டு. மணிரத்தினம் படங்களில் வரும் இசையிலிருந்து, ஒளிப்பதிவு வரை எல்லாமே மணிரத்னம் தான் பண்ணியது என்று நினைத்து அதைப்பற்றி நண்பர்களுடன் மணிக்கணக்கில் சிலாகித்து பேசிய நாட்களும் உண்டு. அதனால்தான் இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற ஆர்வம் என்னை படிக்க தூண்டியது. இது மணிரத்தினத்தின் சுயசரிதை இல்லை. அவர் எழுதிய புத்தகமும் இல்லை. அவருடன் உரையாடிய பரத்வாஜ் ரங்கன் என்பவரின் மணிரத்தினத்தை பற்றிய புரிதலூடே சொல்லப்பட்டிருக்கிறது.

முன்னுரையைப் படித்ததுமே, ‘அடடா.. புத்தகம் முழுக்க மணிரத்னத்தை இப்படித்தான் புகழ்ந்து பரத்வாஜ் ரங்கன் எழுதியிருப்பாரோ?’ என்ற எண்ணம் எழுந்தது.

பொதுவாக மணிரத்னம் பல சினிமா இயக்குநர்கள் போல பேட்டிகளை அதிகமாக அளிப்பதில்லை. அட்லீஸ்ட் தமிழில். ‘இருவர்’ திரைப்படத்தைப் பற்றி விகடனில் மதனுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை, அந்தப்படம் வெளிவந்தபோது அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் படித்த பல விஷயங்கள் நினைவிருக்கின்றன. உதாரணமாக, படத்தின் பல காட்சிகளில் மணி ரத்னம் திரட்டிய கூட்டத்தைப் பற்றி. அந்தப் படத்தைப் பார்க்கையில் இந்தக் கூட்டத்தை கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அனைவருமே தத்ரூபமாக ரியாக்ட் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். அதுவும் பல படங்களில் அரிதுதான். இதேதான் பின்னாட்களில் மணிரத்னம் எடுத்த ‘குரு’ படத்துக்கும் பொருந்தும்.

மணிரத்னம் படங்களில் டயலாக் சிறுகச்சிறுகக் குறைந்துகொண்டே வந்ததில், இவர் பொதுவாகப் பேசும்போதே அப்படித்தான் பேசுவார் போலும் என்ற கருத்து எல்லாருக்கும் பரவி, அதைப்பற்றிப் படங்களிலும் மீடியாவிலும் நகைச்சுவை துணுக்குகள் எழுதப்படுவதில் வந்து முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட வேளையில், மணி ரத்னமும் பிறரைப் போன்று நன்றாகப் பேசக்கூடியவர்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தப் புத்தகம். பல இடங்களில் மிக விரிவாகவே பேட்டியளித்திருக்கிறார்.

புத்தகத்துக்கு மணி ரத்னம் எழுதியிருக்கும் முன்னுரையில், அவரைப் பற்றி அவரே சொல்லும்போது, அவரது படங்களை எப்போது உட்கார்ந்து பார்த்தாலும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் படத்தில் ஒன்ற முடியாமல், அவர் செய்திருக்கும் தவறுகள் தொந்தரவு செய்வதாக எழுதியிருக்கிறார். புத்தகம் முழுதுமே மணி ரத்னம் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருப்பதற்கு அவரது முன்னுரையே ஒரு எடுத்துக்காட்டு.

பரத்வாஜ் ரங்கன் எழுதியிருக்கும் நீளமான முன்னுரையைப் படித்தபின் எனக்குத் தோன்றியது – மணி ரத்னம் மீதான நாஸ்டால்ஜியாவால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் ரங்கன் என்பதே. காரணம், தான் பிறந்து வளர்ந்த சென்னையைப் பற்றியும், ‘மணி ரத்னத்தின் காலம்’ என்பதில் தனது இளமையைக் கழித்தது பற்றியுமான ரங்கனின் வரிகள். ’Zeitgeist’ என்ற வார்த்தையால் (Zeitgeist defining showman) மணி ரத்னத்தைப் பற்றிச் சொல்கிறார். அந்த வார்த்தைக்கு, ’ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலாச்சாரத்தை influence செய்வது’ என்று பொருள். மணி ரத்னத்தின் படங்கள், எண்பதுகளின் இளைஞர்களை அப்படி பாதித்தன என்பது ரங்கனின் கருத்து. அவரே அப்படி பாதிக்கப்பட்டதை சொல்கிறார். ’அக்னி நட்சத்திரம்’ படத்தில், பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் டாப் ஒன்றை அணிந்துகொண்டு, வாக்மேனில் பாட்டு கேட்டபடியே அமலா வரும் காட்சியைப் போன்றதுதான் அக்கால இளைஞர்களின் fantasy என்றும், அப்படிப்பட்ட fantasyகளை கச்சிதமாக திரையில் காண்பித்ததுமூலம், அந்த இளைஞர்களின் சமுதாயத்தையே மணி ரத்னம் பாதித்தார் என்றும் ரங்கன் எழுதியிருக்கிறார். அதேபோல், முன்னுரையின் துவக்கத்தில், மணி ரத்னத்தின் சந்திப்புகளில் ஆரம்ப சில சந்திப்புகளில் மணி ரத்னத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், அவர் முன்னர் இருந்த மேஜையையே பார்த்துக்கொண்டே கேள்விகள் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ரங்கன். எந்த இளைஞனுக்குமே, அவன் சார்ந்த ஒரு உலகை திரைப்படங்களில் பார்க்கையில் அவசியம் தன்னை அந்தப் படத்துடன் ஒன்றுபடுத்திக்கொள்ளத்தான் தோன்றும். அப்படி மெட்ராஸைப் பற்றிப் பல விஷயங்களை ரங்கன் பகிர்கிறார். அவை எப்படியெல்லாம் மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்பட்டன என்பதைப்பற்றியும் எழுதியிருக்கிறார்.

ரங்கனின் idolலாக இருந்தவர் மணி ரத்னம். எனவே, அப்படிப்பட்ட ஒரு மனிதரை நேரில் சந்திக்கும்போது அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், இந்த இடத்தில் வேறொன்றும் தோன்றியது. கரன் தாப்பருக்கு அமிதாப் பச்சன் ஒரு idol என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், அமிதாப்பை கரன் தாப்பர் பேட்டி எடுக்கும்போது அவசியம் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார். காரணம், பேட்டிகளில் ஒரு ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் முடிந்தவரை வெளிக்கொணர்வதுதான் அதைப் பார்ப்பவர்களுக்கும் அந்தப் பேட்டியின் பயனை முழுமையாக வழங்கும். ஆனால் மணி ரத்னத்தின் மீதான அதீத மரியாதையால் பல முக்கியமான கேள்விகளை புத்தகம் முழுதுமே ரங்கன் கேட்கவே இல்லை. கேட்டிருந்தால் புத்தகம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

புத்தகம், மணி ரத்னத்தின் சிறு வயதில் இருந்து தொடங்குகிறது. தான் பார்த்த சில ஆரம்பகாலப் படங்களாக உத்தமபுத்திரன், பட்டினத்தில் பூதம் போன்ற படங்களைச் சொல்கிறார். கூடவே, அவரது மாமாவான தயாரிப்பாளர் ‘வீனஸ்’ கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் சொல்கிறார். மணி ரத்னத்தின் தந்தையான S.G ரத்னம், ஒரு சினிமா விநியோகஸ்தர். ஆகவே, இயல்பிலேயே சினிமாப் பின்னணி மணி ரத்னத்துக்கு இருந்தது. திரைப்படங்களில் சுவாரஸ்யமும் இதனாலேயே அதிகரித்ததாகவும் சொல்கிறார். மணி ரத்னத்துக்கு மிகவும் பிடித்த முதல் படமாக ஜான் வேய்னின் ’ஹடாரி’ (Hatari) இருக்கிறது. அக்காலத்தில் தமிழகத்தில் மிகப் பிரபலமாக ஓடிய படம் அது. பெரும்பாலும் டூரிங் டாக்கீஸ்களில்தான் படங்களைப் பள்ளி நாட்களில் பார்த்ததாகவும், அவ்வப்போது ஹாஸ்டலில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் திரையரங்குகளிலும் படங்கள் பார்த்ததாகவும் சொல்கிறார் (தீபாவளி ரிலீஸ்கள் – இத்யாதி).


இதன்பின் பம்பாயில் MBA. ஃபைனான்ஸ். ஒரு மேனேஜ்மெண்ட் கன்ஸல்டன்ஸியில் வேலை. அப்போது, அந்த வேலையில் திருப்தி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில், தனது நண்பர் ரவி ஷங்கர் (பி.ஆர். பந்துலுவின் மகன்) ஒரு கன்னடத் திரைப்படம் எடுக்க இருந்ததாகவும், அதற்குத் திரைக்கதை எழுதுவதில் உதவும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதனால்தான் ஒரு விபத்து போல திரைப்படங்களுக்குள் வந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். ஒவ்வொரு மாலையும், அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்த விவாதத்தில் நேரம் ஓடும். அப்போதெல்லாம், தந்தைக்கு எழுதிய ஒருசில கடிதங்களைத் தவிர வேறு எதனையும் எழுதியதே இல்லை என்றும், ஒரு வித அறியாமையில் எழுந்த குருட்டு தைரியத்தால்தான் இதையெல்லாம் அவர்கள் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். இதன்பின்னர் படப்பிடிப்பு துவங்கியது. மணி ரத்னத்னம், இதற்கு முன்னர் எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல் நேரடியாகப் படம் எடுக்க வந்தவர் என்று ஒரு கருத்து பொதுவில் நிலவுகிறது. ஆனால், அப்போதிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல இருந்த போது கிடைத்த மூன்று மாத அவகாசத்தில் இந்தக் கன்னடப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றதாகவும், படப்பிடிப்பு கோலாரில் தொடர்ந்தபோது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அங்கேயே சென்றுவிட்டதாகவும் சொல்கிறார் மணி ரத்னம்.

அந்தத் திரைப்படம் வெளிவரவில்லை (Bangarutha Ghani). ஆனால், அந்தப் படப்பிடிப்பின்போதே, இனிமேல் திரைப்படங்கள் இயக்குவதில்தான் தனது எதிர்காலம் என்று உணர்கிறார் மணி ரத்னம். அந்தச் சமயத்தில் அவரது எண்ணம், ஒரு திரைக்கதையை எழுதி, அதை ஒரு இயக்குநருக்கு விற்று, அவர் கூடவே படப்பிடிப்புக்குச் சென்று, அங்கே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதன்பின் திரைப்படங்கள் இயக்கவேண்டும் என்பதாக இருந்தது. ஒருவேளை திரைப்படத்துறையில் எதுவும் சரியாக வரவில்லை என்றால், மறுபடியும் ஒரு வருடத்தில் வேலை ஒன்றைப் பிடித்து செட்டில் ஆகிவிடலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறார். ஆனால், தனது முதல் திரைக்கதையான ‘பல்லவி அனுபல்லவி’யை எழுதியபின்னர், தானே அதனை இயக்கலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அப்படியே செய்தார்.

இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கருத்து மணி ரத்னத்தால் சொல்லப்படுகிறது. தனது சிறுவயதில், அதிகமான நல்ல படங்கள் தமிழில் வெளிவந்திருந்தால், ஒருவேளை பிந்நாட்களில் இயக்குநர் ஆகலாம் என்ற எண்ணம் தனக்கு வந்திருக்காது என்று சொல்கிறார். முதலில் பாலசந்தர். அதன்பின் எழுபதுகளின் பாதியில் பாரதிராஜாவும் மஹேந்திரனும் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். பதினாறு வயதினிலேவையும் உதிரிப்பூக்களையும் பார்த்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் தனது படிப்பை முடித்துவிட்டு, மணி ரத்னத்தின் முதல் படத்தின் வேலைகளை அவர் துவக்கிய காலத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள், இன்றுவரை அவர் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாக இருந்தாலும், தமிழ் சினிமா அந்தக் காலகட்டத்தில் தேங்கிய நிலையில் இருந்தது என்றும், அவரது கல்லூரிக் காலகட்டத்தில் இருந்து பல வருடங்கள் அதே நிலைதான் தொடர்ந்தது என்றும், இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான படங்கள் வெளிவந்ததால்தானோ என்னவோ தனக்கும் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் தோன்றியது என்றும் மணி ரத்னம் சொல்கிறார். ஒருவேளை பாலசந்தர்களும் பாரதிராஜாக்களும் மஹேந்திரன்களும் இன்னும் அதிக அளவில் இருந்திருந்தால், திரைப்படங்களை இயக்கும் ஆசையே தனக்கு வந்திருக்காது என்றும், திரைப்படங்களைப் பார்க்கும் ஒரு ரசிகனாகவே தனது வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன் என்றும் குறிப்பிடுகிறார்.

மணி ரத்னத்தின் படிப்பு 1977ல் முடிவடைந்தது. அதன்பின் ஒன்றரை வருடங்கள் கன்ஸல்டண்ட்டாக வேலை. 1979ன் பாதியிலிருந்து, திரைப்படத்துறையில்தான் தனது எதிர்காலம் என்ற முடிவு. பல்லவி அனுபல்லவியை இங்லீஷில் திரைக்கதையாக எழுத ஆரம்பித்தது 1980ல். அதை ஒரு மாதத்தில் முடித்தார். அதிலிருந்து, படம் வெளியான 1983 ஜனவரி வரை இருந்த காலம்தான் மிகவும் கடினமானது என்றும், அந்தச் சமயத்தில் திரைப்படங்களில் நுழைய ஆரம்பித்திருந்த ஒரு சிறு நண்பர்கள் கும்பலோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும் சொல்கிறார். அந்த கும்பல் – ஒளிப்பதிவாளர்கள் P.C ஸ்ரீராம் மற்றும் சுரேஷ், இயக்குநர்கள் பாரதி – வாசு மற்றும் குட்டி பிரகாஷ் (தற்போது ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றின் உரிமையாளர்). மணி ரத்னத்தின் பல்லவி அனுபல்லவியின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நேரத்தில், பாரதி – வாசுவின் பன்னீர் புஷ்பங்கள் வெளியாகிவிட்டது. இவர்கள் அத்தனை பேருமே அந்தக் கால உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்தான் காஃபி அருந்தியபடியே பெரும்பாலான தருணங்களை செலவிட்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே, தங்களைப் பற்றிய பல கனவுகளையும் கொண்டிருந்திருக்கின்றனர்.

...தொடரும்