புதன், ஏப்ரல் 09, 2014

சத்தமில்லாமல் சில முத்தங்கள்..



அம்மா நூறு டெசிபலில் கத்தினாள்.

"ரெஜினா  ...ஃபோன் அடிக்குது பாரு..."

ரெஜினா எரிச்சலாக வந்தாள். அப்பாவுக்கான ஃபோனா இருக்கும். இன்னும் எல்லார்ட்டையும் லேன்ட்லைன் நம்பர் கொடுக்கற புண்ணியவான்.

'ஹலோ.."

"ரெஜினா இருக்காங்களா..?"

"நீங்க..?"

"நாங்க ஆர்டிஓ  ஆஃபீஸ்ல இருந்து பேசறோம்..இன்னும் இந்த வருஷம் நீங்க டாக்ஸ் ஃபைல் பண்ணலை.இது சட்டப்படி குற்றம்.இதுக்கு எகனாமிக் அஃபன்ஸ் ஆக்ட் 568 சி படி எவ்வளோ அபராதம் தெரியுமா?..."

"ஆர்டிஓ ஆஃபீஸ்ல இருந்து டேக்ஸா...ஹேய் ஹேய்...இரு...!

யார் இது...? ஹேய் ..ஹேய் ஜீவா..நீதான...!"

"ஹா..ஹா...கண்டுபுடிச்சுட்டியா...எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்திருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு  ஃபோன் பண்ணி கேக்கப்போறேன்"

"அடப் பாவி...அதுக்காக உன்னை யாரு லேண்ட் லைனுக்கு பண்ண சொன்னது?அம்மாவுக்குத் தெரிஞ்சா...!சரி எங்க வரணும் சொல்லு வந்து குடுத்துத் தொலைக்கிறேன்"

"சரியா அரை மணி நேரத்துல உங்க வீட்டுப் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு..நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...!"

யாருடி அது ஃபோன்ல...?

ரிசீவரைப் பொத்தி..."உனக்குதான்மா...!

ரிசீவரை அம்மா கையில் கொடுத்தாள்.

"ஹலோ யாரு.."

ஜீவா  உஷாரானான்.

 குரலை கொஞ்சம் மாத்தி "இந்த டியூனை காப்பி பண்ணனும்னா ஸ்டார் மற்றும் ஒன்பதைஅழுத்துங்க. வேண்டாம்னா வீட்ல டேப் ரிக்கார்டர்ல போட்டு கேளுங்க.." ஃபோனை டக்கென வைத்துப் பெருமூச்சு விட்டான்.

ராட்சசி...! மாட்டிவிட பார்க்கிறா..

சரியாக அரைமணியில் ரெஜினா பச்சை சல்வாரில் பஸ் ஸ்டாப்பை அடைந்திருந்தாள். கண்ணுக்கெட்டின தூரம் வரையில் யாரும் வரவில்லை ஒரே ஒரு நகர பேருந்தை தவிர. எங்க போய் தொலைஞ்சான் இந்த ஜீவா  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பஸ்ஸினுள் இருந்து குரல் கேட்டது...

ரெஜினா..வா ஏறு...!

ராஸ்கலே தான்.

"வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்ன...!" - ரெஜினா

"ஆமா அதான் பிக்கப் பண்ணிட்டேன்ல..பஸ்லன்னு சொல்ல மறந்துட்டேன்...!"

அடக்கடவுளே இவனோட எப்படி லைஃப் முழுக்க ..என்று யோசித்த படியே ஜீவாவோடு பின் சீட்டில் அமர்ந்தாள்.

"சரி இப்பக் குடு" - ஜீவா 

"அய்யோ பஸ்லயா...என்ன விளையாடறியா?"

"சரி! அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் வரும்..யாரும் இருக்க மாட்டாங்க!"

"ஜீவா ... உனக்கு விவஸ்தையே கிடையாது!"

சரி இறங்கினவுடனே குடு!

ஜீவா ...நீ அடங்க மாட்ட! முதல்ல என்னை வீட்ல கொண்டு போய் விடு. அம்மா தேடுவாங்க!

அடிப்பாவி! நேத்து அப்படி கொஞ்சினே!

"ம்ம்..அது ஃபோன்ல..போர்வையை ஃபுல்லா போர்த்திட்டு ஒரு தைரியத்துல சொல்லிட்டேன்.அதுக்காக இப்படியா பப்ளிக்ல..! உன்னை ரெண்டு நாள் காயப்போட்டாதான் சரிப்படுவ!"

"அப்போ இன்னைக்கு கிடையாதா?"

"இன்னிக்கு அதுக்கு சண்டேடா செல்லம்....இப்போ சமர்த்தா என்னை வீட்ல கொண்டு போய் விடுவியாம்.. இல்லைன்னா...இந்த வாரம் முழுக்க சண்டே தான்..!"

சே..என்றிருந்தது ஜீவாவிற்கு. எவ்வளவு ஆசையாக வந்தோம். -ஜஸ்ட் ஒன்னு கூட கிடைக்கலையே என வெறுப்பு உச்சந்தலையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

ம்ஹ்ம்...ஓகே! வா உங்க வீட்டுக்குப் போகலாம்!

"வீட்டுக்கு உன் கூடவா...அவ்வளோதான் அம்மா தலைலயே ரெண்டு வைப்பா... இதே பஸ்ல ரிடர்ன் போயிக்கலாம்...ஸ்டாப்ல இறங்கி என் வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும். சார் கவலைப்படாதீங்க...!"

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! வா " என்று முதலில்ரெஜினாவை அனுப்பி வைத்து விட்டு சற்று நேரம் கழித்து ஜீவா ரெஜினா வீட்டுக்கு வந்தான்.

"வாங்க மாப்ப்ள...அப்பா எதுவும் தகவல் சொல்லி விட்டாரா! திடு திப்புன்னு வந்துருக்கீங்க...ம்மா ரெஜினா ... அம்மாட்ட சொல்லி காஃபி போட சொல்லு!"

"இல்லை மாமா வந்து, அப்பா அட்வான்சுக்கு மண்டபம் குடுத்துடீங்களான்னு கேக்க சொன்னார்...இல்லை இல்லை.. மண்டபத்துக்கு அட்வான்ஸ்......."

ரெஜினா அப்பாவோட மீசையை பார்த்து, ஜீவா நாக்கு பயத்துல உளறி கொட்ட ஆரம்பித்தது... ஆறாங்கிளாஸ் பயாலஜி டீச்சரைத் தவிர ஜீவா இப்படி தடுமாறி அவனே பார்த்ததில்லை.

" ஹா ஹா புரியுது மாப்ள  ..நீங்க ரெஜினாகிட்ட பேசிட்டு இருங்க..நான் இதோ வந்துடறேன்!"

மீசை வைத்த கதர் துண்டு பார்ட்டியானாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

ஹாலில் யாருமில்லை. ரெஜினா அம்மா வர அம்பது  வினாடிகளாவது ஆகும். சடாரென ரெஜினாவை  இடுப்போடு அணைத்து சத்தமே இல்லாமல்  ரெஜினாவிற்க்கு  காது மூக்கு கண் உதடு எல்லாம் சிவக்க  முத்தங்கள் கொடுத்தான் ஜீவா. ரெஜினாவால் திமிறக்கூட முடியவில்லை...அட்ரினலின் உச்சத்தில் இருந்தது.

ராட்சஸன்...சாதிச்சுட்டான் என நினைத்து உதட்டை துடைத்து கொள்ளவும், அம்மா  காஃபி கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"என்னடி பேந்த பேந்த முழிச்சுட்டு இருக்க...மாப்ளக்கு காஃபியை கொடு...

ரெஜினா....மாப்ளைக்கு ஸ்வீட் கொடுத்தியா"

ரெண்டு ஸ்வீட் அவனே.....ஸாரி! அவரே தேவையான ஸ்வீட் எடுத்துக்கிட்டாரும்மா ...!

என்னடி உளர்ற...?

உள்ளே இருந்து சவுண்ட் வந்தது... ரெஜினா அப்பாதான்...

"ஏய்...அவங்க மாத்தி மாத்தி உளறிக்கட்டும்...நீ விட்ரு!"


பின்குறிப்பு: இதுக்கு மேல எப்பிடி கண்டினியூ பண்ணனும்னு தெரியல. நீங்களே குத்துமதிப்பா மானே தேனே பொன்மானே போட்டு உங்களுக்கு புடிச்சவங்க கூட இந்த கனவை கண்டினியூ பண்ணிக்கோங்க.


இப்படிக்கு
ரசிகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக