ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

ஜிகர்தண்டா (2014) – Analysis




நேற்று தான் ஜிகர்தண்டா பார்த்தேன் ...நல்ல மேக்கிங்குடன் கூடிய ஒரு நல்ல படம். 2014-ல் இது வரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முதல் மூன்று ரேங்கிற்குள் வரத் தகுதியுள்ளது. முதல் பாதி நல்ல க்ரிப்பிங்காய் நம்பகத்தன்மையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது எதார்த்தமல்ல, நிறைய இடங்களில் ஒன்றுக்குப் பத்தாய் மிகைப்படுத்தி சொல்லும் ட்ராமாட்டிக் மீடியா. ஆனால் அந்த மிகைப்படுத்துதலை சினிமா பார்க்கும் ரசிகன் உணராத படி, அவன் அறிவு முழித்துக் கொள்ளாதபடி கொண்டு சொல்வது மிக முக்கியம். அந்த வகையில் எனக்கு இன்றைக்கு கால் மேல் கால் போட்டு யோசிக்கும் போது இரண்டாவது பகுதியில் தெரியும் மிகைப்படுத்துதல் நேற்று படம் பார்க்கும் போது அவ்வளவு தெரியவில்லை.(அத்தாம் பெரிய ரவுடிகள் கூட்டமாய் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு குரங்காட்டம் ஆடுவதெல்லாம் கொஞ்சமாய் நெருடியது) 

ஆனால் இரண்டாம் பாதியில் கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டார்களோ என்று கண்டிப்பாய் தோன்றியது. படம் முடிந்துவிட்டது நல்ல எடுத்திருக்காங்க என்று நாம் மனதில் எண்ட் கார்ட் போட்ட பிறகும் படம் இருபது நிமிடத்திற்கு ஓடுகிறது. க்ரிஸ்ப்பாய் முடித்திருக்கலாம். சரி விடுங்க படத்தை பற்றி எல்லோரும் கதறக் கதறக் கருத்து சொல்லிவிட்டார்கள். தலையில் ஒற்றை ரோஜாவை சொருகிக் கொண்டு கமலோடு "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" ஆட்டம் ஆடிய அம்பிகா, பாயா கடை ஆயாவாக வருகிறார். காலத்தின் கோலம் சகிக்கவில்லை. லஷ்மி மேனனிடம் அவர் தான்  ஹீரோயின் என்ற சொல்லி படத்தில் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ பாவம். சங்கிலி முருகனுடைய அந்தப் பொட்டிக் கடை தாத்தா ரோலையாவது லஷ்மி மேனன் கேட்டு வாங்கி நடித்திருக்கலாம் கொஞ்சம் ஸ்கோப் இருந்திருக்கும். சித்தார்த்துக்கும் அவருக்கும் செட்டே ஆகவில்லை. சின்ன சின்ன குறைகள் மட்டுமே. புல் பேக்கேஜாய் பார்க்கும் போது ஒரு நல்ல மேக்கிங்குடன் கூடிய நல்ல படம். இயக்குநருக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி, கல்ட் ஃபிலிம் ட்ரெண்ட் செட்டர் என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. சமீபத்திய தமிழ் சினிமாவில் என்னளவில் அது ஆரண்ய காண்டமாகவே இன்று வரை இருக்கிறது. இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் எந்தத் தொய்வுமில்லாமல் நல்ல இண்ட்ரஸ்டிங்காய் ஓடும் படங்கள் தமிழில் அரிதாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்தப் படம் கானல் நீராய் வந்ததால் இந்தக் கொண்டாட்டமாய் இருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு வித்தை தெரிந்திருக்கிறது, அவரின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

On a different subject - தமிழ் சினிமா ரவுடி கலாச்சாரத்தை ஓவராக glorify செய்வது கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறது. கத்தியை எடுத்து அப்படியே ஒரு சொருவு சொருவுவது, போகிறவர் வருகிற பொதுஜனத்தை மண்டையில் போடுவது, பெட்ரோலை ஊத்திக் கொளுத்துவது, கக்கூஸில் கட்டையால் அடிப்பது  போன்ற எல்லா காட்சிகளிலும் நாம் தான் அந்த அடிவாங்குகிற பொதுஜனம் என்பதை மறந்து தியேட்டரில் கை தட்டிக் கொண்டிருக்கிறோம். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்த மாதிரி இந்த ரவுடிகளை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் திகட்டும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் படுகிறது. "இந்தியன்" படம்  எடுத்து பொதுமக்களோ அதிகாரிகளோ லஞ்ச லாவண்யத்தில் திருந்தவில்லை, ஆனால் இந்த ரவுடித்தனத்தை அஸ்வமேத யாகம் நடத்திய மாதிரி இப்படி ஒரேடியாய் ஹீரோத்தனமாய் காட்டினால், ரவுடி ஆகலாமா என்று நினைக்கும் அப்ரசண்டிகளெல்லாம் சினிமாவைப் பார்த்து விட்டு வெளிய வரும் போதே சம்பவம் நடத்தி க்ராஜுவேட் ஆகும் டீட்டெயில் வவுத்தக் கலக்குது.

மொத்தத்தில் ஜிகர்தண்டா எல்லா புத்திஜீவிகளும் கொண்டாடி கொண்டிருப்பதைப்போல தமிழ் சினிமாவின் புதுமொழி ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக