செவ்வாய், அக்டோபர் 25, 2011
ஞாயிறு, செப்டம்பர் 11, 2011
ஒலக சாம்பியன் (கிரிக்கெட்)
ஜீவா நேத்தைக்கு மேட்ச் பாத்தியா? சச்சின் பட்டைய கிளப்பிடாருடா..
சாரி மாம்ஸ் நான் மேட்ச் பாக்குறது கிடையாது..
என்னோட நண்பன் என்னை தீண்டதகாதவன் போல பார்க்க ஆரம்பிச்சான்...
அந்த டைம் கிரிக்கெட் ஜூரம் இந்தியா முழுவதும் பற்றிகொண்டிருந்த நேரம். யாரை பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட். கிரிக்கெட்பத்தி தெரியாதவன எதோ வேற்றுகிரகவாசி போல பார்க்க ஆரம்பிச்சாங்க.யார் கூட பேசுனாலும் பேச்சு எங்க எங்கையோ போயி கடைசியில கிரிக்கெட் ல தான் வந்து முடியும்.போதாததுக்கு இந்த பொண்ணுகளும் கிரிக்கெட் பத்தி பேசுறவங்கதான் அறிவாளின்னு நம்ப ஆரம்பிச்சு அவங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சாங்க.
நான், சடையப்பன், ஸ்டாலின், சுரேஷ் எல்லாரும் நடுத்தர குடும்பத்த சேர்ந்தவங்க. கிரிக்கெட் பாக்குறதுக்கு வீட்டில டிவி இல்ல. அதுவுமில்லாம எப்போ பார்த்தாலும் வீட்டில படிப்பு படிப்பு தான் முக்கியம் னு அடிவாங்கி அடிவாங்கி வளர்ந்த பயலுக. எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கில்லி, கோலி, புளியம்கொட்டை விளையாட்டுகள் தான். இப்போ இந்த கிரிக்கெட் எங்களுக்கு பெரிய சவாலா போச்சு. நாங்க நாலுபேரும் மீட்டிங் போட்டு இனி கிரிக்கெட் பத்தி தெரிஞ்சுகிட்டுதான் அடுத்த வேலை னு சபதம் எடுத்துகிட்டோம். அதுக்காக எப்போ எப்போ சான்ஸ் கிடைக்குதோ பக்கத்துக்கு வீடு, டிவி ஷோரூம்-ல எல்லாம் ஒளிஞ்சு நின்னும் வரிசையில நின்னும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சோம். கிரிக்கெட் பத்தி போட்டோ, நியூஸ் எதாச்சும் பார்த்தா ஆர்வமா அதை படிக்கச் ஆரம்பிச்சோம். என்ன எழவோ இந்த இங்கிலீஷ்காரங்க பிளேயர்ஸ் பெயரு தான் வாயில நுழைய மாட்டேங்குது. இருந்தாலும் உருப்போட்டு படிச்சு மனபாடம் பண்ணிகிட்டோம். நான் எல்லாம் நைட் ல தூங்க போறதுக்கு முன்னால மார்க் வாவ் (mark waugh) னு நூறு வாட்டி ஸ்லோகன் சொல்லிக்கிட்டு தான் படுப்பேன். எப்படியோ என்னோட பிரெண்ட்ஸ் விட நான் சீக்கிரமாவே கிரிக்கெட் பத்தி கொஞ்சம் விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.
மச்சான் அந்த பால் அவன் ஆப் சைடு ல அடிச்சிருக்கனும்டா
ச்சே இந்த லெக் கட்டர் பால் அடிக்க தெரியாம பம்முரானே..
ஓ ச்சே..என்னடா இவன் பௌலிங் இப்பிடி போடுறான். ஒரு பௌன்செர் போட்டா இவன ஈசியா தூக்கிடலாம்டா..
என்னோட பிரெண்ட்ஸ் என்னையே வாய பொளந்து பார்த்துகிட்டு இருந்தாங்க. மச்சான் எப்பிடிடா இவ்வளவு மேட்டர் தெரிஞ்சுகிட்டே னு ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு முதல் என்னோட குரூப் ல கிரிக்கெட் குரு நான் தான். மத்தவங்க எல்லாம் சிஷ்யனுங்க. கிரிக்கெட் பத்தி எதாச்சும் கேட்கனும்னா என்கிட்ட வருவாங்க. எப்படியோ இனி அடுத்தது பெரிய கிரிக்கெட் பிளேயர் ஆயிடனும் னு நாங்க முடிவு பண்ணிட்டோம். உட்காந்தா கிரிக்கெட், படுதா கிரிக்கெட், சாப்புடுற நேரமும் கிரிக்கெட், கக்கூஸ் போனா கூட கிரிக்கெட் பத்திதான் நினைப்பு. வீட்டில பெயரு தெரியாத கிரிக்கெட் ப்ளேயர்ஸ் போஸ்டர் எல்லாம் ஒட்டி வீட்டு சுவத்த நாரடிசிகிட்டு இருந்தோம். அதுக்காக அவங்க அவங்க அம்மாகிட்ட இருந்து விளக்குமாத்து அடியெல்லாம் வாங்கி தங்கச்சிங்க கிட்ட இருந்து நாசமா போறவனே-னு பல வசவு சொல்களெல்லாம் வாங்கி கிரிக்கெட்காக வாழ்க்கைய தியாகம் பண்ணிகிட்டோம்.
எங்க வீடு பக்கதுல ஒரு புரபசர் வீடு கொஞ்சம் பணக்கார வீடு. டிவி வசதியெல்லாம் உள்ள வீடு. அந்த வீட்டில சேகர் னு ஒரு பையன் காயத்திரி னு ஒரு பொண்ணு. இரண்டு பேருமே எங்களை மாதிரி டீன் ஏஜ் தான். அவளை நான் நீ னு போட்டி போட்டு சைட் அடிப்போம். செமையா அவ முன்னால சீன் எல்லாம் போடுவோம். அந்த பையன் எங்க கூட எல்லாம் அவளவா பிரெண்ட்ஷிப் இல்லை. அவனோட பிரெண்ட்ஷிப் எல்லாம் பெரிய இடத்து பசங்க கூட தான். அடிக்கடி பைக்-ல பிரெண்ட்ஸ் வருவாங்க போவாங்க. இருந்தாலும் எங்களை பாக்கிறப்ப சிநேகமா சிரிச்சுக்குவான். அப்படியே அவன்கிட்ட கொஞ்சம் சிரிச்சு சிரிச்சு எப்படியோ அவங்க வீட்டுக்குள்ளே பொய் டிவி பாக்குறதுக்கு பெர்மிசன் வாங்கிட்டோம். அவனுக்கு கிரிக்கெட்னா உசுரு. அதனாலதானோ என்னமோ நாங்களும் கிரிக்கெட் பார்க்க வரோம் னு சொன்னதும் ஒத்துகிட்டான். அவன் வீட்டில போய் கிரிக்கெட் பாக்குறப்ப, நான் ஆப் சைடு, லெக்சைடு, மிடில் ஸ்டெம்ப் அப்படி இப்படி னு கொஞ்சம் டயலாக் எல்லாம் விடுவேன். சில நேரம் நான் சொல்றது போல எவனாச்சும் சிக்ஸ் அடிப்பான். இல்லாட்டி அவுட் ஆகுவான். உடனே நான் "பாத்தியா மச்சி நான் சொன்னேன் இல்ல, இந்த பால் அவன் கொஞ்சம் தூக்கி அடிச்சிருக்கனும்டா..அப்போ அவுட் ஆகிருக்க மாட்டான். ச்சே இப்பிடி பண்ணிட்டானே" னு எதோ சச்சின் க்கு நான் தான் கிரிக்கெட் கத்து குடுத்தமாதிரி உதார் விடுவேன். என்னோட பிரெண்ட்ஸ் மூணு பேரும் ஆமா ஆமா னு தலைய ஆட்டுவாங்க. அப்படியே ஓரக்கன்னாலே அவளை பார்ப்பேன். அவளும் என்னை பார்த்து லைட்டா சிரிப்பா. பசங்க அப்படியே என்னை தெய்வமா பார்த்து வாயடைச்சு பொய் நிப்பாங்க.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எங்களுக்குள்ள கிரிக்கெட் தீ வளர ஆரம்பிச்சுது. கில்லி, கோலி, புளியம்கொட்டை விளையாட்டெல்லாம் மறந்து போனது. தென்னை மரத்து மட்டையை பேட் மாதிரி செதுக்கி அதை வச்சு உருண்டையா எது கிடைச்சாலும் அதை பவுலிங் போட்டு கண்ட கண்ட இடத்துல எல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம். எங்க தெருல எந்த சுவருல பார்த்தாலும் நாமம் போட்ட மாதிரி மூணு கோடு இருக்கும். அது தான் எங்க ஸ்டெம்ப். தென்னை மரத்து மட்டை பேட் முதல் நாள் நல்லா இருக்கும். அப்புறம் போக போக சுருங்கி காய்ஞ்சு போய் பேஸ்பால் மட்டை போல ஆயிடும். இருந்தாலும் அதை வச்சு வெறியோட விளையாடுவோம். இப்படி இருக்கும்போது ஒருநாள் சேகர் எங்க கிட்ட வந்தான்..
"நாளைக்கு ஒரு டீம் கூட மேட்ச் அரேஞ் பண்ணிருகோம். ஸ்காட் காலேஜ் கிரவுண்டுல வச்சு மேட்ச். எங்க டீம்ல ஒரு ஆள் கம்மி ஆகுது. உங்கள்ள யாராச்சும் ஜாயின் பண்ணிகிறீன்களா?"
எங்களுக்கு எதோ வானத்துல பறக்குற மாதிரி பீலிங். நாங்க நாலு பேரும் தனியா போய் பேசி...கடைசியில உலக சாம்பியன் ஜீவா போறதுன்னு முடிவு ஆகிடிச்சி.
சேகர் எங்க பிரெண்ட் ஜீவா நல்லா கிரிக்கெட் விளையாடுவான். நாளைக்கு அவன் வருவான் னு என்னோட பிரெண்ட்ஸ் கோரசா அவனுக்கு சத்தியம் பண்ணிகுடுதாங்க.
-- தொடரும்....ஜீவாவின் அதிரடி ஆட்டங்கள்
சனி, செப்டம்பர் 10, 2011
காதலிச்சே சாவுங்கடா....
ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். கண்களை அலைய விட்டேன். எல்லாரும் மழைக்கு பயந்து அவசரம் அவசரமாக ஓடி ஒளிந்துகொண்டு இருந்தார்கள். எனக்கும் கையிலிருக்கும் புக்ஸ் எல்லாம் நனைந்துவிடுமோ னு கொஞ்சம் கவலையா தான் இருந்தது. ஆனாலும் மழையை சபிக்க நான் தயாரில்லை. தூரத்தில் நான் போக வேண்டிய பஸ் வரமாதிரி தெரிந்தது. பஸ் ஸ்டாண்ட்-இல் பஸ் நின்றதும் ஹோ என்ற ஆர்ப்பரிப்புடன் பரபரப்பாக பஸ்-இல் ஏற தொடங்கினார்கள். எனக்கு எப்போதுமே பஸ்ல படிகட்டில தொங்கிட்டு போறது புடிக்கும். உள்ள பொய் நெரிசலில் சிக்க வேண்டாம் என்கிற ஒரு சுதாரிப்பும் கூட. சிலநேரம் தவிர்க்க முடியாமல் உள்ளே போக நேரிடும். அன்னைக்கும் அப்பிடி தான். படிக்கட்டை தாண்டி உள்ளே போகவேண்டிய ஒரு சூழ்நிலை. ஆனாலும் நான் நிற்கிற இடத்திலிருந்து பஸ் உள்ளால முழுவதும் பார்க்க முடிந்தது.
திடீர் என்று ஒரு மின்னல் கீற்று என்னை கடந்து சென்றது போல ஒரு உணர்வு. நிஜமா மின்னல் தானா இல்லை எதாச்சும் பிரம்மையா ஒரு கணம் யோசித்து கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அதே மின்னல். நான் நிற்ப்பது பஸ்-ன் பின்னால் உள்ள படிக்கட்டு பக்கத்தில். மின்னல் வந்தது பஸ்-ன் முன்னால் உள்ள படிக்கட்டு பக்கத்தில் இருந்து. அவள் பேரழகி ஒன்றும் இல்லை. எதோ பார்கிறதுக்கு சுமாரா இருந்தாள். ஆனாலும் என்னவோ அவள் வீசிவிட்ட அந்த பார்வையில் எதோ இருந்தது. தலையில் வைத்திருந்த மல்லிகை பூ வாடியிருந்தது. அது கூட சில நேரம் பெண்களுக்கு கூடுதல் மாலை நேர அழகு கூட்டுகிறது. புக்ஸ் எல்லாம் மார்புடன் சேர்த்து அனைத்து பிடித்திருந்தாள். ஹ்ம்ம் ...குடுத்து வைத்த புக்ஸ். அடிக்கடி அவள் பார்வை என் பக்கம் படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாமே என்று நானும் அவளை கவனிக்க தொடங்கினேன்...சைட் அடிக்க ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் முதல் அவளின் வருகைக்கு காத்திருக்க தொடங்கினேன். அவள் போகும் பஸ்-இல் தான் போகணும் என்று எனக்குள்ளே டைம் டேபிள் போட்டு வைத்துக்கொண்டேன். நான் இறங்கும் ஸ்டாப்பிற்கு ஒரு ஸ்டாப் முன்னால அவ எறங்கி போகிறதை டெய்லி புன்னகையுடன் பார்த்து மனதுக்குள் பை பை சொல்லிகொண்டிருந்தேன். ஹ்ம்ம் கல்நெஞ்சகாரி பஸ்-இல் இருக்கும்போது அடிக்கடி பார்க்கிறாள், பஸ் விட்டு இறங்கி போகும்போது ஒரு புன்னகை கூட செய்யாமல் திரும்பி பார்க்காமல் போய் விடுவாள்.
இதுக்குமேல நம்மால் தாங்க முடியாது. எப்படியாவது அவளை சந்தித்து இரண்டு வார்த்தை பேசி காதலை வளர்த்துக்க வேண்டியது தான். ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம். ஏதாவது பிரச்சினை ஆகிவிட்டால். அதுவும் முதல் காதல். அதுவே நமக்கு முடிவுரை ஆகி விட கூடாது. ஹ்ம்ம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது..மனதுக்கும் வந்தான் மீனவ நண்பன் மரிய சூசை.
மரிய சூசை வாரம் முழுவதும் கடலில் தொழிலுக்கு போவான். வார கடைசியில் சம்பாதிச்ச மொத்தமும் செலவு பண்ணுவான். ஆள் பார்க்கிறதுக்கு கொஞ்சம் கரடு மொரடா இருப்பான். அவன் தொழில் அப்படி. கடலில் மீன் பிடிக்க போய் போய் ஆள் கொஞ்சம் கருப்பா ஒரு மார்க்கமா இருப்பான். ஊர்ல மாரியாத்தா கோயில் விசேஷம், சூசையப்பர் கோயில் விசேஷம் எதுவானாலும் அதுல இவனோட ஒரு சண்டை காட்சி கண்டிப்பா ப்ரீ. எதாவது ஒரு காரணத்துக்கு ஒரு சண்டை இழுத்துகிட்டு வந்துடுவான். ஆனாலும் நண்பர்கள் என்று வந்துவிட்டால் உயிரையும் குடுப்பான். கணக்கு பார்க்கம செலவும் பண்ணுவான். அதனால இவங்க எங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் புடிக்கும். எங்கியாச்சும் வீண் சண்டைக்கு போறதா இருந்தாலும் இவன் துணையோட தான் போவோம். மரிய சூசைக்கு புடிக்காத ஒன்னு காதல். ஒரேடியா புடிக்காதுன்னு சொல்ல முடியாது. ஆனாலும் அவ்வளவா நம்பிக்கை இல்லாதவன். இருந்தாலும் ரொம்ப கெஞ்சி கூத்தாடி கேட்டுகிட்டா காதல் சம்பந்தமான பிரச்சினைக்கு கூட வருவான். அதனால தான் இவனை துணைக்கு கூப்பிட்டு போய் நம்ம ஆளு (இதுவரைக்கும் அவ பெயர் கூட தெரியாது) கிட்ட காதலை சொல்லிடலாம் னு ஐடியா பண்ணேன்.
சூசை கிட்ட சொன்னதும் மொதல்ல ...ங்கோத்தா ...அப்படி இப்படின்னு ஆரம்பிச்சான். உனக்கெல்லாம் புத்தியே இல்லையாடா னு அட்வைஸ் எல்லாம் சொன்னான். கூடவே காது கூசும் அளவுக்கு கெட்டவார்த்தை எல்லாம் சொன்னான். இருந்தாலும் கெஞ்சி கூத்தாடி அவனை சம்மதிக்க வச்சேன். ஜஸ்ட் கூட வந்தா போதும். நான் லவ் சொல்லிருவேன் னு சொல்லி அவனை சம்மதிக்க வச்சேன். அதாவது எங்க ப்ளான் எப்படின்னா....அவ இறங்குற பஸ் ஸ்டாப் - ல இருந்து அவ வீட்டுக்கு ஒரு அரை கிலோமீட்டர் நடக்கணும். அங்க தான் நெசவாளர் காலனி இருக்கு. அதுவரைக்கும் எந்த வீடும் கிடையாது. நான் அடுத்த ஸ்டாப்- ல இறங்கி சூசைய கூப்பிட்டுகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு இவளை ஆள் இல்லாத இடத்துல வச்சு மடக்கனும் (அவ இறங்குற ஸ்டாப்-க்கும் நான் எறங்குற ஸ்டாப்-க்கும் ஐந்து நிமிஷம் தான் இடைவெளி) எப்படி பார்த்தாலும் அவ அரை கிலோமீட்டர் நடந்து போறதுகுள்ளே அவளை புடிச்சிடலாம்.
இரவெல்லாம் கனவுகளுடன் காதலாகி போனேன். அவளுடன் இனிவரும் நாட்கள் எப்படி காதலுடன் கழிக்க போகிறேன் என்று பிளான் பண்ணி பண்ணி தூங்கிபோனேன். மனசுக்குள்ளே ஒருமாதிரி ஒரு பயம்கலந்த சந்தோசம். எல்லா நாள் போலவே அந்த நாளும் சென்றது. வழக்கம் போலவே பஸ்-இல் பல பார்வை மின்னல்களை அவ வீசினாள். பதிவு போலவே எல்லாதுக்கும் நானும் புன்னகை பூத்தேன். இதோ என் தேவதை பஸ் விட்டு இறங்கி போகிறாள். என் இதய துடிப்பு நிமிடத்துக்கு நிமிடம் ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த ஸ்டாப்-இல் பரபரப்பா இறங்கினேன். சூசை சைக்கிளுடன் நின்றிருந்தான். வாடா மச்சி. அவ இப்ப தான் இறங்கி போகிறாள். சீக்கிரம் போனா புடிச்சிடலாம் னு அவனை அவசர படுத்தினேன். என்னை கேவலமா ஒரு பார்வை பார்த்தான். சூசை என்னை பின்னால வைத்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
அதோ மச்சி ...அந்த பொண்ணு தாண்டா...நீ பக்கதுல போய் சைக்கிள் நிப்பாட்டு. நான் அவ கூட பேசுறேன்..
சூசை நான் சொன்னது போல் அவ பக்கத்தில போய் சடன் பிரேக் போட்டு சைக்கிள் நிப்பாட்டுனான்.. நான் சைக்கிள் விட்டு இறங்கி அவளிடம் பேச முற்படுகையில்...அவன் கண்டும் காணாதது போல் போய்கொண்டே இருந்தாள். சூசை என்னை பார்க்க ஆரம்பித்தான்..எனக்கோ அவளிடம் பேச தைரியம் வரவில்லை...அனால் பேசியே ஆகணும் இன்னைக்கு...தவித்தேன்..ஒன்னும் புரியாம மக்கு மாதிரி நின்னேன.
ஹலோ மேடம்......சூசை அவளை கூப்பிட்டான்.
எஸ்...என்று அவள் திரும்பி பார்த்து நின்றாள்
என் பிரெண்டு உன்கூட எதோ பேசனுமாம்...என்று சூசை சொல்லும்போதே நான் அவள் பக்கத்தில் சென்றேன்.
எஸ்...நீங்க யாரு? என்ன பேசணும்...
நானா...நான்...நான்...(அயோ வார்த்தை வர மாடேங்குதே)...இவளோ நாளும் பஸ் ல பார்த்துட்டு இப்போ நீங்க யாருன்னு கேட்கிறாளே..
எனக்கு போகணும்...ப்ளீஸ் சொல்லுங்க என்ன பேசணும்..
நான்...பஸ்-ல....டெய்லி....பார்த்து...(சூசை என்னை மொறைக்க ஆரம்பிச்சான், எனக்கு மணிரத்னம் பட டயலாக் மாதிரி பாதி பாதி தான் பேச்சு வருது)
ஓ...இப்போ எனக்கு ஞாபகம் வருது...
ஸ்ஸ்ஸ் அப்படா இப்பவாச்சும் ஞாபகம் வந்துசே...னு மனசுக்குள்ளே சந்தோஷ பட ஆரம்பித்தேன்...
ஹேய்...மிஸ்டர் உங்க கிட்ட கேட்கணும் னு நினைச்சேன்...பஸ்-ல என்னை அடிக்கடி பார்த்து ஏன் சிரிகிறீங்க. ..ஒரு நாள் சிரிச்சப்போ நான் சீரியஸா எடுத்துக்கல....இப்படி அடிக்கடி பார்த்து லூசு மாதிரி சிரிச்சா என்ன அர்த்தம்...
என்னது லூசா....(எனக்கு கை எல்லாம் வியர்க்க ஆரம்பிச்சுது...மயக்கம் வர மாதிரி)....ஹேய் நீ தானே பஸ்-ல டெய்லி என்னை அடிக்கடி பார்க்கிறே...அது தான் நானும் உன்னை பார்த்து சிரிச்சேன்..
நிஜமா..நீ லூசு தான்...நான் பின்னால நிக்கிற கண்டக்டர் எப்போ டிக்கெட் கேட்டு முன்னால வருவாரு-னு அடிக்கடி பார்ப்பேன். இறங்குற இடம் வரதுக்குள்ளே கண்டக்டர் வருவாரா மாட்டாரான்னு நான் அவரை அடிக்கடி பார்ப்பேன். அந்த டைம் ல நீ அங்க நின்னு சிரிக்கிறே. இது உனக்கே கேவலமா இல்ல. இதை கேட்கிறதுக்கா கூட துணைக்கு ஒரு ஆளையும் கூட்டிகிட்டு வந்தே,.
அவள் சொல்ல சொல்ல ....அவள் கழுத்தில் கிடந்த சிலுவையில் என் காதல் அறையபடுவது போல தோணியது..
இதை சொல்லிவிட்டு திரும்பி கூட பார்க்காமல்.....அவள் நடக்க ஆரம்பித்தாள்.
நான் திரும்பி சூசையை பார்தேன்....அவன் கண்களில் தெரிந்த கோபத்தில்.....அவன் மனதில் ஓடிய வார்த்தைகளை என்னால் படிக்க முடிந்தது...
ங்கோத்தா....காதலிச்சே சாவுங்கடா...
கல்யாண கலாட்டா
என்னலே முழிச்சிகிட்டு நிக்குறே...பாரு அவங்க தண்ணி கேட்கிறாங்க பாரு..
அட செத்த மூதி...பொட்டபுள்ளைய பார்த்ததே இல்லையா..இப்பிடி மாங்கு மாங்குன்னு அவளையே கவனிசுகிட்டு இருக்கே..
இப்படி பல கல்யாண வீடு குரல்கள் காதுல ஒலிக்க ஆரம்பிசிடிச்சு..

ஹ்ம்ம்...இப்போ எல்லாம் கல்யாணம்னா ஒருநாள் கூத்து....வரவங்க எல்லாம் மாப்புள பொண்ண பார்க்கிறான்களோ இல்லையோ..வந்த உடனே கிடைச்சதை சாப்புட்டுக்கிட்டு எதோ மொய் செஞ்சுகிட்டு கிளம்பிடுறாங்க. அதுவும் இந்த கேட்டரிங் சிஸ்டம் வந்த பிறகு.....நம்மள மாதிரி விடலை பசங்களுக்கு வேலையே இல்லை. இதை வேலைன்னு சொல்றதவிட, ஒரு பரவச அனுபவம்னு தான் சொல்லணும்.
எதாச்சும் பிரண்டு தங்கச்சிக்கு கலியாணம் வந்த போதும்....அந்த பிகர் நம்மள விட்டு போகுதேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம ஓடியாடி வேலைசெய்வோம். கல்யாணத்துக்கு மொத நாளே சீரியல் செட் போடுறதும், வாழை மரம் கட்டுறதும், பந்தல் போட ஆரம்பிச்ச நாள் மோதலே எதோ சொந்த தங்கசிக்கு கலியாணம் மாதிரி ஒரே பிசி. கல்யாண வீட்டுல மாப்புளை தான் ஹீரோ. நாம அவனையும் மிஞ்சி சூப்பர் ஹீரோ ஆயிடுவோமில்ல.
மாப்ள உன் தங்கச்சி கல்யாணதுக்கு நீ செலவு பண்ணா என்ன நான் செலவு பண்ணா என்னனு வாரி வழங்கும் வள்ளல் போல கை காச போட்டு வரவனுக்கெல்லாம் குவாட்டர் கட்டிங் வாங்கி குடுப்போம். இதுல அப்போ அப்போ மறைவா பொய் நின்னு மச்சான் காசுல நாங்களும் அடிக்கடி கட்டிங் போட்டுக்கிட்டு வருவோம். அப்படி பண்ணா தான் நைட் வேலை நடக்கும். நாளைக்கு இலையில பாயசம் இருக்கும்.
சரக்கு வாங்கி குடுகிறப்பவே பிரெண்ட் அட்வைஸ் ஆரம்பிச்சிடுவான். மச்சி நாளைக்கு சும்மா கன் மாத்திரி நிக்கனும்டா. ஒரு குறையும் இல்லாம செம்மையா சீரும் சிறப்புமா கல்யாணத்த பண்ணனும்டா. மச்சி நீ இலை போடு. நீ சோறு போடு. நான் சாம்பார் பார்த்துக்கிறேன் இப்படி எதோ சாட்டிலைட் விடுற ரேஞ்சுக்கு பிளான் நடக்கும். ஆனா அடுத்த நாள் இதுக்கெலாம் தலைகீழா தான் நடக்கும். வர கூட்டம் ஒவ்வொன்னு கேட்க இலை போடுறவன் சாம்பார் பின்னால ஓடுவான், தண்ணி ஊத்துறவன் அவியல் எடுக்க ஓடுவான். ஆக மொத்ததுல கூட்டாஞ்சோறு கேஸ் தான்.
இதுல வேற பொண்ணுங்க இருக்கிற எடத்துல பரிமாற ஒரு ஒலிம்பிக் போட்டியே நடக்கும். நான்...நீ-னு போட்டி நடக்கும். அப்போ எல்லாம் பொண்ணோட அண்ணன் ஒரு மொறை மொறச்சுகிட்டு போவான். சில நேரம் பக்கதுல வந்து டேய் அது என் சொந்தகார பொண்ணுடா நாளைக்கு எதாச்சும் பிரச்சினை ஆயிடும்டா-னு கடுப்புல சொல்லிக்கிட்டு போவான். பொறாமை புடிச்ச பையன். அவனுக்கு அன்னைக்கு அடக்கமா இருக்கணும். நல்ல புள்ளையா இருந்தா தான் அவன் தங்கசிக்கு மதிப்பு. நமக்கு அப்பிடியா. யார வேணாலும் சைட் அடிக்கலாம்.
இப்படி எல்லாம் அலும்பு பண்ணி ஒருவழியா பந்தி எல்லாம் பரிமாறி முடிஞ்சு அப்படா ஒரு வாய் சாப்புடலாம்-னு போய் உட்காந்தா ....ஹ்ம்ம் அன்னைக்குனு பார்த்து சோறு தண்ணி இறங்காது. பந்தி பறிமாறுரப்ப எல்லாம் சாப்புடனும் சாப்புடனும்-னு மனசு துடிக்கும். கடைசியில சாப்புட போய் உட்காந்தா மூஞ்சில அடிச்சா மாதிரி சாப்புடவே புடிக்காது. அது என்னமோ தெரியல கல்யாண வீட்டில பந்தி பரிமாறுன பிறகு யாருக்குமே சாப்பாடு இறங்குறது இல்ல.
கடைசியா பொண்ணு அழைச்சுகிட்டு போவாங்க, பய புள்ள நம்ம பிரெண்ட் அவளோ நேரம் சும்மா கன் மாதிரி நின்ன பய பொசுக்குனு கண்ணுல தண்ணி விடுவான் பாரு...நமக்கே கண்ணுல தண்ணி வந்துரும். இருந்தாலும் நாம கெத்தா நின்னுகிட்டு அவனுக்கு ஆறுதல் சொல்வோம். அட உன் தங்கச்சி எங்கடா போயிர போற மாப்ள. இந்தா இருக்கு பெரியகுளம் ஊரு. ஒரு வார்த்தை கூப்பிட்ட ஓடி வந்து நிக்க போறா. அப்படின்னு பிட் போடுவோம். பெரியகுளம் டு எங்க ஊருக்கு மூணு பஸ் புடிச்சி வந்தா தான் வர முடியும். இருந்தாலும் ப்ரெண்டுக்காக இப்படி ஒரு வார்த்தை இப்படி சொல்லிகிறது தான்.
அப்புறம் நைட் மறு வீடு சடங்கு. அப்பவே பொண்ணு வீட்டுக்கும் மாப்ள வீட்டுக்கும் உரசல் ஆரம்பிக்கும். மாப்புளைக்கு போட்ட செயின் கொஞ்சம் மங்கலா இருக்கு, பொண்ணுக்கு பட்டு புடவை விலை கம்மியா? நாத்தனாருக்கு மோதிரம் சைஸ் சின்னது. இப்பிடி எதாச்சும் காதுல விழும். சில நேரம் வாய் சண்டை வரை வரும். அந்த இடத்துலையும் சும்மா வில்லு மாதிரி நின்னு நாலு அட்வைஸ் போட்டு எப்படியோ சமாளிச்சு மறு வீடு சடங்கும் முடிச்சு வைப்போம்.
ஒருவழியா பொண்ணு மாப்புளைய அழைச்சுகிட்டு வந்து...பொண்ணு வீட்டில கொண்டு வந்து விட்டு...சாந்திமுகூர்த்த ரூம் எல்லாம் எதோ டான்ஸ் நடக்குற ஸ்டேஜ் ரேஞ்சுக்கு அலங்காரம் பண்ணிவிட்டு..அவிங்களை இனி அவங்க வீடுக்கரங்க பார்த்துக்குவாங்க-னு மனசு நிம்மதியோட ஒரு ஓரமா போய் ஒரு தம்மு பத்தவச்சு ஸ்ஸ்ஸ் னு புகைய உள்ள இழுக்கிரப்ப மனசு சொல்லும்..
"என்னோட தங்கச்சிக்கு இப்படி ஒரு கல்யாண நாளு எப்ப வருமோ"
சனி, பிப்ரவரி 26, 2011
காதலும் கத்திரிக்காய் கொழம்பும்...
ஏய் ...என்னடி உன் மச்சான் ரொம்ப நாள் கழிச்சு ஊர்ல இருந்து வந்திருக்கேன். ஒன்னும் கண்டுக்க மாட்டேன்கிறியே. ஊர்ல உள்ள பொண்டாடிங்க எல்லாம் புருஷன் வீட்டுக்கு வந்த வகை வகையா வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு அசத்துவாங்க. நீ என்னடான்னா எப்போ பார்த்தாலும் இட்லி, தோசை, ரசம், சாதம், பொடலங்காய்-னு போட்டு கொல்றியே டி. என் மேல உனக்கு இம்புட்டு தான் அன்பா?
ஏனுங்க மச்சான் இப்படி சொல்றீங்க. போங்க உங்க கூட நான் இனிமேல் பேசல. இப்படி சொல்லிடீங்க இல்ல.. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க இன்னைக்கே சமைச்சு தாரேன்.
என் பொண்டாட்டி கண்ணா கசக்குனதும் எனக்கு மனசு தாங்கல...
அட சீ அசடு...நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டி. நீ எனக்கு கத்திரிக்கா கொழம்பு வச்சு குடுப்பியாம். நான் அதை ஆசை ஆசையா சாப்புடுவேனாம்.

ஐயோ மச்சான் எனக்கு கத்திரிக்கா கொழம்பு வைக்க தெரியும்...ஆனா உங்க அம்மா வைக்கிறமாதிரி எனக்கு பண்ண தெரியாது. ஹ்ம்ம் எப்படியாச்சும் உங்களுக்கு வச்சு குடுக்கிறேன்.
அடி போடி....ஆக மொத்ததுல ஒன்னே ஒன்னு கேட்டேன் அதுக்கும் இந்த இழுவையா...விளங்கிடும் போ..
போன வாரம்...காலையில
ஏய் ...சும்மா சூப்பரா இருக்கே டி.
என்னங்க மச்சான். இன்னைக்கு தான் புதுசா பாக்குற மாதிரி. (செல்லமாய் கோபித்துகொண்டாள்).
அஹா ஷாம்பூ சோப்பு வாசனை அப்படியே சும்மா தூக்குது ...ஹ்ம்ம்....இன்னைக்கு மார்னிங் ஷோ பாத்துர வேண்டியது தான்....
இப்படியே சிணுங்கலும் கொஞ்சலுமாக கொஞ்சம் கொஞ்சம் என்னை இழந்து ...அவளை கட்டி அணைக்க போகும் நேரத்தில்....
டொக்...டொக்....டொக்...
என்னங்க யாரு கதவை தட்டுறாங்க....போய் பார்த்துட்டு வாறேன்...
அட சும்மா இருடி..கொஞ்சம் நேரம் தட்டிகிட்டு அவங்களே யாரும் இல்லைன்னு போயிடுவாங்க..
போங்க மச்சான், நான் போய் பார்த்துட்டு வாறேன்...
கலைந்திருந்த சாரியை சரி பண்ணிக்கிட்டே போய் என் பொண்டாட்டி கதவை திறக்க....அங்க என்னோட மாமியாரு ஒரு கூடை நிறைய கத்திரிக்காயுடன்.
ஐயோ அம்மா....வாங்கம்மா உள்ள....என்ன காலையிலே....
ஒன்னுமில்லடி...அன்னைக்கு நீ உன் புருசனுக்கு கத்திரிக்காய் கொழம்பு புடிக்கும்னு போன்ல சொன்னியே...அதான் மார்க்கெட் போயிருந்தப்ப நல்ல நாட்டு கத்திரிக்கா பார்தேன் அப்படியே வாங்கி குடுத்துட்டு உன்னையும் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
என் பொண்டாட்டி அவ அம்மாவை ஹால்ல உட்கார வச்சுட்டு என்கிட்டே வந்து...
என்னங்க என்னோட அம்மா வந்திருக்காங்க...
ஹ்ம்ம் கேட்டேன்....உங்கம்மா சொன்னது எல்லாம் கேட்டேன் டி....ஆனா ஒன்னு மட்டும் நல்ல புரியுதுடி..இன்னைக்கு எனக்கு வில்லன் "கத்திரிக்கா" அப்படின்னு தலைய கைய வச்சுக்கிட்டு சோகமா....ஏக்கமா என் பொண்டாட்டிய பார்க்க...
அவ....அட சீ....குறும்புக்கார மச்சான்னு என் கன்னத்துல ஒரு கிள்ளு கிள்ளிகிட்டு அவங்க அம்மாவை கவனிக்க போயிட்டா..
பேசாம ரூம் போட்டு அழலாமா-னு யோசனை பண்ணேன்....ஹ்ம்ம் வேண்டாம்....!!!
ரொம்ப நாளா...."காதலாவது கத்திரிக்காயாவது" அப்படின்னா என்னனு விளக்கம் தேடிகிட்டு இருந்தேன்....இன்னைக்கு விளக்கமா விளக்கிட்டாங்க!!!!!!!
சரிதான் போடிடிடிடி!

என்னால மூணு காரணம் எல்லாம் சொல்ல முடியாது. ஆனா ஒரே ஒரு காரணதுக்காக என்னோட friendship உடைஞ்சு போச்சு! அதுக்காக வருத்தப்பட்டு இந்த பதிவை நான் எழுதல. நாளைக்கே உங்க லைப்-ல இதுமாதிரி ஒரு காரணம் வரலாம். அதனால எப்போதுமே நிலைக்காத ஒண்ணுக்காக மாங்கு மாங்கு-னு அலையுற விட்டு பொய் பொழப்ப பாருங்க இல்லாட்டி புள்ளைகளை போய் படிக்க வையுங்க. அவங்க எதிர்காலமாவது நல்லாருக்கும்.
மேட்டர் ஒன்னும் பெருசா இல்லீங்க. ஒரு பொண்ணு அவளுக்கு அழகான இரண்டு......(ஹி ஹி ஹி....தப்பா ஒன்னும் நினைக்க வேண்டாம்) கண்ணு. வழக்கமான நலம் விசாரிப்புகளுடன் ஆரம்பித்த எங்க வலைப்பூ நட்பு நாளாக நாளாக நாடு, மொழி, மதம், லொட்டு, லொசுக்கு எல்லாம் கடந்து வேகமா வளர்ந்துச்சு. நேரம் காலம் தெரியாம பேசுனோம்..பேசிகிட்டே இருந்தோம். என்னோட கடியெல்லாம் (நான் ஜோக்ஸ் பத்தி சொல்றேன்) அவ தாங்கிகிட்டா..அவளோட கடியெல்லாம் (இதுவும் ஜோக்ஸ் தாங்க) நானும் தாங்கிகிட்டேன். பின்னே சும்மாவா நட்பாச்சே. அவளோ சீக்கிரத்தில விட்டுற முடியுமா. இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு சாட்டிங்-மா வளர்ந்த எங்க நட்பு ஒரு காலத்துல community chat - ல எல்லாம் கொடிகட்டி பறந்துச்சு. பாக்குறவங்க என்னடா love - ஆனு கேட்கிற அளவுக்கு இருந்துச்சு. யாரு கண்ணு பட்டுச்சோ இப்புடி அந்து அவுலா போச்சு எங்க நட்பு. அஆங்...நட்பு புட்டுகிட்டதுக்கு காரணம் என்னா-னு இன்னும் சொல்லியே..
எனக்கு ஒரு கேட்ட பழக்கமுங்க...யாராவது என் கூட கொஞ்சம் close - ஆ பழகுனா அவங்க ஆம்பளையா இருந்த வாட போடா னு பேசிக்குவேன். பொம்பளையா இருந்த வாடி போடி னு பேசிக்குவேன். அப்ப தான் ஒரு அன்னோன்யம் வரும் னு நானா போட்டுகிட்ட ஒரு தியரி. இப்படி பேசுறதால அவங்களை irrespective -ஆ treat பண்ணனும்னோ அவங்க மனசை நோகடிக்கனும்னோ எண்ணம் எல்லாம் கிடையாது. அப்படியே பழகி போச்சு. ஆனா இந்த கான்செப்ட் எல்லாருக்கும் புடிக்கும்-னு சொல்ல முடியாது. இருந்தாலும் என்னால இதை மாத்திக்க முடியல. எனக்கு நாக்குல சனி-னு தெரியாம போச்சு. அவளையும் ஒருநாள் "டி" போட்டு பேசினேன். அவளோ தான்...வெறி வந்து சாமியாடிட்டா!
அவளை "டி" போட்டு பேசுற உரிமை அவளோட காதலன் அல்லது அவளோட என்னைக்கோ வரபோற புருசனுக்கு மட்டும் தான். வேற யாரு "டி" சொன்னாலும் அவளுக்கு புடிக்காது. உடம்பு புள்ள கம்பளி பூச்சி ஊர்கிற மாதிரி ஒரு பீலிங்- ஆ இருக்குதாம். நமக்கு தான் நம்ம கொள்கைய விட்டு குடுக்க மனசு வராதே. நானும் உன்னை அந்த மாதிரி எல்லாம் நினைச்சு நான் "டி" போடல. ஜஸ்ட் ஒரு பொண்ணுகிட்ட ஆண் சொல்ற மாதிரி சாதரணமா சொன்னேன் அப்படின்னு எல்லாம் தத்துவம் பேசி பார்த்தேன். எனக்கு இது மாதிரி பேசி தான் பழக்கம். ஒரு ஆள் கிட்ட நெருங்கி பழகுற பீலிங் அப்ப தான் கிடைக்குது அப்படி இப்படி-னு என்னா எல்லாமோ கெக்கே பிக்கே னு உளறி பார்தேன். ஹ்ம்ம் முடியாதுனா முடியாது. அப்படி நீ கூப்பிட்டா என்னை நீ contact பண்ணவே வேண்டாம் என் கூட பேசவே வேண்டாம்-னு முகத்துல அடிச்சா மாதிரி சொல்லிட்டா. பாரடா...இந்த பயபுள்ளைக்கு இம்புட்டு பிடிவாதம் இருந்த நாம என்னா கேட்டுகிட்டு அவ சொல்ற மாதிரி அடங்கி நடக்க சொம்பையா. நானும் முடிவா சொல்லிட்டேன், யாருக்காகவும் என்னோட லைப் ஸ்டைல் நான் மாத்திக்கிறதா இல்லை. நான் "டி" போட்டு தான் பேசுவேன். சரிதான் போடிடிடிடிடி அப்படின்னு நச்சு னு நாலு வார்த்தை சொல்லி பல நாளா பழகுன எங்க நட்புக்கு பால் ஊதிக்கிட்டு வந்து நிக்கிறேன்.
முடிவா சொல்றேன் பய பக்கிகளா கேட்டுகோங்க......ஒழுங்கா பொட்ட புள்ளைங்க கிட்ட நல்ல புள்ளையா நடந்துக்கணும். முக்கியமா அவிங்க சொல்றதுக்கெல்லாம் மாங்கு மாங்கு தலைய ஆட்டனும். அப்போ தாண்டா உங்களுக்கு லைப் ல பொம்புள பிகர்ஸ் செட் ஆகும். இல்லாட்டி என்னைய மாதிரி கொக்கரகோ குமாங்கோ தான்! புரியுதா!
பின்குறிப்பு: எனக்கு புடிச்ச சாங் "வாடி வாடி நாட்டுகட்ட"...100௦௦ தடவ பாடுவேன்டி!!
வெள்ளி, பிப்ரவரி 25, 2011
நடுநிசி நாய்கள் - ஒரு நேர்வினை!

ஒரு ஆயிரம் பேர் வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் ஒருவன் மட்டும் வேண்டும் என்று குரல் கொடுத்தால் அவன் பைத்தியக்காரன். நான் அப்படியே இருந்துவிட்டு போகிறேன். அதற்காக சொல்ல வந்ததை சொல்லாமல் போகும் கோழை அல்ல நான். சமூகம் சொல்கிறது என்பதற்காக வால்ஆட்டிக்கொண்டு பின்னே செல்லாமல் மனசாட்சி படி உள்ளதை ஒத்துகொள்ளும் பாங்கு வேண்டும்.
நடுநிசி நாய்கள்....இது தான் இன்றைய ப்ளாக் உலகின் தாரக மந்திரம். ரேட்டிங் ஏறணுமா உடனே நடுநிசி நாய்கள் படத்தை பற்றி கேவலமா எழுது. கண்டிப்பா முதல் பத்து ரேட்டிங்-க்குள் உன் பிளாக் வந்துவிடும். படத்தோட டைரக்டர் எதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திவிட்டாரம். ஊருல உலகத்துல நடக்காததை சொல்லிட்டாராம். இந்திய கலாசாரத்தையே குறை சொல்லிவிடாரம். எது எதுக்கோ மல்லுகட்டும் பல சங்கங்கள் மௌனம் காக்கும் வேளையிலும் இந்த பிளாக் பிக்காளி பசங்களின் தொல்லை தாங்க முடியலப்பா. இந்தியன் சினிமா உலகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல இவங்க கிட்ட தான் எதோ ஐடியா கேட்கணும் போல வரவன் போறவன் எல்லாம் ப்ளாக்-ல எழுதி கிழிக்கிறான் இந்த படத்தை பத்தி. ஒரு காலத்துல கமல்ஹாசனின் 2 - ம் தர படத்துக்கும் ரஜினியின் கற்பனையிலும் நடக்காத ஸ்டைல்-க்கும் முன் வரிசையில் உட்காந்து விசில் அடிச்சு படம் பார்த்தவனுக எல்லாரும் இன்னைக்கு எதோ இன்டர்நெட்-ல் நாலு படத்தை பார்த்துவிட்டு உலக சினிமா பத்தி சிலாகிக்கிறார்கள். இவர்களின் மேதாவித்தனத்தை காமிக்க ஒரு படம் கிடைத்தால் போதும் பக்கம் பக்கமா எழுதி கிழிக்கிறாங்க.
ஓ...கண்னியவான்களே கடந்த 5 மாதம் தினமலர் போன்ற நாளிதழ்களில் வந்த செய்திகளை எடுத்து குத்த வச்சு படித்து பாருங்கள். அப்போது புரியும். கெளதம் மேனன் இந்த படம் எடுக்கிறதுக்கு முன்னாலே எவளோ கலாசார சீரழிவு இந்த தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருந்தது என்று. எத்தனை கள்ள காதல், அப்பா மகளை கர்ப்பிணி ஆக்கிய கதைகள், மகன் அம்மா உறவுகள், பொருந்தாத காதல் களியாட்டங்கள் என்று எத்தனையோ செய்திகள். இதை எல்லாம் செய்தவர்கள் கெளதம் வாசுதேவ் மேனனிடம் ஐடியா கேட்டா செய்தார்கள்? தமிழ் நாட்டில் பெரும்பாலும் வருகின்ற முன்னணி நடிகர்களின் மசாலா படங்களில் நடிகைகளின் தொப்புளையும், அவர்களின் மார்பையும், பின் பக்கத்தையும், ஹீரோ கை வைக்கும் மற்றும் பல இடங்களையும் close-up ல் காமித்தால் அது கலாசார சீரழிவு இல்லையா? அதை பார்த்து எல்லாரும் முக்தி நிலை அடைவார்களா? அதை பார்க்கும் ஒருத்தனுக்கு அது போல செய்யணும் என்று எண்ணம் வராதா? நடுநிசி நாய்கள் படத்தில் இந்த கலாசார சீரழிவு எதுவுமே இல்லையே. தந்தை - மகன் பாலியல் உறவாகட்டும், மகன் - வளர்ப்பு தாய் உறவாகட்டும் எதுவுமே அப்பட்டமாக காமிக்க படவில்லை. சில சினிமா நுணுக்கங்கள் அறிந்தவர்களால் மட்டுமே அனுமானிக்க கூடியவகையில் தான் காட்சி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தான் அதை ஊருக்கு ஊரு மேடை போட்டு ஐயோ அம்மா என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு பரப்பி வருகிறீர்கள்.
இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழும் உங்களை போன்ற ப்ளாக் மேதாவிகள் தான் மிஸ்கின்-ன் யுத்தம் செய் படத்தை அஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதினீர்கள். அந்த படத்தின் ஒருவரி கதையை சின்ன புள்ளைங்க கூட புரிஞ்சுகிட்டு சொல்லுமே. வயதான கிழடுகள் பெண்களை மற்றவர்கள் வன்கலவி செய்வதை பார்த்து இன்பம் அடைபவர்கள் என்று. இந்த கதையை படமா எடுத்ததற்கு ஏன் யாருமே வாய்கிழிய கத்தவில்லை? இந்த படத்தை பார்த்து கிழவர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று நம்பிக்கையா?
இதை நான் எழுதுவதற்காக நான் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பல்லாக்கு தூக்குவதாகவோ, மேலே சொன்ன உறவுகளுக்கு நான் சம்மதம் சொல்வதாகவோ அர்த்தம் கொள்ளுபவர்கள் அப்படியே நினைத்து கொள்ளுங்கள். எனக்கு கவலை இல்லை. நடப்பதை நடக்கிறது என்று உண்மை பேசி நாலு பேரிடம் கேட்ட பெயர் வாங்கினாலும் பரவாயில்லை எதுவுமே நடக்காதது போல முகமூடி போட்டு சாக்கடை பன்றிகளாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.
இப்படிக்கு
ரசிகன்