ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஒலக சாம்பியன் (கிரிக்கெட்)





ஜீவா நேத்தைக்கு மேட்ச் பாத்தியா? சச்சின் பட்டைய கிளப்பிடாருடா..

சாரி மாம்ஸ் நான் மேட்ச் பாக்குறது கிடையாது..



என்னோட நண்பன் என்னை தீண்டதகாதவன் போல பார்க்க ஆரம்பிச்சான்...



அந்த டைம் கிரிக்கெட் ஜூரம் இந்தியா முழுவதும் பற்றிகொண்டிருந்த நேரம். யாரை பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட். கிரிக்கெட்பத்தி தெரியாதவன எதோ வேற்றுகிரகவாசி போல பார்க்க ஆரம்பிச்சாங்க.யார் கூட பேசுனாலும் பேச்சு எங்க எங்கையோ போயி கடைசியில கிரிக்கெட் ல தான் வந்து முடியும்.போதாததுக்கு இந்த பொண்ணுகளும் கிரிக்கெட் பத்தி பேசுறவங்கதான் அறிவாளின்னு நம்ப ஆரம்பிச்சு அவங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சாங்க.

நான், சடையப்பன், ஸ்டாலின், சுரேஷ் எல்லாரும் நடுத்தர குடும்பத்த சேர்ந்தவங்க. கிரிக்கெட் பாக்குறதுக்கு வீட்டில டிவி இல்ல. அதுவுமில்லாம எப்போ பார்த்தாலும் வீட்டில படிப்பு படிப்பு தான் முக்கியம் னு அடிவாங்கி அடிவாங்கி வளர்ந்த பயலுக. எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கில்லி, கோலி, புளியம்கொட்டை விளையாட்டுகள் தான். இப்போ இந்த கிரிக்கெட் எங்களுக்கு பெரிய சவாலா போச்சு. நாங்க நாலுபேரும் மீட்டிங் போட்டு இனி கிரிக்கெட் பத்தி தெரிஞ்சுகிட்டுதான் அடுத்த வேலை னு சபதம் எடுத்துகிட்டோம். அதுக்காக எப்போ எப்போ சான்ஸ் கிடைக்குதோ பக்கத்துக்கு வீடு, டிவி ஷோரூம்-ல எல்லாம் ஒளிஞ்சு நின்னும் வரிசையில நின்னும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சோம். கிரிக்கெட் பத்தி போட்டோ, நியூஸ் எதாச்சும் பார்த்தா ஆர்வமா அதை படிக்கச் ஆரம்பிச்சோம். என்ன எழவோ இந்த இங்கிலீஷ்காரங்க பிளேயர்ஸ் பெயரு தான் வாயில நுழைய மாட்டேங்குது. இருந்தாலும் உருப்போட்டு படிச்சு மனபாடம் பண்ணிகிட்டோம். நான் எல்லாம் நைட் ல தூங்க போறதுக்கு முன்னால மார்க் வாவ் (mark waugh) னு நூறு வாட்டி ஸ்லோகன் சொல்லிக்கிட்டு தான் படுப்பேன். எப்படியோ என்னோட பிரெண்ட்ஸ் விட நான் சீக்கிரமாவே கிரிக்கெட் பத்தி கொஞ்சம் விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன்.

மச்சான் அந்த பால் அவன் ஆப் சைடு ல அடிச்சிருக்கனும்டா

ச்சே இந்த லெக் கட்டர் பால் அடிக்க தெரியாம பம்முரானே..

ஓ ச்சே..என்னடா இவன் பௌலிங் இப்பிடி போடுறான். ஒரு பௌன்செர் போட்டா இவன ஈசியா தூக்கிடலாம்டா..

என்னோட பிரெண்ட்ஸ் என்னையே வாய பொளந்து பார்த்துகிட்டு இருந்தாங்க. மச்சான் எப்பிடிடா இவ்வளவு மேட்டர் தெரிஞ்சுகிட்டே னு ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு முதல் என்னோட குரூப் ல கிரிக்கெட் குரு நான் தான். மத்தவங்க எல்லாம் சிஷ்யனுங்க. கிரிக்கெட் பத்தி எதாச்சும் கேட்கனும்னா என்கிட்ட வருவாங்க. எப்படியோ இனி அடுத்தது பெரிய கிரிக்கெட் பிளேயர் ஆயிடனும் னு நாங்க முடிவு பண்ணிட்டோம். உட்காந்தா கிரிக்கெட், படுதா கிரிக்கெட், சாப்புடுற நேரமும் கிரிக்கெட், கக்கூஸ் போனா கூட கிரிக்கெட் பத்திதான் நினைப்பு. வீட்டில பெயரு தெரியாத கிரிக்கெட் ப்ளேயர்ஸ் போஸ்டர் எல்லாம் ஒட்டி வீட்டு சுவத்த நாரடிசிகிட்டு இருந்தோம். அதுக்காக அவங்க அவங்க அம்மாகிட்ட இருந்து விளக்குமாத்து அடியெல்லாம் வாங்கி தங்கச்சிங்க கிட்ட இருந்து நாசமா போறவனே-னு பல வசவு சொல்களெல்லாம் வாங்கி கிரிக்கெட்காக வாழ்க்கைய தியாகம் பண்ணிகிட்டோம்.

எங்க வீடு பக்கதுல ஒரு புரபசர் வீடு கொஞ்சம் பணக்கார வீடு. டிவி வசதியெல்லாம் உள்ள வீடு. அந்த வீட்டில சேகர் னு ஒரு பையன் காயத்திரி னு ஒரு பொண்ணு. இரண்டு பேருமே எங்களை மாதிரி டீன் ஏஜ் தான். அவளை நான் நீ னு போட்டி போட்டு சைட் அடிப்போம். செமையா அவ முன்னால சீன் எல்லாம் போடுவோம். அந்த பையன் எங்க கூட எல்லாம் அவளவா பிரெண்ட்ஷிப் இல்லை. அவனோட பிரெண்ட்ஷிப் எல்லாம் பெரிய இடத்து பசங்க கூட தான். அடிக்கடி பைக்-ல பிரெண்ட்ஸ் வருவாங்க போவாங்க. இருந்தாலும் எங்களை பாக்கிறப்ப சிநேகமா சிரிச்சுக்குவான். அப்படியே அவன்கிட்ட கொஞ்சம் சிரிச்சு சிரிச்சு எப்படியோ அவங்க வீட்டுக்குள்ளே பொய் டிவி பாக்குறதுக்கு பெர்மிசன் வாங்கிட்டோம். அவனுக்கு கிரிக்கெட்னா உசுரு. அதனாலதானோ என்னமோ நாங்களும் கிரிக்கெட் பார்க்க வரோம் னு சொன்னதும் ஒத்துகிட்டான். அவன் வீட்டில போய் கிரிக்கெட் பாக்குறப்ப, நான் ஆப் சைடு, லெக்சைடு, மிடில் ஸ்டெம்ப் அப்படி இப்படி னு கொஞ்சம் டயலாக் எல்லாம் விடுவேன். சில நேரம் நான் சொல்றது போல எவனாச்சும் சிக்ஸ் அடிப்பான். இல்லாட்டி அவுட் ஆகுவான். உடனே நான் "பாத்தியா மச்சி நான் சொன்னேன் இல்ல, இந்த பால் அவன் கொஞ்சம் தூக்கி அடிச்சிருக்கனும்டா..அப்போ அவுட் ஆகிருக்க மாட்டான். ச்சே இப்பிடி பண்ணிட்டானே" னு எதோ சச்சின் க்கு நான் தான் கிரிக்கெட் கத்து குடுத்தமாதிரி உதார் விடுவேன். என்னோட பிரெண்ட்ஸ் மூணு பேரும் ஆமா ஆமா னு தலைய ஆட்டுவாங்க. அப்படியே ஓரக்கன்னாலே அவளை பார்ப்பேன். அவளும் என்னை பார்த்து லைட்டா சிரிப்பா. பசங்க அப்படியே என்னை தெய்வமா பார்த்து வாயடைச்சு பொய் நிப்பாங்க.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எங்களுக்குள்ள கிரிக்கெட் தீ வளர ஆரம்பிச்சுது. கில்லி, கோலி, புளியம்கொட்டை விளையாட்டெல்லாம் மறந்து போனது. தென்னை மரத்து மட்டையை பேட் மாதிரி செதுக்கி அதை வச்சு உருண்டையா எது கிடைச்சாலும் அதை பவுலிங் போட்டு கண்ட கண்ட இடத்துல எல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம். எங்க தெருல எந்த சுவருல பார்த்தாலும் நாமம் போட்ட மாதிரி மூணு கோடு இருக்கும். அது தான் எங்க ஸ்டெம்ப். தென்னை மரத்து மட்டை பேட் முதல் நாள் நல்லா இருக்கும். அப்புறம் போக போக சுருங்கி காய்ஞ்சு போய் பேஸ்பால் மட்டை போல ஆயிடும். இருந்தாலும் அதை வச்சு வெறியோட விளையாடுவோம். இப்படி இருக்கும்போது ஒருநாள் சேகர் எங்க கிட்ட வந்தான்..

"நாளைக்கு ஒரு டீம் கூட மேட்ச் அரேஞ் பண்ணிருகோம். ஸ்காட் காலேஜ் கிரவுண்டுல வச்சு மேட்ச். எங்க டீம்ல ஒரு ஆள் கம்மி ஆகுது. உங்கள்ள யாராச்சும் ஜாயின் பண்ணிகிறீன்களா?"

எங்களுக்கு எதோ வானத்துல பறக்குற மாதிரி பீலிங். நாங்க நாலு பேரும் தனியா போய் பேசி...கடைசியில உலக சாம்பியன் ஜீவா போறதுன்னு முடிவு ஆகிடிச்சி.

சேகர் எங்க பிரெண்ட் ஜீவா நல்லா கிரிக்கெட் விளையாடுவான். நாளைக்கு அவன் வருவான் னு என்னோட பிரெண்ட்ஸ் கோரசா அவனுக்கு சத்தியம் பண்ணிகுடுதாங்க.

-- தொடரும்....ஜீவாவின் அதிரடி ஆட்டங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக