என்னலே முழிச்சிகிட்டு நிக்குறே...பாரு அவங்க தண்ணி கேட்கிறாங்க பாரு..
அட செத்த மூதி...பொட்டபுள்ளைய பார்த்ததே இல்லையா..இப்பிடி மாங்கு மாங்குன்னு அவளையே கவனிசுகிட்டு இருக்கே..
இப்படி பல கல்யாண வீடு குரல்கள் காதுல ஒலிக்க ஆரம்பிசிடிச்சு..

ஹ்ம்ம்...இப்போ எல்லாம் கல்யாணம்னா ஒருநாள் கூத்து....வரவங்க எல்லாம் மாப்புள பொண்ண பார்க்கிறான்களோ இல்லையோ..வந்த உடனே கிடைச்சதை சாப்புட்டுக்கிட்டு எதோ மொய் செஞ்சுகிட்டு கிளம்பிடுறாங்க. அதுவும் இந்த கேட்டரிங் சிஸ்டம் வந்த பிறகு.....நம்மள மாதிரி விடலை பசங்களுக்கு வேலையே இல்லை. இதை வேலைன்னு சொல்றதவிட, ஒரு பரவச அனுபவம்னு தான் சொல்லணும்.
எதாச்சும் பிரண்டு தங்கச்சிக்கு கலியாணம் வந்த போதும்....அந்த பிகர் நம்மள விட்டு போகுதேன்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம ஓடியாடி வேலைசெய்வோம். கல்யாணத்துக்கு மொத நாளே சீரியல் செட் போடுறதும், வாழை மரம் கட்டுறதும், பந்தல் போட ஆரம்பிச்ச நாள் மோதலே எதோ சொந்த தங்கசிக்கு கலியாணம் மாதிரி ஒரே பிசி. கல்யாண வீட்டுல மாப்புளை தான் ஹீரோ. நாம அவனையும் மிஞ்சி சூப்பர் ஹீரோ ஆயிடுவோமில்ல.
மாப்ள உன் தங்கச்சி கல்யாணதுக்கு நீ செலவு பண்ணா என்ன நான் செலவு பண்ணா என்னனு வாரி வழங்கும் வள்ளல் போல கை காச போட்டு வரவனுக்கெல்லாம் குவாட்டர் கட்டிங் வாங்கி குடுப்போம். இதுல அப்போ அப்போ மறைவா பொய் நின்னு மச்சான் காசுல நாங்களும் அடிக்கடி கட்டிங் போட்டுக்கிட்டு வருவோம். அப்படி பண்ணா தான் நைட் வேலை நடக்கும். நாளைக்கு இலையில பாயசம் இருக்கும்.
சரக்கு வாங்கி குடுகிறப்பவே பிரெண்ட் அட்வைஸ் ஆரம்பிச்சிடுவான். மச்சி நாளைக்கு சும்மா கன் மாத்திரி நிக்கனும்டா. ஒரு குறையும் இல்லாம செம்மையா சீரும் சிறப்புமா கல்யாணத்த பண்ணனும்டா. மச்சி நீ இலை போடு. நீ சோறு போடு. நான் சாம்பார் பார்த்துக்கிறேன் இப்படி எதோ சாட்டிலைட் விடுற ரேஞ்சுக்கு பிளான் நடக்கும். ஆனா அடுத்த நாள் இதுக்கெலாம் தலைகீழா தான் நடக்கும். வர கூட்டம் ஒவ்வொன்னு கேட்க இலை போடுறவன் சாம்பார் பின்னால ஓடுவான், தண்ணி ஊத்துறவன் அவியல் எடுக்க ஓடுவான். ஆக மொத்ததுல கூட்டாஞ்சோறு கேஸ் தான்.
இதுல வேற பொண்ணுங்க இருக்கிற எடத்துல பரிமாற ஒரு ஒலிம்பிக் போட்டியே நடக்கும். நான்...நீ-னு போட்டி நடக்கும். அப்போ எல்லாம் பொண்ணோட அண்ணன் ஒரு மொறை மொறச்சுகிட்டு போவான். சில நேரம் பக்கதுல வந்து டேய் அது என் சொந்தகார பொண்ணுடா நாளைக்கு எதாச்சும் பிரச்சினை ஆயிடும்டா-னு கடுப்புல சொல்லிக்கிட்டு போவான். பொறாமை புடிச்ச பையன். அவனுக்கு அன்னைக்கு அடக்கமா இருக்கணும். நல்ல புள்ளையா இருந்தா தான் அவன் தங்கசிக்கு மதிப்பு. நமக்கு அப்பிடியா. யார வேணாலும் சைட் அடிக்கலாம்.
இப்படி எல்லாம் அலும்பு பண்ணி ஒருவழியா பந்தி எல்லாம் பரிமாறி முடிஞ்சு அப்படா ஒரு வாய் சாப்புடலாம்-னு போய் உட்காந்தா ....ஹ்ம்ம் அன்னைக்குனு பார்த்து சோறு தண்ணி இறங்காது. பந்தி பறிமாறுரப்ப எல்லாம் சாப்புடனும் சாப்புடனும்-னு மனசு துடிக்கும். கடைசியில சாப்புட போய் உட்காந்தா மூஞ்சில அடிச்சா மாதிரி சாப்புடவே புடிக்காது. அது என்னமோ தெரியல கல்யாண வீட்டில பந்தி பரிமாறுன பிறகு யாருக்குமே சாப்பாடு இறங்குறது இல்ல.
கடைசியா பொண்ணு அழைச்சுகிட்டு போவாங்க, பய புள்ள நம்ம பிரெண்ட் அவளோ நேரம் சும்மா கன் மாதிரி நின்ன பய பொசுக்குனு கண்ணுல தண்ணி விடுவான் பாரு...நமக்கே கண்ணுல தண்ணி வந்துரும். இருந்தாலும் நாம கெத்தா நின்னுகிட்டு அவனுக்கு ஆறுதல் சொல்வோம். அட உன் தங்கச்சி எங்கடா போயிர போற மாப்ள. இந்தா இருக்கு பெரியகுளம் ஊரு. ஒரு வார்த்தை கூப்பிட்ட ஓடி வந்து நிக்க போறா. அப்படின்னு பிட் போடுவோம். பெரியகுளம் டு எங்க ஊருக்கு மூணு பஸ் புடிச்சி வந்தா தான் வர முடியும். இருந்தாலும் ப்ரெண்டுக்காக இப்படி ஒரு வார்த்தை இப்படி சொல்லிகிறது தான்.
அப்புறம் நைட் மறு வீடு சடங்கு. அப்பவே பொண்ணு வீட்டுக்கும் மாப்ள வீட்டுக்கும் உரசல் ஆரம்பிக்கும். மாப்புளைக்கு போட்ட செயின் கொஞ்சம் மங்கலா இருக்கு, பொண்ணுக்கு பட்டு புடவை விலை கம்மியா? நாத்தனாருக்கு மோதிரம் சைஸ் சின்னது. இப்பிடி எதாச்சும் காதுல விழும். சில நேரம் வாய் சண்டை வரை வரும். அந்த இடத்துலையும் சும்மா வில்லு மாதிரி நின்னு நாலு அட்வைஸ் போட்டு எப்படியோ சமாளிச்சு மறு வீடு சடங்கும் முடிச்சு வைப்போம்.
ஒருவழியா பொண்ணு மாப்புளைய அழைச்சுகிட்டு வந்து...பொண்ணு வீட்டில கொண்டு வந்து விட்டு...சாந்திமுகூர்த்த ரூம் எல்லாம் எதோ டான்ஸ் நடக்குற ஸ்டேஜ் ரேஞ்சுக்கு அலங்காரம் பண்ணிவிட்டு..அவிங்களை இனி அவங்க வீடுக்கரங்க பார்த்துக்குவாங்க-னு மனசு நிம்மதியோட ஒரு ஓரமா போய் ஒரு தம்மு பத்தவச்சு ஸ்ஸ்ஸ் னு புகைய உள்ள இழுக்கிரப்ப மனசு சொல்லும்..
"என்னோட தங்கச்சிக்கு இப்படி ஒரு கல்யாண நாளு எப்ப வருமோ"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக