செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

கனவு காதலர்கள்


காதலை கொண்டாடும் உலகத்தில் காதலி இல்லாமல் வாழ்வது பெரும் துயரம். எல்லோருக்கும் எப்படியாது காதல் வேண்டும். செல்போன் சிணுங்கல்களில், அரட்டை பக்கங்களில் காதில் headphone மாட்டிகொண்டு முத்த மழைகளில் முகம் தெரியாதவளின் காதலுடன் எப்படி எல்லாமோ காதலில் வாழ்கிறோம்.


காதலிப்பது, காதல் வயப்படுவது,காதலில் ஈடுபடுவது என இத்யாதி இத்யாதிகளுக்கும் அத்தியாவசியத்தேவை , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாலினபேதமில்லாமல் ஒரு ஆள்!. காதலை உணர வாய்ப்பே இல்லாமல் இருப்பது உலகிலேயே மிகவும் கொடியது. அது மனம் சார்ந்தது , உடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் டுபாக்கூர் விடமுடியாது. பெண் வாசனையே இல்லாத ஊரில் புடவை கட்டிய பொம்மை , குச்சி , கம்பு எது கிடைத்தாலும் கூட காதலிக்க (கற்பழிக்கவும்) நேரிடலாம். மேன்சன்களில் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குள்ளேயும் காமம் எப்போதும் விழிப்போடேயிருக்கும். அதனாலேயோ என்னவோ சிவராஜ் சித்த வைத்தியர் தொடங்கி சகல வைத்தியர்கள் மீதும் அவர்களுக்கு தீராத பயம். கைமாறும் காமக்கதை புத்தகங்களினூடாகவும் , புளூடூத்தில் பரவும் ஆபாச வீடியோவாகவும் எப்போதும் காமம் அவர்களினூடே நிறைந்து இருக்கும்.பசி,தூக்கம்,வறுமை இத்தனையையும் தாண்டி அவர்களுக்கான காமத்தை எப்போதும் அவர்கள் தீவிரமான உயிர்ப்போடு வைத்திருந்தனர்.


அதற்கான காரணத்தை எப்போதும் நான் அறிந்திருக்கவில்லை. எனக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது. சேவல்கள் நிரம்பி வழிகிற பண்ணைகளில்தான் கோழிகளுக்கான தேவை அளவுக்கு மீறியே இருக்குமோ என்னவோ!


மேன்சன் நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி இருந்தனர். ஒரு சிலருக்கு பல காதலிகள் இருந்தனர். சிலருக்கு காதலன்கள் இருந்தனர். இரவெல்லாம் செல்போன் சூட்டில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். செல்லம் குட்டி புஜ்ஜிமா , என்னடி பொண்டாட்டி மாதிரியான வார்த்தைகள் சகஜமாக காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். காதலிகள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கும் மட்டுமே வாய்த்திருந்தது. சிலரது காதலிகள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிருந்து காதோடு கட்டியணைக்க வேண்டியதாயிருக்கும். பலருக்கு தூரத்துமனைவிகளைக்கூட செல்போனில் அணைத்து முத்தமிடுகிற பாக்கியமேயிருந்தது. பேச்சிலர்களைக்காட்டிலும் இவர்களுடைய நிலை பரிதாபகரமானது.


எங்களோடு புதிதாக இணைந்த அவனுக்கு காதலிகள் யாருமேயில்லை. எங்களை எப்போதும் ஏக்கமாக பார்த்துக்கொண்டேயிருப்பான். எப்போதும் அருகிலிருந்து நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டேயிருப்பான். அவனுக்கான காதலிக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை. யாராவது பொண்ணுங்க நம்பர் குடு மச்சான் , நான் பேசி கரெக்ட் பண்ணிக்கறேன் என்பான். பாவப்பட்டு ஒரு பெண்ணின் எண்ணை கொடுப்போம். சில நாள் போன பின் திரும்பி வருவான்.. மச்சான் அந்த பொண்ணு பேச மாட்டேங்குது திட்டுதுடா என்பான். இன்னொரு பெண்ணின் செல்போன் எண் தருவோம்.. சில நாட்களுக்கு பின் அதே பதில்தான். தொடர்ச்சியாக நான்கு முறையும் தோல்வி.. ஐந்தாவது முறை கொடுத்த எண் வேலை செய்ய ஆரம்பித்த்து.தினமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பான். எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பான். அவளுடைய அழைப்புக்காக காத்திருப்பான். அவளுடைய போன் பிஸியாக இருந்தால் கடும் கோபமாத்துடன் எங்கள் மீது பாய்வான். பார்க்க பாவமாக இருந்தாலும் கிடைக்காதது கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் திளைப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அவளை அவன் உயிருக்கு உயிராக காதலிப்பதாக சொன்னான். (அவன் அவளை பார்த்தது கூட இல்லை. பேச்சு மட்டும்தான். அவள் சென்னையை சேர்ந்தவள் என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும். வேறேதும் தெரியாது.


மேன்சன்களில் வசிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. சரியான சாப்பாடு கிடைக்காது. சுத்தமான தண்ணீர்கிடையாது. கொசுக்கடிக்கு நடுவில் தூங்கமுடியாது.. மாதம் முழுவதும் காசிருக்காது. சென்னை மேன்சன்களில் மிக நல்ல வசதியான பல மேன்சன்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவை நரகமாகத்தான் இருக்கும். இதையெல்லாம் தாண்டியும் எப்போதாவது குடிப்பதுவும், இரவுக்காட்சி சினிமாவுக்கு போவதும், கும்பலாய் அமர்ந்து கொண்டு விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை மூட்டி தங்களுடைய மூக்கில் குத்திக்கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. என்னுடைய ஹீரோ மார்க்கெட்டிங் வேலை பார்த்தவன். அவனுடைய எல்லா பிரச்சனைகளையும் மறக்க அவளுடைய செல்போன் அழைப்பு அவனுக்கு பேருதவியாய் இருந்தது.
அந்தப்பெண் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் தெரியாது.. அவனுடையே பேச்சு சமயங்களில் சென்டிமென்ட்களை கடந்ததாகவும், ஆபாசங்களாக அறியப்பட்டவையாகவும் இருக்கும். உன்னை கட்டிபிடிச்சிருக்கேன்.. நீ என் கன்னத்தில் முத்தமிடுகிறாய்.. நான் உன் இதழ்களை கடிக்கிறேன் என்று இரவு முழுக்க பேசித் தீர்ப்பான். அவனுடைய காமத்திற்கான அந்த வடிகால் காதல் என்கிற பெயரோடு அவனுடன் வாழ்ந்தது. அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அவள் ஒரு முறை அவனை சந்திக்க விரும்புவதாய் சொல்ல இவனோ பேண்ட் சட்டையெல்லாம் புதிதாய் மாட்டிக்கொண்டு கிளம்பத்தயாரானவன், ஏனோ போகவில்லை. அவளுக்கு தன்னை பிடிக்காமல் போயிருச்சுனா என்றான். ஆனாலும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். பேசிக்கொண்டேயிருந்தவன். திடீரென ஒருநாள் அமைதியானான். அந்தபெண்ணின் எண் உபயோகத்தில் இல்லாமல் போனது. அவளை காணவில்லை. அவள் யாரென்றே தெரியாது. அவளுக்கு என்னாச்சு தெரியாது.. ஆனால் அவளுடைய எண்ணுக்கு அழைத்தால் எப்போதும் ஒரு பெண் இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று சொல்லி சொல்லி அவனை நோகடித்தாள்.


மேன்சன் நண்பனை அடிக்கடி சந்திப்பதுண்டு. திருமணமாகிவிட்டது. சொந்த கார பெண். எனக்கு பிறகு இரண்டு வருடங்கள் அந்த மேன்சனில் தங்கியிருந்தான். என்ன மச்சான் ஆச்சு அந்த செல்போன் பொண்ணு என்று அண்மையில் விசாரித்தேன். சிரித்தான்.. அடிக்கடி போன் பண்ணி பார்ப்பேன்.. என்னைக்காவது அந்த போன் சுவிட்ச் ஆன் ஆகும்னு நம்பிக்கை போக மாட்டேங்குது... நேத்து கூட போன் பண்ணி பார்த்தேன் மச்சான் சுவிட்ஆஃப்னுதான் வருது என்றான் புன்னகையுடன்.


அவளைப்பற்றி பேசும்போது அவன் கண்ணில்தான் என்ன ஒரு உற்சாகம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக