வெள்ளி, ஜனவரி 10, 2014

அன்பில் அவன்!


அந்த காலனியில் 10D வீடு காலியானது.

இனி அந்த வீட்டுக்கு யார் குடிவர போகிறார்கள் என்பது தான் அந்த காலனிவாசிகளின் முக்கியமான கேள்வி. அப்போதுதான் அந்த காலனியில் பத்து பாத்திரம் தேய்த்து சில சின்ன சின்ன வீட்டு வேலைகளும் செய்து வயிற்றை கழுவிக்கொண்டிருக்கும் ராணி அக்காவின் செய்தி வந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை யாரோ புதுமண தம்பதிகள் ஒன்று அந்த வீட்டிற்கு குடிவரபோகிறார்கள் என்று. இப்போது காலனிவாசிகளுக்கு வரும் புதிய குடித்தனக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கும் ஆவல் கூடியது.

இனி இந்த காலனி பற்றி!

ராணி அக்காதான் அந்த காலனியில் செய்தி ஒலிபரப்பாளர். இங்கே நடப்பதை அங்கும் அங்கே நடப்பதை இங்கும் கொஞ்சம் மசாலா கலந்து மாத்தி மாத்தி சொல்லி எல்லாரிடமும் சிநேகம் நடித்துகொண்டிருந்தாள். வாய் திறந்தால் அவளவும் பொய். கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து எதையாவது ஆட்டைய போட்டுவிடுவாள். இவள் இந்த காலனிவாசிகளின் ஒரு பிம்பம் தான். பெண்கள் எல்லாம் ஒன்று கூடினால் யாரவது ஒருத்தரைப்பற்றி கிசுகிசு பேசும் சபையாகத்தான் இருக்கும். ஆண்கள் எல்லாம் ஒன்று கூடினால் எதாவது வெட்டி நியாயம் பேசும் சங்கமாகதான் இருக்கும். எப்போதும் உடற்பயிற்சி செய்யும் குமார், எப்போதுடா வசந்தா புருஷன் வேலைக்கு போவாரென்று சமையம் பார்த்து அவர் போனதும் வசந்தா அக்கா வீட்டில் நுழைந்து இரண்டு பேரும் கூத்தடிக்கும் நிகழ்வுகளும் உண்டு. ஆனாலும் எல்லாரும் வெளியில் பவிசாக நல்லபிள்ளையாக தான் காட்டிக்கொண்டார்கள்.ஆண்களும் அந்த காலனியில் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்தவர்களை பற்றி எதையாவது பேசுவது. ஒருவீட்டில் நடப்பதை வேடிக்கை பார்த்து அதை பற்றி எதாவது புறம் பேசுவது என ஆண்களும் போழுதுபோக்கிகொண்டிருந்தார்கள்.

இந்த காலனியை பற்றிய விபரம் இந்த கதைக்கு தேவை இல்லாததுதான். இருந்தாலும் சொல்லவேண்டியதாயிற்று. பின்னால் வரும் சம்பவங்களுக்கு இது தேவைப்படும்.

இதோ...இன்று தான் ராணி அக்கா சொன்ன ஞாயிற்றுக்கிழமை.

முந்தின நாள் தண்ணி அடிச்ச ஹேங்-ஓவருடன் எழும்பும் ஒரே நாள் இந்த ஞாயிற்றுக்கிழமை. லீவ் தினம் ஆதலால் ஒரு சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்ளும். கூடவே மழையும் இருந்தால் சொல்லவே வேண்டாம். மழையை ரசித்துகொண்டே சோம்பேறித்தனமாக நேரத்தை கடத்திவிடலாம். ஆனாலும் சர்ச்க்கு போன பக்கத்து வீட்டு தம்பதியரும், வசந்தா அக்காவும் அவள் புருசனும், காலனி செகரட்டரியும் அவன் பொண்டாட்டியும் மற்றும் சில காலனிவாசிகளும் இந்த மழை பெய்யும் காலை வேளையிலும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பது மழையை ரசிக்கும் மனதுடன் அல்ல, 10D-யில் இன்று குடிவரும் புதுமண தம்பதிகளை வரவேற்கும் மனதுடனும் அல்ல. ஆனாலும் இவர்களுக்கு அவர்கள் யார் என்று பார்த்துவிட ஒரு தவிப்புடன் ஞாயிற்றுக்கிழமை என்றும் மழை என்றும் பொருட்படுத்தாமல் காத்துகொண்டு நிற்கிறார்கள். 10D வீட்டின் முன்னாள் ஒரு மினி லாரியில் வீட்டு சாதனங்களை சிலபேர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது மழை தண்ணீரை கிழித்துக்கொண்டு சர்ர்ர்ர் என்று ஒரு கால் டாக்சி 10D வீட்டின் முன்னாள் வந்து நின்றது. அதிலிருந்து குடையுடன் அவன் இறங்கினான் அவனை தொடர்ந்து அவளும் இறங்கி குடைக்குள் அவனுடன் சேர்ந்துகொண்டாள்.

பார்த்துக்கொண்டிருந்த எல்லார் முகத்திலும் முதலில் அளவுகடந்த ஆச்சர்யம்! பின்பு எல்லோர் மனதிலும் கேள்விகள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். குழப்பமான முகத்துடன் அவரவர் வீட்டிற்க்குள் சென்றுவிட்டனர். காரணம்???

அவன் சராசரிக்கும் குறைவான உயரம். ஆள் கொஞ்சம் கருப்பு அவ்வளவாக அழகாகவும் இல்லை.அவளோ அழகி என்றால் பேரழகி. அவனை விட உயரம். நல்ல கலர். அவனும் அவளும் ஜோடியாக நடந்தபோது அவளின் தோள்பட்டை வரைதான் இருந்தது அவன் உயரம். குடையை அவளுக்காக அவன் கையை மேலே தூக்கி பிடித்திருந்தான். இப்படி உடல் ரீதியாக எந்த பொருத்தமுமே அவர்களுக்கு இல்லை.




"ஐயோ...கடவுளே...இதுவா புருஷன் பொண்டாட்டி?" என்று வசந்தா அக்கா தன் புருசனிடம் கேட்க..

"ஹ்ம்ம்....இருக்கலாம் .....யாருக்கு தெரியும்?" என்று பட்டும் படாமல் புருசனும் சொல்லிவைத்தான்.

இப்போது காலனி குடும்ப பெண்களின் குழப்பங்கள் அவர்கள் கூடும் இடங்களில் அலசி ஆராயப்பட்டது.

"ஹேய்....அது அவன் புருஷன் இல்லை..சகோதரான இருக்கலாம்"

"ச்சே..அப்படி இல்லக்கா அது அவ புருசன்தான்..."

"இனி உண்மையான புருஷன் வேற வருவானோ?"

இப்படியாக காலனிவாசிகளின் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது.

குமாரும் அவன் பங்குக்கு அவன் நண்பர்களிடம் அந்த ஜோடியை பற்றி கிண்டல் அடித்து சிரித்துகொண்டிருந்தான்.

"ஹேய்...அதோ வரான் பாரு அவனுக்கு மேட்டர் பண்ண கண்டிப்பா ஸ்டூல் தேவைப்படும்.."

"ச்சே ....அவளை பார்க்கவே முடியலியே" என்று அவன் ப்ரெண்ட் வருத்தப்பட்டுகொண்டிருந்தான்.

இதுவும் போதாதென்று...காலனி காவலாளியும் அவன் பங்குக்கு கமெண்ட் அடித்தான்.

"அவளை பார்த்தா ஒரு புல் பாட்டில் பீர் மாதிரி ஜில்லுனு இருக்கா....அவன் ஒரு குவாட்டர் பாட்டில் போல இருக்கான்"

தங்களுடைய வேலைகளை தாங்களே சொந்தமாக செய்வதாக சொல்லிவிட்டதால் புதிய ஜோடி ராணி அக்காவிற்கு எதிரி ஆகிவிட்டார்கள். ராணி அக்காவால் 10D வீட்டிக்குள் மட்டும் சென்று வதந்தி பேச நியூஸ் ஒன்றும் சேகரிக்க முடியவில்லை. அந்த வீடும் எப்போதும் பூட்டியே இருந்தது. 

புதுமண தம்பதிகள் ஜோடியாக வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள். மழையோ வெயிலோ அவன் அவளுக்காக அவளின் தலைக்கு மேலேகையை தூக்கிப்பிடித்து குடை பிடித்து கூடவே நடந்தான். இரண்டு பேரும் தங்களுக்குள்ளாகவே எதோ சந்தோசமா சிரித்து பேசிக்கொண்டு போய் வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் யாரையும் போய் பார்த்து தங்களை அறிமுகப்படுத்திக்கவும் இல்லை. யாரும் அவர்களிடமும் வந்து பேசவும் இல்லை. காலனியில் அவர்கள் ஜோடியாக நடக்கும்போது எல்லாரும் எதோ ஒரு விநோதத்தை பார்ப்பது போல அவர்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துகொண்டார்கள்.




காலனியில் சின்ன பிள்ளைகள் விளையாடும்போது ஒருவன் ஒரு பெரிய டப்பாவும் ஒரு சிறிய டப்பாவும் எடுத்து வைத்து இது என்ன என்று யாராவது சொல்லுங்கள் பார்ப்போம் என்று வினா எழுப்ப, அந்த கூட்டத்தில் இருந்த இன்னொருவன் சின்ன டப்பாவை காமித்து "இது குள்ளன்" என்றும் பெரிய டப்பாவை காமித்து "இது அவன் பொண்டாட்டி" என்றும் நக்கல் விட..அன்றுமுதல் அந்த காலனி அவர்களை குள்ளனும் பொண்டாட்டியும் என்றே அழைக்க ஆரம்பித்தது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சிலநேரம் அவர்கள் காதுபடவும் சிலநேரம் மறைவாகவும் "குள்ளனும் பொண்டாட்டியும்" என்றே அவர்களை கிண்டல் பண்ணி சிரித்துக்கொண்டார்கள். குள்ளனும் பொண்டாட்டியும் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் கேட்டதாகவும் காட்டிக்காமல் எப்போதும் போல ஜோடியாக சந்தோசமாகவே இருந்தார்கள்.... ஒன்றாகவே கைகோர்த்து நடந்தார்கள்.

இருந்தாலும் அவர்களின் உறவு குறித்து காலனியில் சில வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

"என்ன இருந்தாலும்...இது எப்படி?"

"சார்...அந்த பொண்ணு அவன பணத்துக்காக கட்டியிருக்கும்" 

"இப்படி குள்ளமா இருக்கிற ஒருத்தன இவளோ அழகான பொண்ணு யாராச்சும் கலியாணம் பண்ணுவாங்களா? எல்லாம் காசு சார் காசு."

"அவன் ஒரு கம்பெனில நல்ல போசிசென்ல இருக்கான் சார்...அவ ரிசப்சனிஸ்ட் சார்" -இது அந்த காலனி காவலாளியின் கண்டுபிடிப்பு.

இந்த கண்டுபிடிப்புக்கும் மேலாக காலனி செகரட்டரி பொண்டாட்டி ஒரு ஸ்டேட்மென்ட் விடுத்தாள்.

"இதெல்லாம் ஒரு செட்-அப்..புதுசா பார்க்கிறப்போ எல்லாம் நல்லாத்தான் இருக்கும். நாங்க எல்லாம் இதுமாதிரி எவளோ ஜோடிய பாத்திருக்கோம்.வேணும்னா பாருங்களேன் இன்னும் இரண்டே நாளில் அவங்களுக்குள்ள கண்டிப்பா சண்டை நடக்கும்"

சொல்லி வைத்தாற்போல இரண்டு நாட்களில் குள்ளனின் வீட்டிலிருந்து திடீரென்று எதோ கீழே விழுந்ததுபோல சப்தம் வரவே...பெண்கள் எல்லாரும் சந்தோசமாக அந்த வீட்டுப்பக்கம் போய்  பார்த்து கதவில் காதுவைத்து...

"நான் சொன்னேன் இல்ல...சண்டை வரும்னு....வந்துச்சு பாருங்க"

"அவன் அவளை அடிச்சிருப்பானா? இல்ல அவ அவனை அடிச்சிருப்பாளா?"

சந்தோசமாக ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்த்து கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தபோது...10D வீட்டின் கதவு திறந்து குள்ளனின் பொண்டாட்டி வெளியே எட்டி பார்த்தாள். வீட்டிற்க்குள் புருசனும் பொண்டாட்டியும் சந்தோசமாக எதோ விளையாடியதில் மாவு வைத்திருந்த பரண் ஒன்று மேசையிலிருந்து கீழே விழுந்து உடைய அதிலிருந்த மாவு இருவர் முகத்திலும் பட்டு ஒருத்தரை ஒருத்தர் வெட்கத்துடன் பார்த்து சிரித்துக்கொண்டே கதவை திறந்திருக்கிறாள். இந்த காதல் விளையாட்டை பார்த்த காலனி பெண்களின் முகத்தில் ஈயாடவில்லை மேலும் நினைத்தது நடக்கவில்லை என்ற வருத்தமும் வேறு. அதிலும் சவால் விட்ட செகரட்டரி பொண்டாடிக்கு மிகுந்த அவமானமாக போய்விட்டது.

வேகம் வேகமாக அங்கிருந்து சென்று எல்லார் முன்னாலும் அடுத்த ஸ்டேட்மென்ட் விட்டாள்.

"இது ஒரு நார்மல் ரிலேசன்ஷிப் ஒன்றும் இல்லை. இட்ஸ் எ மேரேஜ் ஆப் கன்வீனியெண்ட். உண்மைய சொல்லப்போனா இந்த பிசிக்கல் ரிலேசன்ஷிப் என்கிறது ஒரு கெமிஸ்ட்ரி. பிசிக்கல் ரிலேசன்ஷிப் இவங்களுக்கு ரொம்ப டிபரண்டா இருக்கு. அதனால ஒரு ஹாப்பி செக்சுவல் ரிலேசன்ஷிப் இவங்களுக்குள்ள சாத்தியமே இல்லை. இது வேர்ல்ட் புல்லா புரூவ் பண்ண தியரி"

செகரட்டரி பொண்டாடி சொன்னதில் எல்லாருக்கும் ஒன்று மட்டும் புரிந்தது. குள்ளனால் தன் மனைவியை செக்சுவலா திருப்தி பண்ண முடியாது. அதற்கு நல்ல வளர்ந்த ஆஜானுபாகுவான தங்களை போல ஆண்களால் மட்டுமே முடியும் என்று நம்பினார்கள். அதற்கும் மேல் வசந்தா அக்காவும் "என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே...அவளுக்கும் தேவைகள் இருக்கும்" னு பொத்தாம்பொதுவா கொளுத்திப்போட இப்போது காலனி ஆண்கள் மனதில் குள்ளனின் பொண்டாட்டியை திருப்தி படுத்துவது எப்படி என்ற காமத்தீ கொஞ்சம் கொஞ்சமாக எரிய ஆரம்பித்தது. அதன் விளைவாக..

குள்ளனின் பொண்டாட்டி எப்போதாவது தனியாக நடந்து போகிறப்போ... ஆளாளுக்கு முக்கிலும் மூலையிலும் நின்று அவள் பார்வை படும்படி அவளை கரெக்ட் பண்ண முயன்றுகொண்டிருந்தார்கள். உடற்பயிற்சி குமார் ஒருபடி மேலே பொய் அவளிடம் நைசாக "பேஸ்புக்" அக்கௌன்ட் இருக்கா என்றும் கேட்டான். அவள் இதை எல்லாம் கவனித்ததாகவே தெரியவில்லை. இப்படி நாளொருமேனியும் பொழுதொரு ஐடியாவுமாக எல்லாரும் முயற்சி செய்துகொண்டிருக்கையில் குள்ளனின் பொண்டாட்டியின் உடம்பிலும் சில கெமிஸ்ட்ரி மாற்றங்கள் காண தொடங்கின. குள்ளனின் பொண்டாட்டியின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக வீங்க தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாருக்கும் புரிய ஆரம்பித்தது "குள்ளனின் பொண்டாட்டி கர்ப்பமுற்று இருக்கிறாள்" என்பதை ஒவ்வொருநாளும் வளரும் அவளது வயிறு காட்டிக்கொடுத்தது. கடைசியில் இவர்களின் பிசிகல் செக்சுவல் ரிலேசன்சிப் குறித்து பேசிய செகரட்டரி பொண்டாட்டியும், அதற்கு ஆமாம் போட்ட பெண்கள் சங்கமும், இவளை கரெக்ட் பண்ண துடித்த காமுகர்களும் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு உட்காந்திருந்தனர்.

ஆனாலும் காலனிவாசிகள் விடுவதாக இல்லை..

"அவள் வயிற்றில் வளருறது குள்ளனின் புள்ளை இல்லைன்னு செகரட்டரி சார் சொல்றாரு" இது ராணி அக்காவின் கிசுகிசு.

இந்த வதந்திகளுக்கு முத்தாய்ப்பாக ஒருநாள் குள்ளனின் வீட்டிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் வேனில் அழைத்தும் சென்றார்கள். காலனி மொத்தமும் கூடி நின்று வேடிக்கை பார்த்தது. குள்ளனின் பொண்டாட்டி தவிப்புடனும் கண்ணீருடனும் நின்றுகொண்டிருந்தாள். வதந்திகள் மேலும் காட்டுதீ போல் பரவியது.

"இது எதோ கள்ளத்தொடர்பு கேசுதான்"

"குள்ளன் வேலை பார்க்கும் இடத்திலிருந்து பணம் எதோ திருடியிருக்கிறான்"

"இதுக்குதான் சொல்றது கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பகூடாது"

அதன் பிறகு நாலைந்து நாட்கள் குள்ளன் திரும்பி வரவேயில்லை..அவன் பொண்டாட்டியும் வாசலில் சோகமாக அவனுக்காக காத்து நின்றுகொண்டிருந்தாள். ஒருதடவை தோற்றுப்போன காமுகர்கள் கர்ப்பிணி ஆனாலும் பரவாயில்லை என்று மீண்டும் அவள் வீட்டுமுன்னால் அங்கும் இங்கும் நடந்து அவளை கரெக்ட் பண்ண முயன்றுகொண்டிருந்தனர். இதை எல்லாம் அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவளின் தவிப்பும் கண்ணீர் மட்டும் வற்றவேயில்லை. 

இந்த நாட்களின் குள்ளனின் பொண்டாட்டியுடன் ஒரு அட்வகேட் வந்து போய்கொண்டு இருந்தாள். எதோ பொய் கேசு போட்டு குள்ளனை குற்றவாளி ஆக்கியதாக நீதிமன்றதில் தெளிந்ததனால் குள்ளனை ரிலீஸ் பண்ணினார்கள். அவனை கூடிக்கொண்டு குள்ளனின் பொண்டாட்டி அதே காதலுடன் அவன் கைகளை கோர்த்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.

நீதிமன்றம் குள்ளனை நிரபராதி என்று விட்டாலும் காலனிவாசிகள் விடுவதாக இல்லை. அடுத்தநாளே குடியிருப்பு வாசிகளின் போர்டு மீட்டிங் கூட்டி குள்ளனையும் கூப்பிட்டு லெப்ட் - ரைட் வாங்கிவிட்டார்கள். தன்னை விட பெரியவர்களின் மத்தியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குள்ளன் கூனி குறுகி உட்காந்திருந்தான்.

"இது கௌரவமான ஆள்கள் குடியிருக்கும் காலனி..இங்க போலீஸ் வந்தது உன்னாலத்தான் "

இந்த காலனி சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை போலீஸ் வந்தது"

"உன்னுடைய கேவலமான பொழப்பு எல்லாம் இந்த காலனிக்கு ஒத்துவராது"

"கடைசியாக ஒரு மாதம் டைம் உனக்கு குடுக்கிறோம்..அதற்குள் வேற வீடு பார்த்து போயிடனும்"

காலனி செகரட்டரி கறாராக சொல்லிவிட்டார். குள்ளன் கலங்கிய கண்களுடன் எழுந்து போய்விட்டான். இதை எல்லாம் பார்த்துகொண்டிருந்த தன் மனைவியை கட்டிப்பிடித்துக்கொண்டு கதவை மூடி இருவரும் கண்கலங்கி வீட்டினுள் உட்காந்திருந்தனர்.

நாட்கள் கடந்தன...மழை விட்டும் தூவானம் விடாத ஒரு அதிகாலை பொழுதினில் குள்ளனின் வீட்டு முன்பாக ஒரு கால் டாக்சி வந்து நின்றது. குள்ளன் அதே மாதிரி கை உயர்த்தி பிடித்த குடையுமாய் தன் பொண்டாட்டியை கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.  அவள் இடுப்பில் கைவைத்து வலியுடன் நடந்து வந்து காரில் உட்கார வைத்தான். காலனி மொத்தமும் வேடிக்கை பார்த்தது. கார் ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தது.

இரண்டு நாட்களாக குள்ளனும் பொண்டாட்டியும் திரும்பி வராததால் இனி அவர்கள் ஒருநாளும் வர மாட்டார்கள் என்று காலனிவாசிகள் தீர்மானித்தார்கள். வீடும் பூட்டியே இருந்தது. நாலாவது நாள் காலையில் குள்ளன் திரும்பிவந்தான். வீட்டு சாமான்கள் எடுத்து செல்லும் லாரி வரும் என்று நினைத்த காலனிவாசிகள் கண்ட காட்சி வேறொன்றாக இருந்தது. ஒரு ஆம்புலன்ஸ் 10D வீட்டின் முன்னாள் வந்து நின்றது. அதிலிருந்து குள்ளன் கையில் அப்போது பிறந்த தன்னுடைய குழந்தையை இறுக்கி அணைத்தபடி இறங்கினான். அவன் பின்னாலிருந்து நான்குபேர் ஸ்டெச்சரில் அவனின் காதல் மனைவியில் உயிர்போன உடலை இறக்கிகொண்டிருந்தனர். குள்ளன் கலங்கிய விழிகளுமாய் வீட்டிக்குள் நுழைய, வந்தவர்கள் குள்ளன் பொண்டாட்டியின் உடலை வீட்டினுள் கிடத்திவிட்டு கிளம்பினர். காலனிவாசிகள் நிலைமையை கொஞ்சம் உணர்ந்து சம்பிரதாயமாக அவன் நின்றுகொண்டிருந்தனர். குள்ளன் தன் குழந்தையை அணைத்தபடி கண்ணீர்வழிய தன் மனைவியின் முகம் பார்த்து பிரக்ஞ்சையற்று உட்காந்திருந்தான். அவனின் நெருங்கிய ஆபிஸ் நண்பர்கள் நாலைந்துபேர் தவிர வேறு யாரும் அங்கு வரவில்லை. ஆபிஸ் நண்பர்கள் நின்று எல்லா காரியமும் செய்து முடித்தனர்.

ஏதொரு மரணத்திற்கு பிறகும் யாருக்கும் சொல்லலாம் என்கிற ...

"இருந்தாலும் இது ரொம்ப கஷ்டமப்பா"

"ச்சே நல்ல பொண்ணு...இப்படி அல்பாயுசுல போயிட்டாளே"

"கடவுள் ரொம்ப கொடூரமானவன்பா..நல்லவங்களை சீக்கிரம் எடுத்துக்கிறாரே"

என்று சங்கடப்பட்டும்....முகத்தை துக்கமாகவும் வைத்துக்கொண்டு சொல்லி சென்றார்கள்.

குள்ளனும் இரண்டு மூன்று நாட்கள் வீட்டை விட்டு குழந்தையுடன் எங்கோ போய்விட்டான். 

பின்பு ஒருநாள் அவன் ஆபிஸ் நண்பர்கள் அவனை காரில் வீட்டில் கொண்டுவந்து விட்டு சென்றார்கள். குழந்தையை டவலில் சுற்றியபடி நெஞ்சோடு கட்டி அணைத்தபடி வீட்டினுள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டான். குழந்தையுமாய் வீட்டிற்க்குள் சென்ற குள்ளனை அதன்பிறகு வெளியவே பார்க்க முடியவில்லை. குழந்தையின் அழுகை சப்தம் கூட கேட்காததால் எல்லாருக்கும் கொஞ்சம் சந்தேகம் வலுத்தது. அசாதரணமான எதோ ஒன்று நடக்கபோவது போல் எல்லாருக்கும் தோன்றியது. வானிலை கூட ஒருமாதிரி பேய்க்காற்றுடன் சுழன்று வீசியது. நாய்களின் ஊளையுடன் அந்த இரவு இடியும் மின்னலுமாய் கடந்துபோய்க்கொண்டு இருந்தது. பேய்மழை பெய்துகொண்டிருந்த அடுத்தநாள் குள்ளனின் வீட்டு கதவு மீண்டும் திறக்கப்பட்டது.

குழந்தையை அழகாக அன்போடு லாவகமாக நெஞ்சோடு அணைத்து பிடித்திருந்தான். குழந்தை சிணுங்கியது. குடையை விரித்தான்.வெளியே நடந்தான் குழந்தையுடன். எப்போதும்போல் அவன் கை குடையை உயர்த்தி பிடித்திருந்தது. சிணுங்கிய குழந்தையின் கைகளில் முத்தமிட்டபடியே அந்த காலனிவாசிகளின் முன்னால் நடந்தான். இதை பார்த்துகொண்டிருந்த காலனிவாசிகளுக்கு அப்போது விசித்திரமாக ஒரு ஞானோதயம் பிறந்தது. "அந்த மனிதனின் குடையின்கீழ் வெற்றிடமாக பெரிய ஒரு இடம் உண்டு. பூமியில் உள்ள எதைக்கொண்டும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்"



இப்படிக்கு
ர.சி க ன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக