வீட்டிற்குள் நுழையும் பொழுது, அக்காவின் குரல் கேட்டது....கூடவே குட்டி பாப்பா ஷாமிலி அழுகையும் கேட்டது.
"ஏய்...ஒழுங்கா சாப்புடு. இல்லாட்டி பூச்சாண்டிகிட்ட புடிச்சி குடுப்பேன்"
"இப்போ பாரு அழுகிய நிப்பாட்டலேன்னா அடி வாங்க போறே" - இது அக்கா.
"பத்தாயி......" இது ஷம்மு குட்டியின் அழுகை..
என்னக்கா என்னாச்சு. ஷம்மு குட்டி எதுக்காக காலையிலே அழுதுகிட்டு இருக்கா??
ஹ்ம்ம் வாடா தம்பி...நீயே பாரு...அவளோட அடத்தை....சாப்புட சொன்னா கைய மேல தூக்கிட்டு பத்தாயி பத்தாயி-னு அழுதுகிட்டே இருக்கிறாடா..
"ஷம்முகுட்டி என்னடா செல்லம்...எதுக்கு அழுறீங்க.."
கைய நீட்டுன உடனே என்கிட்டே வந்துட்டா ஷம்முகுட்டி. கண்ணுல புல்லா கண்ணீரு...கட்டி அணைச்சுகிட்டேன்.
"அழாதடா என் செல்லோ...."
கொஞ்சம் நேரம் என்னையே பார்த்துகிட்டு இருந்தா. மறுபடியும் கைய மேல தூக்கிட்டு பத்தாயி...னு அழ ஆரம்பிச்சிட்டா..
"அக்கா நான் நினைகிறேன் அவ எதையோ கேட்டு தான் அழுரான்னு"
"அட நீ வேற போடா...நானும் எவளவோ கேட்டு பார்த்தாச்சு...ஒரே பத்தாயி பத்தாயி னு தான் சொல்றா.."
"உனக்கு பத்தாயின்னா என்னனு தெரிஞ்சா அவளுக்கு குடு..." ஆமா நீ இன்னைக்கு காலேஜ் போகலியாடா?
"இல்லக்கா இன்னைக்கு போகல. அது தான் காலையிலே உன்னையும் மாமாவையும் பார்த்துட்டு போகலாம்-னு வந்தேன்" ஆமா மாமா ஆபீஸ் கிளம்பி
போயிட்டாங்களோ?
"ஆமாடா ....நீ துரை காலையில 10 மணிக்கு வந்தா...மாமா உனக்காக வீட்டில காத்துகிட்டு இருப்பாரா"
"ஐயோ...மொத அவ அழுகைய நிப்பாட்டுடா....தலை வலிக்குதுடா..." உன் மாமா ஆபீஸ் கிளம்புறவரை நல்லாத்தான் சிரிச்சுகிட்டு இருந்தா..
அவரு போய் கொஞ்சம் நேரத்துல அழுகைய ஆரம்பிச்சா இன்னும் நிப்பாட்டவே இல்ல."
எனக்கே ஷம்முகுட்டிய பார்க்க சங்கடமா இருந்து. அழுது அழுது கண்ணு எல்லாம் சிவப்பா மாற தொடங்கியிருந்து..
"டேய் ...நீ சாப்புட்டியாடா? தோசை வார்த்து தரவா"
"வேனாக்கா...காலையில வீட்டில சாப்புட்டு தான் வந்தேன்.."
ஷம்முகுட்டிக்கு வீட்டில இருந்த ஒவ்வொரு பொருளா காமிச்சுகிட்டே..இது வேணுமா இது வேணுமா-னு கேட்டேன்...
அவ எல்லாதுக்கும் தலைய ஆடிகிட்டு வேண்டாம்னு சைகை பண்ணா...ஆனா "பத்தாயி" அழுகை மட்டும் விடவே இல்லை..
கையில இருந்த மொபைல் எடுத்து அவகிட்ட குடுத்தேன்...எப்போதும் அதை வச்சு ஆசையா விளையாடுவா...
அதை கொஞ்சம் நேரம் கையில வச்சு அப்பிடி இப்படி பார்த்தா....அழுகைய நிப்பாட்டிட்டு அதோட பட்டன்ஸ் எல்லாம் கொஞ்சம் அழுத்தி...
அதுல லைட் எரியுறத பார்த்தா.....
எனக்கும் கொஞ்சம் நிம்மதி...ஷ் ஷ் ...அப்பாடா இப்பவாச்சும் அழுகைய நிறுத்துநாளே-னு மனசுக்குள்ள சந்தோசம்.
அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நிலைக்கவில்லை...கொஞ்சம் நேரத்துல மொபைல் தூக்கி கீழ போட்டுட்டு ...மறுபடியும்... "பத்தாயி-னு" அழுகைய ஆரம்பிச்சிட்ட...என்ன எல்லாமா செஞ்சு பார்த்தும்....அவ பத்தாயி அழுகைய விடுறதா இல்ல..
அக்கா நான் இவளை கொஞ்சம் நேரம் வெளிய கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிக்கிட்டு ஷம்மு குட்டிய தூக்கி பைக்ல உட்காரவச்சு வெளிய கிளம்பிட்டேன்.
ரோட்ல நடக்கிறத எல்லாம் வேடிக்கை பார்த்துகிட்டே வந்தா. அப்படியே கடைக்கு கூட்டிகிட்டு போயி என்ன வேணும்னு கேட்டேன்.
"பத்தாயி"
ஸ்ஸ்..அப்பா என்ன இது பத்தாயினு கடைகாரர் கிட்ட கேட்டேன். அவரும் பேந்த பேந்த முழிச்சுகிட்டு இதுவா அதுவான்னு ஒவ்வொண்ணா காமிச்சாரு. எதுக்குமே ஷம்மு மசியறதா இல்லை. அவளோட கண்களில் இப்போதும் பத்தாயி தேடல் தான்.
கடைசியா ஒரு சாக்லேட் வாங்கி குடுத்தேன். அவ அதை வேண்டா வெறுப்பாதான் வாங்கிகிட்டா. அதை பிரிச்சி சாப்பிடனும்னு கூட அவளுக்கு தோணலை. மறுபடியும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தேன். கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தவ பத்தாயினு மறுபடியும் அழ ஆரம்பிச்சிட்டா.
அக்கா எனக்கு என்னமோ இவளுக்கு உடம்புக்கு முடியலன்னு நினைக்கிறேன், ஹாஸ்பிடல் கூட்டிகிட்டு போலாமா
இருடா..மொதல்ல உன் அத்தானுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்னு அக்கா போன் எடுத்து அத்தான்கிட்ட விவரத்தை சொன்னா. சொல்லிக்கிட்டு அக்காவும் நானும் ஷம்மு தூக்கிட்டு பக்கதுல இருந்த குழந்தைகள் டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனோம். ஷம்மு மட்டும் சில நேரம் அழுகிறதும் சிலநேரம் பேசாம இருக்கிறதுமா பத்தாயி புராணம் பாடிகிட்டு இருந்தா. அந்த நேரத்துல அத்தானும் அடிச்சு புடிச்சி வந்து ஷம்முக்கு என்னாச்சு என்னாச்சுனு அவர் பங்க்குக்கு சமாதானம் பண்ண ட்ரை பண்ணாரு. எப்படியோ ஒரு வழியா டாக்டர் ரூமுக்குள்ள போனோம். அவர் பங்குக்கு படிச்ச வித்தை எல்லாம் ட்ரை பண்ணிக்கிட்டு குழந்தைக்கு ஒண்ணுமே இல்லையே, வேணும்னா ஒரு டானிக் எழுதி தரேன். அதை 2 நேரம் குடுத்து பாருங்கன்னு ஒரு 200 ரூபா பில் போட்டாரு. எங்களுக்கு எப்படியோ புள்ளை அழுகிய நிப்பாட்டுனா போதும்னு ஆயிடிச்சி.
மறுபடியும் வீட்டுக்கு போனதும் வீட்டு முன்னால எங்க அம்மா, அத்தான் வீட்டில இருந்து அவங்க அப்பா அம்மா எல்லாரும் வந்திருந்தார்கள். அக்கா அத்தானை ஓரக்கன்னாலே மொறைச்சு பார்த்தாங்க. அத்தான் தலைய சொறிஞ்சுகிட்டே ஹி ஹி நான் தான் வரப்ப அவங்களுக்கு போன் பண்ணி சொன்னேன்னு வழிஞ்சாரு. ஆக மொத்ததுல ஆளாளுக்கு ஷம்முவை தூக்கி கொஞ்சி கொஞ்சி பார்த்தாங்க. சில நேரம் அமைதியா இருந்தாலும் அந்த பத்தாயி மட்டும் அவ வாயிலிருந்து போகவே இல்ல. டாக்டர் எழுதி குடுத்த டானிக் குடிச்சிட்டு கொஞ்சம் நேரம் தூங்குனா. மீதி நேரம் எல்லாம் பத்தாயி தான். இப்படியாக அன்னைக்கு ஒரு நாள் கழிந்தது. எல்லாரும் அக்கா வீட்டிலையே படுத்து தூங்கிட்டோம். எல்லார் முகத்திலும் ஒரே கவலை தான். ஷம்முக்கு என்னாச்சு, அவளுக்கு என்ன தான் வேணும்.
அடுத்த நாள் காலையில நான் பாதி தூக்கத்தில இருந்தேன். அத்தான் ஆபீஸ் கிளம்பிகிட்டு இருந்தாரு. அக்கா, அம்மா, மாமியார் அடுப்படியில எதோ பேசிகிட்டு சமையல் வேலையில மும்முரமா இருந்தாங்க. மாமனார் ஹால்ல உட்காந்து பேப்பர் படிசிகிட்டு இருந்தார். அந்த நேரம்....
சந்தோசமா சிரிப்பினூடே ஷம்முவின் குரல் ..."பத்தாயி....ஹை பத்தாயி"
வீடே ஒரு நிமிஷம் மெளனமாக...எல்லாரும் வாசல் பக்கம் ஓடினோம். நானும் பெட்ல இருந்து அவசரமா எழும்பி வாசல் பக்கம் ஓடினேன்.
அங்கே....ஷம்முகுட்டி கைகொட்டி குதூகலமாக துள்ளி குதிச்சுகிட்டே மேல பார்த்து....ஹேய் பத்தாயி பத்தாயினு சொல்லிக்கிட்டு இருந்தா. நாங்களும் ஆர்வமா என்னடா இது பத்தாயினு மேல பார்த்தா..
பக்கத்துக்கு வீட்டு பசங்க மேல மாடியில நின்னுகிட்டு காத்தாடி விட்டுகிட்டு நின்னாங்க. இந்த கத்தாடிய நேத்தைக்கு காலையில பார்த்து தான் இவளும் நாள் பூரா "பத்தாயி பத்தாயினு" கேட்டுகிட்டு இருந்திருக்கா!
ஆளாளுக்கு ஓடிபோய் ஷம்முகுட்டிய தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சாங்க. நான் உடனே அவளுக்கு ஒரு பத்தாயி வாங்க கிளம்பிகிட்டு இருந்தேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக