வெள்ளி, செப்டம்பர் 23, 2016

யார் இந்த விஜயலெட்சுமி!



நடிகர் வினுச்சக்ரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் 1979ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம், இந்தி என 450 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று.

டிசம்பர் 2ம் தேதி 1960ல் ஆந்திர மாநிலத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் விஜயலெட்சுமி. 4ம் வகுப்போடு பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டவர். சிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கணவர் மற்றும் மாமியார் கொடுமையின் காரணமாக பிழைப்புக்காக சென்னை வந்தவர் விஜயலெட்சுமி. 

சினிமாவில் ஒப்பனைக் கலைஞராக நடிக்க ஆரம்பித்து பின்னர், நடிகர் வினுச்சக்ரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சாராயக்கடையில் பணிபுரியும் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். வினுச்சக்ரவர்த்தி விஜயலெட்சுமிக்கு சினிமாவுக்காக வைத்த பெயர் ஸ்மிதா. பின்னர் படத்தில் வந்த சிலுக்கு என்ற கதாபாத்திர பெயரோடு சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் விஜயலெட்சுமி. 

1979ல் தொடங்கி 1990 வரை திரை உலகில் தனது கவர்ச்சியால் கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் இல்லாத திரைப்படங்களே கிடையாது என்ற அளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் அப்போது இருந்தது. ரஜினி, கமல், என அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் சில்க் ஸ்மிதா நடித்துள்ளார். கவர்ச்சி மட்டுமல்லாது அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது போன்ற திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடிப்பை வெளிப்படுத்தியவர் சில்க் ஸ்மிதா. 

இன்றை காலகட்டத்தில் கதாநாயகியாக நடிப்பவர்களே கவர்ச்சி வேடங்களில் நடிப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்ட நிலையில், சில்க் கவர்ச்சியாக நடித்த போது பலரால் தூற்றப்பட்டவர். ஆனால் யாரும் துணிந்து ஏற்று நடிக்காத கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் சில்க். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் ”தி டர்டி பிக்சர்” என்ற படம் 2011ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. ஆனால் சில்க் ஸ்மிதாவுக்கு அவர் காலகட்டத்தில் இவ்வாறான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

திரையில் ஜொலிக்கும் பல நடிகைகளின் உண்மையான வாழ்க்கை என்பது சோகம் நிறைந்ததாகவே இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில்க் ஸ்மிதா. தனது 35வது வயதில் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்துகிடந்தார் சில்க் ஸ்மிதா. மனஅழுத்தம் காரணமாக அல்லது காதல் தோல்வி காரணமாக சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை வழக்கை முடித்துவைத்தது.

சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்ட விஜயலெட்சுமியின் வாழ்க்கை இளம் வயதிலேயே முடிந்துவிட்டாலும் அவரது சுவடுகள் மர்லின் மன்றோவை போல் மறையாமல் இருக்கும் என்பது உண்மை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட ”தி டர்டி பிக்சர்” திரைப்படம்.

சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக