வாழ்க்கையில் எவ்வளவுதான் எதிர்மறையான விஷயங்கள் நடந்தாலும், சில விசயங்களில் மனதுக்குள் நம்பிக்கை என்னும் ஒரு ஒளிக்கீற்று எங்காவது மறைந்திருக்கும். அதை நான் அதிகமாக நம்பாவிட்டாலும் சில நேரங்களில் அது மின்னி மறைவதை தடுக்க முடியவில்லை. அப்படி என்னால் தடுக்க முடியாதது அவளுடன் என்றாவது என் வாழ்க்கை தொடங்கும் என்கிற ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று.
என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டு காட்டிய பியானிஸ்ட் கதையே இதற்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். பல நாட்களாக மறைந்து வாழும் பியானிஸ்ட் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்து, எலும்பும் தோலுமாக, செத்துப் போகும் நிலையில், சாவதற்கு முன் ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போமே என்று தேடும் போது ஒரு டப்பா கிடைக்கிறது. அதைத் திறக்கும் போது அது கீழே விழுந்து சப்தம் எழுப்புகிறது. சத்தத்தைக் கேட்டு அந்த வீட்டின் உள்ளே வருகிறான் ராணுவ அதிகாரி.
அந்த யூதனைப் பார்த்த உடனேயே அதிகாரிக்கு அவன் பல மாதங்களாக அங்கே ஒளிந்திருக்கிறான் என்று தெரிந்து விடுகிறது. நீ யார் என்கிறான். இவன் விஷயத்தைச் சொல்லி, தான் அந்த ஊரில் ஒரு பிரபலமான பியானிஸ்டாக இருந்ததையும் சொல்கிறான். உடனே அதிகாரி எதிரே இருக்கும் பியானோவைப் பார்த்து விட்டு “எங்கே வாசி…” என்கிறான்.
அப்போது அந்த யூதன், அந்த பியானிஸ்ட் Chopin-இன் Ballade 1 ஐ வாசிக்கிறான். யோசித்துப் பாருங்கள். ஒரு வருடமாக, தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் பியானோ தன் கண்ணெதிரே இருந்தும் வாசிக்க முடியவில்லை. வாசித்தால் அடுத்த கணம் மரணம். ஆனால் இப்போது அந்த மரணமே அவன் எதிரே அமர்ந்து கொண்டு பியானோ வாசிக்க உத்தரவிடுகிறது. கீழே பியானிஸ்ட் படத்தின் அந்தக் காட்சியின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். மொழி புரியாவிட்டாலும் அந்தக் காட்சியை கவனமாகப் பாருங்கள். அந்த இசையைக் கேளுங்கள். கடவுள் நேரடியாக உங்களோடு பேசுவதைப் போல் இருக்கும். சோப்பின் மூலமாக கடவுள் அந்த நாஜி அதிகாரியோடு அன்றைய தினம் அந்தத் தருணத்தில் பேசினார். அந்த யூதனை அதிகாரி சுட்டுக் கொல்லவில்லை. மாறாக, மீண்டும் அவனிடம் வந்து பாலும் ரொட்டியும் பழச்சாறும் பாலாடைக் கட்டியும் தின்னக் கொடுத்து தன் கோட்டையும் கொடுக்கிறான்.
http://www.youtube.com/watch?v=kkvDWm9t9DM
”ரஷ்யப் படைகள் போலந்துக்குள் நுழைந்து விட்டன. நாங்கள் தோற்று விட்டோம். ரஷ்யப் படைகளிடம் நாங்கள் போர்க் கைதிகளாக மாட்டுவோம்… உன்னுடைய நிலைமை இப்போது எனக்கும் வரலாம்” என்று சொல்லி விட்டுப் பிரிகிறான் நாஜி அதிகாரி.
ரஷ்யப் படைகள் அந்த நகருக்குள் வருகிறது. நாஜி ராணுவத்தினர் கைது செய்யப்படுகின்றனர். பியானிஸ்ட் அணிந்திருக்கும் கோட்டே அவனுடைய உயிருக்கு ஹானியாக ஆகி விடும் போல் தெரிகிறது. நாஜி அதிகாரியின் கோட்டு என்பதால் அதில் உள்ள ஸ்வஸ்திக் குறியைக் கண்டு பியானிஸ்டைச் சுட வருகிறார்கள் ரஷ்யர்கள். அதிர்ஷ்டவசமாகத் தப்பிக்கிறான் பியானிஸ்ட்.
அந்தப் பியானிஸ்டைக் காப்பாற்றுவது யார்? ஒரு நாஜி அதிகாரி. இதுதான் வாழ்க்கையின் நம்பிக்கைக் கீற்று.இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் ஒரு நம்பிக்கைக் கீற்று தெரியுமே? I mean literally too. நான் கொடுத்துள்ள இணைப்பில் பியானிஸ்ட்டின் மீது ஒரு வெளிச்ச ரேகை தெரிகிறது பாருங்கள். அதுதான் நான் சொன்ன நம்பிக்கைக் கீற்று. இந்த வெளிச்ச ரேகை நம்மீது படாமல் போயிருக்குமானால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும்.
நான் இங்கே என் காதலை கஷ்டம் என்று சொல்லவில்லை. மாறாக நடக்காது என்று தெரிந்தும் அவளுடனான் வாழ்க்கை என்றாவது ஒருநாள் மலரும் என்ற அந்த நம்பிக்கை என்னும் ஒளிக்கீற்று...அது மறுஜென்மம் வரை தொடரும்
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக