அவளிடமிருந்து அந்த கேள்வி வந்தது....
காதல் என்பது என்ன?
ஒரு கணம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினேன். இருந்தாலும் பொதுவாக, காதல் என்பது ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராக நேசிக்கிறது என்று சொல்லிவைத்தேன்.
ஆனால் நினைத்து பார்த்தால் காதல் என்பது என்ன? கேள்வி இந்த இரவு கூட எனக்குள் தூக்கம் கெடுத்துகொண்டிருகிறது. காற்றின் வேகத்தை விட என் மனது எங்கேயோ பறக்கிறது. விடை வேண்டும். இந்த கேள்விக்கு விடை தெரியாமல் இன்று இரவு என்னால் தூங்க முடியாது. அவளின் முகம் நினைவில் வந்து மீண்டும் அந்த கேள்வி என்னிடம் கேட்கிறது. காதல் என்பது என்ன?
எனக்கு எப்போதுமே கேள்வியும் அவளே பதிலும் அவளே. இதோ அவள் முகம் எனக்கும் பதிலும் கொண்டு வந்தது. காதல் என்பது பிரிவு நேரத்திலும் அதனூடே / அவளுடனே பயணிப்பது. இல்லாத ஒன்றை கருவாக்கி உயிராக்கி அதையே சுவாசித்து அதன் நினைவுகளில் மகிழ்ந்திருப்பது. இன்னும் கொஞ்சம் விளக்காமாக சொல்வதென்றால்..பியானிஸ்ட் படத்தில் வரும் காட்சி போல.
பியானிஸ்ட் படத்தில் வரும் நாயகன் சித்ரவதை முகாமுக்குச் செல்லாமல் தப்பி விடுகிறான். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஒரு ஆளில்லா நகரத்தில் ஒளிந்திருக்கிறான். அந்த நகரில் உள்ள அத்தனை பேரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்கள். யூதர் அல்லாத ஒருசிலரே அந்த நகரில் தங்கி இருக்கின்றனர்.
ஆளில்லாத நகரில் ஒளிந்து வாழ்கிறான் பியானிஸ்ட். முதலில் சில மாதங்கள் அங்கே இருக்கும் ஆளில்லாத வீடுகளில் புகுந்து அங்கே கிடைப்பதைத் தின்று வாழ்கிறான். பிறகு அதுவும் முடியாமல் போகிறது. அந்த ஊரில்தான் நாஜி ராணுவ அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள். வெளியில் வர முடியாமல் பல மாதங்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி மறைந்து கிடக்கிறான். அவன் பதுங்கியிருந்த வீட்டில் ஒரு பியானோ இருக்கிறது. பியானோ தான் அவனுக்கு சுவாசமே என்றாலும் அந்தப் பியானோவை அவனால் வாசிக்க முடியாது. வாசித்தால் சப்தம் கேட்டு நாஜிகள் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அப்போது அவன் அனுபவிப்பதன் பெயர் தான் காவிய சோகம். அதை தான் அவள் என்னருகில் இல்லாத போது நான் உணருகிறேன். அப்படியே அந்தப் பியானோவின் அருகில் அமர்ந்து பியானோவைத் தொடாமலேயே கண்களை மூடியபடி விரல்களால் காற்றிலேயே வாசிப்பான் அந்தப் பியானோ கலைஞன். அப்படியே அவனது செவிகளில் இசை அருவியாய் ஓடும். என் உயிர் போகும் வரை மறக்க முடியாத காட்சிகள் அவை.
பியானிஸ்ட்க்கு பியானோ தான் சுவாசம். எனக்கு அவள் தான் சுவாசம். பியானிஸ்ட் பியானோ இருந்தும் வாசிக்க முடியாமல் போகிறது. காரணம் அந்த சூழ்நிலை. எனக்கும் அவள் இருந்தும் இல்லாதது போல் இருக்கிறது. காரணம் அதே சூழ்நிலை. ஆனாலும் பியானிஸ்ட் எப்படி காற்றில் தன் கைகளை அசைத்து இசையை உணருகிறானோ அதுபோல தான் நானும் அவளின் ஸ்பரிசத்தை என் ஆன்மாவில் வைத்து அவளுடனே என் காலத்தை பயணிக்கிறேன்.
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக