செவ்வாய், டிசம்பர் 29, 2015

ஒருவரி கவிதை - சோறு




"சரி இன்னைக்கு எல்லோரும் ஒரு வார்த்தையில் கவிதை சொல்லணும்". தமிழ் பொரபசர் எங்களை ஒரு கணம் தீர்க்கமாக பார்த்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தவர் ..

ஹ்ம்ம் ...கவிதா நீ சொல்லுமா...

"குழந்தை" ...கவிதா குழந்தையாக கொஞ்சினாள் 

"ஆஹா அபாரம்...குழலினிது யாழினிது என்பர் குழந்தை தன் மழலை பேச்சு கேட்காதோர்"

"சரி.....செந்தில் நீ சொல்லு"

"சிரிப்பு"

"பலே பலே...சிரிப்பு கூட ஒரு கவிதைதான்"

"இப்போ...இளங்கோ நீ சொல்லு"

"கீர்த்தனா"

"என்னது ...கீர்த்தனவா? ஒரு கணம் அவனையே குறுகுறு என்று பார்த்தார்" 

"சார்...அது அவன் கேர்ள்பிரண்டு நேம் சார்" கோரசாக குரல் ஒலித்தது.

"கருமம் கருமம் நீயெல்லாம் எங்கடா உருப்பட போறே...உட்காந்து தொலை"

"ஜீவா....நீ.." புரபசரின் விரல் என்னை நோக்கி நீட்டியது 

"சோறு..." சட்டென்று யோசிக்காமல் சொன்னேன்.

கிளாஸ் ரூம் மொத்தம் விழுந்து விழுந்து சிரித்தது. கூடவே புரபசரும். 

"ஏன்டா கவிதை சொல்ல சொன்னா...தின்கிறத பத்தி சொல்றே. சோத்து மடையா" ...சரி சோறு எப்பிடி கவிதையாச்சு உனக்கு?

"சார் ...எனக்கு மட்டுமில்ல சார் இங்க உள்ள எல்லோர்க்கும் சோறு இல்லாம வாழ்க்கை இல்ல சார். குழந்தைய பார்க்காம  கூட உயிர் வாழ்ந்திடலாம்...சிரிக்காம கூட இருக்கலாம்...இதோ இளங்கோ ...மூச்சுக்கு முன்னூறு தடவ கீர்த்தனா கீர்த்தனா சொல்றானே..அவள பார்க்காம கூட உயிர் வாழலாம். ஒரு தடவ மட்டும் சாப்டாம இருந்து பாருங்க. அப்போ தெரியும் சோறு எவளோ பெரிய கவிதைன்னு. பசியோட இருக்கிறவன்கிட்ட குழந்தையும் சிரிப்பையும் காமிச்சா அவனுக்கு கவிதையா தெரியாது சார். சோறு கண்ணுல காட்டனும், அது தான் அப்போது அவனுக்கு எல்லாத்தையும் விட பெரிய கவிதை. நாம எல்லாருக்கும் பசிக்குமில்ல....அப்போ சோறு தானே கவிதை நமக்கு.

"................."

மூச்சு விடாமல் பேசிவிட்டு உட்காந்தான் ஜீவா.

கிளாஸ் மொத்தம் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தது.

அந்த அமைதியை கிழிப்பது போல்....புரபசரின் கை தட்டல் ஓசையும் கூடவே எல்லோருடைய கைதட்டலும் கேட்டது.

"பரவால்லியே ஜீவா ....நீ என்னமோ விவரம் தெரியாம தான் "சோறு" சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விளக்கம் இருக்குனு தெரியாம போச்சு. வெரி குட்".

அந்த கிளாசில் நான் அப்படி சொன்னது கை தட்டல் கிடைப்பதற்க்காகவோ என்னை ஒரு மேதாவி என்று காட்டிக்கொள்வதற்க்காகவோ சொல்லவில்லை. 

நிஜமாகவே எனது பள்ளி பருவ நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தது "சோறு". அப்போதெல்லாம் எப்போதுடா லஞ்ச் ப்ரேக் வரும் எப்போ சாப்பிடுவோம் என்றே நினைத்துக்கொண்டிருப்பேன். காரணம் என்னோட அம்மா வாழை இலையில் கட்டி தரும் அந்த "சோறு". அதனுடன் இருக்கும் எதாவது ஒரு துவையல். சில நேரங்களில் அதனுள் மறைந்திருக்கும் ஒரு வேக வைத்த முட்டை (அல்லது) ஆம்லெட். சில நாட்களில் இலவச இணைப்பாக கொஞ்சம் அவியல் இருக்கும். 

மணி அடித்தவுடன் தட தட என்று சோத்து பொதியை எடுத்துகொண்டு வழக்கமாக உட்காந்து சாப்பிடும் மரத்தடி நிழலை நோக்கி ஓடும்போது கை கழுவணுமா வேண்டாமா என்ற மனதின் பட்டிமன்றத்தில் "கை கழுவாமலும் சாப்பிடலாம்" என்ற அணியே அதிகமாக வெல்லும். உட்காந்து ஆசையாக சோத்து பொதியை பிரிக்கும்போது வாழை இலையின் வாசம் கலந்த சோறு....கவிதை கவிதை எனக்கு.

வாழை இலையில் சோறை மடிப்பதே ஒரு கலை. சும்மா வாழை இலை எடுத்து வந்து மடித்தால் எல்லாம் இந்த வாழையிலை சாப்பாடு அனுபவத்தை உணர முடியாது. எதோ கொண்டுவந்தோம் சாப்டோம், கை கழுவுனோம் என்று தான் இருக்கும். ரொம்பவும் இளசாகவும் ரொம்பவும் முத்தினதாகவும் இல்லாத நடுத்தரம் வாழையிலை கொண்டுவந்து அதை கொஞ்சம் நேரம் அடுப்பின் தணலிலோ அல்லது வேறு எதாவது வெக்கையில் இலையை வாட்ட வேண்டும். இல்லை கருகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை ஒரு நியூஸ் பேப்பர் மீது விரித்து வைத்து அன்று வடித்த சோத்தை கொட்டி அதன் மீது பிடித்தமான துவையலை சிறியதாக ஒரு குழி தோண்டி வைத்து இன்ன பிற சமாச்சாரங்களான அவித்த முட்டையோ கொஞ்சம் அவியலோ கூட வைத்து லாவகமாக செவ்வக வடிவில் மடிக்க வேண்டும். சோத்து பொதியை திறக்கும்போது நாம் என்ன வடிவில் இலையை மடித்தொமோ அந்த வடிவில் சோறு செட் ஆகி இருக்க வேண்டும்.(அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு மீன், இறைச்சி போன்ற வஸ்துக்கள் கொண்டு போவது விலக்கபட்டிருந்தது)

சில நாள் இலை கிடைக்காமல் என் சோறு கனவு சுண்ணாம்பாகி போனதும் உண்டு. 

"கண்ணா...இன்னைக்கு வாழையிலை கிடைக்கலடா ...அம்மா டிபன் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்" என்று அம்மா சொன்னதும் பொசுக்குன்னு கண்ணுல ஓரமா கொஞ்சம் கண்ணீர் வரும். இருந்தாலும் மத்தியானம்  சாப்பிடும்போது அம்மாவின் கை பக்குவம் அந்த கவலையை மறக்க செய்யும். இவளவுக்கும் சோறும் கொஞ்சம் துவையலும் தான் இருக்கும் டிபன் பாக்ஸில். ஆனாலும் அது கவிதை எனக்கு.

கல்லூரி வாழ்க்கையிலும் யார் என்ன நினைத்தாலும் எவளவுதான் வாயில நாரை தள்ள தள்ள என்னை நக்கலடித்தாலும் வாழையிலையில் மதிய சாப்பாடு கொண்டு போனதை மட்டும் நான் விடவே இல்லை. விதிவிலக்காக சில நேரம் நண்பர்களின் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் என் சோறு வேறு ஒருவனால் திங்கப்பட்டு நான் தெருவோரம் கையேந்தி பவனில் அல்லது எதாவது ஹோட்டலில்  சோறு திங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருகிறேன். 

ஆயிற்று ...காலங்கள் எல்லவற்றையும் புரட்டிப்போட்டுவிடு சென்றுவிட்டது. இப்போதெல்லாம் வாழையிலையில் சோறு என்கிறது ஒரு கனவு கவிதையாக மாறி விட்டது. கடைசியாக வெளியூருக்கு எதாவது இண்டர்வியு போகும்போது மோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காது, காசும் வீண் விரையம் என்று அம்மா அதே வாழையிலை சோறு கட்டித்தந்து அதை பேரூந்தின் ஜன்னலோரம் ஒரு சுதந்திரமில்லாமல் சாப்பிட்டது தான். (பஸ் எடுத்திருவான் என்கிற பதட்டமும், ஜன்னல் ஓரத்து சீட்டுக்கு சொந்தக்காரர் வந்துவிடுவார் என்கிற பதட்டமும் என் சோறு கவிதையை ரசிக்க விடாமல் செய்துவிட்டது)

இப்போதெல்லாம் விதம் விதமாக சாப்பிடுகிறேன். சாப்பிட்ட அடுத்த நொடியே என்ன சாப்பிட்டோம் என்று மறந்து விடுகிறது. அதே சாப்பாட்டை அடுத்த வேளை பார்த்தால் வாந்தி வருகிறது. ஆனால் பல வருடங்களாக அம்மா கையினால் கிடைத்த அதே சோறு ...அதே வாழையிலை சோறும் கொஞ்சம் துவையலும் இப்போதும் சாப்பிட மனசு ஏங்குகிறது. 

"சோறு".....எப்போதுமே எனக்குப்பிடித்த ஒரு வரி கவிதை!

பக்கதில் இருந்தபோதே அதை கவிதையாக ரசித்தவன்....இப்போது தூரத்தில் இருக்கும்போதும் பெரும் கவிதையாக என்னை கொல்கிறது இந்த "சோறு".

இப்படிக்கு 
ரசிகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக