செவ்வாய், டிசம்பர் 29, 2015

ஒருவரி கவிதை - சோறு




"சரி இன்னைக்கு எல்லோரும் ஒரு வார்த்தையில் கவிதை சொல்லணும்". தமிழ் பொரபசர் எங்களை ஒரு கணம் தீர்க்கமாக பார்த்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தவர் ..

ஹ்ம்ம் ...கவிதா நீ சொல்லுமா...

"குழந்தை" ...கவிதா குழந்தையாக கொஞ்சினாள் 

"ஆஹா அபாரம்...குழலினிது யாழினிது என்பர் குழந்தை தன் மழலை பேச்சு கேட்காதோர்"

"சரி.....செந்தில் நீ சொல்லு"

"சிரிப்பு"

"பலே பலே...சிரிப்பு கூட ஒரு கவிதைதான்"

"இப்போ...இளங்கோ நீ சொல்லு"

"கீர்த்தனா"

"என்னது ...கீர்த்தனவா? ஒரு கணம் அவனையே குறுகுறு என்று பார்த்தார்" 

"சார்...அது அவன் கேர்ள்பிரண்டு நேம் சார்" கோரசாக குரல் ஒலித்தது.

"கருமம் கருமம் நீயெல்லாம் எங்கடா உருப்பட போறே...உட்காந்து தொலை"

"ஜீவா....நீ.." புரபசரின் விரல் என்னை நோக்கி நீட்டியது 

"சோறு..." சட்டென்று யோசிக்காமல் சொன்னேன்.

கிளாஸ் ரூம் மொத்தம் விழுந்து விழுந்து சிரித்தது. கூடவே புரபசரும். 

"ஏன்டா கவிதை சொல்ல சொன்னா...தின்கிறத பத்தி சொல்றே. சோத்து மடையா" ...சரி சோறு எப்பிடி கவிதையாச்சு உனக்கு?

"சார் ...எனக்கு மட்டுமில்ல சார் இங்க உள்ள எல்லோர்க்கும் சோறு இல்லாம வாழ்க்கை இல்ல சார். குழந்தைய பார்க்காம  கூட உயிர் வாழ்ந்திடலாம்...சிரிக்காம கூட இருக்கலாம்...இதோ இளங்கோ ...மூச்சுக்கு முன்னூறு தடவ கீர்த்தனா கீர்த்தனா சொல்றானே..அவள பார்க்காம கூட உயிர் வாழலாம். ஒரு தடவ மட்டும் சாப்டாம இருந்து பாருங்க. அப்போ தெரியும் சோறு எவளோ பெரிய கவிதைன்னு. பசியோட இருக்கிறவன்கிட்ட குழந்தையும் சிரிப்பையும் காமிச்சா அவனுக்கு கவிதையா தெரியாது சார். சோறு கண்ணுல காட்டனும், அது தான் அப்போது அவனுக்கு எல்லாத்தையும் விட பெரிய கவிதை. நாம எல்லாருக்கும் பசிக்குமில்ல....அப்போ சோறு தானே கவிதை நமக்கு.

"................."

மூச்சு விடாமல் பேசிவிட்டு உட்காந்தான் ஜீவா.

கிளாஸ் மொத்தம் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தது.

அந்த அமைதியை கிழிப்பது போல்....புரபசரின் கை தட்டல் ஓசையும் கூடவே எல்லோருடைய கைதட்டலும் கேட்டது.

"பரவால்லியே ஜீவா ....நீ என்னமோ விவரம் தெரியாம தான் "சோறு" சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பின்னாடி இப்படி ஒரு விளக்கம் இருக்குனு தெரியாம போச்சு. வெரி குட்".

அந்த கிளாசில் நான் அப்படி சொன்னது கை தட்டல் கிடைப்பதற்க்காகவோ என்னை ஒரு மேதாவி என்று காட்டிக்கொள்வதற்க்காகவோ சொல்லவில்லை. 

நிஜமாகவே எனது பள்ளி பருவ நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தது "சோறு". அப்போதெல்லாம் எப்போதுடா லஞ்ச் ப்ரேக் வரும் எப்போ சாப்பிடுவோம் என்றே நினைத்துக்கொண்டிருப்பேன். காரணம் என்னோட அம்மா வாழை இலையில் கட்டி தரும் அந்த "சோறு". அதனுடன் இருக்கும் எதாவது ஒரு துவையல். சில நேரங்களில் அதனுள் மறைந்திருக்கும் ஒரு வேக வைத்த முட்டை (அல்லது) ஆம்லெட். சில நாட்களில் இலவச இணைப்பாக கொஞ்சம் அவியல் இருக்கும். 

மணி அடித்தவுடன் தட தட என்று சோத்து பொதியை எடுத்துகொண்டு வழக்கமாக உட்காந்து சாப்பிடும் மரத்தடி நிழலை நோக்கி ஓடும்போது கை கழுவணுமா வேண்டாமா என்ற மனதின் பட்டிமன்றத்தில் "கை கழுவாமலும் சாப்பிடலாம்" என்ற அணியே அதிகமாக வெல்லும். உட்காந்து ஆசையாக சோத்து பொதியை பிரிக்கும்போது வாழை இலையின் வாசம் கலந்த சோறு....கவிதை கவிதை எனக்கு.

வாழை இலையில் சோறை மடிப்பதே ஒரு கலை. சும்மா வாழை இலை எடுத்து வந்து மடித்தால் எல்லாம் இந்த வாழையிலை சாப்பாடு அனுபவத்தை உணர முடியாது. எதோ கொண்டுவந்தோம் சாப்டோம், கை கழுவுனோம் என்று தான் இருக்கும். ரொம்பவும் இளசாகவும் ரொம்பவும் முத்தினதாகவும் இல்லாத நடுத்தரம் வாழையிலை கொண்டுவந்து அதை கொஞ்சம் நேரம் அடுப்பின் தணலிலோ அல்லது வேறு எதாவது வெக்கையில் இலையை வாட்ட வேண்டும். இல்லை கருகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை ஒரு நியூஸ் பேப்பர் மீது விரித்து வைத்து அன்று வடித்த சோத்தை கொட்டி அதன் மீது பிடித்தமான துவையலை சிறியதாக ஒரு குழி தோண்டி வைத்து இன்ன பிற சமாச்சாரங்களான அவித்த முட்டையோ கொஞ்சம் அவியலோ கூட வைத்து லாவகமாக செவ்வக வடிவில் மடிக்க வேண்டும். சோத்து பொதியை திறக்கும்போது நாம் என்ன வடிவில் இலையை மடித்தொமோ அந்த வடிவில் சோறு செட் ஆகி இருக்க வேண்டும்.(அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு மீன், இறைச்சி போன்ற வஸ்துக்கள் கொண்டு போவது விலக்கபட்டிருந்தது)

சில நாள் இலை கிடைக்காமல் என் சோறு கனவு சுண்ணாம்பாகி போனதும் உண்டு. 

"கண்ணா...இன்னைக்கு வாழையிலை கிடைக்கலடா ...அம்மா டிபன் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்" என்று அம்மா சொன்னதும் பொசுக்குன்னு கண்ணுல ஓரமா கொஞ்சம் கண்ணீர் வரும். இருந்தாலும் மத்தியானம்  சாப்பிடும்போது அம்மாவின் கை பக்குவம் அந்த கவலையை மறக்க செய்யும். இவளவுக்கும் சோறும் கொஞ்சம் துவையலும் தான் இருக்கும் டிபன் பாக்ஸில். ஆனாலும் அது கவிதை எனக்கு.

கல்லூரி வாழ்க்கையிலும் யார் என்ன நினைத்தாலும் எவளவுதான் வாயில நாரை தள்ள தள்ள என்னை நக்கலடித்தாலும் வாழையிலையில் மதிய சாப்பாடு கொண்டு போனதை மட்டும் நான் விடவே இல்லை. விதிவிலக்காக சில நேரம் நண்பர்களின் ஆக்ரோஷமான செயல்பாடுகளால் என் சோறு வேறு ஒருவனால் திங்கப்பட்டு நான் தெருவோரம் கையேந்தி பவனில் அல்லது எதாவது ஹோட்டலில்  சோறு திங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருகிறேன். 

ஆயிற்று ...காலங்கள் எல்லவற்றையும் புரட்டிப்போட்டுவிடு சென்றுவிட்டது. இப்போதெல்லாம் வாழையிலையில் சோறு என்கிறது ஒரு கனவு கவிதையாக மாறி விட்டது. கடைசியாக வெளியூருக்கு எதாவது இண்டர்வியு போகும்போது மோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காது, காசும் வீண் விரையம் என்று அம்மா அதே வாழையிலை சோறு கட்டித்தந்து அதை பேரூந்தின் ஜன்னலோரம் ஒரு சுதந்திரமில்லாமல் சாப்பிட்டது தான். (பஸ் எடுத்திருவான் என்கிற பதட்டமும், ஜன்னல் ஓரத்து சீட்டுக்கு சொந்தக்காரர் வந்துவிடுவார் என்கிற பதட்டமும் என் சோறு கவிதையை ரசிக்க விடாமல் செய்துவிட்டது)

இப்போதெல்லாம் விதம் விதமாக சாப்பிடுகிறேன். சாப்பிட்ட அடுத்த நொடியே என்ன சாப்பிட்டோம் என்று மறந்து விடுகிறது. அதே சாப்பாட்டை அடுத்த வேளை பார்த்தால் வாந்தி வருகிறது. ஆனால் பல வருடங்களாக அம்மா கையினால் கிடைத்த அதே சோறு ...அதே வாழையிலை சோறும் கொஞ்சம் துவையலும் இப்போதும் சாப்பிட மனசு ஏங்குகிறது. 

"சோறு".....எப்போதுமே எனக்குப்பிடித்த ஒரு வரி கவிதை!

பக்கதில் இருந்தபோதே அதை கவிதையாக ரசித்தவன்....இப்போது தூரத்தில் இருக்கும்போதும் பெரும் கவிதையாக என்னை கொல்கிறது இந்த "சோறு".

இப்படிக்கு 
ரசிகன் 

திங்கள், அக்டோபர் 19, 2015

செவ்வாய், ஜூன் 02, 2015

இசை....ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.





இன்று என் இனிய இசையராஜாவுக்கு 73 வது பிறந்தநாள். சாதா ராஜாக்களையே பாடி வாழ்த்தவேண்டியது புலவர்களின் கடமை எனும்போது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமான இசைஞானியை வாழ்த்தாவிடில் இப்பிறவி எடுத்து என்ன பயன்?

என் முதல் காதல் அரும்பியதும் இளையராஜா பாடலால் தான். அப்போது தான் "என்னருகில் நீ இருந்தால்" என்ற திரைப்படத்தில் வரும் "ஒ...உன்னாலே நான் பெண்ணானேனே .." என்ற பாடலை பல தடவை டீ கடைகளில் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என்னுடைய வகுப்பறையில் அந்த பாடலை அவள் முணுமுணுக்க, அவளின் குரலும் முகபாவனைகளும் மற்றும் அந்த பாடலின் மீதிருந்த தீராக்காதலும் என்னை அவளிடம் கொண்டு பொய் சேர்த்தது. அதன் பிறகு என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இளையராஜாவின் பாடல்கள் கலந்துவிட்டது. நான் சிரிக்கும்போது இளையராஜா பாடல்கள் என்னுடன் சிரித்தது. நான் அழுதபோது இளையராஜா பாடல்கள் என்னுடன் அழுதது. சிலநேரங்களின் காரணம் இல்லாமலே இளையராஜாவின் பாடல்கள் எனக்கு கண்ணீர் துளிகளை பரிசாக தந்தது. அது சிரிப்பும் இல்லை...அழுகையும் இல்லை. பாடல் கேட்டு ஒரு பரவச நிலை.

சலங்கை ஒலி' இது மவுனமான நேரம்..., ‘நாயகன்' நீ ஒரு காதல் சங்கீதம்..., 'புன்னகை மன்னன்' என்ன சத்தம் இந்த நேரம்?..., 'மவுனராகம்' நிலாவே வா..., 'காத்திருக்க நேரமில்லை' வா காத்திருக்க நேரமில்லை..., 'நாடோடித் தென்றல்' ஒரு கணம் ஒரு யுகமாக..., 'சிப்பிக்குள் முத்து' மனசு மயங்கும்..., 'சத்யா' வளையோசை கலகலவென..... வரிசையில் நான் அந்தப் பாடலை இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். பாடலில் கமலுடன் நாட்டுப்புறத் தமிழில் கொஞ்சியிருந்த ஷ்ரேயா கோஷலுக்கு எனது இதயத்தின் இடது ஓரத்தில் சின்னதாக ஒரு கோயில் கூட கட்டியிருந்தேன். 'என்னவிட உன்ன சரி வரப் புரிஞ்சிக்க யாருமில்ல ...' என்று ஷ்ரேயா எனக்காகப் பாடுவதாக நினைத்துக் கொள்வது சொல்லவொண்ணா சுகமாக இருக்கிறது.

சின்ன வயசிலிருந்தே ராஜாவின் மீது வெறிகொண்ட ரசிகன் நான். அவருக்கு என்னைபோல் லட்சக்கணக்கில் பைத்தியங்கள் உண்டென்றாலும், 'ராஜா பைத்தியங்களிலேயே ராஜபைத்தியம் நான் தான்' என்ற தலைமைப் பொறுப்பை என்னிடம் தயவு செய்து விட்டு விடுங்கள். அப்படி விட்டுக்கொடுக்க நீங்கள் முன்வரும் பட்சத்தில் என் வாழ்நாள் முழுக்க,எம்.எல்.ஏ, மந்திரி, முதல் அமைச்சர், பிரதமர், அமெரிக்க பிரதமர் போன்ற எந்தப் பதவிகளுக்கும் நான் உங்களோடு போட்டியிட மாட்டேன் என்று எத்தனை ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வேண்டுமானாலும் எழுதி கையெழுத்திடுகிறேன்.

வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும், அவர் இளையராஜாவுடன் இருந்தவரை. பாரதிராஜாவை எனக்குப் பிடிக்கும், அவர் படத்துக்கு ராஜா இசையமைக்கும்போது மட்டும். ‘நீ தானே என் பொன் வசந்தம்' படம் ,ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜிடமிருந்து எங்கள் ராஜா கைக்கு மாறும்போது, ‘படம் பிரமாதமா வந்துருக்காம்' என்று சல்லி பைசா அட்வான்ஸ் வாங்காமல் மிஸ்டர் திகில் முருகன் பார்க்க வேண்டிய பி.ஆர்.ஓ. வேலையை நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்வின் இனிமையான தருணங்கள் என்பவை ராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த, கேட்டுக்கொண்டிருக்கும் தருணங்கள்தான். இது சங்கீதம் அறிந்த அறியாத தமிழர்கள் சகலருக்கும் பொருந்தும் என்பதே என் கருத்து.

மனசு சரியில்லாத வேளைகளில், ‘நான் யாரு எனக்கேதும் தெரியலையே, ஆலோலம் பாடி ‘ மாதிரி பாடல்கள் கொண்டு என் கண்ணீர் துடைப்பது ராஜாவின் சுரங்கள். ஒரு பூ மலர்வதைக் கூட சங்கீதமாகச் சொல்ல முடியும் என்று மலர்ந்த ‘வெள்ளி முளைத்தது' (கீதவழிபாடு) கேட்டு விடிந்தது எத்தனை காலைப் பொழுதுகள் என்று சொல்லிமாளாது.

படித்துக்கொண்டிருந்தபோது, நானும் எனது நண்பர்களும் வகுப்பறைகளில் இருந்ததை விட ,கல்லூரிக்கு எதிரே இருந்த  டீ ஸ்டாலில் தான் அதிகம் நின்றிருப்போம். மண்வாசனை, கரையெல்லாம் செண்பகப்பூ, நான் பாடும் பாடல், பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள்' என்று கேட்டு எங்களைத் திகைக்க வைப்பதையே ராஜா சலிப்பின்றி செய்து வந்தார். ஸ்டாலில் டீ கேட்பதுவும், ராஜாவின் பாட்'டீ குடிப்பதுமே கல்லூரி காலங்களில் எங்களது முக்கியமான பணியாக இருந்தது.

அன்றுமுதல் இன்று ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி இப்பதிவை எழுதுகிற நிமிடம் வரை என் ராஜவிசுவாசம் துளியும் குறையவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ராஜா குறித்த சர்ச்சைகளை, அவரைப் போலவே, நான் எப்போதும் இடதுகையால் புறந்தள்ளி விடுவேன். அவர்கள் ஒன்று பிறவிச் செவிடர்களாக இருக்கவேண்டும் அல்லது ஞானசூன்யங்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில். சமீப தினங்களில் எஃப்.எம். காரர்களிடம் ராஜா ராயல்டி கேட்டது குறித்து சில ஞானசூன்யங்கள் இணையங்களில் பகடிகள் செய்து வருவதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

எஃப்.எம் காரர்கள் நொடிக்கு சில ஆயிரங்களை விளம்பரங்களுக்காக வாங்குபவர்கள். ராஜாவின் பாடல்கள் அவர்களுக்கு அமுதசுரபி போல என்பதை உலகே அறியும். கோடிகளில் வருமானம் வரும்போது அதில் சில லட்சங்களை ராயல்டியாக தர மனசு இல்லையெனில், அவர்கள் சூடுசொரணை உள்ளவர்களெனில் ராஜா பாடல்கள் இல்லாமல் அவர்களின் ரேடியோ பாடட்டும்.

இந்த எஃப்.எம் காரர்கள் குறித்து குறிப்பாக சொல்லவேண்டிய ஒன்றும் இருக்கிறது. பணம் கொட்டிக் குவிப்பதே இவர்களின் பிரதான குறிக்கோள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பவர்கள் என்பது சினிமாக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். ஒருமுறை நண்பர் ஒருவரின் படப்பாடல்களை ஒளிபரப்புக்குத் தருவதற்காக ஒரு முன்னணி எஃப்.எம். ஒன்றுக்குப் போயிருந்தேன். சி.டிக்களைக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது, அங்கு பணிபுரியும் நண்பர் ஒருவர் கீழே வந்து டீ சாப்பிடும்போது சொன்னார். 'பாஸ் இங்க சில லட்சங்களுக்கு விளம்பரம் தராம வெறுமனே சி.டி. மட்டும் குடுத்தா பாட்டை ஒலிபரப்ப மாட்டாங்க. இது எங்க எஃப்.எம்.ல மட்டுமில்ல எல்லா எஃப்.எம்.லயும் உள்ள பழக்கம்' ‘பாட்டு பிரமாதமா இருந்தாலுமா?' அப்பாவியாக நான் கேட்க அவர் அதிர்ந்து சிரித்தபடி சொன்னார். ‘பிரிச்சிக்கூட பாக்காம டஸ்ட்பின்ல போடுற சிடியில பாட்டு பிரமாதமா இருக்குன்னு யாருக்குத் தெரியும்?'

இப்படிப்பட்ட கிராதகர்கள்தான் இந்த எஃப்.எம் காரர்கள். இவர்களிடம் ராஜா ராயல்டி கேட்கலாமா கூடாதா என்று மனசாட்சி உள்ளவர்கள் சொல்லுங்கள். 

சில சமயம் ஏழாவது, எட்டாவது மாடிகளில் ராஜா குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கும்போது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிராளிகளை இப்படி பயமுறுத்துவார். ‘ராஜாவைப் பத்தி விமர்சனம் பண்றத இப்பிடியே நிறுத்திக்கங்க. அப்புறம் ஜீவா உங்களை மாடியிலருந்து தள்ளிவிடக்கூட யோசிக்கமாட்டார்'. அடுத்து ஒரு மயான அமைதி நிலவும். இந்த ராஜாவின் பிறந்தநாளன்று எனக்கு அவ்விதம் தான் தோன்றுகிறது. சற்றும் ஞானமின்றி ராஜாவைக் கிண்டலடிக்கும் ஒரு நூறுபேரை எதாவது ஒரு ஹோட்டலின் பத்தாவது மாடிக்கு இழுத்துச்சென்று மொத்தமாய் அள்ளிக்கீழே போட்டால் என்ன என்று?'

உங்களுக்கு அம்மாவிலிருந்து அத்தனை உறவுகளையும் நினவூட்ட, காதலிக்க, கண்கலங்க, ஆனந்தப்பட, துக்கப்பட, கோபப்பட, நிம்மதியாய் நித்திரை கொள்ள என்று அத்தனைக்கும் ராஜாவின் பாடல்கள் வேண்டும். ஆனால் சம்பாதிப்பவர்களிடம் தனது ரத்தத்துக்கான ராயல்டியை அவர் கேட்டால் கிண்டல் அடிப்பீர்கள்? 

ராஜாவுக்கு ராயல்டி என தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் எழுதிவைத்தாலும், நமது உடல்பொருள் ஆவி அத்தனையும் அவருக்கே தந்தபின்னும் நாம் என்றுமே அவருக்கு தீராக் கடனாளிகள்தான்!...இன்னும் நான் இளையராஜா என்னும் இசை மேதைக்கு கடனாளி தான்...

ராகதேவனுக்கு .....பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

இப்படிக்கு
ர.சி.க.ன்

சனி, பிப்ரவரி 21, 2015

காவல்துறை உங்கள் நண்பன்





காவல்நிலையத்திற்கு சென்று ஒரு புகார் கொடுப்பதும் தொலைந்து போன ஒன்றைக்குறித்து அவர்களிடம் விசாரிக்க கேட்பதும் மாதிரி கடினமான வேலை உலகத்திலேயே கிடையாது. காரணம் பாம்பும் காவல்துறையும் ஒன்று. இரண்டையுமே பயத்தோடு அணுகினால் அதனிடம் கடுமையாக சீண்டப்படுகிற வாய்ப்பு தொன்னூற்றொன்பது சதவீதம் உறுதியாக உண்டு. அச்சமின்றி அலட்டலாக நடந்துகொண்டாலும் கடி உறுதி. பூசின மாதிரியும் இல்லாமல் பூசாத மாதிரியும் இல்லாமல் மரியாதை இருப்பது மாதிரியும் இருக்க வேண்டும் ஆனால் கண்களில் பயத்தை வெளிப்படுத்திவிடாமல் தைரியமாகவும் பேசிக்கொண்டே பணிவையும் வெளிப்படுத்த வேண்டும். குழப்பமான வேலைதான் இல்லையா? 

சென்றவாரம்  ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு புகார் கொடுக்க சென்றிருந்தேன். கிளம்பும்போதிருந்து வண்டியை வாசலில் எங்கே பார்க்கிங்கில் விடுவது என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பங்கள், பதட்டங்கள். எப்படி பேசுவது என்ன பேசுவது, ஒருவேளை லஞ்சம் கேட்டால் சார் நான் ஊருக்கு புதுசு சார் என்று சொல்லி நிரூபிக்க விசிட்டிங் கார்ட் ஐடி கார்டெல்லாம் எடுத்துக்கொண்டு மிகுந்த முன்தயாரிப்புகளுடன் என்ன்னென்ன வசனங்கள் பேசவேண்டும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே ஒத்திகைகள் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினேன். காதலியிடம் காதலை சொல்லக்கூட இவ்வளவு டென்ஷனும் ரிகர்சலும் எனக்கு தேவைப்பட்டதில்லை!

வாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நம்மை இன்முகத்தோடு வரவேற்கிறார் ஒரு பெண்காவலர் அல்லது ரிசப்ஷனிஸ்ட். இதைவிட ஒரு இந்தியத்தமிழ்க்குடிமகனை பயமுறுத்த காவல்துறையால் முடியுமா? அவரிடம் வந்த விபர விஷயங்களை சொன்னால் அடுத்து எங்கே செல்லவேண்டும், என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் உண்டு என்ன செய்யவேண்டும் என்பதுமாதிரி விபரங்களை கடகடவெனத் தருகிறார். எனக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது. கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டை ஆண்டால் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். இதுவரை போலீஸ் வேடமே ஏற்றிடாத அம்மாவின் ஆட்சியிலேயே இப்படியெல்லாம் நடக்கிறதென்பது நிச்சயம் நம்ப முடியாததுதான் இல்லையா? 

தமிழ்நாடு  முழுக்க எல்லா காவல் நிலையங்களிலும் இதுமாதிரி ஏற்பாடு உண்டு என்பதை முன்பே அறிந்திருந்தாலும் முதன்முதலாக ரிசப்சனிஷ்ட் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அந்த சேவையை அனுபவித்து மகிழ்ந்தது இப்போதுதான். காவல்நிலையத்தில் கூட புன்னகைப்பார்கள் என்பதெல்லாம் எப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான மனநிலையை நமக்குள் உருவாக்கும் என்பதை முதன்முதலாக அறிந்துகொண்டேன். 

தாகமாக இருந்ததால் தண்ணீர் கேட்டேன் (தயக்கத்துடன்தான்!). காவல்நிலையங்களில் இருக்கிற நொடிகள் ஒவ்வொன்றும் மிகவும் பதட்டமானவை. எந்த போலீஸ்காரர் நம் மீது எப்போது கோபப்படுவாரோ என்கிற அச்சம் உள்ளுக்குள் காரணமேயில்லாமல் நிலைத்திருக்கும். இந்த மனநிலைக்கு நாம் குற்றவாளியாகவோ அல்லது எதாவது பிரத்யேக காரணமோ இருக்கத்தேவையேயில்லை. நானெல்லாம் கண்ணை உருட்டி கொஞ்சம் மிரட்டினால் கூட அப்ரூவர் ஆகிவிடுவேன். கேஸே இல்லாவிட்டாலும் கூட. 

நாக்கு வறண்டு ஒரு மாதிரி வந்தது. தண்ணீர் கேட்கவும் கூட பம்மும் குரலில் எச்சூஸ்மீ மேடம் வாட்டர் ப்ளீஸ் என்றுதான் கேட்டேன். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அடுத்த நொடி தன்னுடைய பாட்டிலையே எடுத்து புன்னகையோடு நீட்டினார் காவலர். அதை வாய் வைக்காமல் இரண்டு மடக்கு குடிக்கும்போது கூட டேபிளில் சிந்திவிடுமோ என்கிற அச்சம்தான் மனதில் வியாபித்திருந்தது. அதனால் சுமாராகத்தான் தாகம் தணிந்தேன்.

யாராவது லஞ்சம் கேட்பார்கள், கட்டிங் மாமூல் மாதிரி கொடுக்க வேண்டியிருக்கும்… நல்லஅனுபவமாக இருக்கப்போகிறது என்கிற நினைப்போடு ஒவ்வொரு படியாக தாண்ட தாண்ட எங்குமே எந்த சிக்கலுமே இல்லை. சொல்லப்போனால் நம்மிடம் எல்லாவிதமான ஆவணங்களும் நியாயமான காரணங்களும் உண்மையும் இருந்தால் ஐந்து ரூபாய் கூட செலவழிக்காமல் காவல்நிலையங்களில் காரியமாற்றிட முடியும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரகனி படத்தில் காட்டுவதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. போன வேலை சுமூகமாக முடிந்தது. (கடைசி வரை ஊருக்கு புதுசு என்கிற அடையாளமெல்லாம் பயன்படுத்தபடவில்லை)

கிளம்பும்போது இந்தக் காவல்நிலையத்தின் வாசலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு போர்டு வைத்து அதில் பொது அறிவு தொடர்பான ஒரு கேள்விபதிலும், கீழேயே ஒரு திருக்குறள் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்கள். அது யாருக்காக எழுதப்பட்டிருகிறது, எதற்காக என்பதை யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன். ஒருவேளை காவல்நிலையத்துக்கு வருகிற குற்றவாளிகள் இதை படித்து திருந்தவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது என்னைப்போன்றவர்கள் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவும் கூட இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட வாசகங்கள் படிக்கிறவர்களை விட இதை தினமும் வேலைமெனக்கெட்டு எழுதுகிறவர்களுக்கு மிகவும் பயன்படும். தினமும் எழுதுகிறோமே என்றாவது அவர்கள் அதை பின்பற்றும் வாய்ப்பிருக்கிறது. 

நம்மை சுற்றியுள்ள மனிதர்களில் காவல்துறையினர் பற்றித்தான் நம்மிடம் மிக அதிகமான முன்தீர்மானங்களும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. இந்த அவநம்பிக்கைகள் அத்தனையும் சினிமா,சீரியல் முதலான ஊடகங்களின் வழி காட்சி மற்றும் பத்திரிகை எழுத்துகளின் வழி நமக்குள் எங்கோ உருவாக்கப்பட்டவை. ஆனால் வேறெந்த வேலைகளையும் விட மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமான துறைகளில் காவல்துறையும் ஒன்று. சிஎம் சட்டசபை செல்லும் வழியெங்கும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக ஆர்கே சாலையில் தேவுடு காக்கும் லேடி கான்ஸ்டபிளில் பேசிப்பார்த்தால் முழுநீள திரைப்படமே எடுக்கும் அளவிற்கு அவ்வளவு கதைகள் சொல்வார்! கல்நெஞ்சக்காரர்களும் ஒவ்வொரு படிநிலைகளிலும் தனக்கு முந்தைய மூத்த அதிகாரியின் வழி கீழுள்ளவர் சந்திக்கிற அவமானங்களும் அசிங்கங்களும் சொல்லி மாளாது. ஒவ்வொரு நாளும் தங்களை கொஞ்சமும் மதிக்காத மனிதர்களோடு பழகக்கூடியவர்கள். அவர்களிடம் நம்மால் ஒரு புன்னகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்கிற ரைட் நமக்கு கிடையாது. 

கோவை க்ராஸ்கட் ரோட்டிற்கு எப்போதாவது சென்றால் அங்கே நடக்கிற பாதசாரிகளையும் ட்ராபிக்கையும் மைக் வழி ஒழுங்கபடுத்துகிற காவல்துறையினரின் குரல் காதில் விழுந்து கொண்டேயிருக்கும். அந்தக்குரலில் துளியளவும் கூட உங்களால் ஆணவத்தையோ அதட்டலையோ உணரமுடியாது. மாறாக அவர்கள் அன்பாக ‘’இப்படி ராங்ரூட்ல வரக்கூடாது கண்ணா ஒரமா போங்க…’’ "அம்மா ஆக்டிவா… இது ஒன்வே திரும்பிப்போ.. அங்கல்லாம் வண்டியை பார்க் பண்ணக்கூடாதும்மா’’ என்பதுமாதிரி கனிவாக பேசுவதை கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்கள் ஒருமுறை க்ராஸ்கட் ரோடில் அங்கிமிங்கும் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் போலீஸ்காரர் உங்களிடமும் கனிவாக ‘’தம்பி இப்படியெல்லாம் ரோட்ல ஓடக்கூடாது நடைபாதையை பயன்படுத்துங்க என்று சொல்வதை கேட்டு ரசிக்கலாம். சென்னையில் இது கொஞ்சம் மோசமாக இருக்கும். காரணம் அங்குள்ளவர்களிடம் அன்பாக சொன்னாலும் அதட்டிச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடேய் சான்ட்ரோ வழியுட்ரா நாயே என்று மைக்கில் கத்தினால்தான் ஆம்புலன்ஸிற்கு கூட வழி விடுவார்கள். கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…

ஏன் இந்த போலீஸ்காரங்களுக்கும் நமக்கும் ஒத்துவரமாட்டேனுது என்கிற கேள்வி எனக்கு அடிக்கடித்தோன்றும். காவலர்களுடனான நம்முடைய பெரும்பாலான எதிர்கொள்ளல்கள் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் மட்டுமே நடப்பவை. லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்டி பிடிபடுவது, மொபைலில் பேசிக்கொண்டே காரோட்டி மாட்டிக்கொள்வது, குடித்துவிட்டு மாட்டிக்கொள்வது மாதிரி சந்தர்ப்பங்களில் குற்றவாளியாக சிக்கிக்கொண்டுதான் காவலர்களோடு நேருக்கு நேர் உரையாடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதற்குரிய ஃபைனை கட்டாமல் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயல்கிறவர்களாகவே இருக்கிறோம். அல்லது யாராவது பெரிய ஆளுக்கு போன் போட்டு கொடுத்து தப்ப நினைக்கிறோம். இப்படி எப்போதும் குற்றவாளியாக மட்டுமே அவர்களை சந்திப்பதால்தானோ என்னவோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகறதில்லைபோல! ஒரு குற்றவாளியாக காவலர்களிடம் மட்டுமல்ல காதலிக்கிறவர்களிடம் கூட சகஜமாக பழகமுடியாது என்பதுதான் யதார்த்தம். 

இப்படிக்கு
ரசிகன் 


வெள்ளி, பிப்ரவரி 13, 2015

Happy Valentine's Day!




There's a place
deep inside me
that belongs only to you,
a place of soft
celestial dreams
spun of stardust,
a place of red hot
fantasies and
naughty secrets
meant for your
ears only.

There's a part
of my life
that belongs only to you,
husky whispers
in the night,
sighs of delight,
a knowing look
and a wry smile
that says, "I want you."

All of this belongs to you,
because you're the one I love.


Happy Valentine's Day!

கொஞ்சம்...



நீண்ட
தனிமையின்
எச்சங்களாய்
கொஞ்சம் கவிதையும்
கொஞ்சம் கண்ணீரும்...

இப்படிக்கு
ரசிகன் 

செவ்வாய், ஜனவரி 27, 2015

ஐ (2015)



ஷங்கர் என்ற பெயர், ஒரு இயக்குநர் என்பதில் இருந்து ஒரு brand என்று இப்போது மாறியிருக்கிறது. இதனால் ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன் (அந்நியனில் சில காட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்ற படங்களைக் கொடுத்த ஷங்கர் இப்போது காணாமல் போய்விட்டார் என்பது என் கருத்து (சிவாஜியையும் எந்திரனையும் பார்த்த பாதிப்பில் தோன்றிய கருத்து அது). இத்தகைய எண்ணத்தோடு, மிஞ்சிமிஞ்சிப் போனால் எந்திரன் அளவு மொக்கையாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் இன்று மாலை ‘ஐ’ படத்துக்குச் சென்றேன். அந்நியனுக்குப் பின்னர் சுவாரஸ்யமான படம் எதுவுமே ஷங்கரிடம் இருந்து வரவில்லை என்பதும் இன்னொரு காரணம்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. உடனேயே மேலே சொல்லியிருக்கும் மூன்று படங்களைப் போல் இருந்ததா என்றால், அப்படி இல்லை. ஆனால் எந்திரன், சிவாஜி ஆகிய படங்களைவிடவும் நன்றாகவே இருந்தது. கமர்ஷியல் படங்களை எடுக்கும் ஆற்றல் ஷங்கரிடம் இருந்து இன்னும் போய்விடவில்லை. காட்சிகளை எப்படி அமைக்கவேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் படத்தில் குறைகளும் உண்டு. நிறைகளையும் குறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சராசரியான தமிழ்த் திரைப்பட ரசிகன் ஒருவன்/ஒருத்தி திரையரங்குக்குச் சென்று ஒருமுறை ஜாலியாகப் பார்க்கும் அளவு அவசியம் இந்தப் படம் விளங்குகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், லிங்கா அளவு என் பொறுமையை இப்படம் சோதிக்கவில்லை. என்னால் முதலிலிருந்து இறுதிவரை படத்தைப் பார்க்க முடிந்தது. இது ஒரு entertainerதான் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. அதேபோல் என்னுடன் அமர்ந்திருந்த மக்களுமே படத்தை ரசித்தே பார்த்தனர். பல காட்சிகளில் கைதட்டல் வாங்கியது (Gopalan Mall, Old Madras Road). படம் முடிந்ததும்கூட ஆடியன்ஸின் கைதட்டல் அவர்களின் கருத்தைச் சொல்லியது. படம் முடிந்து வெளியேறும்போது அவர்களில் பலர் பேசியதைக் கேட்டேன். ஆடியன்ஸில் முதியவர்கள் பலரைப் பார்த்தேன். குடும்பம் குடும்பமாகப் பலர் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்குப் படம் பிடித்திருக்கிறது. இளைஞர்களும் பலர் இருந்தனர். இவர்களின் கருத்து – படம் மிகவும் நீளம் என்பது. கூடவே அவர்களில் பலரும் அந்நியனில் இருந்துதான் ஷங்கரை கவனிப்பவர்கள்.

விரிவாகப் பார்க்கலாம். இனிமேல் வரப்போகும் கட்டுரையில் spoilers இருக்கலாம். எனவே படம் பார்க்காத நண்பர்கள், படத்தைப் பார்த்துவிட்டுப் படிக்கலாம்.

தமிழில் revenge படம் என்பது எண்பதுகளின் பிரபலமான சப்ஜெக்ட். ’நான் வாழ வைப்பேன்’, ’அன்னை ஓர் ஆலயம்’ என்று துவங்கி ஏராளமான படங்களைச் சொல்லலாம். ’பழிவாங்கும் கார்’ என்று கூட ஒரு படம் உண்டு. ‘வா அருகில் வா’ படம் நினைவிருக்கிறதா? ‘மைடியர் லிஸா’வும் பழிவாங்கும் படம்தான். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் இத்தகைய பழிவாங்கும் படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் எனக்குப் பிடித்தவை அபூர்வ சகோதரர்கள், நான் சிவப்பு மனிதன் (சார்லஸ் ப்ரான்ஸனின் Death Wish படத்தின் காப்பி), ஜீவா மற்றும் ஜல்லிக்கட்டு. இவற்றில் அபூர்வ சகோதரர்கள் போன்ற ஒரு சுவாரஸ்யமான ரிவெஞ்ச் படம் இன்னும் தமிழில் வரவில்லை என்றே நினைக்கிறேன். அந்தப் படம் வந்ததும் கமல் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், ‘இந்த மாதிரி பழிவாங்கும் படம் தமிழ்ல ஏராளமா வந்திருச்சு.. அதுங்க கிட்ட இருந்து இந்தக் கதையை எப்படி வித்தியாசப்படுத்தலாம்னு யோசிச்சப்பதான் குள்ள அப்பு கதாபாத்திரம் உருவாச்சு.. வழக்கமான அதே பழிவாங்கும் கதைல ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்கியதால் படம் மத்த படங்களிலிருந்து வித்தியாசப்பட்டுச்சு’ என்று சொல்லியிருப்பார். இதுதான் ‘ஐ’ படத்துக்கும் பொருந்தும். ஆனால் அபூர்வ சகோதரர்கள் அளவு ஐ சிறந்த படம் இல்லை. ஏன் என்று பார்க்கலாம்.

முதலில், பிற பழிவாங்கும் படங்களுக்கும் ஐ படத்துக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் – இதில் நாயகன் யாரையும் கொல்வதில்லை. இது ஏனெனில், நாயகனின் அம்மாவோ தந்தையோ வில்லன்களால் கொல்லப்படுவது போன்ற கதை இதில் இல்லை (அபூர்வ சகோதரர்கள்/ஜீவா). நாயகனின் தங்கையை/குணச்சித்திரக் கதாபாத்திரத்தின் மகளை வில்லன்கள் கொடூரமாக ரேப் செய்து கொல்வதில்லை (நான் சிவப்பு மனிதன்/ஜல்லிக்கட்டு). நாயகனின் இழப்பு எதில் என்று பார்த்தால், அவனது அழகையும் உருவத்தையும் இழக்கிறான். அவனது வாழ்க்கையையும் காதலையும் இதனால் தொலைக்கிறான். எனவே வில்லன்கள் மீது இயல்பாகவே கோபப்பட்டு அவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். திட்டங்கள் போட்டு ஒவ்வொருவரையும் பழி வாங்குகிறான். ஒவ்வொருவரின் உருவமும் ஒவ்வொரு வகையில் விகாரப்படுகிறது. தன்னை அவர்கள் அசிங்கப் படுத்தியதுபோலவே அவர்களை இவன் அசிங்கப்படுத்துகிறான். அவ்வளவே.

’அவ்வளவே’ என்று சொன்னதன் காரணம், பொதுவாக ஒரு சிறந்த பழிவாங்கும் படத்தில் (மேலே சொன்ன தமிழ்ப் படங்கள். ஹிந்தியில் யாதோங்கி பாராத், ஷோலே போன்றவை.. உலகளாவிய அளவில் Kill Bill, Death Wish, Oldboy, Django Unchained, Gladiator, Law Abiding Citizen, I saw the Devil, True Grit (both versions) மற்றும் எக்கச்சக்கமான படங்கள்) ஹீரோ சந்திக்கும் இழப்பு ஆடியன்ஸின் மனதில் நிற்கும். இதனாலேயே ஹீரோ என்ன செய்தாலும் ஆடியன்ஸுக்கு அது சரிதான் என்றே தோன்றும். கூடவே ஹீரோவின் இழப்பு ஆடியன்ஸின் மனதில் உணர்வுபூர்வமாகப் பதிந்துவிடும். அபூர்வ சகோதரர்களில் ஸ்ரீவித்யா வாயில் விஷம் ஊற்றப்படும் காட்சியை இப்போது பார்த்தாலும் அவசியம் உணர்ச்சிகரமான காட்சிதான் அது. இதனாலேயே, உலகம் முழுதும் இயல்பாகவே, இழப்பு எத்தனை ஆழமானதோ அத்தனைக்கத்தனை வில்லன்களை ஹீரோ பழிவாங்குவதும் கொடூரமாக/வன்முறையாக/ஆடியன்ஸின் மனதைக் குஷிப்படுத்தும் வகையில் இருக்கும். அப்பு பழிவாங்கும் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சாவது நமக்கெல்லாம் எப்படி ஜாலியாக இருந்தது? கூடவே எளிதில் யார் வேண்டுமானாலும் அப்புவை அடித்து வீசிவிடலாம் என்ற நிலையிலும் அப்பு வெற்றிகரமாகத் தனது தந்தையின் மரணத்துக்கும் தாயின் வாயில் விஷம் ஊற்றப்படுவதற்கும் சேர்த்துப் பழிவாங்குவது ஆடியன்ஸுக்கு இன்னும் சந்தோஷம் அளித்தது. இதேதான் ஜல்லிக்கட்டு படத்திலும் மணிவண்ணனால் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் எல்லாமே ஒரே டெம்ப்ளேட்தான். சத்யராஜின் வித்தியாசமான கெட்டப்கள் மட்டுமே வேறுபட்டிருக்கும். நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினியின் குடும்பம் சாவது அக்காலத்திய படங்களிலேயே அவசியம் கொடூரம்தான். உணர்வுபூர்வமாக ஒரு தங்கை பாட்டும் அதில் உண்டு. இதனாலேயே ராபின்ஹூட்டாக அவர் மாறி வில்லன்களை வேட்டையாடுவது நமக்குப் பிடிக்கும். அதாவது – ஒன்று – பழிவாங்குவதற்கான காரணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக சொல்லப்படும். அல்லது வில்லன்களாவது மிகவும் பலம் வாய்ந்த சூப்பர் வில்லன்களாக இருப்பர். அல்லது இந்த இரண்டுமே இருக்கும்.

இந்த ரிவெஞ்ச் டெம்ப்ளேட்டை மனதில் வைத்துக்கொண்டால், கில் பில் போன்ற படங்கள் அத்தனை சுவாரஸ்யமாக ஏன் இருந்தன என்று எளிதாகப் புரிந்துவிடும்.

இதுதான் ‘ஐ’ படத்திலும் ஷங்கரால் சொல்ல முயலப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் கதாநாயகன் லிங்கேசனின் இழப்பின் வலி ஆடியன்ஸுக்கு ஷங்கரால் முழுதாகச் சொல்லப்படவில்லை (அல்லது) ஆடியன்ஸ் அக்கதாபாத்திரத்தின் இழப்பில் முழுமையாக, உணர்வுபூர்வமாக ஈடுபடவில்லை. இதுதான் படத்தின் முதல் பிரச்னையாக எனக்குத் தோன்றியது. லிங்கேசன் இழப்பவை என்னென்ன? முதலில் அவனது உருவம். அவலட்சணமாக மாறுகிறான். பின்னர் அவன் காதலியை இழக்கிறான். அவனது வாழ்க்கையை இழக்கிறான். இவற்றில் காதலியை அவன் இழப்பது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. காரணம் அந்தக் காதலில் ஆழமே இல்லாததுபோல்தான் காட்டப்பட்டிருக்கிறது. தன் உருவத்தையும் வாழ்க்கையையும் லிங்கேசன் இழப்பதும் வலுவாக சொல்லப்படவில்லை. ஒவ்வொரு வில்லனின் வாழ்க்கையிலும் லிங்கேசன் தன்னையறியாமல் குறுக்கிட்டு அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதும் எதுவுமே ஆடியன்ஸின் மனதில் தைக்காதவாறுதான் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. தொழிலதிபர் ராம்குமாரின் வியாபாரம் லிங்கேசனின் ஒரே பேட்டியில் விழுந்துவிடுகிறது என்பதை நம்ப முடியவில்லை. திருநங்கையின் காதலை லிங்கேசன் ஒப்புக்கொள்ளாததால் அவன் மனம் உடைகிறாள் என்பதில் ஆழம் இல்லை. மாடல் ஜானின் வாழ்க்கை லிங்கேசனால் அழிகிறது என்பதும் சரியாக இல்லை. மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் இறுதி வருடத்தில் பங்கேற்கும் நபரை மீறி லிங்கேசன் ஜெயிப்பதால் அவருக்கு வேலை கிடைக்காமல் போய் அவரது வாழ்க்கையும் நாசமாகிறது என்பது மேலோட்டமாக ஒரே வரியில் சொல்லப்பட்டுவிடுகிறது. தியாவின் குடும்ப டாக்டர் தியாவின் மேல் வைத்திருக்கும் வெறி சும்மா ஓரிரண்டு ஷாட்களோடு கடந்துவிடுகிறது. இப்படி எல்லாமே மிகவும் மேலோட்டமாகவே சென்றுவிடுவதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து லிங்கேசனைப் பழிவாங்குவது முழுக்கவும் என் மனதில் உணர்வுபூர்வமாகப் பதியவில்லை. இதனால் லிங்கேசன் விகாரமாக மாறி, அதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குகிறான் என்பது ஆழமாகப் பதிந்து, நம்மாலும் அவனுடனேயே பயணித்து அவனை cheer செய்து பாராட்ட முழுதாக முடியவில்லை (இதே ஷங்கரின் இந்தியன் தாத்தாவின் ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் அவர் மேல் நமக்கு எத்தனை பரிவு எழுந்தது? அத்தகைய மேஜிக் இங்கே நடக்கவில்லை. காரணம் ஹீரோவின் இழப்பில் வலு இல்லை (அல்லது) அப்படிச் சொல்லப்படவில்லை).

அடுத்ததாக, ஆரம்பத்தில் இருந்தே எல்லாக் கதாபாத்திரங்களுமே கதையை வசனங்களால் சொல்லிக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக சந்தானம் ஆங்காங்கே வந்து கோடிட்ட இடங்களை நிரப்புகிறார். இப்படிக் கதையை வசனங்களில் (மட்டும்) சொல்லிக்கொண்டே இருந்தால் ஆடியன்ஸின் மனதில் அது ஒட்டாது.

மூன்றாவதாக, மாடல் ஜானை எடுத்துக்கொண்டால், இப்போதைய மாடல் உலகில் இப்படியா ஒருவன் ஒரு பெண் மாடலின் அருகே அமர்ந்துகொண்டு ‘இண்ணிக்கி நைட்டு ஜாலியா இருக்கலாம் வா’ என்று கூப்பிட்டுக்கொண்டு இருப்பான்? அவனுக்கு கற்பனைத்திறனே இல்லையா? எப்படிப் பேசினால் காரியம் நடக்கும் என்பதுகூடவா அவனுக்குத் தெரியாது? இப்படிப்பட்ட சில அரதப் பழைய காட்சிகள் படத்தில் உண்டு. இதன்கூடவே, வில்லன்கள் ஒன்றாகச் சேர்ந்து சரக்கடித்துக்கொண்டே திட்டம் போடுவதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் பழைய படங்களிலேயே பார்த்தாகிவிட்டது. ஷங்கர் படத்தில் இதெல்லாம் வரும் என்று கற்பனையே செய்ய முடியவில்லை.

நான்காவதாக, ஷங்கருக்கு அவரது முதல் படத்தில் இருந்து இன்றுவரை காதலை சரியாகக் கையாளத் தெரிவதில்லை. ‘காதல்’ என்றாலே மேலோட்டமான காட்சிகள்தான் அவரது படங்களில் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள் – அவரது படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்து மனதில் நமக்கு எதாவது ரியாக்‌ஷன் தோன்றியிருக்கிறதா? காதலுக்காக திடீரென்று மவுண்ட் ரோட்டில் அம்மணமாக ஓடுவது, அமெரிக்காவில் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே காதல், கிராமத்தில் தான் பாட்டுக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பார்த்ததும் வெறித்தனமாக ஃபோட்டோ எடுக்கும் கேமராமேன் (சிவாஜி, எந்திரன் இன்னும் மோசம்) என்றெல்லாம்தான் அவரது படங்களில் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் டிவியில் வரும் மாடலின் விளம்பரங்களைப் பார்த்து வெறியாகி சுற்றும் மனிதன் என்றால் கதை நடப்பது டிவி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்திலா என்று சந்தேகம் வருகிறது. நாப்கின் உட்பட எல்லாப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறான் ஹீரோ என்பது துளிக்கூட நம்ப முடியவில்லை.

ஷங்கரின் படங்களில் (ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் என்று அறிக) கதாநாயகனுக்கும் அவனைத் துரத்துபவனுக்கும் ஒரு போட்டி இருக்கும். அது கிச்சா-அழகர்நம்பியாக இருக்கலாம். அல்லது இந்தியன் தாத்தா-கிருஷ்ணசாமியாக இருக்கலாம். புகழேந்திக்கும் அரங்கநாதனுக்கும் நடக்கும் tussle எப்படி இருந்தது? இறுதியாக, அந்நியன்/ரெமோ/அம்பி- பிரபாகர் என்று அது தேய்ந்தது. இந்தப் போட்டி அவசியம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால் ஐயில் அது இல்லவே இல்லை. இப்படியெல்லாம் பழிவாங்கப்படும் வில்லன்கள் நினைத்தால் லிங்கேசன் அண்டார்ட்டிகாவில் ஒளிந்திருந்தாலும் அவனைக் கட்டித் தூக்கிவந்து கொல்லமுடியுமே? இப்படிப்பட்ட கேள்விகள் எழாமல் பார்த்துக்கொண்டதுதான் முந்தைய படங்களில் ஷங்கரின் வெற்றி. ஆனால் ஐயில் அது இல்லை.

இது எல்லாவற்றுக்கும் காரணமாக எனக்குத் தோன்றுவது, கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆழமாக இல்லாமல் இருந்ததே.

படத்தின் கடைசியான குறை, நீளம். படம் மொத்தம் 189 நிமிடங்கள். சண்டைக்காட்சிகள் மிகவும் நீளமாக உள்ளன. சைனாவில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அப்படியே. ஏன் சைனா? காரணமே இல்லை. ஷங்கரின் மனதில் சைனாவில் எடுக்கவேண்டும் என்று தோன்றியிருக்கும் போல இருக்கிறது. பாடல்களும் முதன்முறையாக, ஓரிரண்டு பாடல்களை வெட்டியிருக்கலாம் என்று தோன்ற வைத்தன (மெர்சலாயிட்டேன், ஐலா ஐலா & லேடியோ பாடல்கள். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் மற்றும் என்னோடு நீ இருந்தால் ஆகிய பாடல்கள் மட்டும் எனக்குப் பிடித்தன). இந்தப் படத்தை மட்டும் இரண்டேகால்/இரண்டரை மணி நேரத்தில் காண்பித்திருந்தால் இன்னும் பலருக்கும் பிடித்திருக்கலாம்.

சரி. இத்தனை குறைகளைப் பட்டியலிட்டும் எனக்கு இந்தப் படம் பிடித்தது என்று ஏன் சொல்கிறேன்?

‘அழகு’ என்றே பொருள்படும் ’ஐ’ என்ற இந்தப் படத்தில் ஷங்கர் எடுத்துக்கொண்ட தீம் – முதன்முறையாக முற்றிலும் கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையே மையமாகக் கொண்டே இருக்கிறது. இது ஒரு பாஸிடிவ். சமுதாயத்துக்காக கிச்சா போலவோ இந்தியன் தாத்தா போலவோ புகழேந்தி போலவோ அந்நியனைப் போலவோ லிங்கேசன் போராடுவதில்லை. அவனது போராட்டம் முழுதுமே தனக்காகவே இருக்கிறது. இதுவரை ஷங்கர் படத்தில் இப்படி முற்றிலும் பெர்ஸனலான தீம் வந்ததில்லை (ஓரளவு எந்திரனைச் சொல்லலாம். ஆனால் அதில்கூட, சிட்டியை எதிர்ப்பதன்மூலம் சமுதாயத்தையே அழிக்கக்கூடிய ரோபோ படையைத்தான் ஹீரோ எதிர்க்கிறான்). இதனால் இதுவரை சூப்பர்ஹீரோக்களாகவே காட்டப்பட்டுவந்த ஷங்கரின் ஹீரோக்கள் போல இல்லாமல் இதில் லிங்கேசன் ஒரு சாதா ஹீரோ.

இப்படி ஹீரோ, படத்தின் தீம் போன்றவை வழக்கமான ஷங்கர் படமாக இல்லாமல் இப்படத்தில் மாறியிருப்பதால், இது வழக்கமான ஷங்கர் படத்தின் ஃபீலைக் கொடுக்காது (ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன்). இது முற்றிலும் ஒரு தனிப்பட்ட ரிவெஞ்ச் கதை. இதனாலேயே என்னால் இந்தப் படத்தை முழுக்கவுமே அலுப்பில்லாமல் பார்க்க முடிந்தது. படத்தின் ஏராளமான லாஜிக் ஓட்டைகளையும் மீறி, கூனனாக வரும் லிங்கேசனை எனக்குப் பிடித்தது. முற்றிலுமாக அவனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிந்தது. இதனாலேயே அவனது கதாபாத்திரத்தின் மீது இரக்கமும் தோன்றியது. முதலிலேயே பார்த்ததுபோல், இதில் கதாநாயகன் யாரையும் கொல்லுவதில்லை. கதாநாயகனின் இழப்பும் ஆழமாகச் சொல்லப்படவில்லை. இதனாலேயே படம் பார்க்கும் சிலருக்கு ஒரு அதிருப்தி தோன்றியிருக்கலாம். லிங்கேசன் கூனனாக ஆனபின் ஒவ்வொருவராகச் சென்று பழிவாங்கும் காட்சிகள் இதனால்தான் (கொல்லக்கூடாது என்பதால்) அந்நியன் போல் உயிரோடு எருமைகளை விட்டுக் கொல்வது, எண்ணைச் சட்டியில் போட்டு வறுப்பது என்றில்லாமல் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. லிங்கேசனின் நோக்கம் கொல்வது அல்ல. உயிரோடு பழிவாங்குவது. அப்படி அவன் பழிவாங்கும் வில்லன்கள் கொடூரமானவர்களோ அல்லது பலம் வாய்ந்தவர்களோ அல்ல. அவர்கள் அனைவருமே சந்தர்ப்பவசத்தால் இவன் மேல் கோபம் அடைந்தவர்கள். இதுவும் அவர்கள் மேல் நம்மில் சிலருக்கு ஈர்ப்பு வராததற்குக் காரணமாக இருக்கலாம்.

படத்தின் அடுத்த பாஸிடிவ், கூனன் லிங்கேசனின் கெட்டப். இதற்காக ப்ராஸ்தடிக்ஸில் பீட்டர் ஜாக்ஸனின் WETA நிறுவனம் உதவியிருப்பதாக இணையத்தின் மூலமாகத் தெரிகிறது. அட்டகாசமான கெட்டப் அது. உடலை மிகவும் இ(வ)ளைத்து நடித்திருக்கும் விக்ரம் பாராட்டப்படவேண்டியவரே. உடலை ஏற்றி/இறக்கி அவர் நடித்திருப்பது அவசியம் அசாத்தியமான சாதனைதான். அவருக்குக் கொடுத்த பணத்தை எனக்குக் கொடுத்தால்கூட(நான் நடிகனாக இருக்கும்பட்சத்தில்) என்னால் முடியாது. ஒருசிலரைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என்றே தோன்றுகிறது. சில காட்சிகளில் கூனனால் கஷ்டப்பட்டே சில வேலைகளைச் செய்யமுடியும். அப்போதெல்லாம் விக்ரம் அதை எப்படிச் செய்கிறார் என்று கவனியுங்கள். அவரது உடல்மொழி அபாரம்.

படத்தின் மூன்றாவது பாஸிடிவ்,  இந்தக் கதைக்கேற்ற திரைக்கதை. ஒரு பெர்ஸனல் ரிவெஞ்ச் படத்தை எப்படி எழுதவேண்டும் என்று ஷங்கருக்குத் தெரிந்திருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், அவை அந்தந்த இடங்களில் எடுபடுகின்றனவா என்பதே முக்கியம். லிங்காவில் வரும் பல காட்சிகள் எத்தனை அலுப்பாக இருந்தன? ஃப்ளாஷ்பேக், ரொமான்ஸ், chase, ரிவெஞ்ச் என்று மாற்றிமாற்றி, கதையில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் ஒரு வேகமான காட்சியைப் போட்டு எழுதியிருக்கிறார் ஷங்கர்.

சமீபகாலமாக மிகச்சில தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எந்தப் படமும் முழுதாக என்னால் ரசித்துப் பார்க்க முடியவில்லை. ‘ரசிப்பது’ என்று இல்லாமல் அட்லீஸ்ட் முழுதாக உட்கார்ந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கியும் பல படங்களில் கடுப்பே மிஞ்சியது. ஆனால் என்னால் ஐ படத்தில் முதலிலிருந்து இறுதிவரை எரிச்சல் இல்லாமல் முழுப் படத்தையும் பார்க்க முடிந்தது. இதற்குக் காரணம் ஷங்கரின் திரைக்கதைதான் என்று சொல்வேன். ரிவெஞ்ச் படத்தை இப்படம் போல முன்னும் பின்னும் காட்சிகள் அமைத்துதான் எடுக்கமுடியும். வில்லன்களும் சாதாரண ஆட்கள். ஹீரோவும் வழக்கமான ஷங்கர் ப்ராண்ட் சூப்பர்ஹீரோ அல்ல. அவனுமே சாதா ஆள்தான். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஷங்கர் எழுதியிருக்கும் திரைக்கதை எனக்கு அலுப்பின்றியே சென்றது. யோசித்துப் பாருங்கள்- ஷங்கர் படத்தில் வராத டெம்ப்ளேட் காட்சிகளா? ஷங்கர் படம் என்றதுமே என்னென்ன காட்சிகள் எப்படியெல்லாம் வரும் என்றெல்லாம் நாம் பேசாமலா இருந்தோம்? புத்தம் புதிதாக, ஒரு டெம்ப்ளேட் காட்சிகள் கூட இல்லாமல் ஷங்கர் படம் வரும் என்றா எதிர்பார்த்தோம்? எத்தனை டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும் அவை அந்த இடத்தில் எடுபடுகின்றனவா என்பதே முக்கியம் என்ற முறையில், இப்படத்தில் இந்தக் கதைக்கு அவை எடுபட்டிருக்கின்றன என்பதே என் கருத்து. அந்நியன் படத்துக்குப் பின்னர் ஷங்கரிடம் இருந்து காணாமல் போயிருந்த கதை சொல்லும் முறை, இப்படத்தில் ஒரு 50% திரும்பி வந்திருக்கிறது என்பது என் கருத்து.

இறுதியாக, (இணையத்தின் பக்கம் அவ்வப்போது மட்டும் ஒதுங்கும்)பொதுவான ஆடியன்ஸுக்கு இந்தப் படம் பிடிக்கும். இது ஒரு வழக்கமான ஷங்கர் படம் அல்ல. தனது ஏரியாவில் இருந்து சற்றே வெளியே வந்து ஷங்கர் எடுத்திருக்கும் படம் இது.

பி.கு

1. படத்தில் வரும் திருநங்கையைச் சுற்றிச்சுற்றி விக்ரமும் சந்தானமும் ஆடும் அசிங்கமான காட்சி எனக்குப் புதிதாகத் தெரியவில்லை. ஷங்கருக்கு சமுதாய உணர்ச்சி மிகவும் கம்மி. ப்ராக்டிகலாக அவரைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றி அறியாதவர். எனவே, அக்காட்சி இல்லாமல் இருந்தால்தான் அதிசயம்.ஷங்கர் மட்டுமல்ல – பெரும்பாலான இயக்குநர்களுக்கு சமுதாய உணர்ச்சி அறவே இல்லை. இன்னும் எண்பதுகளிலேயே இவர்களின் மூளை சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறது.

2. இத்தனைக்கும் மேல் ஒருவேளை படம் உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், That’s absolutely okay. அதில் தவறும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து அவசியம் இருக்கும்.

3. படத்தில் செலவழிக்கப்பட்டிருக்கும் பணம் எக்கச்சக்கம் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. அத்தனை பணத்துக்கான தேவை இல்லை என்பது என் கருத்து. காட்சிகளில் பணம் நிரம்பி வழிகிறது. இத்தனை பிரம்மாண்டம் கதைக்கு உதவாமல் அது வேறு ட்ராக்கில் செல்கிறது.

4. இத்தனை வெற்றிகரமான மாடல்கள் (கிட்டத்தட்ட ரஜினிக்கு இணையாக) தமிழ்நாட்டில் இருக்கின்றனரா?

5. ஜிம் ஃபைட்டில் வரும் Boob Dance (விக்ரம் மற்றும் மாமிச மலைகள்) செம்ம காமெடி.  ஆனால் வெறும் ஆண்களின் Boob டான்ஸாகப் போய்விட்டது.

6. ஷங்கரின் அடுத்த படம் எப்படி என்று பார்க்கலாம். அதுதான் அவருக்கு உண்மையான டெஸ்ட்டாக இருக்கப்போகிறது.  என்னால் ஐ படத்தை இன்னொரு முறை பார்க்க இயலாது. ஆனால் ஜெண்டில்மேன், இந்தியன் & முதல்வன் படங்களை இன்னும் பல முறை பார்ப்பேன். ஷங்கரின் திறன் குறைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்படியும் ஒரு entertainerஐ அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது என்பது என் இறுதியான கருத்து.

7. பி.சி. ஸ்ரீராம் பற்றி ஏன் கருத்து சொல்லவில்லை? எனக்கு ஒளிப்பதிவைப் பற்றி எதுவும் தெரியாது என்பதே காரணம். படம் முழுக்க கண்ணில் உறுத்தல் இல்லாமல் பார்க்க முடிந்தது. ஒளிப்பதிவு துருத்திக்கொண்டு தெரியவில்லை. ரஹ்மான் பற்றிய கருத்து, இரண்டு பாடல்களே போதுமானவை என்று மேலேயே சொல்லப்பட்டுவிட்டது.

8. சுஜாதா ஷங்கரிடம் இல்லாததால் ஷங்கருக்கு இழப்பு என்று சொல்பவர்கள், ஜெண்டில்மேன் & காதலன் படங்களைப் பார்க்கவும். கூடவே சுஜாதா இருந்த சிவாஜி, எந்திரன் (ஆரம்ப கட்டம்) மற்றும் பாய்ஸ் ஆகிய படங்களையும் இன்னொரு முறை பார்க்கவும்.