ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

மொபைல்



முன்பொரு காலத்தில் எங்கள் வீட்டில் ஊதுபத்தி தீர்ந்து போகும். கடைக்குப் போய் வாங்கி வரச் சொல்லி மாமா அனுப்புவார். நானும் கடைக்குப் போய் "கடைக்காரரே ஒரு நல்ல ஊது பத்தி குடுங்க" என்று கேட்பேன். அவரும் "எதுப்பா.." என்று கேட்பார். "அதோ எல்லாத்துக்கும் மேலே இருக்கே டாப் த்ரீ ஊதுபத்தி அத எடுங்க" என்பேன். அவரும் அதை எடுத்து கண்ணில் காட்டிவிட்டு "அம்பி இது பதிமூனு ரூவா, வாங்கிட்டு போனா உங்க மாமா சத்தம் போடுவார், இரு நந்தி டைமண்ட் தர்றேன் அதான் மாமா வாங்குவார், அவ்ளோ தான் சில்லறை தந்திருப்பார்" என்று அதைத் தருவார். வாங்கிப் போய் மாமாவிடம் குடுத்தால் "வெரி குட்" என்று சொல்லிக் கொளுத்துவார். கம்முன்னு நிதானமாக ஏத்தினதே தெரியாமல் அரை மணி நேரம் எரியும். எளிமையான உலகமாய் இருந்தது.

சமீபத்தில் மொபைல் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை. ஃபோன் வந்தால் ரிங் அடிக்கவில்லை, அடித்தாலும் தகரத்தில் கீச்சுவது மாதிரி கேட்டது. எட்டை அமுக்கினால் நான்கை காட்டும்.நான்கை அமுக்கினால் நட்சத்திரத்தைக் காட்டும். தெரிந்தவரிடம் காட்டினேன்

புட்டுக்கிச்சு

..ஆங்?

புட்டுக்கிச்சு, ஹோ கயா, வேற ஃபோன் வாங்கிக்கோங்க (வயித்துல புளிய கரைக்கிறானே...நிஜமாவே போன் புட்டுகிச்சா??)

வேற ஃபோனா...எதுக்கு... இத ஓவராயில் பண்ண முடியாதா? 

பண்ணலாம் இந்த டெக்னாலஜி தெரிஞ்ச ஆள் லோக்கல்ல இருக்க மாட்டான், ஜப்பான்லேர்ந்து ஸ்பெஷலா கூட்டிட்டு வரணும் பரவாயில்லையா? பேசாமா புது ஃபோன் வாங்கிக்கோங்க சார்.

அது தான் ஆரம்பம்.

அப்பா ஆப்பிள் வாங்குப்பா..அதுல நிறைய கேம்ஸ் இருக்கும்பா..

ம்க்கும் உங்கப்பா காஷ்மீர் ஆப்பிளே விலை கூடன்னு வாங்கமாட்டேன்.... இதுல அமெரிக்க ஆப்பிளா அதெல்லாம் நாப்பதாயிரம் ஆகும். பேசாம இருடி...

எந்த மாதிரி பார்க்கறீங்க, டச்சா இல்ல பட்டன் வைச்சததா? (ஜிப் வைச்சது இருக்கா?)

பேசாமா ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கேன், டச் ஃபோன், சாம்சங்ல சல்லீஸா கிடைக்கும்.

சார் நல்ல கடையா பார்த்து வாங்குங்க.. ஏமாத்திருவாங்க. சாம்சங் லோகோல `ஏ`-க்கு நடுவுல கோடு இல்லாம இருக்கா பாருங்க. கோடு போட்டிருந்தா டுப்ளிகேட். சைனா மேக்

ப்ளூடுத், என்.எஃப்சி, எஸ் பீம், டீ.என்.எல்.எம் எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிகோங்க  (டி.எல்.என் கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு போயிட்டார்ன்னு சொன்னாங்களே?)

ஏரோப்ளேன் மோட் இருந்தா சொஸ்தம். ப்ளைட்ல போனா ஆஃப் பண்ணவேண்டாம். ஃபோன திருப்பிக் காட்டிட்டா போதும். அவா ரைட் ரைட்ன்னு போயிடுவா. (முந்தைய ப்ளைட் ஜர்னி எப்போ என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன்....போன மாசம் தான் போனேன்...புல் மப்புல தூங்கிட்டேன்)

ரெண்டு கேமிரா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி மாதிரி யூஸ் பண்ணிக்கலாம் (பத்து ரூபாய்க்கு அவசரப்பட்டு கையகலக் கண்ணாடி வாங்கிட்டேனே வேஸ்டா!)

ட்யூயல் சிம் இருந்தா பெஸ்டு. ரெண்டு ஃபோன்லாம் சுமக்க வேண்டியது இல்லாம ஒரே போன்ல சமாளிக்கலாம் (இதுக்காகவே ரெண்டாவது சிம் வாங்கணும்)

எப்.எம் ரேடியோ இருக்கான்னு பாருங்க. ராத்திரியில் ராஜான்னு ஒரு ப்ரோக்ராம். சுண்டி இழுக்கறான். 

மெமரி எவ்வளவு அதிகமா இருகோ அவ்வளவு அதிகமா பாட்டு, படம் எல்லாம் போட்டு வைச்சுக்கலாம் ( நூத்தம்பது நம்பர் ஸ்டோர் பண்ண முடியுமோ? முடியுமா...இருநூறு? அப்போ நானூறு?) 

4G சப்போர்ட் பண்ணுமான்னு செக் பண்ணிக்கோ. (எல்லாத்துக்கும் என்ன பிரயோஜனம்ன்னு கேக்காத. லேட்டஸ்ட் டெக்னாலஜி, வாங்கிப் போடு, பின்னாடி உபயோகப்படும்)

ஆப்ஸ்லாம் அங்கயே லோட் பண்ணித் தரச் சொல்லு. ஸ்டார் கேல்க்ஸின்னு ஒன்னு இருக்கு. வான சாஸ்திரம். மொபைல வானத்தைப் பார்த்து காட்டினா போதும். வீனஸ் எங்க இருக்கு, ப்ளூட்டோ எங்க இருக்கு, சனி எங்க இருக்குன்னு அழகா காட்டும். (சனி அப்போ நாக்குல இல்லையா?)

எல்லாவற்றையும் நோட் பண்ணிக் கொண்டேன்.

"கடைக்காரரே ஒரு நல்ல மொபைல் ஃபோனா குடுங்க" என்று கேட்ட போது எல்லாத்துக்கும் மேலே இருக்கிற ஃபோனை எடுத்துத் தராமல் மேலும் கீழும் பார்த்தார். 

ப்ராண்டட்டா சைனாவா?

சாம்சங்

ஸ்மார்ட் போனா?

ஆமாம் ஆனா ஓவர் ஸ்மார்ட் வேண்டாம் ஓரளவுக்கு ஸ்மார்ட் போதும்

இதுல வைபை இருக்கா?

சார் ஸ்மார்ட் ஃபோன்னா வைபை இருக்கும் சார். ப்ளூடூத் இருக்கு, ப்ளூடூத்னா தெரியுமா? இன்னொரு ஃபோனோட பேர் பண்ணிக்கலாம் அப்படியே பாட்டு மத்த ஃபைல்ஸ்லாம்...

தெரியும் சார். நானும் படிச்சிருக்கேன். ப்ளூடூத் தெரியாதா. ப்ளூம்பர்க் தெரியுமா உங்களுக்கு? "SIM" கார்டுல சிம்க்கு எக்ஸ்பான்ஷன் சொல்லுங்க பார்போம். (யாருகிட்ட.....கடைக்காரன் அரண்டுட்டான்ல...)

சாரி சார். இதுல ஜி.பி.எஸ் கூட இருக்கு சார். இப்போ ஆபர்ல இருக்கு  - பத்தாயிரத்தி இருநூறு.

ஒரிஜினல் தானே சைனா மேக் இல்லையே? 

சார் ஒரிஜினல் தான் சார். ஆப்பிளே சைனால தான் சார் மெனுபாக்சர் பண்றாங்க

டப்பாவில் என்னவெல்லாம் போட்டிருக்குன்னு படித்தேன். ப்ளூடூத், எம்.பி.3, ஜி.பி.எஸ், எஃப்.எம்...ஏகப்பட்டது போட்டிருந்தது.

எல்லாம் கரெக்டாக வேலை செய்யுங்களா? டப்பால போட்ருவாங்க ஆனா சில சமயம் அதெல்லாம் இருக்கவே இருக்காது.

சார் இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார். டப்பால போட்டிருக்கிறது எதாவது ஒன்னு குறைஞ்சாலோ இல்ல அது வேலை செய்யலைனாலோ எடுத்துட்டு வாங்க, ரெடியா ரூபாய் வாபஸ் குடுக்கறோம்.

இன்னும் இரண்டு முறை உறுதிபடுத்திக் கொண்டேன். சலித்துக் கொண்டார். நீங்க சொன்னத அப்படியே எழுதித் தாங்க என்றேன். கோபப்பட்டார். மானேஜரைக் கூப்பிடச் சொன்னேன். இதெல்லாம் கம்பேனி ப்ராடக்ட் சார் க்யாரண்டில கவர் ஆகும் சார் என்று சலித்துக் கொண்டே எழுதிக் கொடுத்தார். டப்பால எழுதியிருக்கறது மட்டும் ஏதாவது இல்லை, அடுத்த நிமிஷம் இங்க இருப்பேன் என்று அழுத்திச் சொன்னேன்.

பில்லை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை எல்லா ஃபோனையும் நோட்டம் விட்டேன். 

அதோ எல்லாத்துக்கும் மேல இருக்கே அந்த ஃபோன எடுங்க.

சார் அது ஹெட்ஃபோன் சார் 

ம்ம்ம் சரி..ஏதாவது டிஸ்கவுண்ட் பண்ணுங்க. 

சார் இது அல்ரெடி ஆஃபர் ப்ரைஸ் சார். போன வாரம் வாங்கியிருந்தீங்க இரண்டாயிரம் கூட குடுத்திருப்பீங்க. சாருக்கு ஒரு ப்ளாஸ்டிக் கவர் குடுப்பா

வீட்டுக்கு வந்து கடை விரித்து டப்பாவை வைத்துக் கொண்டு ஒவ்வொண்ணாய் சரி பார்த்தேன். எல்லாம் இருந்தது. யாருகிட்ட...என்று காலரை உயர்த்தி சார்ஜில் போட்டேன்.

ராத்திரி எட்டு மணிக்கு நாராயணன் ஃபோன் பண்ணினார் . பெருமிதமாய் காதில் வைத்தால் நாராயணன் அவரோட வயல் கிணற்றுக்குள் இறங்கி அங்கேர்ந்து பேசுவது மாதிரி இருந்தது.

அவசர அவசரமாய் டப்பாவைப் பார்த்தால் தெளிவாக, சத்தமாக பேச்சு கேட்கும் என்று எங்கயுமே எழுதியிருக்கவில்லை!!!!!

ஜிகர்தண்டா (2014) – Analysis




நேற்று தான் ஜிகர்தண்டா பார்த்தேன் ...நல்ல மேக்கிங்குடன் கூடிய ஒரு நல்ல படம். 2014-ல் இது வரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் முதல் மூன்று ரேங்கிற்குள் வரத் தகுதியுள்ளது. முதல் பாதி நல்ல க்ரிப்பிங்காய் நம்பகத்தன்மையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமா என்பது எதார்த்தமல்ல, நிறைய இடங்களில் ஒன்றுக்குப் பத்தாய் மிகைப்படுத்தி சொல்லும் ட்ராமாட்டிக் மீடியா. ஆனால் அந்த மிகைப்படுத்துதலை சினிமா பார்க்கும் ரசிகன் உணராத படி, அவன் அறிவு முழித்துக் கொள்ளாதபடி கொண்டு சொல்வது மிக முக்கியம். அந்த வகையில் எனக்கு இன்றைக்கு கால் மேல் கால் போட்டு யோசிக்கும் போது இரண்டாவது பகுதியில் தெரியும் மிகைப்படுத்துதல் நேற்று படம் பார்க்கும் போது அவ்வளவு தெரியவில்லை.(அத்தாம் பெரிய ரவுடிகள் கூட்டமாய் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு குரங்காட்டம் ஆடுவதெல்லாம் கொஞ்சமாய் நெருடியது) 

ஆனால் இரண்டாம் பாதியில் கத்திரிக்கோலைத் தொலைத்துவிட்டார்களோ என்று கண்டிப்பாய் தோன்றியது. படம் முடிந்துவிட்டது நல்ல எடுத்திருக்காங்க என்று நாம் மனதில் எண்ட் கார்ட் போட்ட பிறகும் படம் இருபது நிமிடத்திற்கு ஓடுகிறது. க்ரிஸ்ப்பாய் முடித்திருக்கலாம். சரி விடுங்க படத்தை பற்றி எல்லோரும் கதறக் கதறக் கருத்து சொல்லிவிட்டார்கள். தலையில் ஒற்றை ரோஜாவை சொருகிக் கொண்டு கமலோடு "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" ஆட்டம் ஆடிய அம்பிகா, பாயா கடை ஆயாவாக வருகிறார். காலத்தின் கோலம் சகிக்கவில்லை. லஷ்மி மேனனிடம் அவர் தான்  ஹீரோயின் என்ற சொல்லி படத்தில் புக் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐயோ பாவம். சங்கிலி முருகனுடைய அந்தப் பொட்டிக் கடை தாத்தா ரோலையாவது லஷ்மி மேனன் கேட்டு வாங்கி நடித்திருக்கலாம் கொஞ்சம் ஸ்கோப் இருந்திருக்கும். சித்தார்த்துக்கும் அவருக்கும் செட்டே ஆகவில்லை. சின்ன சின்ன குறைகள் மட்டுமே. புல் பேக்கேஜாய் பார்க்கும் போது ஒரு நல்ல மேக்கிங்குடன் கூடிய நல்ல படம். இயக்குநருக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் விடிவெள்ளி, கல்ட் ஃபிலிம் ட்ரெண்ட் செட்டர் என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. சமீபத்திய தமிழ் சினிமாவில் என்னளவில் அது ஆரண்ய காண்டமாகவே இன்று வரை இருக்கிறது. இரண்டு மணி நேரம் நேரம் போவதே தெரியாமல் எந்தத் தொய்வுமில்லாமல் நல்ல இண்ட்ரஸ்டிங்காய் ஓடும் படங்கள் தமிழில் அரிதாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்தப் படம் கானல் நீராய் வந்ததால் இந்தக் கொண்டாட்டமாய் இருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு வித்தை தெரிந்திருக்கிறது, அவரின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

On a different subject - தமிழ் சினிமா ரவுடி கலாச்சாரத்தை ஓவராக glorify செய்வது கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறது. கத்தியை எடுத்து அப்படியே ஒரு சொருவு சொருவுவது, போகிறவர் வருகிற பொதுஜனத்தை மண்டையில் போடுவது, பெட்ரோலை ஊத்திக் கொளுத்துவது, கக்கூஸில் கட்டையால் அடிப்பது  போன்ற எல்லா காட்சிகளிலும் நாம் தான் அந்த அடிவாங்குகிற பொதுஜனம் என்பதை மறந்து தியேட்டரில் கை தட்டிக் கொண்டிருக்கிறோம். ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்த மாதிரி இந்த ரவுடிகளை கொண்டாடுவது தமிழ் சினிமாவில் திகட்டும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் படுகிறது. "இந்தியன்" படம்  எடுத்து பொதுமக்களோ அதிகாரிகளோ லஞ்ச லாவண்யத்தில் திருந்தவில்லை, ஆனால் இந்த ரவுடித்தனத்தை அஸ்வமேத யாகம் நடத்திய மாதிரி இப்படி ஒரேடியாய் ஹீரோத்தனமாய் காட்டினால், ரவுடி ஆகலாமா என்று நினைக்கும் அப்ரசண்டிகளெல்லாம் சினிமாவைப் பார்த்து விட்டு வெளிய வரும் போதே சம்பவம் நடத்தி க்ராஜுவேட் ஆகும் டீட்டெயில் வவுத்தக் கலக்குது.

மொத்தத்தில் ஜிகர்தண்டா எல்லா புத்திஜீவிகளும் கொண்டாடி கொண்டிருப்பதைப்போல தமிழ் சினிமாவின் புதுமொழி ஒன்றும் இல்லை.

சனி, ஆகஸ்ட் 02, 2014

மயில் ஸ்னேகங்கள் ( நண்பர்கள் தின ஸ்பெஷல்)




நான் சொல்ல வருவது ரயில் ஸ்னேங்களின் உல்டா. வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் செந்திலும் கவுண்டமணியுமாய், தளபதியும் மம்மூட்டியுமாய், அப்பாஸும் முஸ்தபாவுமாய், நாக்கு மேல் பல்லைப் போட்டு உரிமையோடு " ஏய் நீ என்ன பெரிய இவனாடா / இவளாடி..." என்று உரிமையோடு தோழனும் தோழியுமாய் ஒரே தட்டில் எச்சில் பரோட்டா தின்று, ஈரக் கையில் ஒட்டிய முடி மாதிரி உறவாடிய நட்பைப் பற்றி. அது தோழனாகவோ தோழியாகவோ இருந்திருக்கலாம். எப்பேற்பட்ட நட்பு என்றால், வேறு யாரவது நடுவில் வந்துவிட்டால் இந்த நட்பு நம்மை பின்னிப் பெடலெடுத்துவிடும். "போ..அங்கயே அப்படியே போய் சாவு..இங்க எதுக்கு வர்ற, நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு இப்பத் தான் தெரியுதாமா" என்று ஒரு வாரம் பேசாது.  அது ஒன்றும் பெரிய தவறில்லை என்று தெரிந்தாலும் மானம் வெட்கமேயில்லாமல் முதல் மரியாதை சிவாஜி மாதிரி நாமும் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே போய் நாயாய் கெஞ்சும் நட்பு. "இன்னொரு தரம் மட்டும் இப்படி செஞ்ச, பார்க்கவே மாட்டேன் வெட்டியே போட்டுருவேன்..நிஜமா" என்று மிரட்டி மன்னிக்கும் நட்பு. நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விட இவர்களுக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும். நாளும் கிழமையுமானால் முதல் ஃபோன் இவர்களிடமிருந்து வரவே வராது. அதுவும் பிறந்தநாள் என்றால் சுத்தமாய் மறந்துவிட்ட மாதிரி நடித்து நம்மை வெறுப்பேத்தும். நாமும் வெறுத்துப் போய் "தூ இவ்வளவு தானா நீ.." என்று வசனம் பேச எத்தனிக்கையில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து புருவத்தை உயர்த்தி சட்டையைப் பிடித்து "என்ன சொல்ல வந்த நீ இப்ப..." என்று தளும்ப வைக்கும்.

எல்லாரும் கூட்டம் கூட்டமாய் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கும் போது "இப்ப நானா அவங்களா" என்று வீ.சேகர் பட க்ளாமாக்ஸ் சீனெல்லாம் கொடுத்து, இப்பேற்பட்ட நட்பால் நமக்கு இவர்களைத் தவிர ஊரில் இருக்கிற ஒரு பயபுள்ளைகளைத் தெரிந்திருக்காது. ஆனாலும் மனது மட்டும் நிறைந்திருக்கும். நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது எவனாவது வைத்த கொள்ளிக் கண்ணினால் இஞ்சி மொரப்பாவில் சுக்கு போட்ட தகறாரில் பட்டென்று ஒரு நாள் நட்பு தெறித்துவிடும். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் சில சமயம் பல வருடங்கள் பார்க்காமலே பேசாமலே இருப்போம். ஆனால் காலம் இருக்கே காலம் திடிரென்று பேஸ்புக் ட்விட்டர் என்று எங்கேயாவது கோர்த்துவிட்டு விடும். மௌன ராகம் சீன் மாதிரி நிறைய பேசாமல் , மனதுக்குள் மட்டுமே நிறைய நினைப்போம். அவர்களுக்குத் தெரியாமல் நோட்டம் விடுவோம். பழைய பரோட்டா கடை மேட்டரிலிருந்து எல்லா விஷயங்களும் மயிலிறகால் தடவி விட்ட மாதிரி மனதில் ஓடும். எனக்கும் சில பல மயில் ஸ்னேங்கள் இருக்கின்றன. தற்போது கூட "எப்படி இருக்க" என்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த நினைவுகள் இருக்கின்றதே - அது அவர்களுக்கே சொந்தமில்லாமல் என்னுடையதாய் எனக்கே எனக்காய் அப்படியே நெஞ்சில் பசுமையாய் இருக்கின்றது - திரும்ப பேசாமல் அப்படியே பத்திரமாய் !

அதனால் தான் எல்லாரும் சொல்கிறார்களே என்று நானும் சொல்கிறேன்.."ஹேப்பி பிரண்ட்ஷிப் டே!" துளி கூட விருப்பமில்லாமல்.

இப்படிக்கு
ரசிகன்