ஒரு கலவரம் எப்படி எல்லாம் ஆரம்பிக்கும் அல்லது ஒரு கலவரம் நடக்க என்ன எல்லாம் காரணிகள் தேவைன்னு யோசிச்சு பார்த்தா...
முக்கியமா ஜாதி அல்லது மதம் ரீதியான கலவரங்கள் தான் அதிகம். ஜாதி விட்டு ஜாதி அல்லது மதம் விட்டு மதம் காதல் / கல்யாணம் பண்றது அதனால வரும் பின் விளைவுகள் நிறைய தடவை கலவரங்களில் முடிந்திருக்கிறது. இது மட்டுமில்லாமல் ஒரு ஜாதிக்காரனை / மதத்தவரை இன்னொரு ஜாதி / மதம் சேர்ந்தவன் எதோ பேசிவிட்டான் என்று கலவரத்தில் முடிந்திருக்கிறது.
அடுத்ததாக வாய்க்கால், வரப்பு, நடந்து செல்லும் பாதை இன்ன பிற காரணங்களுக்காக கலவரங்கள் நடந்து பார்த்திருக்கிறோம். தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு, மாநிலத்துக்கு மாநிலம் கலவரம் ஏதோ சில பல காரணங்களால அடிக்கடி நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு வியப்பான விஷயம் என் அறிவுக்கு எட்டியவரை மாவட்டத்துக்கு மாவட்டம் பெரிய கலவரங்கள் நடந்ததாக தெரியவில்லை. சில நேரங்களில் தொழில் ரீதியான கலவரங்கள் கூட நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு மீனவ குப்பத்திற்கு இடையே நடக்கும் கலவரம்.
இப்படி ஒரு சிறு தீப்பொறி மள மளவென பற்றி எரிவதை போல கலவரங்கள் "இப்படிங்கிறதுக்குள்ள" ஜஸ்ட் லைக் தட் ஆக நிகழ்ந்து விடுகிறது.
சரி எப்படியோ போய் தொலையட்டும். ஆனால் நான் இங்கே சொல்ல வரது என்னன்னா மேலே சொல்லப்பட்ட காரணங்கள் ஏதுமில்லாமல் ஒரு கலவரம் நிகழ்வது சாத்தியமா? சாத்தியமே! எப்படி என்று பார்க்கலாம்.
அந்த இழவு வீடு நிசப்தமாக இருந்தது.
பிணத்தை தூக்கி கொண்டு போய் ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் பார்த்தாச்சு. பெண்கள் ஒப்பாரி வைத்து சோர்வாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டும் ஆளுக்கொரு பக்கமாக வீட்டிற்குள் முடங்கியிருந்தார்கள். வெளியே வந்த வேலை முடிந்தது என்று ஆண்கள் அவரவர் வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். சிலர் அவசரமில்லை என்று இன்னும் அந்த சாவை பத்தி பேசிக்கொண்டு அங்கிருந்த சிவப்பு கலர் பிளாஸ்டிக் நாற்காலிகளை தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
ரமேஷும் கணேஷும் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த காலியான நாற்காலிகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவ்வப்போது அந்த ஊரின் கவுன்சிலர் முஸ்தபா கவுன்சிலர் என்கிற தோரணையில் சின்ன சின்ன கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார்.
வேலையினூடே ரமேஷ் கணேஷை பார்த்து அந்த கேள்வியை கேட்டான்..
"ஏண்டா... நேத்தைக்கு தோட்டத்திலிருந்த பலா மரத்தில் பலாக்காயை நீ வெட்டிக்கிட்டு போயிட்டியோ?"
கணேஷ் கொஞ்சம் கடுகடுப்பாக "ஆமா ..அதுக்கு என்ன இப்போ?"
"என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு வெட்டிருக்கலாமே?"
உன்கிட்ட எதுக்கு சொல்லணும்? என்னோட மச்சானோட தோட்டம். அதுல எனக்கு உரிமை இல்லையா?
ரமேஷுக்கு லேசாக கோபம் தலைக்கேறியது.
"என்கிட்டே ஒருவார்த்தை சொல்லிருக்கலாமேன்னு தானே கேட்டேன். அதுக்கு ஏன் இப்போ இப்பிடி வாள் வாள்னு கத்துறே?" "உனக்கு மச்சான்னா எனக்கு அவன் அண்ணன். உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணதால நீ கூட வந்து ஓட்டிகிட்டே. அதுக்காக என் அண்ணன் என்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு போன தோட்டத்துல உனக்கு பெரிய உரிமை மயிரு எல்லாம் கிடையாது."
"என்ன ரமேஷ் மயிரு கியிரு னு வார்த்தை நீளுது" - கணேஷ் உஷ்ணமானான், கையை நீட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக ரமேஷை நோக்கி போனான்.
"என்ன பண்ணுவே ...புடுங்கிருவியோ?" ரமேஷும் தன் பங்குக்கு கையை நீட்டிக்கொண்டு நாக்கை துருத்திக்கொண்டு கணேஷை நோக்கி போனான்.
இதை எல்லாம் ஓரமாக கவனித்துக்கொண்டிருந்த முஸ்தபா நிலைமை சண்டை நிலைக்கு வந்தததும், அவர்களுக்கு இடையில் பாய்ந்தார்.
"அட விடுங்கப்பா மச்சானும் மச்சினனும் எழவு வீட்டுல வந்து சண்டை போட்டுக்கிட்டு" - கவுன்சிலர் நடுவில் புகுந்து இரண்டு பேரையும் விலக்கி விட்டார்.
விலகினாலும் இரண்டு பேரின் கண்களிலும் வன்மம் தெறித்தது. இதை இப்படியே விட்டால் சரி ஆகாது என்று எண்ணிய முஸ்தபா இரண்டு பேரையும் பக்கத்தில் கூப்பிட்டு..
இங்க பாருங்கடே, பேசாம ராஜேஷுக்கு போன் போட்டு கேட்டுருவோம். தோட்டத்தை பார்த்துகிற உரிமை யாருக்கு இருக்குனு. அவன் சொல்றவங்க தோட்டத்தை பார்த்துக்கணும். மத்தவங்க அமைதியா போயிரணும் சரியா?
இரண்டு பெரும் அரை மனதுடன் தலையாட்டினார்கள்.
முஸ்தபா கர்ம சிரத்தையுடன் ரமேஷிடம் இருந்து அவன் அண்ணன் ராஜேஷின் நம்பர் வாங்கி மொபைலில் டயல் செய்தான். மறுமுனையில் ரிங் போனது..
அமெரிக்கா (நள்ளிரவு)
போனின் சிணுங்கல் சத்தம் கேட்டு ராஜேஷ் கண்களை கசக்கிகொண்டே தன் மார்பில் கட்டி பிடித்திருந்த தன்னுடைய தர்ம பத்தினியின் கைகளை விடுவித்து கொண்டு போனை தடவி எடுத்தான். கண்களை நன்றாக குவித்து போனை பார்த்தான்..
"ஹ்ம்ம்....ஊர்ல இருந்து. இந்த டயம் போன். யாரா இருக்கும்?" முணுமுணுத்துக்கொண்டே இணைப்பை கொடுத்தான்.
ராஜேஷின் மனைவிக்கும் தூக்கம் கலைந்து ஒருவித குழப்பமாக அவன் பேசுவதை கேட்க்க ஆரம்பித்தாள்.
"ஹலோ ..யார் பேசுறது ?"
"ராஜேஷ் தானே இது?"
"ஆமா ...நீங்க?"
"ராஜேஷ் நான் தான் நம்ம ஊரு கவுன்சிலர் முஸ்தபா பேசுறேன்"
"ஓ...கவுன்சிலரா? என்ன இந்த நேரத்துல போன்?"
"ஒண்ணுமில்ல இங்க ஒரு சின்ன பிரச்சனை, நீ போன தடவை ஊருக்கு வந்திருத்தப்போ ஒரு தோட்டம் வாங்குனியே, அதை யாரு பார்த்துகிறதுனு உன் தம்பிக்கும் உன் மச்சானுக்கும் வாக்குவாதம். அதை யார் கிட்ட பார்த்துக்க சொன்னே? ஸ்பீக்கர் ல போடறேன். நீயே உன் முடிவை சொல்லிரு. பிரச்சனை முடியும்." சொல்லிக்கொண்டே ஸ்பீக்கரை ஆன் செய்தார்.
"அது வந்து..ஹ்ம்ம் ..நான் ரமேஷை தானே பார்த்துக்க சொல்லிருந்தேன்"
"ஓகே ராஜேஷ் இது போதும், நான் லைன் கட் பண்றேன்" சொல்லிக்கொண்டு லைனை கட் செய்தார்.
"இங்க பாருங்கப்பா ராஜேஷே சொல்லிட்டான். அவன் தம்பி ரமேஷை தான் அந்த தோட்டத்தை பார்த்துக்க சொல்லிருக்கான்னு. அதனால கணேஷ் நீ இனி அந்த தோட்டத்துல எது பண்றதா இருந்தாலும் மொதல்ல ரமேஷ்கிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ. அவ்ளோதான் நான் சொல்லுவேன்?. என்று முடித்துக்கொண்டார்
கணேஷிற்கு இதை கேட்டதும் கடுப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவனால் எதுவுமே செய்ய முடியாத நிலை. அதே நேரம் ரமேஷ் அவனை ஓரக்கண்ணால் பார்த்து நையாண்டியாக சிரித்துக்கொண்டிருந்தான். அது கணேஷிற்கு இன்னும் எரிச்சலை மூட்டியது.
அமெரிக்கா (அதே நள்ளிரவு)
என்னங்க போன்ல யாருங்க, எதோ ரமேஷ் னு எல்லாம் பேச்சு அடிபட்டது? என்ன விஷயம்.
ராஜேஷ் விவரத்தை சொன்னான். அதை கேட்ட மறு நிமிடமே ராஜேஷின் தர்ம பத்தினி உக்கிர தாண்டவம் ஆட தொடங்கினாள்.
"போயும் போயும் உங்க தம்பி கிட்ட பொறுப்பை குடுத்திருக்கீங்க? உங்களுக்கு சுயபுத்தி கொஞ்சமாவது இருக்கா?"
"என்னடி நீ ..அவன் வேலை வெட்டி இல்லாம இருக்கானே, சரி அந்த தோட்டத்துல வர வருமானத்தை வச்சி ஏதும் செய்யட்டுமேனு தான் அவனை பார்த்துக்க சொன்னேன். அதுல என்ன தப்பு?"
ஹ்ம்ம் போன தடவை ஊருக்கு போனப்போ தான் உங்க அருமை தம்பியோட லட்சணத்தை கேள்வி பட்டோமே. குடிச்சிட்டு ஊர சுத்திகிட்டு நடக்கிறான். அவன்கிட்ட பொய் இந்த பொறுப்பை குடுத்திருக்கீங்க. ஏன் என்னோட தம்பிக்கு என்ன கொறைச்சலாம்? அவன் பார்த்துக்க மாட்டானோ?
சரி சரி...ஏண்டி இப்பிடி கத்துறே? ச்சே ..சனியன் ராத்திரி நிம்மதியா தூங்க கூட விடமாடீங்க போல.
"ஆமாங்க ஆமா நான் சனியன் தான். என்ன கல்யாணம் பண்ண பிறகு தானே நீங்க அமெரிக்கா வந்தீங்க ஊர்ல தோட்டம் வாங்குனீங்க. அப்போ நான் உங்களுக்கு சனியனா தெரியலியோ?"
ராஜேஷ் மனைவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கியது.
"சரி சரி கத்தாதே" என்று சொல்லிக்கொண்டே ராஜேஷ் போனை எடுத்து கவுசிலர் நம்பரை தொடர்பு கொண்டான்.
கவுன்சிலர் கொஞ்சம் சத்தமாக "என்ன ராஜேஷ் எனக்கு கால் பன்றான்?" என்று சந்தேகத்துடன் சொல்லிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தார்.
அதை கேட்டதும் ரமேஷும் கணேஷும் மறுபடியும் ஆர்வமாகி கவுன்சிலர் பக்கத்தில் வந்து நின்றார்கள்.
"என்ன ரமேஷ்" - கவுன்சிலர் சந்தேகத்துடன் கேட்டார்.
"ஒண்ணுமில்ல கவுன்சிலர்....வீட்டில வொய்ப் அந்த தோட்டத்தை பார்த்துகிறதை கணேஷிடம் கொடுக்கணும்னு பிரியப்படறா. எனக்கும் என்னமோ அவ சொன்ன பிறகு கணேஷ் கிட்ட கொடுக்கிறது தான் சரின்னு படுது. நீங்க கணேஷ்கிட்டையே தோட்டத்தை பார்த்துக்க சொல்லுங்க" சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.
கவுன்சிலர் மோவாயை தடவிக்கொண்டே விவரத்தை இருவரிடமும் சொன்னார். காட்சிகள் அப்படியே மாறியது. ரமேஷ் எரிச்சலடைய, கணேஷ் இப்போது அவனை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டிருந்தான்.
அமெரிக்கா (அதே நள்ளிரவு)
போனை வைத்துவிட்டு, ராஜேஷ் மனைவியை பார்த்தான். "என்னடி இப்ப உனக்கு சந்தோஷம்தானே? உன் தம்பிகிட்டையே தோட்டத்தை பார்த்துக்கிற பொறுப்பை கொடுத்துட்டேன்"
ம்ம் ...கிழிச்சீங்க. நல்லது பன்றேன்னு வசமா என்னை மாட்டிவிட்டுட்டு நீங்க நல்ல புள்ளை பெயர் எடுத்துக்கிட்டிங்க.
நான் சொல்லித்தான் நீங்க இந்த முடிவு எடுத்தீங்க என்கிற நியூஸ் இப்போ உங்க அப்பா அம்மா வீட்டுக்கு போகும். அவங்க அங்க உட்காந்துகிட்டு என்னையும் என் குடும்பத்தாரையும் நல்லா கிழி கிழின்னு கிழிக்க போறாங்க. உங்களுக்கென்ன நீங்க நல்ல புள்ளை. நான் கெட்டவ. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே?
ராஜேஷின் மனைவி அமெரிக்க மாரியாத்தா ஆட்டம் ஆடினாள்.
"ஐயோ ...ராத்திரி நேரத்துல சாவடிக்காதடி"
ராஜேஷ் தலையை பிய்த்துக்கொண்டு மறுபடியும் போனை எடுத்து முஸ்தபாவிற்கு இணைப்பை கொடுத்தான்.
முஸ்தபா அப்போது தான் ஒரு டீ குடிக்கலாம் என்று டீயை வாயில் வைத்து ஒருவாட்டி உறிஞ்சியிருப்பார். போன் சிணுங்கியது.
யாரா இருக்கும் என்று சந்தேகத்துடன் போனை எடுத்து பார்த்தார்.
ராஜேஷ்!!! மறுபடியும்
இணைப்பை கொடுத்து காதில் வைத்தார். "என்ன ராஜேஷ்.."
"இந்த வீட்டில நான் தான் புருஷன்..நான் தான் முடிவெடுப்பேன். யாரும் என்னக்கு சொல்லித்தரவேண்டிய தேவை இல்லை. நானே சுயமா எடுத்த முடிவு. கவுன்சிலர் நான் நேரமே சொன்னது போல என்னோட தோட்டத்தை என் தம்பி ரமேஷ் பார்த்துக்குவான்." சீறிய சிங்கம் போல் மளமளவென சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் ராஜேஷ்.
முஸ்தபாவிற்கு தலை கிறுகிறு என்று வந்தது. அதை விட ராஜேஷின் மேல் ஆத்திரமாக வந்தது. "ராஜேஷ்" என்று பெயர் அடிபடுவதை கேட்ட ரமேஷும் கணேஷும் ஆர்வமாக ஓடிவந்து..
கவுன்சிலர் கவுன்சிலர் ....இப்ப போன் பண்ணது ராஜேஷ் தானே? என்ன சொன்னாரு" என்று கோரஸாக கேட்டனர்.
ஏற்கனவே செம காண்டுல இருந்த கவுசிலர் "ஹ்ம்ம் ....ராஜேஷ் ஒரு அப்பனுக்கு பொறக்கலியாம் அத போன்ல சொல்லிட்டு கட் பண்ணிட்டாரு".
இதை கேட்ட ரமேஷ் ஆத்திரத்தில் "எங்க அண்ணனை பத்தி என்னய்யா சொன்னே" என்று கோபத்துடன் கவுன்சிலர் கன்னத்தில் "பளார்" என்று ஓன்று வைக்க, ஏண்டா ..என் மச்சானை பத்தியா தப்பா பேசுனே என்று "பளார்" என்று இன்னொரு கன்னத்தில் ஓன்று வைக்க கவுன்சிலர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
ஒரு கவுன்சிலர் அதுவும் நாலு பேருக்கு முன்னால அடிச்சிட்டாங்க என்ற ஆத்திரத்தில் கவுன்சிலர் சட்டென்று எழுந்து..
"டேய் ...என் மேல கை வச்சிடீங்கல்ல..இருங்கடா உங்களுக்கு நான் யார்னு காட்டுறேன்" என்று வெறியுடன் சொல்லிக்கொண்டே தன்னுடைய சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்க ஆரம்பித்தார்.
"கொம்மாள இன்னைக்கு இவங்கள ஒரு வழி பண்ணாம விட கூடாது" என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே சைக்கிளை ஆக்ரோஷமாக மிதித்தார். முஸ்தபா மனதின் புயல்வேக கோபத்திற்கு ஈடுகொடுத்து சைக்கிள் காற்றாக பறந்தது. ஒரு பள்ளிக்கூடத்தின் குறுகிய ரோட்டில் சைக்கிளை திருப்பும்போது...
எதிரே சைக்கிளில் வந்த ஒருவன் மீது மோதாமல் இருக்க பகீரத பிரயத்தனம் செய்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை சைக்கிளோடு முட்டித்தள்ளிவிட்டு சிட்டாக பறந்தார் முஸ்தபா அதே ஆத்திரத்தோடு. என்ன ஏது என்று நின்று கவனிக்க நேரமில்லை.
சைக்கிளோடு கீழே விழுந்த அவன் அப்போதுதான் தோட்டத்திலிருந்து நெல்லிக்காய்களை பறித்து கூடையில் தலையில் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்த கோபி மேலே சாய்ந்தான். கோபியும் அந்த சைக்கிள்காரனும் நிலைதடுமாறி பள்ளிக்கூட கருங்கல் சுவரில் பொய் முட்டி விழுந்தார்கள். கோபியின் தலையிலிருந்த கூடை மொத்தமாக சரிந்து நெல்லிக்காய்கள் ரோட்டில் சிதறின. கோபியின் கை மூட்டு சுவரில் உராய்ந்து எரிச்சல் எடுத்தது. டக்கென்று எழுந்தவன் சைக்கிளோடு வந்தவனை அடிக்க பாய்ந்தான்.
"டேய் ....கேன பு ...... கண்ணு என்ன பொடலீலையா வச்சிருக்கே? "
"அண்ணே ...நான் இல்லண்ணே அந்த ஆளுதான் கண்ணு தெரியாம வந்து என்னை இடிச்சு தள்ளிட்டான்" சைக்கிள்காரன் கெஞ்சும் பாவனையில் அவனிடம் இருந்து விலகப்பார்த்தான். ஆனாலும் கோபி விடுவதாகயில்லை. பாய்ந்து அவன் சட்டையை கொத்தாக பற்றிய நேரம்...
"ஜன கண மன அதிநாயக ஜெய ஹே ...
பாரத பாக்ய வி தா தா...."
பள்ளிக்கூடம் விடும் நேரம் தேசியகீதம் ஒலித்தது.
....ஜெய கே ஜெய கே
ஜெய கே...
ஜெய ஜெய..
ஜெய கே ...
"டேய் ....பரதேசி நாயே ...எங்க ஓடுறே...நில்லுடா ..."
மறுமுனையில் ரிங் போனது..
"ஹலோ..யார் இது" சுந்தர் பேசினான்
"நான்தான் சுந்தரண்ணே ..கோமதி பேசுறேன்"
அஹ் ...கோமதியா என்ன விஷயம் திடீர்னு:
"ஹலோ...பானு அங்க என்ன பிரச்சினை:
பானு ....என்ன விஷயம்னு சொல்லு"
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சைக்கிள்க்காரன் அட்டென்ஷன் பொசிசனில் நின்றான். தேசியகீதத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற விதிப்படியும் எதிரி அதற்க்கு மதிப்புக்கொடுத்து அட்டென்ஷன் பொசிசனில் நிற்பதாலும் கோபியும் அவன் சட்டையை விட்டுவிட்டு அட்டென்ஷன் பொசிஷனுக்கு வந்தான். ஆனாலும் தேசியகீதம் முடிந்ததும் அவனை நாலு அறை விடவேண்டும் என்கிற எண்ணத்திலேயே அவனை நோட்டம் விட்டுக்கொண்டே நின்றான்.
சைக்கிள்காரனோ தேசியகீதம் முடிந்ததும் கோபியிடமிருந்து எப்பிடியும் தப்பித்து ஓடிவிடவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே தேசியகீதம் முடியும் தருணத்திற்கு காத்து நின்றான்.
....ஜெய கே ஜெய கே
ஜெய கே...
ஜெய ஜெய..
ஜெய கே ...
கண்ணை மூடித்திறப்பதற்குள் சைக்கிள்காரன் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினான்.
சத்தம் போட்டுக்கொண்டே கோபி அவனை பின்தொடர்ந்து விரட்டினான்.
அந்தநேரம் பள்ளிக்கூடம் முடிந்து "ஹோவென" இரைச்சலோடு வெளியே ஓடிவந்த பிள்ளைகள் ரோட்டில் நெல்லிக்காய் சிதறிக்கிடப்பதை பார்த்து ஆவலுடன் போட்டிபோட்டு அத்தனையும் ஒன்றுவிடாமல் பொறுக்கிக்கொண்டிருந்தார்கள்.
சைக்கிள்காரனை விரட்டிச்சென்ற கோபி அவனை பிடிக்க முடியாத விரக்தியில் கையை தடவிக்கொண்டே வந்து பார்த்தபோது கூடை மட்டும் ரோட்டில் கிடந்தது. கோபிக்கு தலைமுதல் கால்வரை ரத்தம் சூடாகியது. கோபமும், ஆத்திரமும் ஒன்றே சேர்ந்து வெறும் கூடையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு வந்து திண்ணையில் உட்காந்தவன்...
"எடியே ...பானு ....ஒரு சொம்பு தண்ணி குடுடி" என்று தன்னுடைய அருமை மனைவிக்கு கட்டளையிட்டான். சிறிதுநேரம் பொறுத்திருந்துவிட்டு மீண்டும் கோபமாக
"என்னடி காது கேட்கலியா...தண்ணி எங்கடி" என்று உறுமினான். மனதிற்குள் கோபத்தீ அணையாமல் பற்றிக்கொண்டே இருந்தது.
கொஞ்சம் நேரம்கூட பொறுத்திருந்தவன் ஆவேசமாக வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே அவனுடைய மனைவி பானு பக்கத்து வீட்டம்மையார்களுடன் டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தாள். சீரியல் பார்ப்பதில் இருந்த ஆர்வத்தில் கோபி அழைத்ததையோ தண்ணீர் கேட்டதையோ அவள் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. அந்தக்கட்சியை பார்த்ததும் கோபியின் கோபம் இருமடங்காக எகிறியது. கண்கள் ரத்த சிவப்பாகியது.
"சிறுக்கி முண்ட ...உன்னை கூப்பிட்டது கேட்கலியா?" என்று கத்திகொண்டே தலைக்கு மேலே கூரையில் சொருகி வைத்திருந்த அருவாளை கையிலெடுத்தான்.
கையில் அருவாளை வைத்துக்கொண்டே பக்கத்துக்கு வீட்டம்மையார்களை பார்த்து...கோபமாக "ஒழுங்கா ரெண்டுபேரும் வெளிய போயிருங்க, இல்ல இருக்கிற கோபத்துக்கு உங்களையும் வெட்டிருவேன்" என்று கத்திக்கொண்டே டிவி வயர் மற்றும் கேபிள் வயர் எல்லாவற்றையும் ஆவேசமாக புடுங்கி எறிந்துவிட்டு டிவியையும் காலால் ஒரு எத்து எத்தினான். அம்மா கொடுத்த இலவச டிவி கீழே விழுந்து உயிரைவிட்டது. பானு என்ன நடக்கிறது என்று புரியாமல் கையால் காதுகளை பொத்திக்கொண்டு நடுங்கி நின்றாள். நிலைமையை உணர்ந்த பக்கத்துக்கு வீட்டம்மாக்கள் இருவரும் சட்டென்று வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து என்ன நடக்கிறது என்று லேசாக எட்டிப்பார்த்தார்கள் திறந்திருந்த வாயில் வழியாக.
ஏண்டி சிறுக்கி முண்ட ...ஒரு மனுஷன் வெளிய உட்காந்து காட்டு கத்தல் கத்துறேன் உனக்கு டிவி சீரியல் கேட்க்குதோ ?" என்று கோபமாக கத்திகொண்டே பானுவின் தலைமுடியை இழுத்து அவள் முதுகில் பளார் பளார் என்று அறைந்தான்.
"ஐயோ ..அடிக்காதீங்க ..உங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு இன்னைக்கு" என்று அடியும் வாங்கிக்கொண்டு பானுவும் கத்தினாள். வீட்டில் மேஜை மேலிருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து போர்க்களம் போல ஆனது.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டம்மாவில் ஒருத்தி நிலமை விபரீதமாவதை உணர்ந்து இடுப்பில் வைத்திருந்த மொபைலை எடுத்து பானுவின் அண்ணன் சுந்தர் நம்பருக்கு டயல் செய்தாள்.
மறுமுனையில் ரிங் போனது..
"ஹலோ..யார் இது" சுந்தர் பேசினான்
"நான்தான் சுந்தரண்ணே ..கோமதி பேசுறேன்"
அஹ் ...கோமதியா என்ன விஷயம் திடீர்னு:
என்னன்னு தெரியல்லேண்ணே உங்க மச்சான் வெறிபுடிச்சவன் போல உங்க தங்கச்சிய போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான். சீக்கிரம் வாங்கண்ணே" பதட்டமாக சொல்லிவிட்டு லைனை கட் செய்தாள்.
சுந்தருக்கு என்னவென்று புரியவில்லை ஆனால் தங்கச்சி வீட்டில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது. உடனே சுந்தர் மொபைலில் பானுவின் நம்பருக்கு டயல் செய்தான். ரிங் போனது ஆனால் போன் எடுக்கவில்லை. "தங்கச்சி வீடு இங்கிருந்து ஐந்து மைல் தொலைவிலிருக்கிறது, முதலில் என்னவென்று தெரிந்துகொள்வோம்" என்று நினைத்தவாறே மீண்டும் மீண்டும் பானுவின் நம்பருக்கு டயல் செய்தான். கடைசியில் பானு போனை எடுத்தாள்.
"ஹலோ...பானு அங்க என்ன பிரச்சினை:
"அண்ணா" என்று பானுவின் சத்தமும் அதை தொடர்ந்து மச்சானின் வசவு வார்த்தைகளும், "இடையிடையே "ஐயோ அடிக்காதீங்க" என்ற பானுவின் சத்தமும் ஏதேதோ பாத்திரங்கள் உருளும் சத்தமும் கேட்டது.
பானு ....என்ன விஷயம்னு சொல்லு"
"உங்களுடைய அக்கவுண்டில் போதிய பணம் இல்லாததால் இந்த இணைப்பு இத்துடன் துண்டிக்கப்படுகிறது" - இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுந்தருக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது.
"சைக் ...இந்த எழவு சனியன் இப்பவா பணம் இல்லைனு கட் ஆகணும்' எரிச்சல் பட்டுக்கொண்டே அவசரமாக பக்கத்திலிருந்த கடையில் சென்று
"யோவ் குமாரு இந்தா இருபது ரூபா அர்ஜென்ட்டா என்னோட நம்பருக்கு டாப் அப் பண்ணு"
குமாரு "சரி சுந்தர்" என்று சொல்லிக்கொண்டு பணத்தை வாங்கவும், அங்கே ஏற்கனவே கடையில நின்றவன்
"யோவ் ...என்னை மொதல்ல கவனிச்சிட்டு அப்புறம் டாப் அப் பண்ணு"
"குமாரு நீ மொதல்ல டாப் அப் பண்ணு, அப்புறம் சாருக்கு என்ன தேவையோ குடு"
இங்க பாரு ...நான் தான் மொதல்ல வந்தேன். நான் கேட்டதை மொதல்ல குடுத்துட்டு அப்புறம் நீ அடுத்தவங்களை கவனிச்சா போதும்" குரலில் கடுமை தெரிந்தது.
சுந்தர் ஏற்கனவே இருந்த பதட்டத்தில்.. "நீ என்ன பெரிய மயிரா...போவியா அங்கிட்டு" என்று அவனை பார்த்து சீறினான்.
"என்னடா ங்கோத்தா..யாரை பார்த்து மயிருனு சொல்றே" குரலை உயர்த்திக்கொண்டு சுந்தரை பிடித்து தள்ளிவிவிட்டான். சுந்தர் ஒருகணம் நிலை தடுமாறி விழ போனவன் சுதாரித்துக்கொண்டு கோபமாக அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
இதை பார்த்துக்கொண்டு சிறிது தூரத்தில் ஆட்டோவில் நின்றிருந்த அவனுடைய கூட்டாளிகள் திபுதிபுவென ஓடிவந்து சுந்தரை சூழ்ந்துகொண்டது சரமாரியாக அடித்தனர். கடையின் முன்பக்கத்தில் சாக்கெலட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜாடிகள் அந்த களேபரத்தில் கீழே விழுந்து நொறுங்கின. இதை பார்த்துக்கொண்டிருந்த ஊர்க்காரர்கள் ஓடிவந்து சுந்தருக்கு ஆதரவாக ஆட்டோவில் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் ஊரார்களின் எண்ணிக்கை கூடவே ஆட்டோவில் வந்தவர்கள் தப்பித்தால் போதுமென்று கூட்டத்திலிருந்து விடுபட்டு கிழிந்த ஆடைகளுடன் ஆட்டோவில் ஏறி
தேவடியா நாய்களா ...எங்க மேலையே கை வச்சுடீங்கள்ல. இருங்கடா உங்களுக்கு நாங்க யாருனு காட்டுறோம் என்று சபதமிட்டுக்கொண்டே ஆட்டோவில் ஏறி பறந்தனர்.
பிறகு விசாரித்த பிறகுதான் தெரிந்தது, அவர்கள் பக்கத்து ஊர்க்காரங்க என்று..
போனவர்கள் சிறிது நேரம் சென்று மேலும் சில ஆட்டோக்களில் ஆட்களும், கைகளில் அரிவாளும் உருட்டுக்கட்டையுமாக வந்து சில நிமிடங்களில் சுந்தரின் ஊரை சேர்ந்த கண்ணில் பட்ட நாலைந்து பேரை சரமாரியாக வெட்டிவிட்டும், கடைகளை சூறையாடிவிட்டும் சென்றனர்.
அதற்க்கு பழிவாங்கும் படலமாக சுந்தரின் ஊரை சேர்ந்தவர்கள் ஒரு டெம்போ நிறைய ஆட்களுடன் சென்று அந்த ஊரில் வெறியாட்டம் ஆட..
சில மணி நேரங்களிலேயே ....இரண்டு ஊருக்கும் இடையே கட்டுக்கடங்காத கலவரம் வெடித்தது. போலீஸ் படை வந்தும் சமாளிக்க முடியாமல் கலவர தடுப்பு பிரிவு அதிகாரிகளும் களத்தில் இறங்கினர். சிறப்பு அதிரடி படைக்கும் உத்தரவு பறந்தது. எல்லா நியூஸ் சானல்களிலும் அந்த இரண்டு ஊரின் கலவர நியூஸ் பிரேக்கிங் நியூஸாகவும் பிளாஷ் நியூஸாகவும் ஓடியது.
நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு ஊருக்கும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இப்படியாக ஒரு கலவரம் அரங்கேறி காலாகாலத்துக்கும் இரண்டு ஊருக்கும் பகை ஆனது !!!
இப்படிக்கு
ரசிகன்