திங்கள், டிசம்பர் 15, 2014

லிங்கா (2014)





ஒரு தரமான மசாலா எப்படி இருக்கவேண்டும் என்று ரஜினியையே உதாரணமாக வைத்துக்கொண்டு யோசித்தால், சமீபகாலத்தில் படையப்பாவைச் சொல்லலாம். அதற்கு முன்னர் பாட்ஷாவும் முத்துவும். இன்னும் பின்னால் போய் யோசித்தால் அண்ணாமலை, மன்னன், தளபதி, மாப்பிள்ளை, குரு சிஷ்யன், வேலைக்காரன், மிஸ்டர் பாரத், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன், நல்லவனுக்கு நல்லவன், தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நெற்றிக்கண், முரட்டுக்காளை என்று ஒரு பட்டியல் போடமுடியும். முரட்டுக்காளைக்கு முன்னரும் ரஜினிக்குத் தில்லுமுல்லு போன்ற நல்ல மசாலாக்கள் இருக்கின்றன என்றாலும், எண்பதுகள் துவங்கியதிலிருந்தே பட்டியல் போடலாம். இவற்றைப்போல் ‘தரமான’ என்ற அடைமொழியைச் சேர்க்காமல், ’ரஜினி படம்’ என்று யோசித்தால் கோச்சடையான், சிவாஜி, சந்திரமுகி, அருணாச்சலம், வீரா, உழைப்பாளி, தர்மதுரை, பணக்காரன், ராஜாதி ராஜா, சிவா, கொடி பறக்குது, மனிதன், மாவீரன், விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், கை கொடுக்கும் கை, நான் மகான் அல்ல, தங்கமகன், தாய்வீடு, அடுத்த வாரிசு, பாயும் புலி, புதுக்கவிதை, ரங்கா, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, ராணுவவீரன், கழுகு, தீ ஆகியவைகளை அதே காலகட்டத்தில் சொல்லலாம். இந்த இரண்டு வகைகளிலும் இல்லாமல், மோசமான ரஜினி படம் என்றால் எந்திரன், குசேலன், பாபா, வள்ளி, எஜமான், பாண்டியன், நாட்டுக்கு ஒரு நல்லவன், அதிசய பிறவி, ராஜா சின்ன ரோஜா, ஊர்க்காவலன், கர்ஜனை என்று இன்னொரு பட்டியலும் போடலாம் (இவற்றில் ஸ்ரீராகவேந்திரர், நான் அடிமை இல்லை, அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், ரஜினி நடித்த ஹிந்திப்படங்கள் ஆகியவற்றைச் சேர்க்கவில்லை. அவை வேறு வகை என்பதால்).

இதுதான் ரஜினி படங்களைப் பற்றிய என் பட்டியல்கள். இவற்றில் லிங்கா, அவசியம் மோசமான ரஜினி படம் என்ற வகையிலேயே சேரும். என்ன காரணம் என்பது படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எளிதிலேயே தெரிந்திருக்கும். ரஜினியின் படங்களில் ரஜினி மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் மேலே இருக்கும் மோசமான ரஜினி படங்களின் பட்டியலில் தெரியும் விஷயம். அதுவேதான் லிங்காவிலும் நடந்திருக்கிறது. ரஜினியைக் குறுக்கும் நெடுக்கும் நடக்கவைத்து, முத்து, படையப்பா ஆகிய கே.எஸ். ரவிகுமார் படங்களில் வரும் ‘தியாகி’ ரஜினி எபிஸோட்களை அப்படியே எடுத்து இதிலும் வைத்து, புதிதாக எதையும் சேர்க்காமல் படம் பார்க்க வரும் ரசிகர்கள் இதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்து எடுக்கப்பட்ட படம்தான் லிங்கா. அதுதான் படத்தின் பிரச்னை. படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு ரஜினி படத்தில் இருந்து சோர்ந்த முகத்துடன் வெளியேறியதை நான் கடைசியாகப் பார்த்தது குசேலனிலும் பாபாவிலுமே. அது அப்படியே இங்கும் நடந்தேறியது.

முதலில், இப்போதைய தமிழ்ப்படங்கள் இந்த ரஜினி ஃபார்முலாவில் இருந்து விலகி வேறு இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இன்னும் கே.எஸ். ரவிகுமாரும் ரஜினியும் உணரவே ஆரம்பிக்கவில்லை என்பது லிங்காவின் பல காட்சிகளில் தெரிகிறது. முத்து மற்றும் படையப்பாவில் இதன் காட்சிகளை ஏற்கெனவே பார்த்தாயிற்றே? மறுபடியும் ஏன் இப்போது அவற்றையே பார்க்கவேண்டும்? ரஜினியின் முகம் திரையில் தெரிந்ததுமே ‘தலைவா!!’ என்று அலறும் ரசிகன் கூட உள்ளூற இதை உணர்ந்திருப்பான். ஆனால் வெளியே, ‘லிங்கா செம்ம படம்’ என்று சொல்லக்கூடிய தர்மசங்கடமான நிர்ப்பந்தத்தை அவனுக்கு ரவிகுமாரும் ரஜினியும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, ரஜினியின் ஓப்பனிங் பாடல் மட்டுமே படத்தின் ஆரம்ப நிமிடங்களைக் காப்பாற்றிவிடும் என்று ரவிகுமார் நினைத்தது இப்போதைய தமிழ்ப்படங்களைப் பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது என்பதை நிரூபிக்கிறது. படையப்பாவின் ஓப்பனிங் எப்படி இருந்தது? அந்த ஓப்பனிங் இப்போது லிங்காவில் வந்தால்கூட இப்போதைய படங்களின் வேகத்துக்குப் போதவே போதாது. இது அந்தக் காலகட்டம் அல்ல. ரஜினியாக இருந்தாலும் அமிதாப்பாக இருந்தாலும்- ஏன் – எம்.ஜி.ஆராகவே இருந்தாலும்கூட, படத்தின் துவக்கத்திலேயே கதை துவங்கிவிடும் காலம் இது. இப்போதெல்லாம் ஓப்பனிங் சாங், அதன்பின்னர் கதாநாயகன் நான்கு காமெடியன்களுடன் சுற்றுவது, கதாநாயகி நாயகன் பின்னால் சுற்றுவது போன்ற காட்சிகள் காலாவதி ஆகிவிட்டன. கடைசியாக இப்படிப்பட்ட காட்சிகளை ‘பாபா’வில்தான் பார்த்தேன். அந்தக் காலகட்டத்திலும் அவை காலாவதி ஆன காட்சிகளே. எண்பதுகளில் வெளிவந்த படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கலாம். இத்துடன் சேர்ந்து, நகைக்கடையில் ரஜினி & கோ அரங்கேற்றும் கொள்ளை எப்படி இருக்கிறது? துளிக்கூட சுவாரஸ்யமே இல்லாத இப்படிப்பட்ட காட்சிகளை எப்படி ரஜினிக்கு வைக்க ரவிகுமாரால் முடிந்தது? மனசாட்சியே இல்லாமல் யோசித்தால் மட்டுமே இந்தக் காட்சிகளை 2014ன் இறுதியில் ஒரு தமிழ்ப்படத்தில் வைக்கமுடியும். ’கதை விவாதம்’ என்று தோராயமாக பத்து பேர் அடங்கிய பட்டியல் (ரமேஷ் கன்னா உட்பட) படம் முடிந்ததும் ஓடுகிறது. பத்து பேர் அடங்கிய இந்தக் குழுவால் இவ்வளவுதான் கதையை உருவாக்க முடிந்ததா?

இதன்பின்னர் நாயகியின் ஊருக்கு ரஜினி செல்வது, அங்கே ஃப்ளாஷ்பேக் துவங்குவது, படத்தின் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்கும் ஃப்ளாஷ்பேக் போன்றவையெல்லாம் ‘கத்தி’ படத்திலேயே பார்த்தாகிவிட்டது. உண்மையைச் சொன்னால், எனக்குக் கத்தி பிடித்திருந்தது. அதன் முதல் 40 நிமிடங்கள் திரையரங்கில் அமரவே முடியாமல் லிங்காவைப்போல்தான் இருந்தன. ஆனால் உணர்ச்சிகரமான ஃப்ளாஷ்பேக், அது முடிந்ததும் வரும் வேகமான காட்சிகள் ஆகியவையால் கத்தி அலுக்காமல் சென்றது. லிங்காவில் ஃப்ளாஷ்பேக்கில் இருந்து ரஜினி நம்பவே முடியாமல் மலையில் இருந்து பலூனில் பாயும் க்ளைமேக்ஸ் வரை படத்தில் ஒன்றவே முடியாமல் எத்தனை மெதுவாகச் சென்றது என்பதும் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். மூன்று மணி நேரம் ஓடும் லிங்காவில் நல்ல காட்சிகள் என்று எதுவுமே இல்லை. ரஜினிக்காகப் பார்க்கலாம் என்று தோன்றியது ஃப்ளாஷ்பேக்கிலும் ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே. ஃப்ளாஷ்பேக் முடிந்ததுமே வரும் அத்தனையும் மிக மோசமான காட்சிகள். மலையில் இருந்து பலூனில் குதிப்பதெல்லாம் இக்காலத்தில் யார் செய்தாலும் சிரிப்புதான் வரும். மிக விரைவில் இந்தக் காட்சி இணையத்தில் நகைச்சுவை செய்யப்பட பல வாய்ப்புகள் உண்டு. ரஜினியைப் பற்றிய துணுக்குகளுக்கெல்லாம் இந்த வீடியோதான் சிகரம் வைத்ததைப் போல் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட பாலகிருஷ்ணா ரயிலை ஒரே ஒரு விரலசைப்பால் திருப்பி அனுப்புவதைப் போன்ற காட்சி இது. குருவியில் விஜய் குதித்ததுகூட இதன் பக்கத்தில் வரமுடியாது.

ரஜினியின் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, ரஜினி வந்தால் மட்டும் போதும் என்ற கருத்தில் எடுக்கப்படிருக்கும் லிங்காதான் இதுவரை ரஜினியின் திரை வாழ்க்கையிலேயே இப்படி மூன்று மணி நேரத்தில் பெருமளவு அலுப்பாகவே நகர்ந்த படம். இதற்குச் சரியான இணை என்றால் நாட்டுக்கு ஒரு நல்லவன் படம்தான். அந்தப் படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு மூன்றிலும் படுதோல்வி அடைந்த ரஜினி படம். ஒரு நிமிடம் கூட உங்களால் அப்படத்தைப் பார்க்கமுடியாது. இத்தனைக்கும் ரஜினி பீக்கில் இருந்தபோது வந்த படம் அது.

லிங்காவின் பிற பாத்திரங்கள், நடிப்பு, இசை ஆகிய அனைத்துமே மிகவும் அலுப்பையே கொடுத்தன. ரஹ்மானின் மிக மோசமான படம் இது. கூடவே விஜயகுமார், ராதாரவி, ஆர். சுந்தர்ராஜன் போன்ற ரஜினியின் சம வயதுடையவர்கள் ரஜினியைச் சூழ்ந்துகொண்டு எதுவோ முதியோர் பள்ளிக்கூடம் போன்ற உணர்வையும் அளித்தனர். விஜயகுமாருக்கு சரியான விக் வேறு கொடுக்கப்படவில்லை.

லிங்காவின் அடுத்த பிரச்னை – அடிக்கடி படத்தில் வரும் அரசியல் வசனங்கள். இனியும் மக்களை இப்படிப்பட்ட வசனங்களால் ஏமாற்ற முடியாது என்றே தோன்றியது. இன்னும் எத்தனைகாலம்தான் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிப் பிற கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள்? இவற்றையெல்லாம் ரஜினி தொடர்ந்து அனுமதிப்பதன்மூலம், அவருக்குமே இந்த வசனங்களில் ஆசை உண்டு என்றே முடிவுசெய்யவேண்டியிருக்கிறது. அதிலும் அனுஷ்கா பேசும் ‘உன் கை, காலு, தலை, இதயம், லிவர், கிட்னி, காது, மூக்கு பூரா மூளைய்யா..நீ எங்கயோ…பார்லிமெண்ட் வரை போகப்போற பாரேன்’ வசனம் கேட்டதும் எரிச்சலே மேலிட்டது.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், படம் பார்க்க வந்தது பெரும்பாலும் முப்பது வயதைத் தாண்டியவர்கள். பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் ரசிகர்களாக இருந்து, இப்போதும் ஒரு நல்ல ரஜினி படம் வராதா என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள். ரஜினிக்கு அப்போதைய fan base இன்னும் அப்படியே இருக்கிறது. அவர்கள் இடைவேளையிலும் படம் முடிவிலும் மனம் வெறுத்துப் பேசியதை என்னால் கேட்க முடிந்தது. அவர்களின் பார்வையில் இன்னும் ரஜினியால் ஒரு பாட்ஷாவையோ படையப்பாவையோ முத்துவையோ கொடுக்க முடியும். அவர்களின் இந்த நம்பிக்கை – அவர்களின் ஆதர்சமான ரஜினி என்ற ஹீரோவின் திரைவாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டும் இன்னும் நம்பிக்கையாகவே அவர்கள் பேசியதுதான் ஆச்சரியம். வேறு எந்த ஹீரோவுக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கையுடைய ரசிகர்கள் தமிழில் இல்லை.

என் கருத்தில், இனிமேல் இப்படி ஒரு படம் ரஜினியை வைத்து வந்தால், ரஜினி இதுவரை சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் உடைந்து சிதறுவதை அவர் காண நேரிடலாம். இப்படத்தின் மூலமே அவர்களில் பலர் மனம் வெறுத்துவிட்டனர். ரஜினியின் திரைவாழ்க்கைக்குக் கே.எஸ். ரவிகுமார் செய்த மிகப்பெரிய இன்சல்ட் லிங்காதான். இப்படிப்பட்ட கதையைக் கேட்டு சம்மதிக்க எப்படி ரஜினியால் முடிந்தது என்பதும் ஆச்சரியம். எத்தனைதான் மேக்கப் செய்தாலும் ரஜினியின் முதுமை மிகவும் வெளிப்படையாக இப்படத்தில் தெரிகிறது. அவரால் நடனம் ஆட முடியவில்லை. வேகமான ரஜினி மூவ்மெண்ட்கள் எதுவும் பழையபடி இல்லை. அப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியில்லைதானே? அறுபத்தைந்து வயது நிரம்பிய ரஜினியால் எப்படி இருபது வருடங்கள் முன்னர் அவர் செய்ததையெல்லாம் திரும்பி அதே வேகத்தில் செய்ய இயலும்?

ரஜினி இனி திரைப்படங்களில் நடிக்கையில், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தாலே அவசியம் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்குப் பிடிக்கும். அமிதாப் ஹிந்தியில் ரஜினியை விடவும் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். ரஜினியின் பல படங்கள், அமிதாப்பின் ரீமேக்குகளே. அப்படிப்பட்ட அமிதாப் தனது 65வது வயதில் என்ன செய்தார் என்று பார்த்தால், சீனி கம் படத்தில் அவரது திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படம் ஒன்றைக் கொடுத்தார். அதே சமயத்தில்தான் நிஷப்த் வெளியானது. சர்க்கார் வெளியானதும் அப்போதுதான். பண்ட்டி ஔர் பப்லி படத்தில் கலக்கலான போலீஸ்காரராக அமிதாப் நடித்தது அப்போதுதான். ப்ளாக் படத்தில் ராணி முகர்ஜியுடன் சேர்ந்து அட்டகாசமாக நடித்தது அச்சமயத்தில்தான். The Last Lear படம் அப்போதுதான் வந்தது. இந்தப் படம் அமிதாப்பின் சிறந்த படங்களில் ஒன்று என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். இத்தனை படங்களில் இத்தனை வித்தியாசமான பாத்திரங்களில் அமிதாப் நடித்தது அவரது அறுபதுகளில்தான். கடைசியாகத் தனது பழைய ஹீரோ கெட்டப்பில் அமிதாப் நடித்தது ’சூர்யவன்ஷம்’ படத்தில். வெளிவந்த ஆண்டு 1999. அது அவரது ஐம்பத்தேழாவது வயது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எண்பதுகளின் இந்திய சூப்பர்ஸ்டாரான அமிதாப்பின் கடைசி ஹிட் படம் 1990ல் வெளிவந்த அக்னீபத் தான். அதன்பின்னர் 1999 வரை அவருக்கு ஹிட்கள் இல்லை. 1990ல் இருந்து 1999 வரை அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எடுபடவே இல்லை. 1991ன் ஹம் படமும் 1998ன் படே மியா ச்சோட்டே மியா படமும் ஓரளவே ஓடின. உண்மையைப் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டே ‘மொஹப்பதேய்ன்’ படம் ஷா ருக் கானுடன் இணைந்து நடித்தார். மொஹப்பதேய்னில் இருந்து அமிதாப் திரும்பியே பார்க்கவில்லை. இப்போதும் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

இதுதான் படையப்பா முடிந்ததுமே ரஜினிக்கும் நடந்திருக்கவேண்டும். அப்படி மட்டும் நடந்திருந்தால் தமிழின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் இன்றைய தேதியில் மாறியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அப்படி நடக்காமல் போனதால் இன்று லிங்கா வெளிவந்து, ரஜினியின் திரைவாழ்க்கையின் அபத்தமான படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. இப்போதாவது ரஜினி உண்மையை உணர்ந்து, துணிச்சலாக ஒரு நல்ல திரைக்கதையைத் தேடியெடுத்துத் தனது வயதுக்கேற்ற பாத்திரங்களை வெளிப்படையாக நடித்தால் அவசியம் மக்கள் அவரை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. உலகம் முழுக்க உள்ள நடிகர்களில் எல்லாருக்குமே அதுதான் நடந்திருக்கிறது. ஒன்று – திரைவாழ்க்கையின் உச்சத்தில் தனது நடிப்பை நிறுத்திக்கொண்டனர். அல்லது அபத்தமான, வயதுக்கு மீறீய பாத்திரங்களில் நடித்துத் தங்களது மரியாதையைட் தாங்களே கெடுத்துக்கொண்டு, பின்னர் உண்மையைப் புரிந்து வயதுக்கு ஏற்ற பாத்திரங்களை நடித்தனர். ஜாக் நிகல்ஸனில் இருந்து க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஷான் கான்னரி இன்னொரு உதாரணம். மைக்கேல் டக்ளஸ், கெவின் காஸ்ட்னர், தமிழில் சிவாஜி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் என்.டி.ஆர் ஆகியோரும் உதாரணங்கள்.

இனி ரஜினிதான் முடிவுசெய்யவேண்டும். ரேஸில் பங்கேற்காமலேயே நம்பர் ஒன் என்ற அவரது இடம் இப்போது இல்லை. அந்த இடத்தில் (என்னதான் நடுநிலையாக யோசித்தாலும்) தமிழில் விஜய்தான் இருக்கிறார். விரைவில் நல்ல படங்கள் நடித்தால் தொடர்ந்து அவர் அங்கே இருக்கமுடியும் என்பது என் கணிப்பு. எனக்கு ஒரு நடிகராக விஜய்யைப் பிடிக்காது. ஆனால் காதல் மன்னன், அமர்க்களம் போன்ற படங்களை ஒருகாலத்தில் நடித்துவிட்டு இப்போதெல்லாம் அபத்தமான படங்களையே தொடர்ந்து நடிக்கும் அஜீத்தின் மர்மமும் புரியவில்லை. ரஜினியின் போட்டியாளராக ஒரு காலத்தில் இருந்த கமல்ஹாஸன் கடந்த சில வருடங்களாக இப்போது ரஜினி செய்துவரும் அபத்தத்தைச் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடுத்தர வயது ஹீரோவாகத்தான் கமல் நடித்து வருகிறார். ஓரளவு வயதுக்கு ஏற்ற பாத்திரங்கள்தான் செய்கிறார். ரஜினி செய்வதைப்போல் கடைசியாகக் கமல் செய்தது (இளைஞராக நடித்து இளம் ஹீரோயின்களுடன் ஆடியது) தெனாலியில்தான். (2000ல் வந்தது). அதன்பின்னர் ஆளவந்தான், பம்மல் கே சம்மந்தம், பஞ்சதந்திரம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், மன்மதன் அம்பு, விஸ்வரூபம், இப்போதைய உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படம் வரை வித்தியாசமான கதையம்சம் மற்றும் நடிப்பால் தனது படங்களை டிபிகல் மசாலாவாக இல்லாமல் கொஞ்சமேனும் வேறுபாடுகளை உள்ளே வைத்து, அவரது வயதுக்கு ஒத்த நாயகிகளுடனேயேதான் நடிக்கிறார். கமல் இந்த விஷயத்தை எப்போதோ புரிந்துகொண்டுவிட்டார் என்றே தோன்றுகிறது (அஸினுடன் கமல் ஆடவில்லையா? ஆடவில்லை. கதாநாயகியாக அஸினை நடிக்கவைத்தாலும், ஜெயப்ரதாவுடன்தான் ஆடினார்).

எனவே, என் பள்ளி நாட்களில் நான் பார்த்து ரசித்த, தங்களது திரைவாழ்க்கையின் உச்சங்களை அச்சமயங்களில் அடைந்த ரஜினி & கமல் ஆகியவர்களில் ஒரு டிபிகல் தமிழ் சூப்பர்ஹீரோவாக ரஜினியின் திரைவாழ்க்கை அரைகுறையாக எடுக்கப்பட்ட லிங்காவுடன் முடிந்துவிட்டது என்பது என் கருத்து. இனி ரஜினி தனது இயல்பான வயதில் அந்த வயதுக்கேற்ற பாத்திரங்களைச் செய்தால் இன்னும் குறைந்த பட்சம் 15 வருடங்கள் தமிழில் சிறந்த நடிகராக வலம் வரமுடியும். மீறி மறுபடியும் லிங்கா போன்ற படங்களைக் கொடுத்தால், ஏற்கெனவே சிதற ஆரம்பித்துவிட்ட ரஜினியின் விசுவாசமான ரசிகர் கூட்டம் முற்றிலுமாக உடைந்து சிதறுவதை அவரே பார்க்க நேரிடும் என்று தோன்றுகிறது.

இப்படிக்கு 
ரசிகன்