ஞாயிறு, மார்ச் 30, 2014

Philips and the Monkey Pen (2014)




எத்தனை பேர் வீட்டுல  எட்டாவது படிக்கும் வரை ...சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கந்தன் கருனை, திருவருட்செல்வர், மாயாபஜார், வேதாள உலகம்.... போன்ற படங்களை  மட்டும் பார்க்க வைத்து உயிரை எடுத்து இருக்கின்றார்களா? எங்க ஆத்தா நான் உருப்பட வேண்டும் என்று இப்படித்தான் என்னை படுத்தி எடுத்தாள்..... நான் யாரோட துணையும் இல்லாமல் சுதந்திரமாக பார்த்த திரைப்படம்  ரஜினி நடித்த விடுதலைதான்...

 எங்க  வீட்டில் நான் ஒரே பையன் என்பதாலும் உருப்பட வேண்டும் என்பதாலும்  ஒழுக்கத்தோடு வளர வேண்டும் என்பதாலும் வெறும் சாமி படங்கள் மட்டுமே பார்க்க என் அம்மா  அனுமதி அளித்து இருந்தார்... ஆனால் மீசை முளைக்கு பருவத்தில்  அப்படியே ரிவர்சாகி பரங்கிமலை ஜோதி தியேட்டரில் சாமி படங்கள் (இது ஷகீலா நடிச்ச சாமி பட வகையறா) மட்டுமே அதிகம் பார்க்கும் அபாக்கியவான் ஆனேன்...

பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பு என்று ஒன்று நடக்கும் நீதிகதைகள் மற்றும்  நல்லொழுக்க கதைகள் அதிகம் இடம் பெறும்.. அது மட்டுமல்ல... அப்போது பிரசித்த பெற்ற பாலமித்திரா மற்றும் அம்புலி மாமா போன்ற புத்தக கதைகள்  நேர்மையாக இருப்பவன்தான் இந்த உலகத்தில் ஜெயிப்பான் என்று சொல்லி தந்தன... ஆனால் அப்படியான கதை சொல்லிகளும்  கூட்டுக்குடும்ப கிழவன் கிழவிகளையும் நாம் இழந்து  விட்டு.. தனி மரம் தோப்பாக மாறும் என்று கனவு காண்கின்றோம்....

பள்ளிகளில் படிக்கும்  போது பிள்ளைகளுக்கு நீதியும் நேர்மையும் ஒழுக்கமும் வளர வேண்டும் என்று  கடந்த தலைமுறை  பெற்றோர் படாத பாடு பட்டனர்.. ஆனால் இந்த தலைமுறையில் தத்தேரியாக போய் தொலை என்று ஸ்பிரே எல்லாம் அடிக்காமல் ...நண்பனாக நம் தோளில் கை போட்டு பேசுகின்றார்கள். அதைதான் இந்த பிலிப்ஸ் அன்டு த மங்கி பெண்   மலையாள திரைப்படம் விரிவாக பேசுகின்றது.

படம் இப்படி ஒரு டைட்டிலுடன் தொடங்குகிறது..

"JUST TRY TO PUT YOUR LEG INTO A CHILD'S SHOE"

படம் முழுக்க  கவித்துவமான காட்சிகள்... கொஞ்சம் லேக் இருந்தாலும்... கண்டிப்பாக இந்த படம் போற்றுதலுக்கு  உரிய படம்...

உங்கள் கால்கள் பள்ளி பருவத்தை நோக்கி பயணப்படும் இந்த படம் மூலமாக......இந்த படம் கண்டிப்பாக உங்கள் ஆரம்ப கால பள்ளி வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்.தங்க மீன்கள் தமிழில் வணிக படம் அல்லாமல் எடுக்கப்பட்ட நல்ல படம் ஆனால் மிகை நடிப்பு எனக்கு பிடிக்கவில்லை.ஒரு பாடலை தவிர...மற்றபடி படம் மிகைப்பு தன்மையான படம்.ஆனால் philips and the monkey pen படம் மிகை நடிப்பு இருக்கும் ஆனால் அது தெரியாத அளவுக்கு திரை கதையும் நாயகனின்நடிப்பும் அமைந்துள்ளது தான் இதன் தனி சிறப்பு.சின்ன வயதில் சொல்லி கொடுக்கும் நல்ல பழக்கங்களை எளிமையாக நாம் கற்க மாட்டோம் என்பது இந்த வயதில் தான் நமக்கு புரிகிறது.இந்த படத்தின் நாயகன் philips மற்றும் அந்த monkeypen நமக்கு சொல்லும் எளிமையான பாடம் நாம் வாழ்க்கைக்கான படம் தவறாமல் பாருங்கள் மிகவும் அருமையான படம்

சுட்டி சிறுவனாக  Sanoop Santhosh அசத்தி இருக்கின்றான். (ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்த Sanoosha வின் தம்பி) சான்சே இல்லாத  நடிப்பு... அவனுடைய தகப்பன் மற்றும் தாயாக ஜெயசூர்யா மற்றும் ரம்யா நம்பீசன்  நடித்து இருக்கின்றார்கள். மழை காலத்தில் ஒரு பள்ளியில் அத்து மீறி ஒரு சிறுவர் கூட்டம் நுழைகின்றது... ஏன் நுழைகின்றது எதற்கு நுழைகின்றது என்பதில் கதை சொல்ல தொடங்குகின்றது... இந்த படத்தை முதல்  காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பது கேமரா கோணங்கள்தான் அசத்தி இருக்கின்றார்கள்... அதே போல Sanoop Santhosh ன் வீட்டின் தேர்வு இருக்கின்றதே.. ரம்யம்... அப்படி ஒரு  லோக்கேஷன் வீட்டில் வாழ வேண்டும் என்று படம் பார்க்கும் போதே மனதில் ஆசை துளிர்த்து விடும்...சான்சே இல்ல அப்படி ஒரு லோக்கேஷன்.

இந்த திரைப்படத்தில் கடவுள் வருகின்றார்... சின்னதான் நெகிழ்ச்சியான பால்ய காதல் இருக்கின்றது... குறும்பு கொப்பளிக்க வைக்கும் சிறுவர்களின் நடவடிக்கைகள்... முக்கியமாக...  பேசினால் பேர் எழுத சொல்லி விட்டு ஆசிரியர் சென்று இருக்கு... முதலில் பிலிப்ஸ் பெயர் எழுத பரக் என்று சத்தமிட்டு வழி விட்டு விட்டதாக  முன்னாடி பையனை கொளுத்தி விட எல்லோரையும் பேச வைக்கும் அந்த நிகழ்வு அனைவரது பால்ய காலத்தையும் நினைவு படுத்தும்.

முக்கியமா  குருப் போட்டோ எடுக்கும் போது கடிதம் கொடுக்கும் காட்சியும் அதுக்கு பின்னனி இசையும்.. எடிட்டிங்கும் சான்சே இல்லை... முக்கியமா கடிதம் பெற்றதும் அந்த பெண்ணின் ரியாக்ஷன். அதே போல அவன் நட்பை ஏற்றுக்கொண்டு அந்த நாளை நினைவு படுத்த கேமர கிளிக் போல கையில் சைகை செய்யும் இடம் கவிதை..விளையாட்டாய் ஆசிரியர், மாணவர்கள் பிரச்சனையை கையாளுகின்றார்கள்... கொட்டடிக்கு மாடு  அடைத்து  செல்வது போல பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளை வெற்றிலை கவுலி போல அடுக்கி பள்ளிக்கு அழைத்து செல்லதீர்கள் என்று விழிப்புணர்வை இந்த திரைப்படம் ஏற்ப்படுத்து கின்றது..

Monkey Pen  பின்னே ஒரு பேன்டசி கதை.... அதில் கடவுள் வருகின்றார்.. செல்லுலாய்டில்  போர் அடிக்காமல் ஒழுக்கத்தை போதிக்கின்றது  இந்த படம்... ஆசிரியர்கள்  தங்கள் மாணவ செல்வங்களுக்கு இந்த படத்தை போட்டு காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எதற்கு எடுத்தாலும் பிள்ளைகளை அடிமைகள் போல நடத்தும் கணக்கு டீச்சர்...  அவர் மனம் மாறும் கனங்கள். தாத்தாவுடன்  பேரன்  வம்புக்கு இழுக்கும் காட்சிகள் என்று நெகிழ வைத்து இருப்பார்கள்.

கேமராமேன் Neil D'Cunha சிங்கிள் பிரேமாக இருந்தாலும் ரசித்து எடுதது இருக்கின்றார்... அதே போல பசங்களிட்ம் நன்றாக வேலை  வாங்கி இருக்கின்றார்.. இயக்குனர்  Rojin Thomas  மற்றும்  Shanil Muhammed.

முக்கியமாக பொக்கை பையன்.. கண்ணாடி பையன் போன்றவர்கள் நன்றாகவே  நடித்து இருக்கின்றார்கள்

 படத்தின்  கிளைமாக்ஸ் யூகிக்க  முடிந்தாலும் குழந்தையாக மாறும் போது அனைத்தையும் மறந்து விடுகின்றோம்...கண்டிப்பாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கவேண்டிய படம்.

கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி படத்தை ஒருவாட்டி பாருங்களேன். (மொழி தெரியாவிட்டாலும் பிரச்னை இல்லை)

Philips and the Monkey Pen (2014) - DVD Rip - X264 - 1CD - AAC 5.1 - ESub - Team TMR.mp4 | Firedrive

இப்படிக்கு 
ரசிகன் 

சனி, மார்ச் 29, 2014

பேய் வீடு





"டேய்...தம்பிகளா இன்னைக்கு நைட் "கோட்டவிளை" வீட்டுக்கு போகணும். யார் போறீங்க?"

சாகாயத்தின் ( சகாயராஜ்..சுருக்கமா சகாயம்) குரல் கேட்டதும் எல்லாரும் அவரையே பார்த்தோம்.

"என்னன்னே .. என்னாச்சு? இது சுரேஷ்.

ஒண்ணுமில்ல தம்பி,  இப்போ தான் அங்க புதுசா கேபிள் டி.வி ஆரம்பிச்சிருக்கோம். நாம தானே போய் ஒரு பத்து வீட்டுக்கு கனெக்சன் குடுத்துட்டு வந்தோம்.

"ஆமா" எல்லோரும் ஒன்றாக தலையாட்டினார்கள்.

"அங்க கொஞ்சம் எலக்ட்ரிசிட்டி  பவர் ப்ராப்ளம் இருக்கு. ஆறு மணியிலேர்ந்து நைட் பனிரண்டு மணிவரை லோடு இழுக்க மாட்டேங்குது. அதனால ரிசிவர் அடிக்கடி கட் ஆகுது. அங்க ஒரு ஸ்டெப் - அப் டிரான்ஸ்பார்மர் வச்சு ஒரு பையனையும் பார்த்துக்க சொல்லிருந்தேன். நைட் லோ வோல்டேஜ் ஆகிறப்போ டிரான்ஸ்பார்மர் ஒவ்வொரு பாய்ண்டா கூட்டி ரிசிவர் கட் ஆகாம பார்த்துக்கணும். அங்க எல்லாமே புது கனக்சன். கஸ்டமர்-க்கு திருப்தி இல்லைனா டிஸ்கனக்ட் பண்ணிடுவாங்க. அது டெவலப்பிங் ஏரியா. ஈஸியா  விட முடியாது. இந்த பையன் வேற ஊருக்கு போயிட்டான் ஒருநாளைக்கு மட்டும் உங்கள்ள யாராச்சும் நைட் "கோட்டவிளை" நம்ம வீட்டில போய் தங்கணும்" னு சொல்லி முடிகிறதுக்குள்ள..

"அம்மாடி..அது பேய் வீடுப்பா.. நான் மாட்டேன்னு" சுரேஷ் தீர்க்கமா சொல்லிட்டான்.

"ஆமா...பகல் நேரத்திலையே அங்க ஆள் அரவம் ஒன்னும் இருக்காது..இதுல நைட் வேற தங்கணுமா" அப்படின்னு ராஜா  கேள்வி கொட்டுகொண்டே முடியாதுன்னு தலை ஆடினான்.

 "நீ சொல்றது சரிதான் மச்சி...அந்த வீட்டுக்கு பின்னாடி வேற சுடுகாடு இருக்கு". நாளைக்கு  வீட்டில கொஞ்சம் வேலை இருக்குன்னு" மறைமுகமா முடியாதுன்னு ஸ்டாலின் சொல்லிட்டு அவனுக்கும் இந்த பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி முகத்தை திருப்பிக்கொண்டான்.

என்ன பண்ணலாம்னு சகாயம் யோசிக்க ஆரம்பித்தான்.

சகாயம் அந்த ஊர்ல கொஞ்சம் வசதியான ஆளு. நாங்க கொஞ்சம்பேரு  அவருகூட அண்ணே அண்ணே சொல்லிகிட்டே திரியுவோம். அவரும் தம்பிகளானு பாசமா இருப்பாரு. ஊர்ல எந்த பிசினெஸ் புதுசா வந்தாலும் சகாயம் மொத ஆளா அண்ணன் அந்த பிசினெஸ் ஸ்டார்ட் பண்ணுவாரு. நாங்களும் படிப்பெல்லாம் ஓரம்கட்டிட்டு அவருகூட ஒத்தாசை பண்ணிக்கிட்டு வீட்டில ஏச்சும் வாங்குவோம். பிசினெஸ் லாபமோ நஷ்டமோ சகாயம் களத்துல இருப்பாரு கூட நாங்க நாலஞ்சு அல்லக்கைகளும் இருப்போம். எங்களுக்கு என்னென்ன தேவையோ அதை சகாயம் வாங்கிகுடுக்கிரதால நாங்களும்  முகம் சுளிக்காம கூட வேலைசெய்வோம்.

அவருக்கு ஏற்கனவே நாங்க இருக்கிற இடத்துல ஒரு கேபிள் கனக்சன் கண்ட்ரோல் ரூம் இருக்கு. ஆனா  சகாயம் சொன்ன "கோட்டவிளை" அவரோட பூர்வீக வீடு இருக்கிற இடம். எங்க இடத்துல இருந்து எப்படியும் ஒரு ஐந்து கிலோமீட்டர் போகணும். அது வீடுன்னு சொல்றதவிட ஒரு பாழடைந்த "பேய் வீடு" மாதிரிதான் இருக்கும். அந்த வீடுதான் அண்ணனோட கேபிள் கண்ட்ரோல் ரூம் அந்த ஏரியாவிற்கு. சகாயத்தின் முப்பாட்டன் காலத்து வீடு. யாரும் புழங்காமலும் குடிபுகாமலும் இருந்ததால் அந்த வீடு பாழடைந்த வீடாகவே இருந்தது. இந்த கேபிள் வந்த பிறகுதான் அதன் ஒரு அறையை லேசாக சுத்தம்பண்ணி அதில் கேபிள் டி.வி உபகரங்கள் வைக்கப்பட்டது.ஒரு மனுஷன் அந்த  பக்கம் பகல் நேரத்தில் தனியா போக பயப்படுவான்.வீட்டுக்கு பின்பக்கம் நாலைந்து பனைமரங்கள், கூடவே ஒரு ஒற்றை புளியமரம். அதை தாண்டினால் வெட்டவெளி. அப்புறம் ஒரு சுடுகாடு அதன் பக்கதில் ஒரு சின்ன ஆறு. காற்று வேகமாக வீசும்போது ஊ ...ஊ என்று யாரோ ஊளையிடுவது போல சத்தம் வரும்.கூடவே காய்ந்த பனை ஓலைகளின் சல சல சத்தமும் சேர்ந்து அந்த பிரதேசமே ஒரு பேய்களின் கூடாரம் போல மனதில் கிலி ஏற்ப்படுத்தும். இப்போதுதான் அந்த ஏரியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புதிய சில வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தது. ஆனாலும் சகாயம் அண்ணனின் வீட்டை சுற்றி எந்த வீடுகளும் வராததால் மயான அமைதிதான். அதனால்தான் இரவு யாருமே அங்கு தங்க பயந்தார்கள்.

ப்பூ..இவளோதானா..."நான் நைட் பார்த்துக்கிறேன்னே".

எல்லாரும் ஜீவாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்...சகாயமும்!

"தம்பி நிஜமாதான் சொல்றியா. இன்னைக்கு நைட் மட்டும் அங்க தங்கி பார்த்துப்பியா?"

"அட என்னன்னே...பேயாவது, பிசாசாவது. நான் தான் சொல்றேன்ல நான் தங்கி பார்த்துக்கிறேன். நீ மட்டும் நைட்டுக்கு பிரியாணி வாங்கிகுடு."

"டேய் ஜீவா ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டு உசுர விடப்போறேன்கிற..மவனே தெரியுமில்ல அது பேய்வீடு!..இன்னைக்கு  சங்குதாண்டி."

"டேய் ஸ்டாலின் பிரியாணிக்காக இல்லைடா. அண்ணன் நமக்காக எம்புட்டு செஞ்சிருக்காங்க. பதிலுக்கு  இதுகூட செய்யலேன்னா எப்படிடா."

ஜீவா ஒரு தைரியத்துல சொல்லிட்டானே தவிர, அவன் மனதிற்குள்ளும் பேய் பயம் இருந்தது.

"அண்ணே இப்பவே மணி ஐந்து ஆகுது. நான் வீட்டில போய் தரையில விரிச்சு படுக்க எதாச்சும் எடுத்து வாரேன். உடனே கிளம்பலாம்னே."

தம்பி படுக்க பாய் தலகாணி எல்லாம் அங்கயே இருக்கு. நீ வண்டியில ஏறுடா.

போகிற வழியில் நூர்ஜகான் சிக்கன் கார்னரில் இருந்து மணக்க மணக்க சிக்கன் பிரியாணியும், பாட்டில் வாட்டரும் கொஞ்சம் நொறுக்கு தீனியும் வாங்கிகிட்டு பேய்வீடிற்கு வண்டியை விரட்டினார் சகாயம்.

சரியாக 6:13 க்கு கோட்டவிளையை போய் சேர்ந்தார்கள். அந்தி சாய்ந்து அந்த நாளை இரவு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்திருந்தது. இன்று என்னமோ தெரியவில்லை காற்றும் ஊளை சத்தத்துடன் வேகமாக வீசிகொண்டிருந்தது.

வண்டியை ஓரமாக நிப்பாட்டிவிட்டு சகாயமும் ஜீவாவும் பேய்வீட்டை நோக்கி நடந்தார்கள்.

"என்னனே லைட் ஒன்னும் காணோம் வீட்டில?"

"அந்த லூசு பையன் லைட் கூட போகாம போயிருக்கான் போல"

அந்தி சாயும் இருட்டில் ஒற்றை வீடு மட்டும் நிழல்போல பார்ப்பதற்கு பேய்வீடாக காட்சி அளித்தது. கொஞ்சம் தூரத்தில் தெரிந்த சில வீடுகளில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது. ஜீவாவின் இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது.

சகாயம் தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறந்தார். கிறீ....ச் ச் ...என்ற சத்ததுடன் கதவு திறந்து  கொண்டது. கைகளால் தடவி தடவி எப்படியோ சுவிட்ச் போட வீட்டின் முன்பக்கத்து அழுக்கடைந்த பல்பு கண்களை மெதுவாக சிமிட்டிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. அப்படியே சகாயம் கேபிள் டி.வி உபகரணங்கள் வைத்திருந்த சிறிய ஹால் போன்ற அறையின் விளக்கையும் போட்டார். ஜீவா சுத்தி கண்களை சுழலவிட்டான். இந்த வீட்டிலிருந்து என்னதான் சத்தம் போட்டாலும் பக்கத்துல உள்ள எந்த வீட்டுக்கும் கேட்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அப்போதுதான் அது கண்ணில்பட்டது. மந்திரிச்ச தகடு ஓன்று அந்த வீட்டின் நிலைப்படியின் மேலே ஆணியால் அடித்து வைக்கப்பட்டிருந்தது.

"அஹ்ஹா..அப்படின்னா பசங்க சொன்னது உண்மைதானோ? நிஜமாவே இங்க பேய் இருக்குமோ? நம்மதான் தெரியாம அண்ணனுக்கு வாக்கு கொடுதிட்டமோ? இனி அண்ணன்கிட்ட முடியாதுன்னும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் பசங்க ரொம்ப கிண்டல் பண்ணுவாங்களே"...ஜீவா மனதிற்குள் நினைத்துகொண்டு வலதுகாலை எடுத்து  வீட்டிற்க்குள் வைத்தான்.

படார் ...என்று ஒரு சத்தம்...!!!!!

ஜீவாவிற்கு ஒருகணம் இதயமே நின்றது போலாகிவிட்டது. பயத்துடன் சகாயம் அண்ணனை பார்த்தான். அவரும் குழப்பத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்து லைட் ஆன் செய்தார். அடுக்களையில் கதவுக்கு முட்டுக்கொடுத்து வைத்திருந்த பலகை ஓன்று கீழே விழுந்து கிடந்தது.

"ஹிஹி..ஒன்னுமில தம்பி. அடுக்களை கதவு சரியா பூட்டாது. அதுதான் இந்த பலகைய முட்டுக்கொடுத்து வைத்திருகோம்....  அடிக்கிற காத்துல அது கீழ விழுந்திருக்கு" சொல்லிக்கொண்டே கீழே விழுந்த பலகையை எடுத்து மீண்டும் கதவுக்கு முட்டுக்கொடுத்து வைத்தார்.

"பழைய  வீடு தம்பி, அது  தான் இப்படி பாழடைஞ்சு போய் கிடக்குது. சீக்கிரம் மராமத்து வேலை  எல்லாம் பார்க்கணும். இந்த கேபிள் டிவி மட்டும் கொஞ்சம் பிக்கப் ஆயிடிசின்னா வேலை தொடங்கணும்" என்று சொல்லிக்கொண்டே வீட்டை சுத்தி பார்த்துக்கொண்டிருந்தார். ஜீவாவும் இதய துடிப்பை கையில் பிடித்தபடி அவருடன் சேர்ந்து கண்களை சுழல விட்டுகொண்டிருந்தான். வீட்டில் எல்லா இடமும் ஒட்டடை பிடித்து அங்கங்கு செதில் அரித்தும் இருந்தது. வீட்டில் நிலைவாசல்களில் அங்கங்கு மந்திரிச்ச தகடும் அதனுடன் ஒரு சிறிய குப்பியும் தொங்கிக்கொண்டு இருந்தது. அடுக்களைக்கு பக்கத்தில் ஒரு சின்ன குளியல் அறை இருந்தது. அதற்குள் பழைய மரச்சாமான்களை போட்டு அடைத்து வைத்திருந்தார்கள். வெளிச்சமும் இல்லாததால் அதை உபயோகிக்க முடியாது என்று அனுமானித்தான். வீடு மரஜன்னல்களில் அங்கங்கு ஓட்டை உடைசல்களாக இருந்ததால் காற்று அது வழியாக ஊளை சத்தத்துடன் அடித்துக்கொண்டிருந்தது. அந்த சத்தமே ஜீவாவின் காதுகளுக்கு பேய்களின் மரண ஓலம் போல கேட்டுகொண்டிருண்டது. பேசிக்கொண்டே சகாயம் அண்ணன் அடுக்களையிலிருந்து கொல்லைப்பக்கம் பார்த்திருந்த ஜன்னல் ஒன்றை திறந்தார்.

வீட்டின் கொல்லைப்பக்கம் இப்போது ஒரு குத்துமதிப்பாக விளங்கியது. காற்று வேகமாக முகத்தில் அறைந்தது. ஒற்றை புளியமரம் கருகரு என தன் கிளைகளை விரித்து ஆடிகொண்டிருந்தது. ஜீவாவிற்கு எதோ சினிமாவில் பார்த்த புளியமரத்தில் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தபிணம் தான் ஞாபகத்துக்கு வந்தது. கூடவே பனை ஓலைகளின் சலசலப்புமாக அந்த பிராந்தியமே திகிலோடு இருந்தது. என்ன நினைத்தாரோ சகாயம் அண்ணன் சடாரென்று ஜன்னலை மூடிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தார்.

வீட்டின் கொல்லைப்பக்கம் இப்போது ஒரு குத்துமதிப்பாக விளங்கியது. காற்று வேகமாக முகத்தில் அறைந்தது. ஒற்றை புளியமரம் கருகரு என தன் கிளைகளை விரித்து ஆடிகொண்டிருந்தது. ஜீவாவிற்கு எதோ சினிமாவில் பார்த்த புளியமரத்தில் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தபிணம் தான் ஞாபகத்துக்கு வந்தது. கூடவே பனை ஓலைகளின் சலசலப்புமாக அந்த பிராந்தியமே திகிலோடு இருந்தது. என்ன நினைத்தாரோ சகாயம் அண்ணன் சடாரென்று ஜன்னலை மூடிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தார். ஹாலுக்கு வந்தவர் "தம்பி வோல்டேஜ் டௌன் ஆனா இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்"னு கொஞ்சம் விளக்கம் குடுத்தார். ஜீவாவும் எதோ அண்ணனுக்கு வாக்கு குடுத்திட்டோமே, பிரியாணி எல்லாம் வாங்கிக்குடுத்திருக்கிறாரே என்பதற்காக "நான் பார்த்துக்கிறேன்னே...நான் பார்த்துக்கிறேன்னே" என்று மண்டைய மண்டைய ஆடினான். ஆனாலும் மனசுக்குள் இந்த ஒரு இரவை எப்படி கழிக்கப்போகிறேன் என்ற கேள்வி மட்டும் திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது.

கொஞ்சம் நேரம் ஜீவாவிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு "சரி தம்பி நான் கிளம்புறேன், பார்த்துக்கோ" என்று கிளம்பினார். ஒருவேளை பவர் கட் ஆச்சுன்னா அங்க டார்ச் லைட் இருக்கு..யூஸ் பண்ணிக்கோ" என்று கடைசியாகவும் சொல்லிவிட்டு பைக் ஸ்டார்ட் பண்ண ஆரம்பித்தார்.

"அண்ணே..."

"என்ன தம்பி"

"பேசாம நீங்களும் இன்னைக்கு ஒரு நைட் என்கூட இங்கயே தங்கலாம் இல்ல?" ஜீவா தயங்கி தயங்கி கேட்டான்.

சகாயம் அண்ணன் அவனை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே "இல்ல தம்பி...வீட்டில புள்ளைக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல..நைட்ல வீட்டுக்காரி தனியா சமாளிச்சுக்க மாட்டா. நான் கண்டிப்பா போயே ஆகணும். ஒன்னும் பயப்படாதே..12 மணி வரை கொஞ்சம் பார்த்துகிட்டா போதும். இப்பவே மணி 8 ஆக போகுது இனி கொஞ்சம் நேரம்தானே.  அப்புறம் நீ படுத்து தூங்கு காலையில நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பைக்கை உதைத்து விருட்டென்று கிளம்பி போய்விட்டார். அவரின் பைக் கண்ணை விட்டு மறையும் வரை ஜீவா வாசலில் பார்த்துகொண்டு நின்றுகொண்டிருந்தான். அவர் மறைந்ததும் திரும்பி அந்த வீட்டை பார்த்தான்...தனிமை...தனிமை...மண்டைக்குள் சுர்ர்ர் என்று உரைத்தது அந்த தனிமை.

வீட்டிற்குள் சென்றவன் படாரென்று கதவை மூடி தாழ்ப்பாளை போட்டான். என்ன நடந்தாலும் சரி இந்த இரவு முழுவதும் இந்த ஹாலை விட்டு நகரக்கூடாது என்ற முடிவுடன் அங்கிருந்த பாயும் அழுக்கடைந்த ஜமுக்காளமும் எடுத்து டிவி முன்னால் விரித்துவிட்டு அதில் உட்காந்து ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டே டிவியில் முழு கவனத்தையும் செலுத்த முயன்றுகொண்டிருந்தான். இடை இடையே எதாவது நொறுக்குதீனி கொறித்துக்கொண்டு அடிக்கடி பவர் டௌன் ஆகுறப்போ ஸ்டெப் - அப் டிரான்ஸ்பார்மர்-இல் அட்ஜஸ்ட் செய்துகொண்டிருந்தான். மனதிருக்குள் பேய் பயம் போய்விட்டதாக உணர்ந்தான். அந்த தைரியத்தில் மெதுவாக சென்று ஹாலில் இருந்த ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தான். எங்கும் இருட்டு ஒரே மயான அமைதி. ஒரு நாய் மட்டும் குரைத்துக்கொண்டே அங்குமிங்கும் ஓடிகொண்டிருந்தது. வீட்டின் முன்னால் மரம் ஏதுமில்லாததால் பேய்க்காற்றின் சத்தமும் அதிகமாக கேட்கவில்லை. ஆனாலும் நாய் மட்டும் ஊளை இடுவதும் குரைப்பதுமாக ஓடிக்கொண்டிருந்தது. "பேய் வருவது நாயின் கண்ணுக்கு தெரியுமாமே? அப்படி என்றால் அந்த நாயின் கண்ணுக்கு பேய் ஏதாவது தெரிந்திருக்குமோ?" ஜீவாவின் மனதுக்குள் மீண்டும் பேய் பயம் தோன்றியது. படபடவென ஓடிவந்து ஜமுக்காளத்தை தலைவழியாக மூடிக்கொண்டு எல்லா கடவுளையும் மனதிற்குள் வேண்டிக்கொண்டு உட்காந்திருந்தான்.

அப்படி இப்படி பயத்துடன் நேரமும் கடந்துகொண்டிருந்தது. மணியை பார்த்தான். வாட்ச் 9:50 என்று காட்டியது. சரி சாப்பிடலாம் என்று தீர்மானித்தவன் கொண்டுவந்த பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து டிவியும் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். கையை கழுவ கதவை திறக்க வேண்டியிருக்கும் என்பதால் அடுக்களையின் ஒரு மூலையிலே பாட்டில் தண்ணீரில் கையையும் கழுவிக்கொண்டான். மீண்டும் தலைவழியாக ஜமுக்காளத்தை போர்த்திக்கொண்டு டிவியும் பார்த்துகொண்டு வேலையும் கவனித்துக்கொண்டிருந்தான். இடையில் சில நேரம் மெதுவாக கண்ணயர்ந்தபோது தண்ணீரில் முகத்தை துடைத்துக்கொண்டே விழித்திருக்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தான். அப்போதுதான் ஒன்னுக்கு போகனும்போல மெதுவாக தோன்றியது. "ச்சே சனியன் இந்தநேரம் பார்த்து ஒன்னுக்கு வருதே. வீட்டில குளியலறையில போக முடியாது. வீடுக்குள்ள எங்கேயும் ஒண்ணுக்கும் போக முடியாது. பாழடைந்த வீடுனாலும் வீட்டுக்குள்ள மூலையில எங்காச்சும் ஒன்னுக்கு போறதெல்லாம் சரி இல்ல. ச்சே..இப்ப என்ன பண்றது எப்படியும் கதவ தொறந்துதான் ஆகணும்" என்று எரிச்சல் பட்டுக்கொண்டே அடக்க முயன்றான். ஆத்திரத்தை அடக்கலாம் மூத்திரத்தை அடக்கவா முடியும்? கொஞ்சம் கொஞ்சமாக ஒன்னுக்கு போகும் பிரச்னை சுனாமியாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. இனியும் அடக்க முடியாது, போய்த்தான் ஆகணும் என்ற நிலை வந்ததும் கதவை ஒருவாட்டி திறக்கலாம் என்று முடிவெடுத்து நடுங்கும் இதயத்துடன் மெதுவாக கதவை திறந்தான் ஜீவா.

இன்னும் வெளியே காற்று சுத்தி அடித்துகொண்டிருந்தது. வீட்டின் முன் பக்கம் போட்டிருந்த  லைட்டிலிருந்து  வெளிச்சம் போதுமானதாக இல்லை. கூர்ந்து பார்த்தால்தான் எதையுமே அறிந்துகொள்ள முடியும். ஜீவா படபடக்கும் இதயத்துடன் மெதுவாக வெளியே வந்து சுவர் ஓரமாக ஒதுங்கினான். ஒருவழியாக முடித்துக்கொண்டு திரும்பும் நேரம் சடாரென்று ஒரு பூனை இவன் குறுக்கே சாட..

 "ஐயோ ...அம்மா" என்று தன்னையறியாமல் அலறிவிட்டான். கை கால்கள் எல்லாம் தரையில் நிற்காமல் ஆட தொடங்கியது. வேகமாக வீட்டிக்குள் சென்று தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தான். கதவை தாளிட்டுக்கொண்டே வாயில் வந்த கெட்ட வார்த்தைகளால் அந்த பூனையை அர்ச்சனை செய்துகொண்டு டிவி முன்னால் பொய் உட்காந்தான். மணியை மீண்டும் பார்த்தான். மணி சரியாக 11:05 ஆகியிருந்தது. இன்னும் ஒருமணி நேரம் கடத்திவிட்டால் எந்த  இல்லாமல் தூங்கிவிடலாம். பேய்க்காற்றின் ஊளை  சத்தம் வீட்டில் இருந்த எல்லா ஜன்னல் இடுக்குவழியாகவும் நுழைந்து திகிலை மூட்டிகொண்டிருந்தது. போதாததற்கு பனை ஓலையின் சலசல சத்தமும் இப்போது துல்லியமாக கேட்கிறது.

அப்போதுதான் ஜீவாவின் நாசி துவாரத்தில் அந்த மணம் மெதுவாக உணர்ந்தான். மரிக்கொழுந்தும் மல்லிகைப்பூவும் சேர்ந்த வாசம்போல இருந்தது. இருந்தாலும் ஒரு சந்தேகத்தின் பெயரில் மீண்டும் மூச்சை நன்றாக இழுத்துவிட்டு பார்த்தான். சந்தேகமே இல்லை. இது மரிக்கொழுந்தும் மல்லிகைப்பூ வாசம்தான். பேய் தானே இரவில் மல்லிகை பூ எல்லாம் வைத்து வரும்னு சொல்வாங்க. அப்படி என்றால் பேய் வந்துவிட்டதா? இங்க தான் எங்கையோ சுத்துதா? நினைக்க நினைக்க ஜீவாவிற்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது. நிஜமாவே இந்த வீட்டில பேய் குடி இருக்கா? இப்படி நினைத்துகொண்டிருக்கும்போதே மெலிதாக வளையல்கள் சிணுங்கும் சத்தமும் அப்போ அப்போ கேட்க ஆரம்பித்தது.
 
ஜீவாவின் இதய துடிப்பு வேகமாக ஏறிக்கொண்டிருந்தது. 

வீட்டில் ஆள்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு ஒருவேளை பேய் உள்ள வந்துட்டா? நினைப்பு வந்த உடனே வேகமாக எல்லா லைட்டும் ஆப் செய்தான் ஜீவா. டிவியும் ஆப் செய்தான். பயத்துடன் ஓடிசென்று பாயில் சுருண்டு படுத்துக்கொண்டு தலைவழியாக ஜமுக்காளத்தை இழுத்து மூடிக்கொண்டான். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இப்போது வளையல்கள் குலுங்கும் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்தது. காதை கூர்மையாக வைத்துகேட்டதில் கொல்லை பக்கம் இருக்கும் ஜன்னல் வழியாகத்தான் சத்தம் வந்துகொண்டிருக்கிறது. ஜீவாவிற்கு நாக்கு வறண்டு உடம்பெல்லாம் குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. பேய் காற்றின் சத்தத்துடன், வளையல் குலுங்கும் ஓசை, மயக்கும் மல்லிகையும் மரிக்கொழுந்து வாசமும்...கூடவே பேயின் உறுமல் போல சத்தமும் சேர்ந்தது. அது உறுமலா, மூச்சிரைக்கும் சத்தமா தெளிவாக புரியவில்லை. ஜன்னல் இடுக்கு வழியாக பார்க்கலாமா என்று கூட யோசித்தான். வேண்டாம் எந்த விதத்திலும் இங்கே ஒரு ஆள் இருப்பது பேய்க்கு தெரியவே கூடாது என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு ஜமுக்காளதினுள் உடம்பு நடுநடுங்க சுருண்டு படுத்துக்கொண்டான் ஜீவா. சில நேரம் சத்தங்கள் அதிகமாகவும் சில நேரம் குறைவாகவும் கேட்டுகொண்டிருந்தது. அனால் பூவின் வாசனை மட்டும் சீராக நாசி துவாரத்தை துளைத்தது. ச்சே பிரண்ட்ஸ் அப்பவே சொன்னங்க போகதேன்னு. பெரிய மயிரு மாதிரி வந்து மாட்டிக்கிட்டேனே. வெளிய பேய் உள்ள நான். பேய் அடிச்சு ரத்தம் கக்கி செத்துருவேனோ? பயத்துலே செத்துருவேனோ?

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக யோசிச்சு யோசிச்சு ....எப்போ தூங்கினான் என்றே தெரியாது. கண் விழித்து பார்த்தபோது விடிந்திருந்தது. மணியை பார்த்தான். மணி 6: 40 என்று காட்டியது. தலை "விண்" என்று வலித்தது. கழுத்தை தொட்டுப்பார்த்தான். லேசாக ஜூரம் அடித்ததுபோல் இருந்தது. நேற்று இரவு நடந்ததெல்லாம் ஒன்றுகொண்டு தொடர்பு இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனதினுள் வந்து போனது. பவர் சரியாக மெயன்ட்டென் செய்யாததால் கேபிள் மொத்தமாக ஆப் ஆகி கிடந்தது. மெதுவாக எழுந்து சென்று அதனை முதலில் சரி பண்ணினான். தலையில் கை வைத்தபடி நடந்ததை நினைவுக்குள் கொண்டுவர முயற்சி செய்துகொண்டு இருந்தான். இப்போது கோர்வையாக எல்லாம் நினைவுக்கு வந்தது. இரவு இங்கு வந்தது, பேய் வந்தது. அதற்கு பயந்து படுத்தது. அனால் பிறகு என்ன நடந்தது? நான் தூங்கினேனா? பயத்துல மயக்கம் ஆகிட்டேனா? அப்படின்னா அந்த பேய் எங்க? என்னை பார்க்கலியோ?  இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே வெளியே போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. உடனே எழும்பி கதவை திறந்தான். யாரோ இரண்டுபேர் காலையில் தூக்குசட்டி தூக்கிக்கொண்டு வேலைக்கு போய்க்கொண்டிருந்தார்கள். நேற்று அடித்த காற்றும் இல்லை. அமைதியாக இருந்தது அந்த இடம். கொட்டாவி விட்டுக்கொண்டே வீட்டை சுத்தி கொல்லைப்பக்கம் வந்தான். புளியமரமும், பனைமரமும் அமைதியாக நின்றுகொண்டிருண்டது. கொல்லைப்பக்கம் துணி துவைக்கும் கல் இருக்கும் இடத்திற்கு வந்தான். இங்க இருந்துதானே நேற்றைக்கு பேயின் வளையல் சத்தம் வந்தது.

யோசித்துக்கொண்டே...அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தி சுத்தி வந்தபோது ஜீவாவின் கண்ணில் அது தட்டுப்பட்டது!

அங்கே இடுப்பு உயரத்திற்கு இருந்த துணி துவைக்கும் கல்லின் அருகே....

கொஞ்சம் வாடிய மரிக்கொழுந்தும், மல்லிகை பூக்களும், கொஞ்சம் உடைந்த வளையல்களும் ..கூடவே ஒன்றிரண்டு "ஆணுறைகளும்"!

இதை எல்லாம் பார்த்த ஜீவாவுக்கு மனதிற்குள் சிரிப்புதான் வந்தது..ஹ்ம்ம் ...நிஜமாவே நேத்தைக்கு இங்க "பேயாட்டம்" தான் நடந்திருக்கு!


இப்படிக்கு
ரசிகன் 


புதன், மார்ச் 26, 2014

நட்பில் கலக்கும் நஞ்சு





‘’இப்பல்லாம் அவனை கண்டாலே பேசவே பிடிக்கறதில்லைங்க, ஏன்னே தெரியல. ஃபேஸ்புக்ல அவன் பேரை பார்த்தாலே கடுப்பாகுது, நேத்து கூட ஃபேஸ்புக் சாட்டிங்ல வந்து ஹாய் மச்சான் ஊய் மச்சான்றான்.. நான் அப்படியே கண்டுக்காம இருந்துட்டேன், அப்புறம் வாட்ஸ் அப்ல வந்தான்… ஓத்தா போடானு நெனச்சிகிட்டு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லலீயே… சாவட்டும் சனியன்’’ என்று வெறுப்போடு பேசினார் அந்த நண்பர். 

‘’என்னங்க விஷயம், அவர் உங்க ரொம்பவருஷத்து ஃபிரண்டு. ஸ்கூல்ல ஒன்னா படிச்சவர், அவர் எதும் உங்கள்ட்ட கடன் கிடன் வாங்கிட்டு ஏமாத்திட்டாரா, இல்ல தண்ணிய போட்டுட்டு திட்டிட்டாரா’’ என்று விசாரித்தேன். 

‘’நான்தான்ங்க அவன்கிட்ட காசு வாங்கிட்டு இன்னும் திருப்பிகுடுக்கல.. அவன் காசு விஷயத்துல ரொம்ப நல்லவன்.. குடுத்த காசை ஒரு நாளும் கேட்டதில்லை.. தண்ணி அடிச்சாதான் அவனுக்கு என் மேல பாசமே வரும்.. பிரச்சனை அதில்லைங்க இது வேற’’ என்றார் அந்த நல்லவர். 

‘’என்ன பிராப்ளம்’’

‘’நான் தினமும் பாக்குறேன்.. அந்த **** பயலுக்கு லைக்கு போடறதும், அவனோட கொஞ்சி கொஞ்சி கமென்ட்டு பண்றதும் என்னங்க இது.. அந்த *** நாயி என்னை பத்தி என்னல்லாம் முன்ன எழுதினான். என்னை பத்தி எழுதிருந்தா கூட பரவால்ல என் பர்சனல்விஷயத்தை பத்தி எப்படிலாம் எழுதி அசிங்கப்படுத்தினான் அவனோட இவனுக்கென்ன உறவு… எனக்கு நடந்ததெல்லாம் அவனுக்கு தெரியாதா, அவன் எவ்ளோ கேவலமானவன்னு சொல்லிதான் தெரியணுமா.. அவன்ட்ட பேசினா நான் கோவப்படுவேனு கொஞ்சமாச்சும் தெரியவேணாமா’’ என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். 

‘’புரியுதுங்க.. ஆனா அந்த *** இப்போ மோடி எதிர்ப்பு அதுமாதிரி ஏதோ நிறைய எழுதறாப்ல, அவருடம் முன்னமாதிரி இல்ல.. நிறைய திருந்திட்டாரு போலருக்கே.. உங்க நண்பரும் மோடி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு உள்ளவர்தானே அதனால லைக்கு போட்டு கமென்ட்ல ஆதரவு தெரிவிக்கிறாரா இருக்கும்.. அதுக்கொசரம் அவர்மேல கோவப்பட்டா என்னங்க அர்த்தம்’’ என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் கோபம் குறைவதாக இல்லை. 

‘’உங்களுக்கு தெரியாதுங்க… அவன் நான் கோவப்படணும்னு வேணும்னே பண்றான்… கல்லூளிமங்கன்’’ என்று பொரிந்துதள்ளினார். 

‘’ஏன்ங்க லைக்கு கமென்ட் போட்டதுக்கெல்லாமா நண்பரை வெறுப்பாங்க.. என்னதான் அவிங்களுக்கு லைக்கு கமென்ட்டுலாம் போட்டாலும் நீங்கதான் அவருக்கு முக்கியமானவரா இருப்பீங்கனு கூடவா உங்களுக்கு புரியல…’’

‘’இல்லைங்க அவன் என்னை வெறுப்பேத்தனும்னுதான் செய்றான்’’ என்று சொன்னதையே சொன்னார்.

‘’இதப்பாருங்க… இந்த ஃபேஸ்புக் லைக் கமென்ட்லாம் அடுத்த ஸ்டேடஸ் போடறவரைதான் தாக்குபிடிக்கும்! உங்க நட்பு எத்தன வருஷத்து நட்பு, இந்த மொக்கை மேட்டருக்கு போய் என்னங்க நீங்க’’ என்று மேலும் தொடர்ந்தேன். ஆனால் அவர் காதுகொடுப்பதாக இல்லை. 

அந்த நண்பரின் மீது இப்போதும் காழ்ப்புணர்ச்சியோடுதான் இருக்கிறார். நண்பரின் நண்பரும் அந்த ****ருக்கு நிறைய லைக்கும் கமென்டுமாக உற்சாகமாக இருக்கிறார். இவர் எப்போது என்னிடம் பேசினாலும் அந்த நண்பரைப்பற்றி ரொம்பவும் கேவலமாக திட்ட ஆரம்பித்துவிடுவார். 

ஒரு நல்ல நட்பு கண்ணுக்கு முன்னால் உடைந்துபோவதை பார்க்க சகிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை. சமூக வலைதளங்கள் நமக்கு கொடுத்திருகிற அற்புதமான பரிசுகளில் இதுவும் ஒன்று. சமூக வலைதளங்கள் நமக்கு நிறையவே புதிய நண்பர்களை கொடுத்திருக்கிறது தனிமையை விரட்டுகிறது நிறைய புதிய தகவல்களை கொடுக்கிறது மாதிரியான ஜாலி ஜல்லிகளை தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம். அதன் ஆபத்தான பின்விளைவாகவே மேற்சொன்ன விஷயத்தை பார்க்கிறேன். 

நம்முடைய மெய்யுலக நண்பர்களை கொஞ்ச கொஞ்சமாக நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து பிரிக்கவல்ல பிரச்சனை இது. நிஜவாழ்க்கையில் நம்முடைய அன்புக்கு பாத்திரமானவர்களை இந்த ஃபேஸ்புக் நம்மிடமிருந்து மெதுமெதுவாக அந்நியமாக்குவதை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு ஏற்படுவதுண்டு. அதில் ஒரு துளிதான் மேலே என்னோடு உரையாடிய நண்பரின் பிரச்சனை. 

இன்றைக்கு கிட்டத்தட்ட நம்முடைய மாமன் மச்சானில் தொடங்கி நம்மோடு தொடர்புள்ள சகலரும் சமூகவலைதளங்களுக்கு வந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திருப்பதன் மகத்துவம் குறித்து கலைஞரே சிலாகித்து எழுதுகிறார். இன்று மெய்யுலகில் நம்மோடு நண்பராக இருக்கிறவர் இங்கே மெய்நிகர் உலகிலும் நண்பராகவே இருக்கிறார். இதுதான் இப்பிரச்சனையின் முதல்புள்ளி. இங்கிருந்துதான் நம்முடைய நீண்டகால நண்பர்களை இழக்க ஆரம்பித்திருக்கிறோம். 

இந்த ஆபத்தான சின்ட்ரோமுக்கு என்னுடைய சக நண்பர்களும் நானுமே கூட பலியாவதையும் பலியாகிக்கொண்டிருப்பதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் இதை தடுக்கவே முடியாத கையறுநிலைதான் இப்போதும் நீடிக்கிறது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அது எல்லோரிடமும் அதிகமாக பரவுவதையும் காண்கிறேன். 

ஃபேஸ்புக்கில் நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் நண்பர்கள் எதிரிகள் என சகலரும் நம்முடைய நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். நமக்கு ஆகாதவர்களை நாம் நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிடாலாம்தான் என்றாலும் அவர்களுடைய ஸ்டேடஸ்களும் நடவடிக்கைகளும் கூட டைம்லைனில் எப்போதும் கண்ணில் படுகிறது. அதை அப்படியே கண்டும் காணாதது போல கடந்துவிடலாம்.டிவிட்டரில் இந்த சிக்கலில்லை. ஃபாலோ பண்ணினால்தான் பார்க்க முடியும். துஷ்டனை கண்டால் தூர விலகு!

ஆனால் சிக்கல் என்ன தெரியுமா? நிஜவாழ்வில் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறவர்கள் இந்த துஷ்டர்களின் ஸ்டேடஸ்களுக்கு லைக்கு போட்டாலோ கமென்ட்டு பண்ணினாலோ அதையும் குறிப்பிட்டு காட்டித்தொலைத்தும் விடுகிறது ஃபேஸ்புக். இன்னார் இன்னார் ஸ்டேடஸை லைக் பண்ணியிருக்கிறார்.. கமென்டு பண்ணியிருக்கிறார் என்பது மாதிரி எதையாவது போட்டு நம்முடைய கோபத்தை தூண்டிவிடுகிறது. ஃபேஸ்புக்கில் மட்டுமில்லை ட்விட்டரிலும் நமக்கு ஆகாதவருடன் நம்முடைய நண்பர் உரையாடிக்கொண்டிருந்தால் அதுவும் நம்முடைய டைம்லைனில் தெரிந்துதொலையும்.

இதன் தாக்கம் அந்த நண்பரை நேரில் சந்திக்கும்போது வெளிப்படுகிறது. அல்லது அவர் மீது நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு கோபத்தை அல்லது வெறுப்பை உருவாக்கிக்கொள்ள நேரிடுகிறது! அந்த நபர் மேல் இயல்பாகவே ஒரு எரிச்சலும் கடுப்பும் வந்துவிடுகிறது. நானும் இதை கட்டுப்படுத்தவேண்டும் என பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் தொடர்ந்து லைக்கிட்டவர்கள் பட்டியலில் முதலில் நமக்கு வேண்டப்பட்ட அந்த மெய்யுலக நண்பர் பெயர் தெரிந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆழ்மனதில் அந்த நண்பர் மீதான வெறுப்பை நிச்சயமாக அதிகமாக்கும்.

அந்த நண்பரும் விடாமல் நம்முடைய எதிரியுடன் கொஞ்சி குலவுவார்... நமக்கு செம்ம காண்டாவும்! இதை அந்த நண்பர்கள் தெரிந்து செய்வதில்லை. நம்மாலும் அவரிடம் நேரடியாக சென்று எனக்கு இவனை பிடிக்கவில்லை அவனுக்கு லைக்கு போடாதே ஏன் கமென்ட் போடுகிறாய் என்று சொல்வதும் கேட்பதும் கூட சரியாக இருக்காது. நாமென்ன நர்சரி ஸ்கூல் குழந்தைகளா? இணையத்தில் யார் யாரோடு பேசுவது யாரோடு உறவாடுவது என்கிற சுதந்திரம் நம்மைப்போலவே அந்த நண்பருக்கும் உண்டல்லவா? 

இதை சமாளிக்க நான் பெரும்பாலான நேரங்களில் ஆகாதவர்களை எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவேன். அவர்களுக்கு நம்முடைய நண்பர்கள் லைக்கு போட்டாலும் தெரியாது, கமென்ட்டு போட்டாலும் தெரியாது! நமக்கும் டென்சன் கிடையாது. மெய்யுலக நண்பர்களை தக்கவைக்க இதைவிட சிறந்த மாற்று வேறெதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. (சமூக வலைதளங்களை புறக்கணிக்க சொல்வது சரியாக வராது. இன்று கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்றாக அது எல்லோருக்குமே மாறிவிட்டது!)

அதைவிட சிறந்த மாற்றுவழி மெய்யுலக நண்பர்களின் நட்பின் அருமையை உணர்ந்திருப்பது. நாளைக்கே நமக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கப்போவது அந்த நபர்தானே தவிர யாரோ எங்கோ லைக்கு போட்டவர்களும் கமென்ட்டிட்டவர்களு அல்ல… நம்முடைய நண்பர்கள் நம்முடைய தனிச்சொத்தல்ல என்கிற புரிதலும் அவசியம். விரும்பியதை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு என்று உணரவேண்டும். அந்த புரிதல் இருந்தால் இவ்வகை சிக்கல்களே வரவாய்ப்பில்லை. 

முன்பெல்லாம் , அதாவது இணையமில்லாத காலத்தில் இந்த சிக்கல் கிடையாது. நம்முடைய நண்பர்கள் நம்மிடம் நம் எதிரியைப்பற்றி புறம்பேசிவிட்டு அதே எதிரியிடம் நட்பாக இருந்தாலும் அது நமக்கு தெரியவரலாம் வராமல் போகலாம்… அல்லது அப்படியே இருந்துவிடலாம். பெரிய பாதிப்பு இருக்காது. 

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. யாரும் இங்கே தன்னுடைய செயல்பாடுகளை மறைத்துக்கொள்ள முடியாது. நம்முடைய எல்லாவற்றையும் நிர்வாணமாக்கி வைத்திருக்கிறது இணையம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாகவே இந்த உறவுச்சிக்கல்களை பார்க்கிறேன். இனி இதிலிருந்து தப்ப முடியாது ஆனால் இதைப்பற்றி புரிந்துகொண்டு உறவுகளை நட்பை காப்பாற்றிக்கொள்ளலாம்.