புதன், அக்டோபர் 30, 2013

தனுஷ் போல உடம்பு வேண்டுமா..



வாரத்திற்கு ஒருமுறையாவது ஜிம்முக்கு போகணும்னு நினைப்பேன். ஆனா சோம்பல். அதனால போக மாட்டேன்.  அபார்ட்மெண்டிலேயே ஜிம் இருப்பது, மிகவும் வசதியாக இருப்பதும், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா,,இன்னைக்கு லைட்டா, நெஞ்சு வலிக்குதுண்ணான், அதுக்குள்ள போய் சேர்ந்துட்டான்யா..அதிகம் வயசெல்லாம் இல்ல, உங்க வயசுதான் இருக்கும்” என்று பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “அய்ய்யோ..அடுத்த நம்மளோ” என்ற பயமும் ஒரு காரணம்.

இந்த உலகத்தில் உயிர்பயத்தை விட ஏதும் இருக்கிறதா என்ன..டிரட்மில்லில் ஓடும்போது, வயிறு, கை, கால் எல்லாம் தனிதனியா வலி பிரித்து எடுக்கும். நெஞ்சு வலி வேண்டாமென்றால், இந்த வலியெல்லாம் பொறுத்துக்கடா ராசா என்று எங்கேயோ ஒலிப்பதால், பல்லைக் கடித்துகொண்டு, ஒரு 20 நிமிடமாவது ஓடிவிடுவேன்..

நேற்று அப்படி டிரட்மில்லில் ஓடி கொண்டிருந்தபோது, எதிர்த்த மாதிரி, டி.வியில் ஒரு விளம்பரம் ஓடி கொண்டிருந்த்து. நான் பொதுவாக ஓடும்போது, டி.வி பார்ப்பதில்லை. அல்லது டி.வி பார்க்கும்போது ஓடுவதில்லை. ஏனென்றால், “நேத்து வரைக்கும் நல்லா இருந்தான்யா” டைப் விளம்பரங்கள் கண்ணில் பட்டு, கலவரம் பண்ணி, பதட்டத்தை கூட்டுவதால்..

அப்படி கண்ணில் பட்ட ஒரு விளம்பரம் “இனிமேல் எதுக்குய்யா, இந்த டிரட்மில்லில் வீணாஓடிக்கிட்டு” என்று ஒருநிமிடத்தில் என்னை முடிவெடுக்க வைத்தது. ஒரு மாத்த்தில் 30 எல்.பி(அதாவது கிலோ அளவிலான, அமெரிக்க கணக்கீடு) சுலபமாக குறைக்க முடியும். எந்த ஜிம்முக்கும் போகவேண்டாம், மணிக்கணக்கில் எக்சர்சைஸ் பண்ண வேண்டாம். எங்கள் ப்ராடெக்டை, நீங்கள் சாப்பிடும் எந்த உணவிலும், லைட்டா தூவி விட்டால் போதும், அது எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு மாதத்தில் பாருங்கள், அதிசயத்தை என்றார்கள்..

அதுவும் சும்மா இல்லை. உசிலை மணி மாதிரி ஒருவர் படம், அதுவே எங்கள் ப்ராடெக்டை உபயோகிக்க ஆரம்பித்த பின்பு என்று “அவரோ, அல்லது அவரு தம்பியோ”, அர்னால்ட் பாடி காட்டி கொண்டிருந்தார்..அட, அப்படியா என்று வாயை மூடிவதற்குள்..”நீங்கள், இதை ஒரு மாத்த்திற்கு, சும்மா யூஸ் பண்ணலாம். நாங்கள் உங்களுக்கு ஒரு மாத்த்திற்கு இலவசமாக சாம்பிள் கொடுப்போம் என்றார்கள்..

ஆஹா, சோனமுத்தா....இப்படி ஒரு அல்வாவை வைச்சுக்கிட்டு, இம்புட்டு நாளைக்கு கஷ்டப்பட்டிருக்கோமே, என்று டிரட்மில்லை உடனே நிறுத்தினேன்..துண்டை எடுத்து முகத்தை துடைத்துகொண்டு வீட்டுக்கு சென்று, உடனே லேப்டாப்பை தூக்கியவுடன் அம்மா..

"என்னடா ஆச்சு உனக்கு? உடற்பயிற்சி செய்வது எப்படின்னு படிக்க போறியா?"

அட போம்மா ..நீ வேற...ஒரு மாசத்துக்குள்ளே உன் புள்ள படத்துல இருக்கிற  தனுஷ் மாதிரி ஆகலை..ஆகலை என்ன..ஆகி காட்டுறேன்...”

என்று அவசரமாக அந்த விளம்பர சைட்டுக்கு சென்றேன்..அருமையாக வரவேற்றார்கள்..”வாருங்கள்..வாருங்கள்..எங்கள் பக்கத்துக்கு வந்தற்கு நன்றி.நீங்கள் ஒல்லியாவதற்கு நாங்க கேரண்டி” என்று பிரீத்தி மிக்சி கேரண்டி மாதிரி வீடியோ விளம்பரம் கொடுத்தார்கள்..”நான்தான் முகேஷ்” மாதிரி, ஒருவர் வந்து, “நான்தான் மார்க்..உங்களை மாதிரிதான் நானும், இந்த உடல் பருமனால் மிகவும் அவதிப்பட்டேன்..இதோ, இந்த ப்ராடெக்டை, டெய்லி உணவில் தூவிவிட்டேன்..அம்புட்டுத்தான்(மர்கயா???), என்னுடைய வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிபோனது” என்றார். 

“அம்மா.. பார்த்துகிட்டே இரு.....நானும் தனுஷ் மாதிரி மாறுரேன் ” என்றேன்..

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லாத்தானே ஜிம்முக்கு போனே..அதுக்குள்ள என்னடா ஆச்சு உனக்கு ” என்றாள்..

“அதெல்லாம் சொல்ல முடியாது..இப்பவே என்னை ஒரு போட்டோ எடுத்து வைச்சிக்க,..” என்றேன்..

அம்மா ...பதறி போனாங்க..

“அய்ய்யோ. ஏண்டா ..உடம்புக்கு ஏதாவது” என்றாள் பதட்டத்துடன்..

“அம்மா நான் முடிவு பண்ணிட்டேன்....எப்படி ஆகுறேன் பாரு” என்றேன் கர்வத்துடன்..

கிரெடிட்கார்டு எல்லாம் கேட்டார்கள்..ஒரு மாச சாம்பிளுக்கு எதுக்குய்யா கிரெடிட்கார்டு என்று யோசிக்கும்முன்பே, “பணமெல்லாம் எடுக்க மாட்டோம்..ஒரு மாசம் கடந்த பின்பு, கண்டிப்பாக நீங்கள் இந்த ப்ராடெக்டை வாங்கவேண்டும் என்று அடம்பிடிப்பீர்கள்..அப்புறம், நீங்க எதுக்கு வேஸ்டா, க்ரெடிட்கார்டு நம்பெரெலாம் கொடுத்துக்கிட்டு..இப்பவே கொடுத்தீங்கன்னா, உங்க அனுமதியின் பேருல பணம் எடுத்துட்டு(ஓடிடுவோம்..??) சொல்லிடுவோம்  என்றார்கள்..

அப்பயே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு வர, எதுக்கும் நம்ம கோவாலுவ ஒரு வார்த்தை கேட்டுருவோம் என யோசித்தேன் ..தாமதிக்காமல் போன் செய்யவே..

“கோவாலு..உங்கிட்ட ஒரு ஹெல்ப்டா” என்றேன்..

உடனே கோவாலு ..“ராசா...நானே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்..சம்பளம் வந்தவுடேனே, அப்படியே ஊருல இருக்குற அக்கவுண்டுக்கு துடைச்சு அனுப்பிச்சுட்டேன்..ஒரு ஆயிரம் ரூபா கிடைக்குமா ..??”

“அட நாதாரி நாயே..பணமெல்லாம் கேட்கவரலை..ஜிம்முல எக்சர்சைஸ் பண்ணுறப்ப, டி.வியில ஒரு விளம்பரம்” ங்கறேன்...


“ராசாஆஆஆ... அத மட்டும் வாங்கிறதடா”ங்கறான்..


“டே..கோவாலு, என்னடா சொல்லுற..முழுசா கூட சொல்ல்லியேடா..”


“இல்லடா ராசா, அதமட்டும் வாங்கிறாத..”

“ஏண்டா கோவாலு..நான் தனுசு மாதிரி ஆகுறது உனக்கு பிடிக்கலையா” 

“நீ எங்க கூடவே ரொம்ப நாளைக்கு இருக்கணும்டா” ங்கறான்..அப்படியே ஆடிப்போயிட்டேன்...அப்புறம் சொல்லுறான்..

“ராசா, நாலு மாசம் முன்னாடி, ஒரு பத்து நாள் லீவு போட்டிருந்தேன் ஞாபகம் இருக்கா..”

“ஆமா..ஏதோ லைட்டா காய்ச்சல் ரெஸ்ட் எடுக்குறேன்னு சொன்ன..வரக்கூட வேணாம்..பரவிடும்னு வேற சொன்னயேடா..”

“ஆமாண்டா ராசா..அது காய்ச்சல் இல்லடா..எல்லாம் அந்த கருமம் பிடிச்ச அந்த ப்ராடெக்டை ரெண்டு நாளைக்கு சாப்பிட்துனாலதாண்டா..விடாம முன்னாடியும், பின்னாடியும் போகுது..யாருனாலயும் ஸ்டாப் பண்ண முடியல..அப்புறம் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் நாலு டிரிப் ஏத்துனாய்ங்கடா..நாலு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்க சொன்னாய்ங்க..அந்த டாக்டரு, என்ன அசிங்கம், அசிங்கமா திட்டுனான் தெரியுமாடா..இன்னும் லைட்டா உடம்பெல்லாம் அரிக்கிற மாதிரி இருக்குடா” ங்குறான்..


என்னுடைய தனுஷ் கனவெல்லாம், ஒரு நிமிட்த்தில் சுக்கு நூறாகியது..


ஏண்ணே..யாருக்காவது தனுஷ் மாதிரி ஆகணும்னு ஆசையிருக்கு???”


இப்படிக்கு
தனுஷ் உடம்புக்கு ஆசைப்பட்ட ...ஜீவா!