ஞாயிறு, நவம்பர் 11, 2012

ஃபேஸ்புக் பொண்ணு!





குமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது!

அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி, முகத்துக்கு பவுடரும் போட்டு.. கடவுளை வணங்கி, கந்த சஷ்டி கவசமும் பாடி திருநீரு பூசி கீபோர்டை தொட்டுக்கும்பிட்டுவிட்டு கனிணி முன் அமருவான் குமார். கையில் தினத்தந்தி பேப்பரை எடுத்துவைத்துக்கொள்வான். அதில் இருக்கிற ஒவ்வொரு செய்தியின் தலைப்பையும் டைப் செய்துகொள்வான். கீழே ஏதாவது மொக்கை கமென்ட் ஒன்று போட்டுவிடுவான். அதற்கு பெயர்தான் ஸ்டேடஸ்.

‘’அனைவருக்கும் இலவச பால் – அம்மா அறிவிப்பு #செய்தி

குடுக்கறதுதான் குடுக்கறீங்க அமலாபாலா குடுங்க ஜாலியா இருக்கும்!’’

(அவன்போட்ட மொக்கை ஸ்டேடஸ்களில் ஒன்றுதான் இது)

இந்த மொக்கை கமென்ட்டை விகடன், குமுதம், குங்குமம், மங்கையர்மலர், விஜயபாரதம் என எதிலாவது வலை பெய்யுதே, வலை தூவுதே, வலைகள் ஓய்வதில்லை மாதிரி பக்கங்களில் வெளியிடுவார்கள். பத்திரிகைகளில் குமாரின் கமென்டுகள் இடம் பிடித்து பிடித்து.. இதன் மூலமாக அவனுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். அதாவது ரசிகர்கள். அதில் பாதிக்கு மேல் பெண்களாம். இவனுடைய கமென்டுகளுக்காகவே விகடன் குமுதம் வாங்கி படிக்கிற பெண்கள் கூட உண்டு என குமாரே பெருமையாக வீட்டில் சொல்லிக்கொள்வான்.

சென்னை மாநகர மக்கள்தொகையில் பாதியில் பாதி இளம்பெண்களாக இருந்தாலும் குமாரிடம் யாருமே பேசமாட்டார்கள். அவனாலும் பேச முடியாது. கூச்ச சுபாவம். அதோடு பெண்களிடம் நேருக்குநேர் அவனால் ஒரு நிமிடம்கூட பேசமுடியாது. உளறிக்கொட்டுவான். ஆனால் இந்த ஃபேஸ்புக்,ட்விட்டர் முதலான லாகிரி வெப்சைட்டுகள் வந்தபிறகு நிறைய பெண்கள் இவனுக்கு கமென்ட்டு போடுவதும் சாட்டிங் செய்வதுமாகத்தான் இருந்தது. ஆனால் எந்த பெண்ணையும் ‘நம்பி’ பேசக்கூட முடியாது என்றும், அது பெண் பெயரில் இருக்கிற ஆணாக இருக்கலாம் என்றும் அஞ்சுவான் குமார்.

அதற்கு வலுவான பல காரணங்கள் இருந்தன. முக்கி முக்கி மூன்று நாள் அலுவலக வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு கடலை போட்டு கடைசியில் காணாமல் போன பெண்கள் நிறையபேர். அல்லது இவனோடு பேசுகிற பெண்களுக்கு வயது 60ஐ தாண்டியிருக்கும். கலிகாலம். பல்லுபோன பாட்டிகள் கூட ஃபேஸ்புக் உபயோகித்து நம்ம பிராணனை வாங்குகிறார்களே என நொந்துகொள்வான். இருந்தாலும் ஒரு பெண்ணாவது உஷாராகிவிடாதா என்கிற ஏக்கம் யாகூ காலத்தில் தொடங்கியது.

இணையத்தில் பெண் பெயரில் உலவுகிறவர்களில் 90% பேர் ஆண்கள், மீதி 5 %பேர் வயதான பாட்டிகள் என்பது குமாரின் அவதானிப்பு. ஒன்றிரண்டு உருப்படியான ஃபிகர்கள் இருந்தாலும் அவர்கள் தமிழில் ஸ்டேடஸ் போடுபவர்களோடு பேசுவதில்லை.. ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவர்களையே நாடுகின்றனர் என நினைத்து நினைத்து.. பொருமுவான். மீறி ஏதாவது ஒன்றிரண்டு இளம்பெண்கள் அரிதாக பேசினாலும் எடுத்த எடுப்பிலேயே அண்ணா வணக்கம் என்று ஆரம்பிப்பார்கள். எவ்வளவு நாளைக்குதான் அவனும் நல்லவன் போலவே நடிப்பான்.

‘’ஃபேஸ்புக்கில் காதல்.. இளம்பெண்ணோடு ஜாலியாக இருந்து ஏமாற்றிய காதலன்’’ மாதிரியான செய்திகளை தினத்தந்தி பேப்பரின் எட்டாவது பக்கத்தில் படித்து.. ‘’எப்படித்தான் இவனுங்களுக்குன்னே வந்து மாட்டுதுங்களோ.. நாம இவ்ளோ பேமஸா இருக்கோம்.. ஒரு பொண்ணாச்சும் நம்மகிட்ட பேசுதா..’’ என தேம்பி தேம்பி அழுவான். நமக்கு ஆயிரக்கணக்குல பெண் நண்பர்கள் இருந்தாலும் அவர்களோடு பேசினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை என்று உறுதியாக நம்பினான். இதனால் எந்தப்பெண் ரசிகை இவனோடு சாட்டிங் செய்தாலும் இவன் சலிப்பாகவே பதில் சொல்வான்.

அப்படித்தான் ஒரு சுபயோக சுபதினத்தில் அவள் குமாரை சாட்டிங்கில் அழைத்தாள்.

‘ஹாய்’

‘ஹாய்’

‘ஐயாம்.. (NAME) , உங்களோட தீவிர வாசகி!’

‘ஓஹோ’

‘உங்களோட பேசணும்னு எப்பவும் நினைப்பேன்’

‘பேசுங்க’

பேசும்போதே இன்னொரு விண்டோவில் அவளுடைய புரொபைல் போய் பார்த்தான். அதிக நண்பர்களில்லை. தன்னுடைய நிறைய படங்களை அப்லோட் செய்திருந்தாள். திருமணமாகதவள். பெண்ணும் பார்க்க லட்சணமாய் மங்களகரமாய் எடுப்பாக கிளி மாதிரிதான் இருந்தாள்.

பொதுவாக இந்த ஃபேக்ஐடி பெண்கள் யாராவது நடிகையின் படத்தையோ அல்லது குழந்தைகள், அழகான பெண் ஒவியங்களையோதான் புரொபைலில் வைத்திருப்பார்கள். ஆனால் இவளோ இவளுடைய படத்தையே வைத்திருக்கிறாள் போலதான் இருந்தது. நண்பர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மீண்டும் படங்களை பார்க்க தொடங்கினான். ஸ்டேடஸ்களை மேய்ந்தான்.

எல்லாமே கல்லூரி நண்பர்களோடு எடுத்த படங்கள்.. நிறைய கவிதை எழுதுவாள் போலிருந்தது. ஸ்டேடஸ்கள் எல்லாமே கவிதைகளாக கொட்டிக்கிடந்தன. அவையெல்லாம் அவ்வளவு ஸ்வாரஸ்யம் தரவில்லை. அவளுடைய புகைப்படங்கள் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதே குமாருக்கு பிரச்சனையாக இருந்தது. சில சமயம் பிக்காலிபயலுக தெரிந்த பெண்களின் ஒரிஜினல் புகைப்படங்கள் இவர்களுடைய போலி ஐடிகளுக்காக பயன்படுத்துவதுண்டு.

படங்களை வைத்து பொண்ணு கோவை பாரதியார் யுனிவர்சிட்டி என்பது புரிந்தது. பின்னாலிருக்கும் டிபார்ட்மென் பெயர் அவள் மேனேஜ்மென்ட் தொடர்பாக படிப்பவள் என்பதையும் உணர்த்தியது. சாட்டிங் தொடர்ந்தது.

‘’நீங்க என்ன பண்றீங்க’’

‘’நான் ஒரு கால் சென்டர்ல வேல பாக்கறேன்’

‘’ச்சீய்ய்ய்.. என்னங்க நீங்க’

‘’என்னங்க கால்சென்டர்ல வேலை பாக்குறது அவ்ளோ தப்பா..’’

‘’சரியான தத்தியா இருப்பீங்க போலருக்கே!’’

குமாருக்கு ஏதோ தப்பாக தோன்றியது. என்னதிது பேச ஆரம்பிச்சி நாலாவது வரிலேயேவா ஒரு பொண்ணு இப்படி பேசுமா.. நிச்சயமா இது எவனோ பையன்தான்.. பாப்போம்.. என பேச்சை தொடர்ந்தான்.

‘’என்ன பண்றீங்க’’

‘’நான் பாரதியார் யுனிவர்சிட்டில.. எம்பிஏ’’

‘’எந்த இயர்’’

‘’ஃபைனல் இயர்’’

‘’ஓஹோ’’

(புகைப்படங்களில் இருக்கிற விஷயமேதான், உண்மையான பெண்ணா இருக்கமோ)

‘’உங்க ஸ்டேடஸ்னா எனக்கு உசிரு.. வூட்ல எல்லாருகிட்டயும் காட்டி சிரிப்பேன்’’

‘’ஓஹோ’’

‘’உங்களோட போட்டோஸ் பார்த்தேன்.. ரொம்ப க்யூட்டா இருக்கீங்க ;-) ’’

‘’அப்படியா..?’’

‘’உங்களோட பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசை ;-))) ’’

‘’அதான் இப்ப பேசறீங்களே..’’

‘’நாம பிரண்ட்ஸா இருக்கலாமா’’

‘’இருந்துட்டு போங்க’

‘’எனக்கும் உங்களை மாதிரியே ரொம்ப ஃபேமஸாகணும்னு ஆசை’’

‘’அதுக்கு நீங்க நிறைய உழைக்கணும்’’

‘’நீங்க எந்த ஊரு’’

‘’சென்னை’’

‘’உங்களை நேர்ல பாக்கணும்போல இருக்கு’’

‘’பாக்கலாமே’’

‘’எப்படி’’

குமாருக்கு இந்த பேச்சு உற்சாகம் கொடுத்தாலும் உள்ளுக்குள்தான் ஏதோ ஒன்று... நிச்சயமாக இது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என உள்மனது எச்சரித்தது. ஒருவேளை நிஜமாகவே பெண்ணாக இருந்துட்டா.. பொண்ணு வேற குஜாலா பேசுது.. மச்சான் இந்த சான்ஸு இனிமே கிடைக்குமா என குமாருடைய மனசாட்சி கிராபிக்ஸில் நிழலாக அருகில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ஜெமினிகணேசன் போலவே பேசியது.

‘’உங்க போன் நம்பர் கிடைக்குமா..’’

‘’ஸ்யூர்.. (PHONE NUMBER.) , டியர் உங்களுடைய எண்ணை கொடுத்தால் நானே கூப்பிடுகிறேன்..ப்ளீஸ்மா!’’

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அடிப்பாவி.. கேட்டதும் கொடுத்துவிட்டாயே.. ஒரு இளம்பெண் தன்னுடைய செல்ஃபோன் எண்ணை இவ்வளவு எளிதாக கொடுத்துவிடுவாள் என குமார் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த பெண்ணோடு சாட்டிங் பண்ண ஆரம்பித்து ஒருமணிநேரம் கூட முடியவில்லை. அதற்குள்ளாகவே இந்த அளவுக்கு முன்னேற்றமா? ஆனால் நிஜமாகவே கொடுத்துவிட்டாள். அதிலும் அந்த ‘டியர்’ அவனுடைய சமூகமே எதிர்பார்க்காதது! குமாருக்கு பதட்டமாக இருந்தது. இதயதுடிப்பு அதிகரிக்க.. வயிற்றுக்குள் என்னவோ செய்தது.

அவளுக்கு உடனடியாக ஃபோன் செய்ய பயமாக இருந்ததால் தன்னுடைய எண்ணை அவசரமாக கொடுத்துவிட்டான். இருந்தாலும் அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமோ என மனதுக்குள் துடித்தான்.

‘’யார் முதல்ல கால் பண்றாங்கனு பார்ப்போமா? ;-)’’

‘’பார்ப்போம் பார்ப்போம்’’ என்றான்.

மொபைலுக்கு முதலில் ஒரு மெசேஜ் வந்தது. ‘’ஹாய் இட்ஸ்மீ ()’’
என்ன பதில் அனுப்பவுது என்று தெரியாமல். இவனும் ஒரு ஹாயை அனுப்பினான். அடுத்த நொடி மிஸ்ட் கால். இதயதுடிப்பு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலுக்கு ஓப்ப அடித்து உதறியது.

அழைக்கலாமா வேண்டாமா.. ஒருவேளை பெண்குரலாகவே இருந்தாலும் இப்போது வருகிற கொரியன் ஃபோன்களில் ஆண்களே பெண்குரலில் பேசும் ஆப்சனெல்லாம் வருதே.. என அஞ்சினான். அந்தப்பெண்ணே அழைத்தாள், எடுத்துப்பேசினான்.

‘’ஹல்ல்ல்லோ.. ‘’ ஒரு தேன்குரல்.

‘’ஹலோ’’

‘’யார்னு தெரியுதா...’’ மெலிதாக ஒரு சிரிப்பு வேறு.. அடடா!

‘’தெரியுதுங்க! சொல்லுங்க’’ தொண்டை கம்முகிறது. வேர்த்துக்கொட்டுகிறது. ஏசியை கூட்டிவையுங்களேண்டா வெண்ணைங்களா!

‘’நான்தான்.. (name) பேசறேன்”

‘’சொல்லுங்க.. சொல்லுங்க.. நீங்க நிஜமாவே பொண்ணுதானா’’

‘’நேர்ல வாங்க நிரூபிச்சுக்காட்றேன்’’

‘’அய்ய்யோ என்னங்க கோபபடறீங்க.. ஏன்னா நிறைய பசங்க இப்படிதான் கொரியன் ஃபோன்ல பொண்ணுமாதிரி பேசி ஏமாத்துவாங்கனு டவுட்டுக்காக கேட்டேன்’’

‘’நான் நிஜமாவே பொண்ணுதான்.. ஃபேஸ்புக்ல போட்டோஸ் பாக்கலையா.. உங்க அளவுக்கு இல்லாட்டியும் சுமாரா இருப்பேன்’’

‘’பார்த்தேன்ங்க.. இருந்தாலும் இப்ப கூட எனக்கு நம்பிக்கையே வரல.. நிஜமாவே நீங்க பொண்ணுதானா’’

‘’எனக்கு செம கடுப்பாகுது... ‘’

‘’தப்பா நினைச்சிகாதீங்க.. பொதுவா பொண்ணுங்கன்னா இன்டர்நெட்ல..’’

‘’அதைவிடுங்கப்பா... சாப்டாச்சா’’

‘’சாப்டாச்சுங்க! நீங்க’’

‘’இனிமேதான்.. பசியில்ல’’

‘’ஏன்’’

‘’உங்களோட பேசறேன்ல.. படபடப்பா இருந்துது..’’

‘’என.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல’’

‘’அப்புறம்’’

‘’அப்புறம்’’

‘’அப்புறம்’’

‘’அப்புறம்’’

‘’ம்ம்.. விழுப்புரம்.. எங்க இருக்கீங்க என்ன பண்ணிட்டுருக்கீங்க’’

‘’நான் ஆபீஸ்ல இருக்கேன்ங்க..... நீங்க’’

‘’நான் வீட்லதான் இருக்கேன்..’’

‘’வீட்ல யாரெல்லாம்’’

‘’அம்மா,அப்பா,தம்பி மட்டும்தான்.. இப்போதைக்கு நான்மட்டும் தனியாதான் இருக்கேன்’’

‘’ஓஹோ’’

‘’தனியா இருக்கேனு சொல்றேன்.. ஓஹோன்றீங்க’’

‘’வேற என்ன சொல்றது’’

‘’ம்ம்ம்.. ஒன்னும் சொல்ல வேணாம்’’

‘’அப்புறம்’’

‘’உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..’’

‘’ஓஹோ’’

‘’அப்புறம்’’

‘’ஒன்னுமில்ல.. கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறம் பேசட்டுமா’’

‘’ஓக்கே ஃப்ரீயாருக்கும் போது கூப்பிடுங்க!’’

என ஃபோனை கட்செய்தான் குமார்,. ஆனால் அவள் மெசேஜில் வந்தாள். ‘’ஐ திங்க்.. ஐ லவ்..’’ என அனுப்பியிருந்தாள். பதறிப்போய்விட்டான் குமார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுடைய புகைப்படத்திலிருந்த முகம் அவ்வளவு அழகு. அந்த முகம் கண்ணுக்கு முன்னால் வந்து வந்து சென்றது. அடிப்பாவிகளா இத்தனை நானா எங்க போயிருந்தீங்க.. ஒரே ஒரு பொண்ணு.. ஒரு பொண்ணு.. நம்மள லவ் பண்ணமாட்டாளானு ஏங்கி ஏங்கி.. ச்சே..

நிச்சயமாக இப்படி ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொன்னாள் யாருக்குத்தான் கசக்கும். குமார் உடனடியாக ஃபோனில் அவளை அழைத்தான்,

‘’ஹலோ’’

‘’மெசேஜ் பார்த்தீங்களா’’

‘’ம்ம்.. அதுக்குதான் கூப்டேன்’’

‘’ம்ம்..’’

‘’என்னால உன்னை லவ் பண்ண முடியாது.. ‘’

‘’ஏன்..’’

‘’ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஐயாம் மேரீட்.. ஐயாம் மேரீட்‘’ என்று சொல்லிவிட்டு ஃபோனை கட்பண்ணிவிட்டு ரொம்ப நேரம் அழுதுகொண்டேயிருந்தான்.

‘’அடிப்பாவிங்களா.. கல்யாணம் ஆகறதுக்கு முன்னால எவ்ளோ பேர்கிட்ட பேசிருப்பேன்.. எல்லாரும் அண்ணா அண்ணானு சொல்லிட்டு.. இப்ப வந்து லவ்வுன்றீங்களே.. என நினைத்து நினைத்து வெதும்பினான். அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘’அதுக்கென்ன... ’’ என அனுப்பியிருப்பாளோ.. அப்படி அனுப்பியிருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.. மனது பதைபதைக்க மேசேஜை பார்த்தான்.

‘’சாரி அண்ணா!’’

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..






With Love
Rasigen

வெள்ளி, நவம்பர் 02, 2012

மீசை !!!


தாவணி பாவனாவா இல்லை புடவை ஸ்னேகாவா என்ற வயதுக்கு வந்த பெண்களுக்கு குழப்பமான கெட்டப் தருணம் ஒன்று இருப்பது போல், ஆரம்பகால அரவிந்த்சாமியா இல்லை தற்கால ஹிரிதிக் ரோஷனா என்று வயதுக்கு வந்துகொண்டிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரு மிக முக்கியமான குழம்பேஸ்வரா மீசை தருணம் கண்டிப்பாக உண்டு.



சமூகத்தில் பெண்களுக்கு ஓலை கட்டி சடங்கு செய்வது போல் இல்லாமல், மீசை மட்டுமே ஆணகள் வயசுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாய் இருப்பது பெரிய இம்சை. "ம்ம்ம்..அரும்பு மீசை.. என்னடா வயசுக்கு வந்தாச்சு போல " என்று பக்கத்து வீட்டு அக்கா நண்பனின் கன்னத்தைக் செல்லமாய் கிள்ளும் போது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் பாலிஷ் போட்ட மொசைக் மாதிரி மழுமழுவென்று இருக்கு என்று சுரண்டிப் பார்த்திருகிறேன். "கட்டிங் மட்டுமா, இல்ல ஷேவிங்குமா தம்பி" என்று நண்பனை மட்டும் நாவிதர் கேட்கும் போது, தினத்தந்திக்குப் பின்னால் "லா லா லா" என்று விக்ரமன் பட நாயகி மாதிரி உருகியிருக்கிறேன். "இங்க பாரு எனக்கு மீசை இல்லாட்டியும் பரு வந்திருச்சு" என்றாலும் உதாசீனப் படுத்தும் சமூகத்தை எண்ணி வெட்கப் பட்டிருக்கிறேன். மயிர் வளம் கொழிக்கும் கேசவர்த்தினி கூட மகசூலைப் பெருக்கவில்லை என்பதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.

"உம்மேல ஆசை வைச்சேன் ; வேறெதுக்கு மீசை வைச்சேன்" என்று சங்க இலக்கியங்களாகட்டும், "நீ மட்டும் மீசை வைச்ச ஆம்பிளையா இருந்தா.." என்று தொடை தட்டி ராஜ்கிரண், விஜய்குமார் சமஸ்தானங்கள் விடும் உதாராகட்டும் - இந்த இழவெடுத்த ஆண்மைக்கும் மீசைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. இதில் வயசுப் பையன்களுக்கு மீசை இல்லாவிட்டால் ஆயிரத்தெட்டு சங்கடங்கள் வேறு. தே.சீனா நடிகரும் "ந"ன்னா நடிகையும் நடித்த மேட்டர் படம் தான் இதுவரை வந்த நீலக்காவியங்களிலேயே சிறந்தது என்று தெருவில் யாரோ பார்த்ததாக புருடா விடும் அறிவுப்புரட்சி விவாதங்களுக்கு எண்ட்ரி டிக்கெட்டே மீசை தான். இல்லா விட்டால் "யாராவது இந்தப் பக்கம் வந்தா சொல்லு" என்று கபடி போட்டி சப்ஸ்ட்டியூட் மாதிரி வெளியே உட்கார வைத்துவிடுவார்கள். லேசாகவாவது வளர்வது வரைக்கும் "இன்னும் மொளச்சு நாலு இலை விடலை அதுக்குள்ள" என்று போவோர் வருவோர் உள்ளிட்ட சமுதாய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்.

"சும்மாவாச்சும்...அடிக்கடி ஒரு தரம் ஷேவ் பண்ணுடா அப்போ தான் வளரும்" என்பது இரண்டும் கெட்டான் பருவத்தின் ஆணித்தரமான ஐதீகம். மாமாவின் ஷேவிங் செட்டை ஆட்டையைப் போட்டு அகல உழாமல் ஆழ உழுது முதல் சவரம் ரத்தம் பார்த்து, ப்ளாஸ்திரி போட்டதாலோ என்னவோ மூக்குக்கு கீழே ரொம்ப நாள் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. "கவலப் படாத மச்சி ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள்...உனக்கும்" என்று சக ஐ.ஏஸ்.எஸ்கள் அட்வைஸ் கொடுக்கும் போது, நல்லதங்காள் ஏன் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார் என்பது நன்றாகப் புரியும். ஒரு சுபயோக சுபதினத்தில் மூக்குக்கு கீழே முதல் பூனை முடியைப் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். அதற்கப்புறம் தினமும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாலும், தாய்மாமா யாரும் வண்டி பூட்டி நான் வயசுக்கு வந்ததை பாட்டு பாடி கொண்டாததால், மீசை முழுதாக வந்த சரித்திர நாளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

அரவிந்சாமி, அஜீத், போன்றவர்களைத் தானே பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது என்று மீசை வளர்வதற்கு முன் செய்த முதல் சவரமே கடைசி சவரமாய் முடிந்து, அதற்கப்புறம் இன்று வரையிலும் மீசையை எடுத்ததே இல்லை. ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி நடுவில் மட்டும் ஒரு சின்ன gap இருந்தது . இரண்டு பக்க மீசைக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதே இதனால் பின்னாடி தாம்பத்யத்தில் ஏதாவது பிரச்சினை வருமா என்று "அன்புள்ள சினேகிதனே"க்கு எழுதிப் போடுவதற்குள் அதுவே வளர்ந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தைப் போலவே நெல்லை எக்ஸ்பிரஸ் ஸ்டையில், கரடியாண்டி ஸ்டைல் என்று காலத்திற்கேற்ப மீசை பல்வேறு வடிவங்களைப் பார்த்திருக்கிறது. 

ஆனால் இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது. சேரிட்டிக்கு பணம் பிரிப்பவர்கள் அதை சுவாரசியமாக்க பல கோமாளித்தனம் செய்வார்கள். அதில் தலையாயது மீசை வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்துக்கொள்வார்கள். போகட்டும்,. ஆனால் அதற்காக மீசை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிக்கும் நீலப் பட நடிகர்கள் என சித்தரிப்பதை என்னவென்று சொல்வது. அதிலும் ஆபிஸில் எல்லா பெண்களும் இவர்களிடம் இதையே "யூ லுக் லைக் a போர்ன் ஸ்டார்" என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்வது இன்னமும் கொடுமை. ஒருவன் என்னிடம் வந்து "நீ வருடம் பூராவும் மீசை வைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று ஆரம்பித்தான். "அது ஒன்று தான் பாக்கி, இன்னமும் கொடுப்பினை இல்லை, நடிச்சு ரிலீசானா சொல்றேன், போயிட்டு வா ராசா" என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கலாய்க்கிறாராமாம்.



காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் இந்த பெண்கள் இருக்கிறார்களே பெண்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. "ஒரு மீசை வளர்பதற்கு அடேய் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்" யோசித்துப் பார்க்கிறார்களா? அஜீத்தை பிடிக்கிறவர்கள் திடீரென்று மேடி, சித்தார்த், என்று மீசையில்லா பக்கமாய் சரிந்துவிடுகிறார்கள். கூட இருக்கும் சக ஐ.ஏ.எஸ்களும் கன்வேர்ட்டட் மேடியாய் மாறிவிடுகிறார்கள். என்னை மாதிரி இதுவரை ஒரு முறை கூட ஷேவ் செய்யாத வெர்ஜின் மீசைக்காரர்கள் மட்டும் பழைய பாக்யராஜ் பட நாயகி மாதிரி "மீசை எடுத்தா என்னமோ மாதிரி இருக்கு" என்று நிலம் பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். 

சமீபத்தில் என்னை மாதிரி வெர்ஜின் மீசை நணபன் ஒருவனுடைய மீசை திடீரென்று ஒரு நாள் காணோம். என்ன ஏதென்று பதறிப் போய் கேட்டால், "இல்ல மச்சி, மீசை இருந்தா மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" என்ற போது ங்கொய்யால வீரப்பன இப்படி அநியாயமா சுட்டுக் கொண்ணுட்டீங்களேடா என்று வருத்தப் பட்டேன். திடீரென்று ஏதாவது கம்பேனி சி.ஈ.ஓ ஆகவேண்டிய கட்டாயம் வந்தால் என்று, ஃபோட்டோ ஷாப்பில் மீசையை எடுத்துப் பார்த்தேன். என் பொண்டாட்டி சத்யா இந்த மூஞ்ச பார்த்து ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்தது போல ஒரு காட்சி கண்ணுக்குள் ஓடி மறைந்தது.  சே...அப்பவே மீசையை எடுத்து ஹிரிதிக் ரோஷனா அப்கிரேட் ஆகியிருக்கணும். "என்னத்துக்கு இதைப் போய் வளர்த்து..பேசாம மழிச்சிடேன்" என்று அப்பா சொன்னபோது கேக்கலை, ஹும்ம்ம்ம்ம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.